கண்டம் From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.[1]
ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும்.[2] ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன.[3] பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "வார்சோ ஒப்பந்த" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது,முன்னைய வார்சோ ஒப்பந்தநாடுகள்பலவற்றையும்இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது.
"ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப்பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது.[4][5] பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா,லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார்.[6] முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார்[7] யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத்தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது.[8]
கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு,கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது.[9] இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டுஅடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறைபிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது.[10][11] ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது.சுவீடியப்புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது.[12]
தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன.[13] சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.[14] ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது.
சிலவேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப்பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன.[15] அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது.
நாடுகள் | பரப்பளவு (ச.கிமீ) |
மக்கள் தொகை (1 ஜூலை, 2002) |
மக்கள் தொகை அடர்த்தி (ச.கிமீ-க்கு) |
தலைநகரம் |
---|---|---|---|---|
கிழக்கு ஐரோப்பா: | ||||
பெலாரஸ் | 207,600 | 10,335,382 | 49.8 | மின்ஸ்க் |
பல்கேரியா | 110,910 | 7,621,337 | 68.7 | சோஃபியா |
செக் குடியரசு | 78,866 | 10,256,760 | 130.1 | பிராக் |
அங்கேரி | 93,030 | 10,075,034 | 108.3 | புடாபெஸ்ட் |
மால்டோவா | 33,843 | 4,434,547 | 131.0 | சிஷினோ |
போலந்து | 312,685 | 38,625,478 | 123.5 | வார்சா |
ருமேனியா | 238,391 | 21,698,181 | 91.0 | புக்காரெஸ்ட் |
இரசியா | 3,960,000 | 106,037,143 | 26.8 | மாஸ்கோ |
சுலோவேகியா | 48,845 | 5,422,366 | 111.0 | பிராத்திஸ்லாவா |
உக்ரைன் | 603,700 | 48,396,470 | 80.2 | கீவ் |
வடக்கு ஐரோப்பா: | ||||
டென்மார்க் | 43,094 | 5,368,854 | 124.6 | கோப்பென்ஹாகென் |
எத்தோனியா | 45,226 | 1,415,681 | 31.3 | தாலின் |
பின்லாந்து | 336,593 | 5,157,537 | 15.3 | எல்சின்கி |
ஐஸ்லாந்து | 103,000 | 307,261 | 2.7 | ரெய்க்யவிக் |
அயர்லாந்து குடியரசு | 70,280 | 4,234,925 | 60.3 | டப்ளின் |
இலத்துவியா | 64,589 | 2,366,515 | 36.6 | ரீகா |
இலித்துவேனியா | 65,200 | 3,601,138 | 55.2 | வில்னியஸ் |
நார்வே | 324,220 | 4,525,116 | 14.0 | ஓஸ்லோ |
ஸ்வீடன் | 449,964 | 9,090,113 | 19.7 | ஸ்டாக்ஹோம் |
ஐக்கிய இராச்சியம் | 244,820 | 61,100,835 | 244.2 | இலண்டன் |
தெற்கு ஐரோப்பா: | ||||
அல்பேனியா | 28,748 | 3,600,523 | 125.2 | டிரானா |
அன்டோரா | 468 | 68,403 | 146.2 | அன்டோரா லா வெல்லா |
போசுனியா எர்சகோவினா | 51,129 | 4,448,500 | 77.5 | சரஜீவோ |
குரோசியா | 56,542 | 4,437,460 | 77.7 | சாகிரேப் |
கிரேக்கம் | 131,940 | 10,645,343 | 80.7 | ஏதென்சு |
இத்தாலி | 301,230 | 58,751,711 | 191.6 | ரோம் |
மாசிடோனிய குடியரசு | 25,333 | 2,054,800 | 81.1 | ஸ்கோப்ஜே |
மால்டா | 316 | 397,499 | 1,257.9 | வலெட்டா |
மாந்தநெக்ரோ | 13,812 | 616,258 | 44.6 | பொட்கொரிக்கா |
போர்த்துகல் | 91,568 | 10,084,245 | 110.1 | லிஸ்பன் |
தூய மரீனோ | 61 | 27,730 | 454.6 | தூய மரீனோ |
செர்பியா | 88,361 | 9,663,742 | 109.4 | பெல்கிரேடு |
சுலோவீனியா | 20,273 | 1,932,917 | 95.3 | லியுப்லியானா |
ஸ்பெயின் | 504,851 | 45,061,274 | 89.3 | மாட்ரிட் |
வத்திக்கான் நகர் | 0.44 | 900 | 2,045.5 | வத்திக்கான் நகர் |
மேற்கு ஐரோப்பா: | ||||
ஆஸ்திரியா | 83,858 | 8,169,929 | 97.4 | வியன்னா |
பெல்ஜியம் | 30,510 | 10,274,595 | 336.8 | பிரசெல்சு |
பிரான்ஸ் | 547,030 | 59,765,983 | 109.3 | பாரிசு |
ஜெர்மனி | 357,021 | 83,251,851 | 233.2 | பெர்லின் |
லீஷ்டென்ஸ்டைன் | 160 | 32,842 | 205.3 | வாடூஸ் |
லக்செம்பூர்க் | 2,586 | 448,569 | 173.5 | லக்சம்பர்க் |
மொனாக்கோ | 1.95 | 31,987 | 16,403.6 | மொனாக்கோ |
நெதர்லாந்து | 41,526 | 16,318,199 | 393.0 | ஆம்ஸ்டர்டம் |
சுவிஸர்லாந்து | 41,290 | 7,507,000 | 176.8 | பேர்ண் |
நடுவண் ஆசியா: | ||||
கசாகிஸ்தான் | 150,000 | 600,000 | 4.0 | அஸ்தானா |
மேற்கு ஆசியா:k[›] | ||||
அசர்பெய்ஜான் | 7,110 | 175,200 | 24.6 | பக்கூ |
ஜார்ஜியா | 2,000 | 37,520 | 18.8 | திபிலீசி |
துருக்கி | 24,378 | 11,044,932 | 453.1 | அங்காரா |
மொத்தம் | 10,176,246o[›] | 709,608,850p[›] | 69.7 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.