Remove ads
From Wikipedia, the free encyclopedia
தாய்ப்பாலூட்டல் (Breastfeeding) என்பது பிறந்த குழந்தைக்கு நேரடியாகத் தாயின் முலையிலிருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும். குழந்தைகளில் காணப்படும் உறிஞ்சி உண்ணும் தொழிற்பாடு இந்த தாய்ப்பாலூட்டலுக்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாகக் குழந்தைக்கான வேறு மேலதிக உணவுகளை வழங்காமல் தாய்ப்பாலூட்டல் முறையால் மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும்.
மனிதரில் குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல்நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்[1]. ஆனாலும் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது.
தாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது[2][3][4]. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பிறந்த குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பு பொதுவாக செயற்கையான உணவூட்டலினாலேயே நிகழ்கிறது[5]. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எப்படியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர்[6][7][8].
உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாதமியும் (American Academy of Pediatrics AAP) குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் கடைசி ஓர் ஆண்டுக்கு, முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன[9][10]. தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, செயற்கையாக உணவூட்டும் முறையில் உள்ள இடர்களைக் களைவதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன[7].
தாய்ப்பாலின் இயல்புகள் முழுவதும் முழுமையாக அறியப்படாவிட்டாலும், தாய்ப்பாலிலுள்ள ஊட்டச்சத்து மிகவும் உபயோகமானதும், நிலையானதுமாகும். தாய்ப்பாலின் ஊட்ட உணவானது தாயின் உடல் சேமிப்புக்களிலிருந்து இரத்த ஓட்டம் மூலம் பெறப்படும். தாய்ப்பாலில் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் அனைத்துமே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சம அளவில் கலந்திருப்பதுடன், உயிர்ச்சத்து, கனிமம், இம்மியப் பொருள் என்பவையும் காணப்படுகின்றன[11]. தாய்ப்பாலூட்டலில் சராசரியாக நாளொன்றுக்கு 500 கலோரிகள் தாயின் உடலிலிருந்து பாவிக்கப்படுவதனால், குழந்தை பிறப்பின் பின்னர் தாயின் உடல் நிறையைக் குறைத்து அளவாக வைக்கவும் உதவுகிறது[12] தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக் கலவையானது ஒவ்வொரு முறையும் பாலூட்டப்படும் கால அளவு, குழந்தையின் வயது என்பவற்றிற்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். புகைத்தல், மதுபானம் அருந்துதல், caffein கலந்த பானங்கள் அருந்துதல், உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் போதைப்பொருள் (marijuana, methamphetamine, heroin, methadone) பாவனை போன்றன தாய்ப்பாலின் தரத்தை பாதிப்பதாக அறியப்படுகிறது[13]
அமெரிக்க, உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை[14], உலக சுகாதார அமைப்பின் 2007 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை[15] போன்ற அறிவியல் ஆய்வுகளின்படி தாய்ப்பாலூட்டலினால் குழந்தைக்கு அனேக பயன்கள் விளைகின்றன. அவற்றில் சில இங்கே:
தாயின் உடலிலிருக்கும் பிறபொருளெதிரிகள் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் வழங்கப்படும்.[16] குழந்தை பிறந்த சில நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் என அழைக்கப்படும் முதற்பாலின் மிக முக்கியமான இயல்பு இதுவாகும். இதனால் பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும். இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதனால், பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்குப் பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது அமீபா நுண்ணுயிர் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடிய பித்த உப்பு தூண்டும் கொழுப்புப் பிரிநொதி (Bile salt stimulated lipase), குடலைப் பாதிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல லக்டோபரின் (Lactoferrin - இது இரும்பு தாதுப்பொருளுடன் பிணைந்து தொழிற்படும்),[17][18] நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் இமியூனோகுளோபுயூலின் ஏ (Immunoglobulin A) என்னும் நோயெதிர்ப்புப் புரதம்[19] போன்ற தொற்றுநோய் எதிர்ப்புக் காரணிகளை குழந்தைக்கு வழங்குகிறது.
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளை விட குறைந்தளவிலேயே தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாக அனேக மதிப்பீடுகள் காட்டுகின்றன. அவற்றில் சில:
எதிர்பாராத விதமாக, காரணம் கண்டு பிடிக்க முடியாதபடி கைக்குழந்தைகளில் ஏற்படும் திடீர் இறப்பே தீடீர்க் குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி (Sudden Infant Death Syndrome - SIDS) என அழைக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் 2-3 மாதங்களில் இலகுவாக தூக்கத்திலிருந்து விழிக்கும் இயல்பைப் பெற்றிருப்பதால், இவ்வகையான இறப்பு அவர்களில் குறைவாகவே காணப்படுகிறது.[24] மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு, தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் ஒரு வயது ஆகும்வரை இப்படி நிகழக்கூடிய இறப்பு அரைவாசியாக குறைந்திருப்பதாகக் கூறுகிறது.[25]
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் தமது பிந்திய வாழ்வில் கூடிய அறிவாற்றலுடன் இருப்பதாக சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன[26][27]. அதே நேரம் தாய்ப்பாலூட்டலுக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பில்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன[28]. தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளில் அறிவாற்றல் அதிகமாக இருப்பின் அது அனேகமாக தாயின் அறிவாற்றல் தொடர்பானதாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்[28].
உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு, தாய்ப்பாலூட்டலுக்கும், கூடிய அறிவாற்றலுக்கும் தொடர்பில்லை எனக் கூறியது[14]. ஆனால் உலக சுகாதார அமைப்பின் 2007 ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, தாய்ப்பாலூட்டலுக்கும், அறிவாற்றலுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினாலும், அந்த தொடர்பு தாய்ப்பாலின் இயல்புடன் தொடர்புபட்டதா அல்லது தாய்ப்பாலூட்டலால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் பிணைப்பானது அறிவாற்றலைக் கூட்ட உதவுகிறதா என்பதை சரியாக அறிய முடியவில்லை எனவும் கூறுகின்றது[15].
வேறொரு ஆய்வறிக்கையானது தாய்ப்பாலூட்டலுக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பிருந்தாலும், அந்தத் தொடர்பு தனியாக தாய்ப்பாலில் உள்ள போசாக்கு சம்பந்தமானதாக இல்லாமல், அதனுடன் இணைந்து வரும் மரபணு தொடர்பானதான இருப்பதாகவும், அது மேலும் ஆராயப்பட வேண்டிய விடயமெனவும் கூறுகிறது[29][30].
முழுமையான தாய்ப்பாலூட்டல் மூலம் போசாக்கைப் பெறும் குழந்தைகளில், குறைந்த காலத்துக்கு மட்டும் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள், மற்றும் விரைவாகவே பசுப்பால், திண்ம ஆகாரம் வழங்கப்படும் குழந்தைகளை விட குறைந்த அளவிலேயே நீரிழிவு நோய் வகை 1 (diabetes mellitus type 1) ஐப் பெறுகின்றன[14][31] . நீரிழிவு நோய் வகை 2 (diabetes mellitus type 2) உம் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளுக்கு வருவது குறைவாகவே இருக்கிறது[14][15][32][33]. இதற்குக் காரணம் தாய்ப்பாலினால் உடல்நிறையில் ஏற்படும் சமச்சீர் நிலமையாக இருக்கலாம்[33].
தாய்ப்பாலூட்டப்படும் 39-42 மாதக் குழந்தைகளில் அதிகரித்த உடற் பருமன் ஏற்படுவதில்லை[34]. அதிகளவு காலத்துக்கு தாய்ப்பாலூட்டப்பட்டால், இந்த நிலை தொடர்ந்து காணப்படும்[14][15][35].
ஒவ்வாமை ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ள குழந்தைகளில் (பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது சகோதரர்களில் ஒருவருக்கோ ஒவ்வாமை இருப்பின்) 4 மாதங்கள் முழுமையாக தாய்ப்பாலூட்டல் மூலம் மட்டுமே போசாக்கை வழங்கிவந்தால், அக்குழந்தைகளில் ஒவ்வாமை தோன்றுவதை நிறுத்தவோ, பின்போடவோ முடியும்[36]. 4 மாதங்களின் பின்னர் இந்நிலை மாறக்கூடும். தாய்ப்பாலூட்டல் எவ்வளவு காலம் செய்யப்பட்டது என்பதைவிட, தாய்பபல் தவிர்ந்த ஏனைய உணவு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதே ஒவ்வாமை தோன்றுவதைக் கட்டுப்படுத்தும் காரணியாக இருக்கிறது[37]. குடும்ப வரலாற்றில் தோலழற்சி நோய் நிலையைக் கொண்டிருக்கும் குழந்தையில், 12 கிழமைக்கு மேலும், முழுமையாக தாய்ப்பாலூட்டலை மட்டுமே செய்து வந்தால், பொதுவான அரிக்கும் தோலழற்சி என்னும் தோலழற்சி ஒவ்வாமையானது குறைவாகவே தோன்றும் சாத்தியமுண்டு. ஆனால் 12 கிழமையின் பின்னர் தாய்ப்பாலுடன் வேறு உணவுகளும் வழங்கப்படின், இந்த தோலழற்சி தோன்றும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்[38].
Necrotizing enterocolitis (NEC) என்பது கைக்குழந்தைகளில் ஏற்படும் ஒரு தீவிரமான குடல் அழற்சி நோய் ஆகும். இதனால் குடல் இழையங்களில் இழைய அழிவோ அல்லது இறப்போ ஏற்படலாம். இது பொதுவாக குறைப்பிரசவ குழந்தைகளிலேயே ஏற்படும். குறைப்பிரசவக் குழந்தைகளில் செய்யப்பட்ட ஆய்வொன்று, 5.5% குழந்தைகளில் இந்நோய் தோன்றியதாகவும், 26% மான குழந்தைகள் இந்நோயால் இறந்ததாகவும் கூறுகின்றது. தாய்ப்பால் அல்லாமல் வேறு உணவு வழங்கப்படும் குழந்தைகளில் இந்த நோய் நிலை 6-10 மடங்காக இருப்பதாகவும், தாய்ப்பாலும் வேறு உணவும் கலந்து வழங்கப்படும் குழந்தைகளில் 3 மடங்காக இந்நோய் இருப்பதாகவும் அறியப்படுகிறது. 30 கிழமைக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் முற்றாக வழங்கப்படாது இருப்பின், இந்நோய் 20 மடங்காக இருக்கிறது[39]. 2007 இல் செய்யப்பட்ட சோதனை ஒன்று தாய்ப்பாலுக்கும், இந்நோயால் பாதிப்புறாமல் இருக்கும் தன்மைக்கும் உள்ள தொடர்பை தகுந்த புள்ளிவிபர அறிக்கையின்படி உறுதிப்படுத்தி இருக்கிறது[14].
நீண்டகால நோக்கில் ஒவ்வாமைக்கும் தாய்ப்பாலூட்டலுக்கும் தொடர்பில்லை என ஒரு ஆய்வு கூறுகின்றது.[40] ஆனாலும் வேறொரு ஆய்வு தாய்ப்பாலூட்டலானது மூச்சுத்தடை நோய் வருவதை குறைப்பதாகவும், ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும், சுவாச குடல் தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதாகவும் கூறுகின்றது.[41]
ஒரு மதிப்பீடு சீலியாயிக் நோய் (celiac disease) வரும் சந்தர்ப்பத்தை தாய்ப்பாலூட்டலுடன் குளூட்டனை உணவில் சேர்த்து வழங்குவது குறைப்பதாகக் கூறுகின்றது. ஆயினும் இது நோய் அறிகுறிகள் தோன்றுவது பின்போடப்படுகிறதா அல்லது நோய்கான பாதுகாப்பை வாழ்வுக் காலம் முழுமைக்கும் கொடுக்கிறதா என்பதைக் கூறவில்லை.[42]
விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஓர் ஆரம்ப ஆய்வு, பெண்களில் தாய்ப்பாலூட்டப்பட்டு வளர்ந்தவர்களில், தாய்பபலூட்டப்படாதவர்களை விட மார்பக புற்றுநோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறைவு எனக் காட்டுகிறது.[43]
தாய்ப்பாலூட்டப்பட்டவர்களில், வாழ்வின் பிற்காலத்தில் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது.[15][44][45]
குழந்தைக்கான போசாக்கு நிறைந்த உணவை தாய்ப்பால் மூலம் வழங்கும்போது, உணவுக்கான செலவு குறைவாகவே இருக்கும். குழந்தை பிறத்தலைத் தள்ளிப்போட, அல்லது கட்டுப்படுத்தச் சிறந்த முறையாக இல்லாவிடினும், தாய்ப்பாலூட்டலும் ஒரு வகையில் உதவுகின்றது. தாய்ப்பாலூட்டலின்போது உபயோகமான சில இயக்குநீர்கள் தாயின் உடலில் உருவாவதுடன்[16] தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பும் பலப்படும்.[46] அடுத்த கருத்தரிப்பு காலம் முழுமைக்கும்கூட முதல் குழந்தைக்கு பாலூட்ட முடியும். ஆனால் பொதுவாக பால் உற்பத்தியாகும் அளவு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குறைந்துவிடும்.[47]
தாய்ப்பாலூட்டலின்போது தாயின் உடலில் உருவாகும் சில இயக்குநீர்கள் தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்க உதவும்[46]. குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்புபற்றி பொது விடயங்களை கற்பித்தலுக்கும், தாய்ப்பாலூட்டும் வீதத்துக்கும் தொடர்பிருக்கிறது.[48] தாய்ப்பாலூட்டலின்போது தாய்க்கு உதவுவதன்மூலம் குடும்ப பிணைப்பு அதிகரிப்பதுடன், குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பும் அதிகரிக்கும்.[49]
ஆக்சிடாசின், புரோலாக்டின் என்ற இயக்குநீர்கள் தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கப்பட்டு, அவை தாயை அதிகளவு ஆசுவாசப்படுத்துவதுடன், குழந்தையை பேணும் தன்மையை அதிகரிப்பதால் தாய், சேய் பிணைப்பும், உறவும் மேம்படும்.[50] குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலூட்டுவதால் சுரக்கும் ஆக்சிடாசின் அளவு அதிகரித்து, கருப்பை சுருக்கத்தை விரைவாகக் குறைத்து, குருதி வெளியேறுதலையும் விரைவாக நிறுத்தும். குழந்தை பிறப்பின் போதும், அதைத் தொடர்ந்தும் கருப்பை சுருக்கம், குருதி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் செயற்கை இயக்குநீரான பிட்டோசின் (Pitocin) ஆனது ஆக்சிடாசின் இயக்குநீர்யின் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது[51].
கருத்தரிப்பு காலத்தில் அதிகளவு கொழுப்பு படிவுகள் தாயின் உடலில் ஏற்பட்டிருக்கலாம். குறைந்த பட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாக தாய்ப்பாலூட்டுவதால், தாயப்பால் உருவாக்கத்தில் இந்த கொழுப்புப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதால் தாய் விரைவில் தனது பழைய உடல்நிறைக்கு திரும்ப உதவும்.[52] ஆனாலும் இந்த எடைக் குறைப்பானது ஒவ்வொருவரிலும் வேறுபடும். சரியான முறையில் உணவு உட்கொள்ளலை நெறிப்படுத்துவதும், தகுந்த உடற் பயிற்சி செய்வதுமே விரைவான, ஆற்றல் வாய்ந்த எடைக் குறைப்பை ஏற்படுத்தும்.[53] AHRQ 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி தாய்ப்பாலூட்டலுக்கும், தாய் கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு வருவதற்கும் உள்ள தொடர்பு பொருட்படுத்த முடியாத அளவிலேயே உள்ளது"[14].
தாய்ப்பாலூட்டும் தாயில், முட்டை உருவாவதை குறைக்கக் கூடிய இயக்குநீர்கள் உருவாதலால், இயற்கையாக அடுத்த கருவுறுதல் பின்போடப்படலாம். தாய்ப்பாலூட்டும் காலத்தில் முட்டைகள் உருவாதலும், மாதவிடாய் வட்டமும் பின்போடப்படும். ஆனால் இரு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டதாக அமையும். சிலரில் பாலூட்டும் காலத்திலேயே முட்டை உருவாதல், அதனால் கருக்கட்டல் நிகழும் வாய்ப்பும் இருக்கிறது. முழுமையான பாலூட்டல் செய்யும் தாயில், சரியான குழந்தை பேணும் முறைகள் நடைமுறைப் படுத்தப்படும்போது, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும்[54]. முழுமையான தாய்ப்பாலூட்டும் சில பெண்களில், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களில்கூட முட்டை தோன்ற வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
தாய்ப்பாலூட்டும் தாயில் சில நீண்டகால உடல்நலம் தரும் விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பாலூட்டல் என்பது ஒரு இயற்கையான தொழிற்பாடாக இருந்தபோதிலும், அதிலும் பொதுவாக சிக்கல்கள் காணப்படவே செய்கின்றன. குழந்தை பிறப்பு நிகழ்ந்த பின்னர் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குழந்தையை தாயின் முலைக்கு அறிமுகப்படுத்துதல் நன்மை தருவதாகவும், பல சிக்கல்களைக் குறைக்க வழிவகுப்பதாகவும் அமையும்க். அமெரிக்க குழந்தை நல மருத்துவ கல்வி நிறுவனத்துடைய தாய்ப்பாலூட்டல் கொள்கையின்படி, முதல் பாலூட்டல் முடியும்வரை, நிறைபார்த்தல், நீளம் அளத்தல், குளிப்பாட்டல், ஏனைய செயல்முறைகள் அனைத்தையும் பின்போடலாம்.[10]
முறையான பயிற்சிபெற்ற மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தகுந்த மருத்துவமனை நடைமுறைகள், மற்றும் திறமையான பாலூட்டல் ஆலோசகர்களின் உதவி ஆகியவற்றின் மூலம் பாலூட்டலில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கலாம்.[61] தாய்க்கு எய்ட்சு தொற்றுநோய் இருக்கும் நிலைமை, சூழலில் ஈயம் போன்ற மாசுப் பொருட்கள் கலந்திருக்கும் நிலமை போன்றவற்றால் பாலூட்டலினால் கைக்குழந்தைக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.[41] தாயின் முலையில் ஏற்கனவே நிகழ்ந்த அறுவைச் சிகிச்சைகள், புதிதாக முலை மாற்றீடு செய்யப்பட்டிருத்தல் அல்லது பதி வைக்கப்பட்டிருத்தல் போன்ற நிலைகளில் தாய்ப்பால் சுரப்பு மிகக் குறைவாக இருக்கலாம்.[62] மிக அரிதாகவேத் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் இயக்குநீர்யான புரோலாக்டின் குறைபாட்டினால் தாயின் பால் சுரப்பு குறைவாக இருக்கும். ஆனாலும் சிலவேளைகளில் குழந்தை பிறப்பின்போது அதிக அளவிலான இரத்தப் போக்கு இருந்திருப்பின், அதனால் இரத்த அழுத்தம் குறைந்து இந்த இயக்குநீர்யில் குறைபாடு ஏற்படும். அந்நிலை ஷீஹனின் நோய்க்கூட்டறிகுறி (Sheehan's syndrome) என அழைக்கப்படும். பல வளர்ந்த நாடுகளில் வேலைக்குப் போகும் பெண்கள் வேலையில் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக, தாய்ப்பாலூட்டலை கைவிட்டு விடுவதுமுண்டு. தவிர, சில பெண்கள் அழகு குறைந்துவிடும் என்பதாலும் பாலூட்டலைத் தவிர்ப்பார்கள்.
எச்.ஐ.வி தொற்று உள்ள தாய் என அறியப்படின், மேலதிக வெளி உணவானது ஏற்றுக் கொள்ளப்பட்டும், கிடைக்கும் நிலையிலும், வாங்கக்கூடிய நிலையில் இருக்கையிலும், பாதுகாப்பானதாக இருக்கையிலும், அவர் தாய்ப்பாலூட்டலைத் தவிர்ப்பதே நல்லது.[63] ஆனாலும் எச்.ஐ.வி தொற்றுள்ள தாயின் தாய்ப்பாலில் உள்ள சில பதார்த்தங்கள், சிலசமயம் நோய்த்தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கவே செய்கிறது.[64] இதனால் தகுந்த, பாதுகாப்பான பிரதியீட்டு உணவு கிடைக்காதவிடத்து, அபிவிருத்தியடையாத நாடுகளில், அப்படியான உணவைப் பெறும் குழந்தைகளை விட, எச்.ஐ.வி தொற்று இருப்பினும், அவ்வகை தாயால் பாலூட்டப்படும் குழந்தைகளில் தொற்றுக்கள் குறைவாகவே இருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் குழந்தை இறப்பு வீதத்தில் பெரிய வேறுபாட்டை அவதானிக்க முடியவில்லை.[65] குழந்தைகளுக்கு லாமிவுடைன் (lamivudine) மருந்து சிகிச்சை அளிப்பதன்மூலம் தாய்ப்பாலூட்டலால் தாயிலிருந்து சேய்க்கு எச்.ஐ.வி கடத்தப்படுவதை ஓரளவு தடுக்கலாம்.[66][67]
பாலூட்டும் முறைகளைப் பற்றியும், கவனிக்க வேண்டிய வி்சயங்கள் பற்றியும் எடுத்துக் கூறும் நூல்கள், நிகழ்படங்கள், கிடைக்கின்றன. அத்துடன் பல அரச, தனியார் மருத்துவமனைகளில் அதற்கான அறிவுரையாளர்களும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பாலூட்டலை ஊக்கப்படுத்துவதற்காக, அதற்கான அறிவுரையாளர்களும் இருப்பதால், தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.
குழந்தை பிறப்பு|குழந்தை பிறந்து அரை மணித்தியாலத்திற்குள் பாலூட்டலை ஆரம்பித்தால், அந்தக் குழந்தையின் உறிஞ்சி உட்கொள்ளும் தன்மை மிகவும் வலிமையானதாகவும், மிகவும் விழிப்பானதாகவும் இருப்பதால் அந்த நேரமே பாலூட்டலை ஆரம்பிப்பதற்கான மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது[68]. மேலும் இப்படி கூடியளவு விரைவில் பாலூட்டலை ஆரம்பிக்கையில், இரவு நேரங்களில் பல தடவை பாலூட்ட வேண்டிய பிரச்சனையும் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது[69].
ஆரம்பத்தில் 2-3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை பாலூட்டுவதால் பாலுற்பத்தியும் கூடும். அனேகமான பெண்கள் 24 மணித்தியாலங்களில் சராசரியாக 8 முறை பாலூட்டுவர். பிறந்த குழந்தைகள் 10-12 தடவைகள்கூட பால் குடிக்க விரும்புவர். சில குழந்தைகள் 18 தடவைகளும் பால் குடிக்க விரும்புவர்.[70]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.