Remove ads
புதிய ஏற்பாடு நூல் From Wikipedia, the free encyclopedia
திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் பணி (Acts of the Apostles) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஐந்தாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Práxeis tōn Apostólōn (Πράξεις των Αποστόλων) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Acta Apostolorum எனவும் உள்ளது [1]. இந்நூல் 28 அதிகாரங்களை உள்ளடக்கியது. வாழ்க்கை வரலாறு, புனைவு, அரும்செயல்கள் போன்றவை விரவியுள்ள இந்நூலில் தொடக்க காலத்தில் கிறித்தவம் பரவிய கதை உயிரோட்டத்தோடு எடுத்துரைக்கப்படுகிறது.
திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே, மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். நாங்கள் பயணம் செய்தோம், நாங்கள் தங்கியிருந்தோம், நாங்கள் போதித்தோம்' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் தூய பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இப்பகுதிகள் கீழ்வருமாறு:
திருத்தூதர் பணிகள் நூலின் ஆசிரியர் பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூலின் முன்னுரையில் காண்க.
இயேசு கிறித்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கம் அளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட புனித பவுல் யூதருக்கு எதிராகப் பெருந் தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை லூக்கா எழுதுகிறார்.
இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. தூய ஆவியார் [2] துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் [3] பவுலும் [4] - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே திருத்தூதர் பணிகள் நூலின் முடிவுரையாக அமைகின்றது.
பெரும்பான்மை விவிலிய அறிஞர் கருத்துப்படி, இந்நூல் கி.பி. முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கி.பி. 60-64 அளவில் இந்நூல் எழுந்தது என்று கூறுவர். இந்நூலில் எருசலேம் அழிந்த செய்தி (கி.பி. 70) இல்லை. அதுபோலவே தூய பவுலின் இறப்புப் பற்றிய குறிப்பும் இல்லை. பவுல் கி.பி. 67 அளவில் உரோமையில் இறந்தார் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர் கருத்து.
திருத்தூதர் பணிகள் நூலின் அமைப்புமுறையும் லூக்கா நற்செய்தி நூலின் அமைப்புமுறையும். ஒரே பாணியில் அமைந்துள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லூக்கா நற்செய்தியில் 24 அதிகாரங்களும் திருத்தூதர் பணிகள் நூலில் 28 அதிகாரங்களும் உள்ளன. இரு நூல்களும் ஒரு குறிப்பிட்ட புவியியல் பின்னணியில் அமைந்துள்ளன. இதைச் சற்று விரிவாக நோக்கலாம்.
1) லூக்கா நற்செய்தி முதலில் பாரளாவிய பின்னணியிலிருந்து தொடங்குகிறது; பின், இயேசு கலிலேயாவில் பணியாற்றுவதைக் காட்டுகிறது; அதைத் தொடர்ந்து இயேசு சமாரியாவிலும் யூதேயாவிலும் பணிசெய்ததைக் குறிப்பிடுகிறது; இறுதியில், இயேசு எருசலேம் சென்று, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில்.உயிர்துறந்து, சாவினினின்று உயிர்பெற்றெழுந்து, விண்ணகம் சென்றதை விவரிக்கின்றது.
2) திருத்தூதர் பணிகள் நூல் மேற்கூறிய பாணிக்கு நேர்மாறாக, இறுதிக் கட்டத்திலிருந்து தொடங்கி முதல் கட்டத்திற்குத் திரும்புகிறது. முதல் காட்சி எருசலேம். அங்கே திருத்தூதர்கள் கூடியிருக்கின்றனர். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்செய்தியை எருசலேமில் அறிவிக்கின்றனர். இரண்டாம் கட்டமாக சமாரியாவுக்கும் யூதேயாவுக்கும் சென்று நற்செய்திப் பணி புரிகின்றனர். அதன் பிறகு, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக நற்செய்தி உரோமையை வந்தடைகிறது; பாரளாவிய செய்தியாக மாறுகிறது.
மேலே காட்டிய விதத்தில் லூக்கா நற்செய்தி நூலையும் திருத்தூதர் பணிகள் நூலையும் அவற்றின் அமைப்புமுறை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்விரு நூல்களின் ஆசிரியர் எருசலேம் நகருக்கு எத்துணை முதன்மை அளிக்கிறார் என்பது புலப்படும். இயேசுவின் வாழ்வும் பணியும் (சாவு, உயிர்த்தெழுதல் உட்பட) எருசலேமில் உச்சக்கட்டத்தை எய்துகின்றன; அதுபோல, திருத்தூதர்களின் பணியும் எருசலேமை மையமாகக் கொண்டு, படிப்படியாக (கலிலேயா, சமாரியா, யூதேயா, சிரியா, சின்ன ஆசியா, ஐரோப்பா வழியாக) உலகின் மையத்திற்கே சென்று எல்லா மனிதருக்கும் அறிவிக்கப்படுகின்ற நற்செய்தியாக மாறுகிறது.
இத்தகைய கட்டமைப்பு திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படுகிறது. திப 1:8 இவ்வாறு கூறுகிறது:
இயேசு திருத்தூதர்களை நோக்கி, "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் (அதிகாரங்கள் 1-5) யூதேயா, சமாரியா முழுவதிலும் (அதிகாரங்கள் 6-9) உலகின் கடையெல்லை வரைக்கும் (அதிகாரங்கள் 10-28) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.
மேற்கூறிய கட்டமைப்புத் தவிர திருத்தூதர் பணிகள் நூலைத் திருத்தூதர் பேதுரு ஆற்றிய பணிகள் என்றும் திருத்தூதர் பவுல் ஆற்றிய பணிகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகவும் பிரித்துப் பார்க்கலாம்.
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (1:8) என்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கூறியிருந்தார். அக்கூற்றே திருத்தூதர் பணிகள் நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது.
யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் கிறித்தவ சபைகளாகிய திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் தூய ஆவியின் பணிகள் எனவும் அழைக்கலாம்.
இந்நூலில் பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின்.அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறித்தியல்[5] விளக்கங்களை அளிக்கின்றன.
பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் [6] உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன.
கிறித்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம் பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதோ அப்பகுதிகள்:
|
|
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை (இயேசுவின் விண்ணேற்றம்) | 1:1-11 | 214 |
2. திருத்தூதர்கள் எருசலேமில் சான்று பகர்தல் | 1:12 - 8:3 | 214 - 227 |
3. திருத்தூதர்கள் யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் | 8:4 - 12:25 | 227 - 237 |
4. திருத்தூதர்கள் உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் | 13:1 - 28:31 | 237 - 268 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.