Remove ads
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது.[2] தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக அறிஞர் அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் சமூக-சனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது.[3] பெரியாரினால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து (1944 வரை நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 செப்டம்பர் 17 இல் சென்னை, ஜார்ஜ் டவுன், இல. 7, பவளக்காரத் தெருவில் கூடித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.[4] 1947 செப்டம்பர் 18 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டு, கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.[5][6][7]
திராவிட முன்னேற்றக் கழகம் Dravida Munnetra Kazhagam | |
---|---|
சுருக்கக்குறி | திமுக |
தலைவர் | மு. க. ஸ்டாலின் |
நிறுவனர் | கா. ந. அண்ணாதுரை |
பொதுச் செயலாளர் | துரைமுருகன் |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | கனிமொழி கருணாநிதி |
மக்களவைத் தலைவர் | த. ரா. பாலு |
மாநிலங்களவைத் தலைவர் | திருச்சி சிவா |
தொடக்கம் | 17 செப்டம்பர் 1949 |
பிரிவு | திராவிடர் கழகம் |
முன்னர் |
|
பின்னர் |
|
தலைமையகம் | அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை, சென்னை – 600018, |
மாணவர் அமைப்பு | திமுக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | திமுக இளைஞர் அணி |
தொழிலாளர் அமைப்பு | தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச) |
கொள்கை | |
நிறங்கள் | கருப்பு சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
கூட்டணி | மூன்றாவது அணி (1989-90, 1996-98) தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999–2004) ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (2014–2016) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2006–2013) (2016–தற்போது வரை) |
தேசியக் கூட்டுநர் | மு. க. ஸ்டாலின் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 22 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை) | இந்திய மாநிலங்கள் |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www.dmk.in | |
இந்தியா அரசியல் |
அண்ணாதுரை 1949 முதல் 1969 பெப்ரவரி 3 இல் அவர் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றினார்.[8] 1967 முதல் 1969 வரை அவர் தமிழக முதலமைச்சராகவும் இருந்தார். அண்ணாதுரையின் காலத்தில், 1967 இல், திமுக இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்தபடியாக, முதல் தடவையாக இந்திய மாநிலம் ஒன்றில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதலாவது அரசியக் கட்சி என்ற சாதனையையும் ஏற்படுத்தியது. அண்ணாதுரையின் மறைவை அடுத்து மு. கருணாநிதி 1969 முதல் 2018 ஆகத்து 7 இல் அவர் இறக்கும் வரை கட்சித் தலைவராகப் பதவியில் இருந்தார்.[9] மு. கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகப் பதவியில் இருந்தார். இவற்றில் இரண்டு இந்திய ஒன்றிய அரசினால் கலைக்கப்பட்டது.[10] தற்போது, கருணாநிதியின் மகன் மு. க. இசுட்டாலின் கட்சித் தலைவராக உள்ளார். இசுட்டாலின் 2017 இல் கட்சியின் செயல் தலைவராகவும், பின்னர் 2018 இல் கருணாநிதி இறந்த பின்னர் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், திமுக 24 இடங்களைக் கைப்பற்றி, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது.[12] திமுக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஐந்து தடவைகள் ஆட்சியில் இருந்து, ஆறாவது தடவையாகத் தற்போது ஆட்சியில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் கட்சியின் தலைமையகம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்துள்ளது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு.[சான்று தேவை] திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.
1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. [13]
1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது.
1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.
1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.
“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.
1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.[14]
அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.
அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[15]
1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.
1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது.
1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும்.
1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.
1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.[சான்று தேவை]. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.
1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.
1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.[சான்று தேவை] இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.
1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது.
1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது.
1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.[16][17]
தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன
தி.மு.க. இளைஞர் அணி 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் அமைப்பாளராக 1980 முதல் 1984 வரை மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். பின்னர் அவ்வணியின் செயலாளராக 1984 முதல் 2017 - சனவரி - 6ஆம் நாள் வரை பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர் 2017 - சனவரி - 6 ஆம் நாள் முதல் ???? வரை மு.பெ.சாமிநாதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.[18]
திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை:
தி.மு.க.வின் தென்மண்டல மாநாடு விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டியில் 2004 பிப்ரவரி 21, 22ஆம் நாள்களில் நடைபெற்றது. ஆ.ராசா கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்றார். மாநாட்டுப்பந்தலை சரத்குமார் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க. அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். போலீசு கண்ணன் என்பவரின் கலைஞரின் பொற்காலம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தலறிக்கை வெளியிடப்பட்டது.[28]
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் வடமண்டல மாநாடு வேலூர் பெருமுகை - புதுவசூரில் 2005 ஆகத்து 27, 28ஆம் நாள்களில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக எசு.பி.சற்குணபாண்டியன் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். பொன்முடி மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோரை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.[29] மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.[30]
1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.
ஆண்டு | தேர்தல் | வாக்குகள் | வென்ற இடங்கள் |
---|---|---|---|
1984 | 8-வது மக்களவை | 97,672 | 0 |
1989 | 9-வது மக்களவை | 157,250 | 0 |
1991 | 10-வது மக்களவை | 140,313 | 0 |
1996 | 11-வது மக்களவை | 183,702 | 0 |
1998 | 12-வது மக்களவை | 168,122 | 1 |
ஆண்டு | தேர்தல் | கட்சித் தலைவர் | வென்ற இடங்கள் | மாற்றம் | வாக்கு வீதம் | மொத்த வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|---|---|---|
1957 | சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 | கா. ந. அண்ணாதுரை | 15 / 205 |
15 | – | – | திமுக சுயேச்சையாகப் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது |
1962 | சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 | கா. ந. அண்ணாதுரை | 50 / 205 |
37 | 27.10% | 3,435,633 | எதிர்க்கட்சி |
1967 | சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 | கா. ந. அண்ணாதுரை | 137 / 234 |
87 | 40.69% | 6,230,556 | அரசு |
1971 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 | மு. கருணாநிதி | 184 / 234 |
47 | 48.58% | 7,654,935 | அரசு |
1977 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 | மு. கருணாநிதி | 48 / 234 |
▼ 136 | 24.89% | 4,258,771 | எதிர்க்கட்சி |
1980 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 | மு. கருணாநிதி | 37 / 234 |
11 | 22.1% | 4,164,389 | எதிர்க்கட்சி |
1984 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 | மு. கருணாநிதி | 24 / 234 |
▼ 13 | 29.3% | 6,362,770 | அரசமைக்கவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ தேர்வாகவில்லை |
1989 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 | மு. கருணாநிதி | 150 / 234 |
116 | 37.89% | 9,135,220 | அரசு |
1991 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 | மு. கருணாநிதி | 2 / 234 |
▼ 148 | 22.5% | 5,535,668 | அரசமைக்கவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ தேர்வாகவில்லை |
1996 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 | மு. கருணாநிதி | 173 / 234 |
171 | 53.77% | 14,600,748 | அரசு |
2001 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 | மு. கருணாநிதி | 31 / 234 |
▼ 142 | 30.90% | 8,669,864 | எதிர்க்கட்சி |
2006 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 | மு. கருணாநிதி | 96 / 234 |
65 | 26.50% | 8,728,716 | அரசு |
2011 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 | மு. கருணாநிதி | 23 / 234 |
▼ 73 | 22.40% | 8,249,991 | அரசமைக்கவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ தேர்வாகவில்லை |
2016 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 | மு. கருணாநிதி | 89 / 234 |
66 | 31.39% | 13,670,511 | எதிர்க்கட்சி |
2021 | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | மு. க. ஸ்டாலின் | 133 / 234 |
44 | 39.7% | 17,430,100 | அரசு |
ஆண்டு | தேர்தல் | வாக்குகள் | வென்ற இடங்கள் |
---|---|---|---|
1974 | 3-வது சட்டமன்றம் | 47,823 | 2 |
1977 | 4-வது சட்டமன்றம் | 30,441 | 3 |
1980 | 5-வது சட்டமன்றம் | 68,030 | 14 |
1985 | 6-வது சட்டமன்றம் | 87,754 | 5 |
1990 | 7-வது சட்டமன்றம் | 101,127 | 9 |
1991 | 8-வது சட்டமன்றம் | 96,607 | 4 |
1996 | 9-வது சட்டமன்றம் | 105,392 | 7 |
2001 | 10-வது சட்டமன்றம் | 83,679 | 7 |
2006 | 11-வது சட்டமன்றம் | 7 | |
2011 | 12-வது சட்டமன்றம் | 3 | |
2016 | 13-வது சட்டமன்றம் | 2 | |
2021 | 14-வது சட்டமன்றம் | 154,858[31] | 6[32] |
வி. பி. சிங், தேவ கௌடா, ஐ. கே. குச்ரால், வாச்பேயி (இரண்டாவது ஆட்சியில்), மன் மோகன் சிங் (இரு முறையும்) அமைச்சரவையில் திமுக பங்கெடுத்து அமைச்சர் பதவியை வகித்தது.
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
முரசொலி மாறன் | நகர்ப்புற மேம்பாடு | 6 டிசம்பர் 1989 - 10 நவம்பர் 1990 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
முரசொலி மாறன் | தொழில் | 1 யூன் 1996 - 21 ஏப்பிரல் 1997) |
டி. சி. வெங்கட்ராமன் | தரை வழி போக்குவரத்து | 1 யூன் 1996 - 21 ஏப்பிரல் 1997 |
என். வி. என். சோமு | பாதுகாப்பு | 6 யூலை 1996 - 21 ஏப்பிரல் 1997 |
த. ரா. பாலு | பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு | 6 யூலை 1996 - 21 ஏப்பிரல் 1997 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
முரசொலி மாறன் | தொழில் | 21 ஏப்பிரல் - 19 மார்ச் 1998 |
டி. சி. வெங்கட்ராமன் | தரை வழி போக்குவரத்து | 21 ஏப்பிரல் - 19 மார்ச் 1998 |
டி. சி. வெங்கட்ராமன் | நகர்ப்புறம் & வேலைவாய்ப்பு (கூபொ) | 14 நவம்பர் 1997- 12 டிசம்பர் 1997 |
என். வி. என். சோமு | பாதுகாப்பு (இ) | 21 ஏப்பிரல் 1997 - 14 நவம்பர் 1997 |
த. ரா. பாலு | பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு | 21 ஏப்பிரல் - 19 மார்ச் 1998 |
த. ரா. பாலு | மரபுசாரா எரிசக்தி | 21 ஏப்பிரல் - 19 மார்ச் 1998 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
முரசொலி மாறன் | தொழில் & வணிகம் | 13 அக்டோபர் 1999 - 9 நவம்பர் 2002 |
த. ரா. பாலு | சுற்றுச்சூழல் & காடு | 13 அக்டோபர் 1999 - 21 டிசம்பர் 2003 |
முரசொலி மாறன் | எப்பொறுப்பு இல்லாத அமைச்சர் (இ) | 9 நவம்பர் 2002 - 23 நவம்பர் 2003 |
ஆ. ராசா | குடும்ப நலம் & சுகாதாரம் | 30 செப்டம்பர் 2000 - 21 டிசம்பர் 2003 |
ஆ. ராசா | கிராமப்புற வளர்ச்சி | 13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2001 |
திமுக டிசம்பர் 20 அன்று வாச்பாய் அரசில் இருந்து விலகியது, அன்று மாலை திமுகவின் அம்மைச்சர்கள் த. ரா. பாலுவும் ஆ. ராசாவும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அரசை பிரச்சனைகளை பொறுத்து ஆதரிப்பதாக அறிவித்தது.[33]
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
த. ரா. பாலு | சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை | 23 மே 2004 - 22 மே 2009 |
த. ரா. பாலு | கப்பல் போக்குவரத்து (இணை) | 25 மே 2004 - 2 செப்டம்பர் 2004 |
ஆ. ராசா | சுற்றுச்சூழல் & காடு | 23 மே 2004 - 15 மே 2007 |
தயாநிதி மாறன் | தகவல் தொடர்பு & தொழில்நுட்பம் | 23 மே 2004 - 14 மே 2007 |
ஆ. ராசா | தகவல் தொடர்பு & தொழில்நுட்பம் | 15 மே 2007 - 22 மே 2009 |
சே. இரகுபதி | உள்துறை | 23 மே 2004 - 15 மே 2007 |
வெ. இராதிகா செல்வி | உள்துறை | 18 மே 2007 - 22 மே 2009 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | வணிகம் & தொழில் | 23 மே 2004 - 25 மே 2004 |
க. வெங்கடபதி | சட்டம் & நீதி | 23 மே 2004 - 22 மே 2009 |
சுப்புலட்சுமி செகதீசன் | சமூகநீதி மேம்பாடு | 23 மே 2004 - 22 மே 2009 |
செ.இரகுபதி | சுற்றுச்சூழல் & காடு | 15 மே 2007 - 22 மே 2009 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | நிதி | 25 மே 2004 - 22 மே 2009 |
அமைச்சர் | அமைச்சர் பதவி | பதவிக் காலம் |
---|---|---|
தயாநிதி மாறன் | நெசவு (டெக்சுடைல்) | 28 மே 2009 - 12 யூலை 2011 |
ஆ. ராசா | தகவுல் தொடர்பு & தொழில்நுட்பம் | 28 மே 2009 - 15 நவம்பர் 2010 |
மு. க. அழகிரி | வேதிப்பொருள் & உரம் | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
சா. செகத்ரட்சகன் | வணிகம் & தொழில் | 2 நவம்பர் 2012 - 21 மார்ச் 2013 |
எஸ். எஸ். பழனிமாணிக்கம் | நிதி | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
செ. காந்திச்செல்வன் | சுகாதாரம் & குடும்பநலம் | 28 மே 2009 - 21 மார்ச் 2013 |
சா. செகத்ரட்சகன் | செய்தி ஒளிபரப்பு | 28 மே 2009 - 28 அக்டோபர் 2012 |
து. நெப்போலியன் | சமூகநீதி & மேம்பாடு | 28 மே 2009 - 15 நவம்பர் 2010 |
சா. செகத்ரட்சகன் | மரபுசாரா எரிசக்தி | 28 அக்டோபர் - 2 நவம்பர் 2012 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.