கோபிச்செட்டிப்பாளையம்
இது தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
இது தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
கோபிசெட்டிபாளையம் (ஆங்கிலம்:Gobichettipalayam), (கோபி என்று அழைக்கப்படும்) இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கோபிச்செட்டிபாளையம் தாலுகா மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்திலும், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கோபிசெட்டிபாளையம் 'சின்ன கோடம்பாக்கம்' அல்லது 'மினி கோலிவுட்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது. கோபிச்செட்டிப்பாளையம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கோபிசெட்டிபாளையம் | |
---|---|
தேர்வு நிலை நகராட்சி | |
அடைபெயர்(கள்): சின்ன கோடம்பாக்கம் | |
ஆள்கூறுகள்: 11°27′17.6″N 77°26′11.4″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | கொங்கு நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
நகராட்சி நிறுவப்பட்டது | 1948 |
அரசு | |
• நிர்வாகம் | கோபிசெட்டிபாளையம் நகராட்சி |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. ஏ. செங்கோட்டையன் |
ஏற்றம் | 241 m (791 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 59,523 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 638 4xx |
தொலைபேசி குறியீடு | 91(04285) |
வாகனப் பதிவு | த.நா. 36 |
எழுத்தறிவு | 74% |
நாடாளுமன்ற உறுப்பினர் | திருப்பூர் |
சட்டமன்ற தொகுதி | கோபிச்செட்டிபாளையம் |
இணையதளம் | கோபி நகராட்சி |
தற்போதுள்ள கோபிச்செட்டிபாளையம் முன்னர் ஒரு முக்கிய பகுதியாக வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப்பட்டது. அரசு ஆவணங்களிலும், பதிவேடுகளிலும் இன்னும் அப்பெயரையே பயன்படுத்துகின்றனர்.[1]
கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால், கோபிச்செட்டிபாளையம் எனப் பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு, புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து, அதன் உள்ளே குதித்தார். அந்நேரத்தில் அப்புதருக்குள் மறைந்து, தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம், புலி என்றெண்ணி, அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அப்பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார் என்று கூறுவர். கோபிச்செட்டிப்பாளையம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த இடம் முன்னர் கடை எழு வள்ளல்களில், ஒருவரான பாரி மன்னர் ஆட்சி செய்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் சேர மன்னர்களால் கைப்பற்றப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதன் பிறகு, திப்பு சுல்தான் இந்த ஊரை ஆட்சி செய்தார்.[2] முடிவில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கொண்டனர்.[3]
கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியான கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. சென்னை சுமார் 390 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து, பவானி ஆற்று கரையில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை சூடாக இருக்கும். கோடை மாதங்களில் தவிர, மற்ற மாதங்களில் மிதமான வெப்பமும், அதிக மழையளவும் கொண்டு இருக்கும்.[4]
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 2008ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,064 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 59,523 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,062 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4669 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 975 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,394 மற்றும் 47 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.27% , இசுலாமியர்கள் 7.11%, கிறித்தவர்கள் 2.52% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[5]
கொங்கு தமிழ், தமிழ் மொழியின் ஒரு கிளை ஆகும். இதுவே பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழி. ஆங்கிலமும் தமிழும் சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படுகிறது. மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளும் பேசப்படுகின்றன. உணவு பெரும்பாலும் தென் இந்திய அடிப்படையில் அரிசி சார்ந்தது ஆகும்.
நகரம் விரைவாக தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 31%, வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் 56% மற்றும் 13% "இரு செயல்பாடு" என்று அரசாங்கம் விவரிக்கிறது. விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. நெல். கரும்பு, வாழை, புகையிலை மற்றும் மஞ்சள் முக்கிய பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
நான்கு முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும். ஒரு நடுத்தர அலை இயக்கப்படும் வானொலி நிலையம் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஐந்து பண்பலை வானொலி நிலையங்களின் சேவை இங்கு உள்ளது. அனைத்து முக்கிய கைபேசி சேவை வழங்குநர்களும் இங்கு சேவை வழங்குகின்றனர்.
நகரில் அரசு மருத்துவமனை தவிர பல முக்கிய மருத்துவமனைகள் உள்ளன.
கோபிச்செட்டிபாளையம் 2008 வரை ஒரு மக்களவை தொகுதியாக இருந்தது. இப்பொது திருப்பூர் தொகுதியின் ஒரு பாகமாக இருக்கின்றது. மேலும் இந்த நகரம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தது.
கோபிச்செட்டிபாளையம் ஒரு நல்ல கல்வி உள்கட்டமைப்பு உள்ள நகரமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவில் மாணவர்களை அனுப்புகிறது [சான்று தேவை]. தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒரு தலை சிறந்த கல்விக் கூடமாக தன்னாட்சி அங்கீகாரத்துடன் விளங்குகிறது.நூற்றாண்டுகளுக்கும் மேல் இயங்கி வரும் வைரவிழா மேல்நிலைப் பள்ளியும்,பெண்களுக்கு என தனி அடையாளமாகத் திகழும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இந்த நகரத்தின் அடையாளம் ஆகும்.
கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சாலைகள் மொத்தம் 67.604 கி.மீ. நீளம் ஆகும். மாநில நெடுஞ்சாலைகள் இவற்றில் 6.6 கிமீ உள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பெரிய மத்திய பேருந்து நிலையம் இயக்கப்படுகிறது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 48 கிமீ தொலைவில் அமைந்து உள்ள ஈரோடு சந்திப்பு ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் 74 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். மேலும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், பல்லடம், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பெருந்துறை, அவிநாசி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், குன்னத்தூர் என பிற பகுதிகளுக்கும் மேலும் சென்னை, ஓசூர், ஊட்டி, கும்பகோணம், திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு தொலைதூரப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மைசூர் செல்லும் பேருந்துகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.
கொடிவேரி அணைக்கட்டு கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது.
இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் பாரியூரிலேயே வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளன.
கோபி நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக முருகப்பெருமான் கோவில்களான விசேஷம் வாய்ந்த பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பவளமலை முருகன் திருக்கோயில் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் இம்மூன்று இடங்களையும் பார்க்க தவறுவதில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.