நுண்ணங்கிகள் From Wikipedia, the free encyclopedia
நுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும்,[1]. பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.
கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்[2][3]. ஒரு சிலர் வைரஸ்களுக்கு "வாழும் வேதிப்பொருள்" , அதாவது "The Living Chemical" என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இதன் அமைப்பில் உள்ளது. ஓரிரு வேதிப்பொருள்களின் சேர்க்கையே.
நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.
இந்நுண்ணுயிர்கள் அறியப்பட்டது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். 1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக், என்னும் டச்சு துணிவணிகர், இந்நுண்ணுயிரிகளை தான் உருவாக்கிய எளிமையான நுண்நோக்கியால் கண்டதாக உலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் இவைகளை முதலில் ”அனிமல்க்யூல்ச்” என விவரித்தார். இவரே நுண்ணுயிரியல் என்னும் படிப்புத்தோன்ற காரணமாயுமிருந்தார். இதன் பிறகு 19ம் நூற்றாண்டில் தான் நுண்ணுயிரியின் கண்டுபிடிப்புகளும் அதன் குறித்த ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளும் அடைந்தன.
நுண்ணுயிர்களின் வகைப்பாடு பரவலாக காணப்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் ஆர்கியா என்னும் முழுநுண்ணுயிராகவும், நுண்பாசி, நுண்பூஞ்சை என்னும் மெய்க்கருவுயிர்களும் இதில் அடங்கும். இதன் அளவை எடுத்துக்கொள்ளும் போது, 100μm மிகுந்தும் குறிப்பாக எபுலோபிசியம் பிசல்சோனி என்னும் பாக்டீரியா கண்ணால் காணக்கூடியவை. இதுவும் ஒரு கல உயிரியே ஆகும். இவை மெய்கருவிலி செல்களைவிட பெரிதாகும். அதிலே, ’’மைக்கோப்ப்லாசமா’’ என்னும் பாக்டீரியா மைக்ரோதுளைகளைக்கொண்ட வடிகட்டிகளில் கூட புகக்கூடியது. இதன் அளவு 200 nm (நானோமீட்டர்)களாகும். இது வைரசுகளுக்கு நிகரான உருவ அளவாகும்.
இந்நுண்ணுயிர் வகைப்பாட்டில் வைரசுகள் என அழைக்கப்படும் தீநுண்மமும் அடங்கும். இவைகளுக்குள்ளும் கருஅமிலங்கள் மற்றும் உயிர்களில் உள்ளதுபோல் புரதங்கள் பெற்றிருந்தாலும் அவை உயிரென்பதில் பல ஐயங்களும் சிக்கல்களும் உள்ளன. இவைப்பற்றிய படிப்பு தீநுண்மயியல் (Virology) ஆகும். இதில் பல அறியப்பட்டவை தீங்கிழைப்பவனையே. ஆயினும் சில நன்மை உண்டு பண்ணுவனவும் உண்டு. எடுத்துக்காட்டாக, பாக்டீரியோபாச்கள்/பாக்டீரியாஉண்ணி (Bacteriophage) என்னும் தீநுண்மமானது தனது கருஅமிலத்தை பாக்டீரியாக்களுள் செலுத்தி அவை பல்கிப்பெருகி அப்பாக்டீரியாக்களை சிதைக்கின்றன. இதனால், பல தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களை அழித்து உதவுகின்றன. கங்கை நதியில் குளித்தால் பிணிகள் தீரும் என்பதற்கு காரணம் அவை மிகுதியான பாக்டீரியாஉண்ணி கொண்டதால் என சிறு வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை நானோமீட்டர் அளவுகளில் காணப்படுகிறது.
பாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளில் பெருங்குடும்பமாகும். இது நிலைக்கருவிலிகளின் முக்கிய அங்கமாகும். இவை 200nm முதல் 100μm வரை அளவில் வேறுபடுகின்றன. பாக்டீரியாக்களில் பல பேரினங்கள் உண்டு. இவைகளில் குறிப்பிடத்தக்கவை '’பாசில்லசு’’ (கோலுரு நுண்ணுயிர்), ’’விப்ரியோ’’ என்னும் பல. இது பல நன்மை விளைவிப்பனவாகவும் சில தீமை விளைவிப்பனவும் உண்டு. இதில் மெய்பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் இரு பிரிவு உண்டு. ஆர்கிப்பாக்டீரியாக்கள் நிலைக்கருவிலிகளுக்குள் வரும் சிறப்பு வாய்ந்த பாக்டீரியாக்களாகும். இவைகள் வாழ்வதற்கு சிரமிகுந்த இடங்களிலும் வாழ்கின்றன. ஆகையால் இவைகளை ஆங்கிலத்தில் ’’’எக்ச்ட்ரிமோபைல்கள்/உச்சவிரும்பிகள்’’’ என அழைக்கப்படுகிறது. இவ்வுச்சவிரும்பிகளே இவ்வார்க்கி குடும்பத்தில் மிகுந்து காணப்படுகிறது. இவ்பாக்டீரியாக்களில் டி.என்.ஏ என்னும் கருஅமிலங்கள் ஒரு தலைமுறையில் இன்னொரு தலைமுறைக்கு தகவல் கடத்தியாக பயன்படுகிறது. சில பாக்டீரியாக்களில் நகரிழை எனப்படும் ஒரு உறுப்பு அதன் நகர்விற்கு பயன்படுகிறது. இவைகளில் ஆக்டினோபாக்டீரியாக்கள் பூஞ்சைகள் போல உருவமைப்பும் பாக்டீரியாக்களைப்போல் உடல்செயல்பாடுகளும் உள்ளவை. நீலப்பச்சைப்பாக்டீரியாக்கள் பாசிகளைப்போல் செயல்பாடு மற்றும் உருவமைப்பைக்கொண்டாலும் அடிப்படைக்கட்டமைப்புகள் பாக்டீரியாக்களை ஒத்திருக்கும்.
பாசிகளில் சில நுண்நோக்கியால் காணக்கூடியவையாகும், அவைகளை நுண்பாசிகள் என்கிறோம். இவை பச்சைப்பாசிகள், பழுப்புபாசிகள், இருநகரிழையுயிரி (டினோப்ளாசல்லேட்டுகள்) என்னும் பெரும் பங்கு உண்டு. இந்நுண்பாசிகள் அளவில் சிறியதாயினும் செயல்பாடுகள், கட்டமைப்புகள் மெய்கருவிலிகளான பாசியை ஒத்திருக்கும்.
இவை பூஞ்சை இனத்தில் குறிப்பிடத்தக்கவை. இவைகளில் ஒரு செல் உயிர்களான யீச்டுகளும் (yeast) (தனிப்பூஞ்சை), பலசெல் உயிர்களான பட்டி பூஞ்சைகளும் அடங்கும். இவைகளில் மிகவும் அறியப்படுவது ரொட்டி செய்ய பயன்படும் தனிப்பூஞ்சையான ‘’சசேரோமைசிச் சரவேசியே’’ ஆகும்.
இவை முதற்றோன்றி பிராணிகள்/முதற்கலவுரு எனவும் அழைக்கலாம். இவை ஆங்கிலத்தில் ப்ரோட்டசோவன் என அறியப்படுகின்றது. இவைகள் நுண்ணோக்கியால் கானப்படக்கூடிய புழுப்போன்ற அமைப்புடையவை. இவைகளில் பரவலாக அறியப்பட்டவை அமீபாக்களாகும். மேலும் நோய்களை உண்டுச்செய்யும் குடற்புழுக்கள், கொக்கிபுழுக்கள் இவைகளையே சாரும்.
நுண்ணுயிர்கள் பெரும்பாலும் ஒரு கலம் அல்லது உயிரணு மட்டுமே கொண்ட உயிரினங்கள் (கண்ணறை, திசுள் என்னும் பெயர்களும் செல் என்பதைக் குறிக்கும்). எனினும், பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்கள் சிலவும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பது உண்டு. கண்ணுக்குப் புலப்படும் அதிநுண்ணுயிரி போன்ற ஒரு கல உயிரினங்களும் உண்டு.
கடல், மலை, ஆறு, காடு, பாலைவனம் போன்ற இயற்கையான எல்லா வாழிடங்களிலும் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. பல உயிரினங்களால் உயிர் பிழைக்க இயலாத வெந்நீரூற்றுக்கள், கந்தக பூமிகள், பனிப் பிரதேசங்கள் போன்ற இடங்களிலும், காரத் தன்மை, உப்புத்தன்மை, அமிலத் தன்மை மிகுந்துள்ள இடங்களிலும் கூட நுண்ணுயிர்கள் உயிர் வாழுகின்றன.
வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மது பானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் முதலிய பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன. பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களேயாகும்.
இவைகள் வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். இவைகளில் நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகள் ஆகிய இருப்பிரிவுகளை சார்ந்த உயிர்களும் அடங்கும். உதாரணத்திற்கு பாக்டீரியாக்கள், சயனோபாக்டீரியாக்கள், ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் நிலைக்கருவிலிகளும், பூஞ்சை, பச்சைப்பாசி, பழுப்புபாசிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளும் இருக்கின்றன.
இவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பொருள்களை உற்பத்தி செய்து மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. சில நுண்ணுயிர்கள் நைதரசன் நிலைப்படுத்தலில் பங்கெடுப்பதனால், நைதரசன் சுழற்சியில் முக்கிய பங்கெடுக்கின்றது. அத்துடன் சில நுண்ணுயிர்கள் மழை வீழ்ச்சியிலும், காலநிலையிலும் பங்கு வகிப்பதாக அண்மைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.[4].
அதேவேளை இவையே சில இடங்களில் நோய்க்காரணிகளாவும் திகழ்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றில் நோய் உண்டாக்கக் கூடிய தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. இவற்றினால் ஏற்படும் தொற்றுநோய்களாகும்.
இதன் பயன்கள் அளவிட முடியாதவையாக உள்ளது. இவைகளைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமும், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தவண்ணமும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.