சீம்பால்
From Wikipedia, the free encyclopedia
கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சீம்பால் மனிதர்களிலும், மாடுகளிலும் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் செரிமான முறைமை வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு வயிற்றுப்போக்கு ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட இரத்த சிவப்பணுக்களை உடைப்பதால் உருவாகும்) பைலிருபின் போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் தொண்டை, நுரையீரல் மற்றும் குடல்களைப் பாதுகாக்கின்றன. சில நன்மை பயக்கும் கோலுரு நுண்ணுயிர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.
இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை சமைத்து உட்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்வதும், இட்லி செய்வதுபோல ஆவியில் வேகவைத்து உட்கொள்வதும் பொதுவானது.
வெளி இணைப்புகள்
- யாகூ! ஹெல்த்தில் சீம்பால் பற்றி (ஆங்கில மொழியில்)
- நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சீம்பால் பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.