டொன் பிலிப் ரூபசிங்க குணவர்தன (Don Philip Rupasinghe Gunawardena, சுருக்கமாக பிலிப் குணவர்தன; 11 சனவரி 1901 – 26 மார்ச் 1972) இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதி ஆவார். பிரித்தானிய இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை இவர் தோற்றுவித்தார். இக்கட்சியே முதன் முதலாக இலங்கையில் திரொட்சுக்கியத்தை அறிமுகப்படுத்தியது. இவர் பின்னர் மகாஜன எக்சத் பெரமுன என்ற கட்சியை ஆரம்பித்தார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த இவர், 1956 முதல் 1959 வரை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் அரசில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், 1965 முதல் 1970 வரை டட்லி சேனாநாயக்கவின் அரசில் மீன்பிடி மற்றும் தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தார்.
பிலிப் குணவர்தன Philip Gunawardena | |
---|---|
மீன்பிடி, மற்றும் தொழிற்றுறை அமைச்சர் | |
பதவியில் 1965–1970 | |
ஆட்சியாளர் | எலிசபெத் II |
பிரதமர் | டட்லி சேனாநாயக்க |
முன்னையவர் | டபிள்யூ ஜே. சி. முனசிங்க |
பின்னவர் | ஜோர்ஜ் ராஜபக்ச |
விவசாய மற்றும் உணவு அமைச்சர் | |
பதவியில் 1956–1959 | |
ஆட்சியாளர் | எலிசபெத் II |
பிரதமர் | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா |
முன்னையவர் | ஜே. ஆர். ஜெயவர்தன |
பின்னவர் | சி. பி. டி சில்வா |
இலங்கை நாடாளுமன்றம் அவிசாவளை | |
பதவியில் 1956–1970 | |
முன்னையவர் | குசுமசிறி குணவர்தன |
பின்னவர் | பொனி ஜெயசூரிய |
பதவியில் 1947–1947 | |
பின்னவர் | குசுமசிறி குணவர்தன |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொரலுகொடை, அவிசாவளை, இலங்கை | 11 சனவரி 1901
இறப்பு | 26 மார்ச்சு 1972 71) கொழும்பு, இலங்கை | (அகவை
அரசியல் கட்சி | மகாஜன எக்சத் பெரமுன |
பிற அரசியல் தொடர்புகள் | லங்கா சமசமாஜக் கட்சி |
துணைவர் | குசுமசிறி குணவர்தன |
பிள்ளைகள் | இந்திக குணவர்தனா, பிரசன்னா குணவர்தன, லக்மலி குணவர்தன, தினேஷ் குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன |
முன்னாள் கல்லூரி | ஆனந்தா கல்லூரி கொழும்புப் பல்கலைக்கழகம் இலினோய் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை
பிலிப் குணவர்தன கொழும்பு மாவட்டம், அவிசாவளையில் உள்ள பொரலுகொடை என்ற சிற்றூரில் பிறந்தார். தாய் தோம்பே என்ற ஊரைச் சேர்ந்த டொனா லியனோரா குணசேகர, தந்தை டொன் ஜகோலிசு ரூபசிங்க குணவர்தனா உள்ளூர் நில உடமையாளர், பொரலுகொடையில் கிராம சேவையாளராகவும், விதானை ஆராச்சியாகவும் இருந்தவர். 1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரத்தின் போது தந்தை கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் கொண்ட குடும்பத்தில் பிலிப் மூன்றாவது பிள்ளை ஆவார். இடதுசாரி அரசியல்வாதிகளான ரொபர்ட் குணவர்தனா, கரோலின் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் இவருடன் கூடப் பிறந்தவர்கள். விவியன் குணவர்தன இவரது மருமகள்.[1]
கல்வி
களுவாகல சித்தார்த்த வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற பிலிப் பின்ன்ர் கொழும்பு, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி, ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்றார். இலண்டன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை முடித்து, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து பொருளியல் படித்தார். இலங்கை தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்து இளைஞர்களுக்கிடையே அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார்.[2][3]
அமெரிக்காவில் கல்வி
பிலிப் இங்கிலாந்தில் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் பிலிப் தனது 21 வயதில், அமெரிக்காவிற்குச் சென்றார், அங்கு அவர் இலினோய் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்றார். அங்கு அவர் அடிப்படைவாதி ஆக்கப்பட்டார், பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது, வீழ்ச்சியடைந்த தொழிலாளர் இயக்கத்தில் சிக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அங்கிருந்து விசுகொன்சின் பல்கலைக்கழகம் சென்றார், அங்கு அவர் ஜெயப்பிரகாஷ் நாராயணை சந்தித்தார். இருவரும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.[4] குணவர்தன, இசுக்காட் நியரிங் (1883-1983) என்பவரிடம் மார்க்சியத்தில் பயிற்சி பெற்றதாக உட்வார்ட் பதிவு செய்துள்ளார். வேளாண் பொருளாதாரத்தில் இளம் அறிவியல், முதுகலை பட்டங்களை முடித்தார். 1925 இல், முதுகலை முனைவர் பட்ட படிப்புக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆரம்பக்கால அரசியல்
1927 இல் குணவர்தன நியூயார்க்கில் உள்ள ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முன்னணியில் சேர்ந்தார், அங்கு அவர் மெக்சிக்கோவின் ஒசே வாஸ்கோன்செலோசுடன் இணைந்து எசுப்பானிய மொழியைக் கற்றார்.[4][5]
1929 இல் இலண்டன் சென்று, அங்கு குடியேற்றவாத எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்று, சிறந்த பேச்சாளர், தொழிற்சங்கவாதி, அரசியல் கட்டுரையாளர் என பல கோணங்களில் சிறந்து விளங்கினார். இந்தியாவின் சவகர்லால் நேரு, வே. கி. கிருஷ்ண மேனன், கென்யாவின் சோமோ கென்யாட்டா, இந்தோனேசியாவின் டான் மலாக்கா, மொரீசியசின் சிவசாகர் ராம்கூலம் ஆகியோர் அவரது சமகால சக செயற்பாட்டாளர்களில் சிலர்.[6]
டெய்லி வர்க்கர் இதழில் ஊழியர்களுடன் சேர்ந்தார். சாபுர்சி சக்லத்வாலாவால் நிறுவப்பட்ட இந்திய தொழிலாளர் நல சங்கத்தில் இணைந்து அதை வழி நடத்தினார். அவர் பின்னர் பிரான்சு, செருமனி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு சோசலிச குழுக்களுடன் இணைந்து பணியாற்றினார்.[4][7]
'டி-குழுமம்'
கொமின்டர்னின் 'இடதுசாரித் திருப்பத்திற்கு' மத்தியில், குணவர்தன எஃப். ஏ. ரிட்லி, அன்சுராஜ் அகர்வாலா ஆகியோரின் மார்க்சிய பிரச்சாரக் கழகத்தில் இரகசியமாக இணைந்து, சமூக சனநாயகக் கட்சிகளை சமூக பாசிசவாதிகள் என்று இசுட்டாலினிசவாதிகளின் குணாதிசயத்தை எதிர்த்தார். ரிட்லியும் அகர்வாலாவும் லியோன் திரொட்ஸ்கியுடன் உறவை முறித்துக் கொண்டபோது, குணவர்தன திரொத்சுக்கி பக்கம் நின்றார். 1932 இல் அவர் தொரொத்சுக்கியை பிரிங்கிப்போவில் சந்திக்க ஓரியண்ட் விரைவு வண்டியில் பயணம் செய்தார், ஆனால் சோஃபியாவில் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டார்.[4][8]
மே 1932 இல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முன்னணியின் பிரித்தானிய மாநாட்டில், குணவர்தன, ஹாரி பொலிட் என்பவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா மீது ஒரு எதிர்த் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.[9] இதன் விளைவாக, பெரிய பிரித்தானியாவின் கம்யூனிஸ்ட் கட்சி அவரை திரொத்சுக்கியக் கொள்கைகளுக்காக வெளியேற்றியது.[4][10]
எவ்வாறாயினும், என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, லெசுலி குணவர்தன போன்ற பல ஒத்த எண்ணம் கொண்ட இலங்கையர்கள் அவரைச் சுற்றி திரண்டிருந்தனர். அவர்கள் 'டி-குழு' (T-Group) என்று அறியப்பட்டனர். இவர்களே லங்கா சமசமாஜக் கட்சியின் திரொத்சுக்கியப் பிரிவின் கருவை உருவாக்கினர்.[4][11]
இந்திய அலுவலகத்தின் உத்தரவின் பேரில், இசிக்காட்லாந்து யார்டு, ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்காக இந்தியாவுக்குச் செல்லும் அவரது நோக்கத்தை முறியடித்தது.[12] குணவர்தன பாரிசில் இடது எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கும் பொருட்டு ஐரோப்பாவிற்குப் புறப்பட்டார். பின்னர் அவர் பிரனீசு மலைத்தொடர் வழியாக பார்செலோனா சென்றார். எசுப்பானியாவில் திரொத்சுக்கியவாதிகள் பலரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது - எசுப்பானியாவில் விரைவில் எசுப்பானிய உள்நாட்டுப் போர் ஆரம்பமாகவிருந்தது.[4] குணவர்தனவின் கடவுச்சீட்டு பிரித்தானிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், அவரது தந்தையின் வேண்டுகோளின் பேரில் டி. பி. ஜெயதிலக்கவின் வற்புறுத்தலின் பேரில் அவர் இலங்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
போருக்கு-முன்னரான அரசியல்
1932 நவம்பரில் குணவர்தன இலங்கை திரும்பிய உடனேயே, கிராமப்புற விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்களை ஒழுங்கமைக்கும் தீவிர அரசியலில் மூழ்கினார். 1935 இல் லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவ முன்னோடியாக இருந்தார். 1936-இல் தனது சொந்த ஊரான அவிசாவளையில் இருந்து எஃப். ஏ. ஒபயசேகராவைத் தோற்கடித்து இலங்கை அரசாங்க சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்க சபையில் அவர் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் முன்னேற்றத்திற்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.[13][14]
1941-இல் தூரகிழக்கில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, சமசமாசக் கட்சி பிரித்தானியாவின் போர் முயற்சியை வெளிப்படையாக எதிர்த்தது, இதனால் அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இருந்து செயற்பட்டனர். ஆளுநரின் உத்தரவின் பேரில் பிலிப் குணவர்தன கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஏப்ரல் 5 அன்று, கொழும்பு மீதான சப்பானிய விமானத் தாக்குதலின் போது, குணவர்தன உட்பட சமசமாசக் கட்சித் தலைவர்கள் சிறையிலிருந்து தப்பிக்க முடிந்தது. சூலை 1942 இல் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு குருசாமி என்ற பெயருடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இதன் விளைவாக 1942 சூலையில் அரசாங்க சபையில் அவரது இடம் பறிபோனது. அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பெர்னார்ட் ஜெயசூரிய தெரிவானார். 1943 இல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு மும்பையில் தடுத்து வைக்கப்பட்டார், மேலும் பல மாதங்களுக்குப் பிறகு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, போர் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.[15]
போருக்குப்-பின்னரான அரசியல்
1945 இல் சிறையில் இருந்து விடுதலையானதும், குணவர்தன தனது அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார். போரின் போது லங்கா சமசமாஜக் கட்சி பிளவுபட்டது, குணவர்தனவும் என். எம். பெரேராவும் "தொழிலாளர் எதிர்ப்பு" என்ற இயக்கத்தை உருவாக்கினர். சீர்திருத்தப்பட்ட சமசமாசக் கட்சி 1947 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதல் நாடாளுமன்றத்தில் 10 இடங்களைப் பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அவிசாவளை தொகுதியில் பெர்னாட் ஜயசூரியவை தோற்கடித்து குணவர்தன நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அவரது சகோதரர் ரொபர்ட் குணவர்தனவும் கோட்டே தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். எவ்வாறாயினும், 1947 இல் சேர் சிறில் டி சொய்சாவுக்கு சொந்தமான தென்மேற்கு போக்குவரத்து நிறுவனத்தின் முன்னணி ஊழியர்களை பொதுப் பணிப் புறக்கணிப்பிற்குத் தூண்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து விரைவில் தனது நாடாளுமன்ற இருக்கையை இழந்தார். அவருக்கு மூன்று மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது, ஏழு ஆண்டுகளுக்கு குடிமை உரிமைகளையும் இழந்தார். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், அவரது மனைவி குசுமசிறி குணவர்தன அவிசாவளை தொகுதியில் வெற்றி பெற்றார்.[16]
விப்லவகாரி லங்கா சமசமாசக் கட்சி
1950 இல் லங்கா சமசமாஜக் கட்சியையும் போல்செவிக் சமசமாஜக் கட்சியையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் செயல்முறை தொடங்கப்பட்டது. இம்முயற்சியை குணவர்தன எதிர்த்தமையால்,[17] அவர் 1951 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து விலகி விப்லவகரி லங்கா சமசமாஜக் கட்சி (புரட்சிகர இலங்கை சமத்துவக் கட்சி) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.[18][19][20] இவரது புதிய கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தேர்தல் கூட்டணியில் நுழைந்து 1952 தேர்தலில் போட்டியிட்டது. அதில் அவரது மனைவி குசுமா குணவர்தன அக்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவிசாவளையில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.
1956 தேர்தலில், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அமைத்த மகாஜன எக்சத் பெரமுன (மக்கள் ஐக்கிய முன்னணி) என்ற கூட்டணியில் குணவர்தனவின் கட்சி இணைந்து போட்டியிட்டது. இத்தேர்தலில் குணவர்தன அவிசாவளை தொகுதியில் போட்டியிட்டு மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். அத்துடன் பண்டாரநாயக்காவின் அரசில் பலம் வாய்ந்த விவசாய, உணவு, கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[21] குணவர்தன "நெல் நிலச் சட்டத்தின்" சிற்பியாகவும், மற்றும் குத்தகைதாரர் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தமை, துறைமுகம் மற்றும் பேருந்து தேசியமயமாக்கியமை, பல்நோக்கு கூட்டுறவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியமை, கூட்டுறவு வங்கியை நிறுவியமை ஆகியவற்றிற்காகவும் நினைவுகூரப்படுகிறார்.[22] 1959 மே நாள் கூட்டத்தில், குணவர்தன, ஒரு சதியால் அரசாங்கம் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறினார். பின்னர் 1959 மே 18 இல், குணவர்தன பண்டாரநாயக்காவின் அமைச்சரவையின் வலதுசாரிப் பிரிவுகளுடனான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி ஏனைய தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். பண்டாரநாயக்கா 1959 செப்டம்பர் 26 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
1959 இல், தனது விப்லவகாரி சமசமாசக் கட்சியை மறுசீரமைத்து, அதனைக் கலைத்து மகாஜன எக்சத் பெரமுன இற்குள் ஒன்றிணைத்தார். மகாசன எக்சத் பெரமுன இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், திரொத்சுக்கியவாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எக்சத் பெரமுன கட்சி மார்ச் 1960 பொதுத் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றியது, ஆனாலும் சூலை 1960 மறு பொதுத்தேர்தலில் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இரண்டு தடவைகளிலும் குணவர்தன வெற்றி பெற்றார். தேர்தலின் பின்னர் எக்சத் பெரமுன, சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியன இணைந்து ஐக்கிய இடது முன்னணியைத் தோற்றுவித்தன.[23]
1964 இல், சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி அரசு நடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. இதனை அடுத்து நிகழ்ந்த 1965 தேர்தலில், குணவர்தன மட்டுமே எக்சத் பெரமுனை சார்பில் வெற்றி பெற்றார். தேர்தலுக்குப் பின்னர் டட்லி சேனாநாயக்கவின் அரசில் இணைந்தார், அவர் மீன்பிடி, மற்றும் தொழிற்றுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் தனது பதவிக் காலத்தில், கைத்தொழில் அபிவிருத்திச் சபையை நிறுவி, அரச தொழில் நிறுவனங்களையும் தேசிய தனியார் துறைத் தொழில்களையும் வலுப்படுத்தி விரிவுபடுத்தினார், மீன்வளக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கியதன் மூலம் மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலினார். சோவியத் அரசின் உதவியுடன், டயர், எஃகுக் கூட்டுத்தாபனங்களை நிறுவினார்.[24]
இறுதி ஆண்டுகள்
1970 தேர்தலில் குணவர்தன இலங்கை சுதந்திரக் கட்சியின் பொனி ஜெயசூரியவிடம் தோற்றார். நோய்வாய்ப்படுவதற்கு முன்பு தனது எக்சத் பெரமுன கட்சியை மறுசீரமைக்கும் செயல்முறையைத் தொடங்கினார். 1972 மார்ச் 26 இல் தனது 72-ஆவது அகவையில் நீண்ட நோய்க்குப் பிறகு இறந்தார்.[25] அவரது மகன் தினேஷ் குணவர்தன 1977 தேர்தலில் அவிசாவளை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பிலிப் குணவர்தன 1939 இல் குசுமா அமரசிங்க என்பவரைத் திருமணம் புரிந்தார், குசுமா 1948 முதல் 1960 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு இந்திக குணவர்தனா (முன்னாள் அமைச்சர்), பிரசன்ன குணவர்தன (முன்னாள் கொழும்பு முதல்வர்), லக்மலி குணவர்தன, தினேஷ் குணவர்தன (முன்னாள் அமைச்சரும், தற்போதைய பிரதமரும்), கீதாஞ்சன குணவர்தன (முன்னாள் அமைச்சர்) ஆகியோர் பிள்ளைகள் ஆவர்.[26][27] பிலிப் குணவர்தனவின் மருமகள் விவியன் குணவர்தன லங்கா சமசமாஜக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான லெசுலி குணவர்தனவைத் திருமணம் புரிந்தார்.[6] பேரன் யதாமினி குணவர்தன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.