From Wikipedia, the free encyclopedia
மறைபணி (மறைப்பணி) அல்லது மறை பரப்புப் பணி அல்லது நற்செய்தி அறிவிப்புப் பணி (Mission) என்பது கிறித்தவர்கள் உலகெங்கும் செய்யும் சமயப்பணியைக் குறிக்கிறது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதல், மனித நேய நடவடிக்கைகள், ஏழைகள் மற்றும் இயலாதோருக்கு உதவுதல் ஆகிய செயல்பாடுகள் மறைப்பணியில் அடங்கும். கிறிஸ்தவர்கள் பார்வையில் இது கிறிஸ்துவின் ஆட்சியை உலகெங்கும் நிறுவ, அவர்கள் ஆற்றும் நற்செய்திப் பணியைக் குறிக்கிறது. "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."[1] "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் (என்) சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்"[2] என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, கிறிஸ்தவ சமயத்தினர் பலர் இப்பணியை செய்து வருகின்றனர்.
கடவுள் தம்மை அறிந்து, அன்புசெய்து, பணிபுரிந்து, தம்மை அடையவே மானிடரைப் படைத்தார். மனிதர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்து, அவரைப் புறக்கணித்து பாவம் செய்தனர். இதனால் தொடக்கத்தில் கடவுள் வழங்கியிருந்த அருள் நிலையை இழந்து, நித்திய அழிவுக்கும் ஆளாயினர்.[3] எனவே, மானிடருக்கு மீட்பு தேவைப்பட்டது.
கடவுள் தமது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பத் திருவுளம் கொண்டார். அதற்காக கடவுள் ஆபிரகாம் வழியாக இஸ்ரயேலரைத் தேர்ந்தெடுத்து, மீட்பரின் வருகைக்காக அந்த மக்களினத்தைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் இறைமகனைப் பற்றிய செய்திகளை உலக மக்களுக்கு முன்னறிவித்தனர்.[4]
உலக மக்களைப் பாவங்களில் இருந்து மீட்டு, மானிடருக்கு நிலை வாழ்வைப் பரிசளிக்கவே இறைமகன் மானிடமகன் ஆனார். இதை இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."[5]
சிலுவை மரணத்தின் வழியாகவே இயேசு உலகை மீட்டார் என்பதை, புனித பவுல் இவ்வாறு எடுத்துரைக்கிறார்: "சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்."[6]
"கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்; பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்"[7] என்பதே மீட்பின் நற்செய்தி ஆகும்.
"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"[8] என்று இயேசு கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப, திருத்தூதர்கள் எருசலேம் தொடங்கி உலகின் பல நாடுகளுக்கும் சென்று கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, இயேசு கிறிஸ்துவை பலரும் தங்கள் மீட்பராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டனர்.[9]
ஒருபுறம் திருத்தூதர்கள் மக்கள் மத்தியில் மதிப்பு மிகுந்தவர்களாக கருதப்பட்டாலும், மறுபுறம் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றியதால் பல்வேறு துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. அவற்றை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.[10] "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை"[11] இயேசு முன்னறிவித்திருந்தது இவ்வாறு நிறைவேறியது.
திருச்சபையின் முதல் மூன்று நூற்றாண்டுகளும், கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த காலமாகவே இருந்தது. இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தைக் கைவிட மறுத்த காரணத்தால், கிறிஸ்தவர்கள் பலரும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் மறைசாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர். நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆவலே அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தூண்டியது.[12] நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல இடங்களிலும், கிறிஸ்தவர்கள் முதலில் எதிர்ப்பை சந்தித்தனர். ஆனால், ஆண்டவர் இயேசுவின் வல்லமையால் உலகின் அனைத்து இடங்களிலும் கிறிஸ்தவ விசுவாசம் வேரூன்றி வளர்ந்தது.
உலகம் முழுவதும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் கிறிஸ்தவர்கள் நடுவே எப்போதும் இருந்து வருகிறது. முதலில் ரோமப் பேரரசில் வேரூன்றித் துளிர்விட்ட கிறிஸ்தவம், பல்வேறு தனிப்பட்ட கிறிஸ்தவர்களின் தியாகத்தாலும், முயற்சியாலும், ஆர்வத்தாலும், அரசுகளின் ஒத்துழைப்பாலும் இன்று உலகெங்கும் விரிந்து பரவி நிற்கிறது.
"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"[13] என்ற இயேசுவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ஆன்மீக காரியங்களில் ஆர்வம் கொண்ட புனித பிரான்சிஸ் சவேரியார், "இயேசு கிறிஸ்துவை அறியாத ஓர் இடம் இந்த உலகில் இருக்கிறது என்று அறிந்தால், நான் ஒருபோதும் ஓய்ந்திருக்க முடியாது" என்று கூறி உலகெங்கும் சென்று நற்செய்திப் பணியாற்றினார்.
கிறிஸ்தவர்கள் பல்வேறு சபையினராக பிரிந்து கிடந்தாலும், இயேசுவின் நற்செய்தியை பிறருக்கு அறிவிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். நற்செய்தியைப் பறைசாற்றுமாறு [1] பணித்த தங்கள் அன்புத் தலைவரான கிறிஸ்துவின் கட்டளைக்கு, இன்றளவும் செவிசாய்க்கும் கிறிஸ்தவர்களின் ஆர்வம் பிற சமய மக்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஒலி, ஒளி ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள், தனி மற்றும் பொது போதனைகள் வழியாக, கிறிஸ்தவர்கள் தினந்தோறும் மறை பரப்புப் பணியில் உற்சாகத்தோடு பங்கேற்று வருகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.