Remove ads
From Wikipedia, the free encyclopedia
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்வீகத் தன்மை கொண்ட பண்பு கொண்டவர் எனவும், அதற்காக பேசுபவர் எனவும் சமயங்களினால் நோக்கப்படுகின்றார். இவர் மானிடத்திற்கு இடையிலான சேவையைச் செய்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து புதிதாகப் பெற்ற அறிவை அல்லது செய்தியை மக்களுக்கு வழங்குபவர் என நோக்கப்படுகின்றார்.[1][2] இவ்வாறு அவரிடமிருந்து பெறப்படும் செய்தி இறைவாக்கு அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும்.
இறைவாக்கினர் என்ற சொல், இறைவனின் வார்த்தையைப் பேசுபவர் அல்லது மக்களுக்கு எடுத்துரைப்பவர் என்ற பொருளில் தமிழில் உருவானது. தீர்க்கதரிசி என்ற சொல், எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை முன்னறிவிப்பவர் என்ற பொருளில் கையாளப்படுகிறது.
Prophet என்ற ஆங்கில பதத்துக்கு இணையாக தீர்க்கதரிசி என்பது பொதுவாக அனைத்து மதத்தவராலும் பயன்படுத்தப்பட்டாலும், அதற்கான சிறப்புச் சொல்லாக கிறிஸ்தவத்தில் இறைவாக்கினர் என்பதும், இஸ்லாமில் இறைத்தூதர் என்பதும் பயன்படுத்தப்படுகின்றன.
கிறித்தவத்தில் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி என்னும் சொல், இஸ்ரயேல் மக்களுக்கு நல்வழியைச் சுட்டிக்காட்டி, அவர்களது செயல்களுக்கு ஏற்ற ஆசீரையும் சாபத்தையும் முன்னறிவிக்க கடவுளால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களாகக் கூறப்படும் நபர்களைக் குறிக்கும்.
நீதித்தலைவர்கள் காலத்துக்கு பின், இஸ்ரயேல் மக்களிடையே அரசர்கள் தோன்றினர். அரசர்களின் ஆட்சியில் வாழ்ந்த இஸ்ரயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறி பாவம் செய்தனர். இதனால் கடவுளின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இஸ்ரயேலர் மீது பரிவு கொண்ட கடவுள், இஸ்ரயேல் மக்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த சில நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கினராக அவர்களிடையே அனுப்பினார்.
கடவுளின் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களின் தீய வாழ்க்கையை மாற்ற இறைவாக்கினர்கள் உழைத்தனர். இவர்கள் இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ அறிவுரை வழங்கினர். நல் வழியில் வாழ்ந்தால் கடவுளிடம் இருந்து வரும் ஆசீரையும், தீய வழியில் செயல்பட்டால் கடவுள் வழங்கும் தண்டனையையும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இஸ்ரயேல் மக்கள் துன்புற்றபோது அவர்களுக்கு கடவுளின் பெயரால் இறைவாக்கினர்கள் ஆறுதல் கூறினர்.
மேலும், இறைவாக்கினர்கள் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பணி வாழ்வு, சிலுவை மரணம், உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவைப் பற்றியும் இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு முன்னறிவித்தனர்.
இஸ்ரயேலரின் வரலாற்றில், மக்களை கடவுளின் வழியில் நடத்திய பலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரயேலரை மீட்டுக் கொண்டு வந்த மோசே முதன்மையான இறைவாக்கினராக போற்றப்படுகின்றார். அவருக்கு பின் கடவுளின் பெயரால் இறைவாக்குரைத்த சிலரும் இறைவாக்கினராக கருதப்படுகின்றனர். அரசர் தாவீதும் இறைவாக்கினர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.
எலியா, நாத்தான், ஆமோஸ், எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசேயா, யோவேல், ஒபதியா, யோனா, மீக்கா, அபகூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி போன்றோர் பல்வேறு கால கட்டங்களில் தோன்றிய இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் ஆவர். இவர்களில் பலர் பெயரால் விவிலியத்தில் நூல்களும் இடம்பெற்றுள்ளன.
கிறித்தவ கருத்தில் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களுள் இறுதியானவராக கருதப்படுபவர் திருமுழுக்கு யோவான் ஆவார். கடவுளின் மீட்புத் திட்டத்தின் நிறைவில், "இறைமகன் இயேசுவே உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி"[3] என்பதைச் சுட்டிக்காட்ட மீட்பரின் முன்னோடியாக யோவான் வந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.