இலங்கையில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
கொழும்புப் பல்கலைக்கழகம் (University of Colombo, பொதுவழக்கில், கொழும்பு கெம்பஸ் / UOC) கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பழைமைவாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். இலங்கையின் மிகப் பெரிய பல்கலைக்கழகம்[1] மாத்திரமன்றி, நவீன உயர் கல்வியை இலங்கையில் வழங்கும் முன்னணிக் கல்வியகமும் இதுவே ஆகும். இயற்கை, சமூகவியல், கணிதம், கணினி விஞ்ஞானம், சட்டம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் முதலான துறைகளில் முன்னிலை வகிக்கும் இப்பல்கலை, ஆசியாவின் முதற் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.[2]
කොළඹ විශ්වවිද්යාලය | |
கொழும்புப் பல்கலைக்கழகம்இலச்சினை | |
குறிக்கோளுரை | சமக்கிருதம்: बुद्धिः शर्वत्र भ्रजते (புத்தி சர்வத்ர ப்ரஜதே) "அறிவு எங்கும் விளங்கிடுக!" |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1921 |
நிதிக் கொடை | ரூ.1.461 பில்லியன் [1] |
வேந்தர் | அதி வண.ஒஸ்வால்ட் கொமிஸ் |
துணை வேந்தர் | பேரா.லக்ஷ்மன் திசாநாயக்கா |
கல்வி பணியாளர் | 240[1] |
நிருவாகப் பணியாளர் | 1,600[1] |
மாணவர்கள் | 11,604[1] |
பட்ட மாணவர்கள் | 9,100[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,504[1] |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம் |
வெளியீடு | University of Colombo Review, The Ceylon Journal of Medical Science |
நிறங்கள் | நாவலும் வெள்ளையும் |
தடகள விளையாட்டுகள் | 29 அணிகள் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுநலவாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, International Association of Universities |
இணையதளம் | இணையத்தளம் |
இலண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைந்ததாக, 1921இல் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1923இலிருந்து மாணவர்க்குப் பட்டங்களை அளித்து வந்தது. எனினும், இலங்கை மருத்துவப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1870ஆம் ஆண்டை, இப்பல்கலைக்கழகத்தின் தோற்றமாகக் கொள்ளுதலே பொருத்தம்.[3]
இப்பல்கலைக்கழகத்திற்கான நிதி, இலங்கை அரசிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலம் பெற்றுக்கொள்கின்றது. எனவே, இதற்கான, உபவேந்தர் நியமிப்பை, இலங்கை சனாதிபதி மூலம், மானியங்கள் ஆணைக்குழுவே செய்கின்றது. "புத்தி: ஸர்வத ப்ரஜதே!" ("அறிவு எங்கும் விளங்கிடுக") என்ற குறிக்கோள் கொண்ட இப்பல்கலையில், .சுமார் பதினோராயிரம் மாணவர்களுடன் இது ஏழு பீடங்களையும் 41 துறைகளையும், 8 வேறு நிறுவகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழகமானது 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொழும்பு நகரத்தின் இதயம் என அறியப்படும் கருவாத் தோட்டம் பகுதியில், "தும்முல்லை சந்தி" எனும் பேருந்து வழித்தடத்தில், திம்பிரிகஸ்யாய எனும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் "கல்லூரி இல்லம்" (கொலிஜ் ஹவுஸ்) என அழைக்கப்படுகின்றது.
கல்லூரி இல்லம், முதுமாணிப் பட்டப் படிப்பு பீடம் மற்றும் உயிர் இரசாயன, மூலக்கூற்று உயிரியல், மற்றும் உயிர்த் தொழிநுட்ப நிறுவகம் (IBMBB) ஆகிய வளாகங்கள், குமாரதுங்க முனிதாச மாவத்தையில் (முன்னாள் தேஸ்டன் வீதி) அமைந்துள்ளன. இவற்றின் எதிர்ப்புறம், விஞ்ஞான பீடம், கணினிக் கல்லூரி [UCSC] ஆகிய இரு பீடங்களும், புதிய கலை அரங்கம் (NAT), பல்கலைக்கழக ஆடுகளம், ஜோர்ஜ் மன்னன் மண்டபம் என்பனவும் அமைந்துள்ளன. விஞ்ஞான பீடத்தின் மறுபுறம், இராஜகீய மாவத்தையில், கலைப்பீடம், சட்டபீடம், கல்விப்பீடம், பல்கலை நூலகம், பல்கலையின் உள்ளக விளையாட்டரங்கம் என்பன அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சற்று விலகி, மருதானையில் அமைந்துள்ள கொழும்பு பொது வைத்தியசாலையின் அருகே, இலங்கையின் மிகப் பழைமையான மருத்துவ பீடம் அமைந்திருக்கின்றது. இப்பல்கலைக்குரிய சுதேச வைத்திய நிறுவகம் நாவலை பகுதியிலும், சிறிபாளி வளாகம், ஹொரணை பகுதியிலூம், விவசாயத் தொழிநுட்பமும் உள்ளூர் விஞ்ஞானமும், அம்பாந்தோட்டையிலும் அமைந்துள்ளன.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாறானது, இலங்கை மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்துடன் யூன் 1870 இல் ஆரம்பிக்கின்றது தெற்காசியாவின் இரண்டாவது ஐரோப்பிய மருத்துவப் பாடசாலையான இது, 1880இல், கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன், 1889 இல் இக்கல்லூரி மாணவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ சபையால், பிரித்தானியாவில் பயிற்சி பெறுவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார்கள்.
1906 இல் சேர்.பொன்னம்பலம் ராமநாதன் அவர்களின் தலைமையில், உருவான இலங்கைப் பல்கலைக்கழக ஒன்றியத்தின்[4][5] வற்புறுத்தலின் பேரில், 1913இல், ஆங்கில அரசு, ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியை நிறுவத் தீர்மானித்தது. இன்று "கல்லூரி இல்லம்" என்றறியப்படும் "ரெஜினா வளவு" எனும் தனியார் குடியிருப்பு, அக்க்கல்லூரியின் நிர்வாகத்துக்காக ஆங்கில அரசால் வாங்கப்பட்டதுடன், 1921 யனவரியில், வேத்தியர் கல்லூரிக்குச் சொந்தமாகவிருந்த கட்டிடத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கலைத்துறை, விஞ்ஞானத்துறை எனும் கற்கை நெறிகளுடன்,[6] இலண்டன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்துக்கமைய, இங்கு வெளிவாரிக் கற்கைநெறிகள் நிகழ்த்தப்பட்டன.
1942 யூலை முதலாம் திகதி, இரண்டாம் உலகப்போர், யப்பானிய ஆக்கிரமிப்பு முதலான சிக்கல்களுக்கு மத்தியில், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியும், இலங்கை மருத்துவக் கல்லூரியும் இணைக்கப்பட்டு, இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கலை, விஞ்ஞானத் துறைகள் இரண்டும், இரு பீடங்களாகத் தரமுயர்த்தப்பட்டதுடன், க்ரூடன் இல்லத்தில், கீழைத்தேயக் கற்கைப் பீடமும், இராணி வீதியிலிருந்த வில்லா வெனெசியாவில் பல்கலை நூலகமும் புதிதாக உருவாக்கப்பட்டன.
1949இல், பேராதனையில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, சட்டம், விவசாயம், விலங்கு மருத்துவம் முதலான துறைகள் அங்கு இடமாற்றப்பட்டதுடன், 1965இல், கலை, கீ்ழைத்தேயக் கற்கை ஆகிய பீடங்களும், அருணாச்சலம், ஜெயதிலக்க ஆகிய மாணவர் விடுதி மண்டபங்களும் நூலகமும் பேராதனைக்கு மாற்றப்பட்டன.எனினும், மீண்டும் சட்டத்துறை கொழும்புக்கு 1965இல் மாற்றப்பட்டது. 1950இல் உருவாக்கப்பட்ட பொறியியற் பீடம், 1965இல் பேராதனைக்கு மாற்றப்பட்டது. இலங்கைப்பல்கலைக்கழகத்தின் இரு வளாகங்களாக, கொழும்பும் பேராதனையும் இயங்கினவெனினும், 1966இல் இவை பிரிக்கப்பட்டு, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம் என்று தனித்தனியே இயங்கலாயின.
1967 ஒக்டோபர் 1 முதல், அரசாணைக்கேற்ப தனித்தியங்க ஆரம்பித்த கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், 300 ஆளணியினருடன், கலை, சட்டம், விஞ்ஞானம், மருத்துவம் என்பன கற்கும் 5000 மாணவர்களுடன் திகழ்ந்தது. 1972இல் இலங்கையில் , பேராதனை இலங்கைப்பல்கலைக்கழகம், கொழும்பு இலங்கைப்பல்கலைக்கழகம், வித்யோதயா பல்கலைக்கழகம், வித்யாலங்காரப் பல்கலைக்கழகம் என்ற நான்கு வளாகங்கள் அமைந்திருந்ததுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்துடன், கட்டுபெத்தை தொழிநுட்பக் கல்லூரியும் இணைக்கப்பட்டிருந்தது. இவற்றின் தலைமையகமாக, செனேற் இல்லம் என்ற பெயரில் கல்லூரி இல்லமே விளங்கியது. இத்திட்டம் வெற்றியளிக்காமையால், 1978இல் இவை மீண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டு, கொழும்புப் பல்கலைக்கழகம் எஞ்சியது.
1978இல் இருந்த மருத்துவம், கலை, விஞ்ஞானம், கல்வி, சட்டம் ஆகிய பீடங்களுடன், 1980களில் முகாமைத்துவ நிதிப்பீடமும், 1987இல் பட்டதாரிக் கற்கைகள் பீடமும் உருவாக்கப்பட்டன. 1996 வர்த்தமானிக்கமைய சிறிபாளி வளாகம் தோற்றுவிக்கப்பட்டதுடன், 1978இல் மருத்துவ முதுமாணிக் கல்வியகமும், சுதேச மருத்துவ நிறுவகமும் இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டன. 1987இல் அமைக்கப்ப்பட்ட கணினித் தொழிநுட்பக் கல்வியகம், 12002இல் கணினிப் பாடசாலையாக உருவானது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிருவகிக்கப்படும் கொழும்புப் பல்கலைக்கழகம், முற்றிலும் இலவசமான இளமாணிப் பட்டப்படிப்பை வழங்குவதுடன், பழைய இலங்கைப் பல்கலைக்கழகத்தை ஒத்த இரு நிருவாகக் கட்டமைப்புக்களைக கொண்டிருக்கிறது.
துணைவேந்தரால் அநேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வேந்தரே பட்டமளிப்பில் தலைமை தாங்குகின்றார். இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் வேந்தர் பதவியை, தற்போது, அதிவண. ஒஸ்வால்ட் கொமிஸ் அவர்கள் அலங்கரிக்கிறார்.
இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் துணைவேந்தரே, பல்கலையின் முகாமையாளராக விளங்குகிறார். கடந்த 2015 ஆகஸ்ட் 6ஆம் திகதி அன்று, புதிய துணைவேந்தராக, முதுமுறை பேரா. லக்ஷ்மன் திசாநாயக்கா நியமிக்கப்பட்டிருக்கிறார்.[7]
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 10,000 கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் வெளி வாரிப் பட்டப் படிப்பைத் தொடர்கின்றார்கள்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 க்கும் மேற்பட்ட கலாசார,கல்வி மற்றும் மதம் சார்ந்த மாணவர் சங்கங்களும் நடாத்தப்படுகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்கே சொந்ததமான மாணவர் சமூகங்களைக் கொண்டு விளங்குகின்றன.
கொழும்புப் பல்கலைக்கழக பீடங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு | |
---|---|
'பீடம் | ஆண்டு |
மருத்துவ பீடம் | 1870 |
விஞ்ஞான பீடம் | 1942 |
சட்ட பீடம் | 1947 |
கல்விப் பீடம் | 1949 |
கலைப் பீடம் | 1963 |
முகாமைத்துவ நிதிப்பீடம் | 1979 |
பட்டதாரிக் கற்கைநெறிப் பீடம் | 1987 |
சிறிபாளி வளாகம் | 1996 |
கணினிக் கல்லூரி | 2002 |
41 கல்வித்துறைகளைக் கொண்ட ஏழு பீடங்களும் ஆறு கல்வியகங்களும், ஐந்து இணைந்த நிறுவகங்களும் இப்பல்கலையில் உண்டு.[8]இவற்றில் கணினிக் கல்லூரியே மிக அண்மையில் இணைக்கப்பட்ட பீடம் ஆகும்.
பிரதான நூலகம், கலைப்பீட வளாகத்தில் இயங்க, அதன் இரு கிளைகள், விஞ்ஞான மற்றும் மருத்துவ பீடங்களில் இயங்கி வருகின்றன. மருத்துவ பீடத்தின் நூலகமானது 1870இல் நிறுவப்பட்டது. 4 இலட்சத்துக்கும் மேலான நூல்களுடன் இலங்கையின் பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. அரிய தொகுப்பு, இலங்கைத் தொகுப்பு எனும் தலைப்புக்களின் கீழ் ஓலைச்சுவடிகள் உட்பட, பல அரிய நூல்கள், பிரதான நூலக்கத்தில் சேமிக்கப்படுகின்றன.[9]
வாடகை வீடுகளைக் கொண்ட பல்கலையின் ஏழு விடுதிகள் மூலம் 2973 மாணவர்கள் வருடாந்தம் பயன் பெறுகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் 43 மாணவர் ஒன்றியங்களும், உள்ளக, வெளியக விளையாட்டு சங்கங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பீடத்திலும் தனித்தனியே காணப்படும் மாணவர் ஒன்றியங்களும், தமிழ் மாணவர்களுக்குரிய, தமிழ்ச் சங்கம், இந்து மன்றம் என்பனவும் இதில் அடங்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.