Remove ads
From Wikipedia, the free encyclopedia
எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை தீ நுண்மம் (வைரசு) ஆகும்[1][2]. இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.
Human immunodeficiency virus | |
---|---|
Scanning electron micrograph of HIV-1 (in green) budding from cultured lymphocyte. Multiple round bumps on cell surface represent sites of assembly and budding of virions. | |
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group VI (ssRNA-RT) |
குடும்பம்: | Retroviridae |
பேரினம்: | Lentivirus |
Species | |
|
இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.
உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது[3][4]. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர்[5] இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது[5] 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன[6] தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன [7].
ஒருவரது உடலுக்குள் இந்தக் கிருமி நுழைந்துவிட்டால் அதனை முற்றிலுமாக அழிக்க முடியாது. ஆதலால் எய்ட்சு என்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்த எச்.ஐ.வி கிருமிகளை முற்றாக அழிக்கவல்ல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ள அதே வேளையில், இந்தக் கிருமிகளின் வேகத்தைக் குறைத்து, அவற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது பாவனையில் உள்ளன. எனவே வேறு நோய்களுக்குரிய சந்தர்ப்பவாத தொற்றுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் அந்நோய் ஏற்பட்டிருப்பின், அதற்கான சிகிச்சையுடன், இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் எச்.ஐவி. பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம் என அறியப்படுகிறது. எச்ஐவி கிருமியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் "ஆண்டி ரெட்ரோ (Antiretroviral) வைரஸ் மருந்துகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் எச்.ஐ.வி வைரசின் நோயேற்படுத்தும் தன்மை, இறப்புவீதம் போன்றவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாயினும், இந்த மருந்துகள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை[8].
இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர் சிறந்த மருத்துவரிடம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.
இது நோயாளி உட்கொள்ளும் மருந்து உடலில் செய்யும் ஆற்றலை அறிந்து கொள்ளவும், அந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்க சிகிச்சை அளிக்கவும் உதவும். ஒரு முறை "ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாக இருந்தது. தற்பேது இம்மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.
உடலில் எச்ஐவி கிருமிகள் எங்கு இருந்து கொண்டு நோயைப் பரப்புகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே விரைவில் எச்ஐவி கிருமிகளை முற்றிலுமாக அழிக்கக் கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
எதுவாக இருந்தாலும், நோயின் அறிகுறிகள் தெரிந்த உடன் மருத்துவமனையை அணுகி தங்களது நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம். இந்த நோய் நம்மை தாக்கியது வெளியில் தெரிந்தால் நம்மை என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது சரியல்ல. மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய விவரங்கள் வெளியில் எங்கும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளது. எனவே, தைரியமாக வெளியே வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டியது கடமையாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.