இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் From Wikipedia, the free encyclopedia
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960 களில் இந்திய அரசியலில் இவர் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டார். பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
கு. காமராசர் | |
---|---|
சென்னை மாநில 3 ஆவது முதலமைச்சர் | |
பதவியில் 1954–1963 | |
ஆளுநர் | |
முன்னையவர் | இராசகோபாலாச்சாரி |
பின்னவர் | எம். பக்தவத்சலம் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1954 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | முத்துராமலிங்கத் தேவர் |
தொகுதி | திருவில்லிபுத்தூர் |
பதவியில் 1967–1975 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | அ. நேசமணி |
பின்னவர் | குமரி அனந்தன் |
தொகுதி | நாகர்கோவில் |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1954–1957 | |
முன்னையவர் | அருணாச்சல முதலியார் |
பின்னவர் | வி. கே. கோதண்டராமன் |
தொகுதி | குடியாத்தம் |
பதவியில் 1957–1967 | |
முன்னையவர் | இராமசாமி நாயுடு |
பின்னவர் | இராமசாமி நாயுடு |
தொகுதி | சாத்தூர் |
இந்திய தேசிய காங்கிரசு தலைவர் | |
பதவியில் 1964–1967 | |
முன்னையவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பின்னவர் | எஸ். நிசலிங்கப்பா |
தலைவர் - நிறுவன காங்கிரசு | |
பதவியில் 1969–1975 | |
பின்னவர் | மொரார்சி தேசாய் |
சென்னை மாநில காங்கிரசு தலைவர் | |
பதவியில் 1946–1952 | |
பின்னவர் | ப. சுப்பராயன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காமாட்சி 15 சூலை 1903 விருதுப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 2 அக்டோபர் 1975
இளைப்பாறுமிடம் | பெருந்தலைவர் காமராசர் நினைவகம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1969 வரை) நிறுவன காங்கிரசு (1969–75) |
வாழிடம்s |
|
தொழில் | |
விருதுகள் | பாரத ரத்னா (1976) |
கையெழுத்து | |
புனைப்பெயர்கள் |
|
பிறப்பிற்கு பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர், பள்ளிப் படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திவிட நேர்ந்தது. இவர் 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த செயல்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937 இல், காமராசர் சென்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954 இல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று பரவலாக அறியப்படுகிறார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976 இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவப்படுத்தியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தின் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். இவரது பெற்றோர் இவருக்கு குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்ற பெயரை இட்டனர்.[2] இவரது பெற்றோர் இவரை ராசா என்று அழைத்தனர். இந்த இரு பெயர்களின் இணைப்பே பின்னர் காமராசா என மாறியது.[3] காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கை இருந்தார்.[4]
ஐந்து வயதில், காமராசர் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரின் தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவரது தாயார் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.[2] பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.[5][6] பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார், மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து முருகன் வழிபாட்டில் நேரத்தைச் செலவிட்டார்.[7]
காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகள் மற்றும் அரசியலில் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும் போது, பஞ்சாயத்து கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சுதேசமித்திரன் தமிழ் நாளிதழை ஆர்வமாகப் பின்தொடர்ந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.[7]
காமராசர் அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் பாரதியார் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் திருவனந்தபுரம் நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான மர கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோவிலில் அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.{sfn|Sanjeev|Nair|1989|p=144}} காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.[8]
விசாரணையின்றி இந்தியர்களின் சிறைவாசத்தை நீட்டித்த 1919 ஆம் ஆண்டின் ரௌலட் சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜலியான்வாலா பாக் படுகொலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து காமராசர் தனது 16 ஆவது வயதில் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் சேர முடிவு செய்தார்.[9][10]
21 செப்டம்பர் 1921 அன்று, இவர் மதுரையில் முதன்முறையாக மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்தியின் மது ஒழிப்பு, காதி பயன்பாடு மற்றும் தீண்டாமை ஒழிப்பு போன்ற கருத்துக்களால் கவரப்பட்டார். 1922 ஆம் ஆண்டில், ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காமராசர் சென்னைக்குச் சென்றார். பின்னர் விருதுநகர் நகரக் காங்கிரசு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக, இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர மக்களைத் தூண்டுவதற்காக, காந்தியின் பேச்சுக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.[11] அடுத்த சில ஆண்டுகளில், காமராஜர் நாக்பூரில் நடந்த கொடி சத்தியாகிரகம் மற்றும் சென்னையில் நடந்த வாள் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.[12]
1930 ஆம் ஆண்டில், காந்தியின் உப்பு சத்தியாக்கிரகதிற்கு ஆதரவாக வேதாரண்யம் கடற்கரையில் இராசகோபாலாச்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டார்.[13] இவர் அப்பொழுது முதன்முறையாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931 இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது விடுவிக்கப்பட்டார்.[14] 1931ல் அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த தசாப்தத்தில், சென்னை மாகாணத்தில் காங்கிரசு இராசாசி மற்றும் சத்தியமூர்த்தி தலைமையில் இரண்டாகப் பிளவப்பட்டுக் காணப்பட்டது. சத்தியமூர்த்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட காமராசர் இதில் சத்தியமூர்த்தியை ஆதரித்தார்.[15] சத்தியமூர்த்தி காமராசரின் அரசியல் குருவானார். அதே சமயம் காமராசர் சத்தியமூர்த்தியின் நம்பகமான உதவியாளரானார். 1931 ஆம் ஆண்டு காங்கிரசின் பிராந்திய தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு சத்தியமூர்த்தி வெற்றிபெற காமராசர் உதவி செய்தார்.[16] 1932 இல், காமராசர் மீண்டும் தேசத்துரோகம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இவருக்கு திருச்சிராப்பள்ளி சிறையில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஜெய்தேவ் கபூர் மற்றும் கமல்நாத் திவாரி போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டார். 1933-34 இல், காமராசர் வங்காள ஆளுநர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர், 1934 இல் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.[17]
1933 சூன் 23-ம் தேதி விருதுநகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட காமராசர் எதிர்கட்சியால் கடத்தப்பட்டார். முத்துராமலிங்கத் தேவர் அவர்களால் முயற்சியால் மீட்கப்பட்டார். தேர்தலில் வரி செலுத்துவோர் மட்டுமே நிற்க முடியும் என்ற விதி இருந்தது. இதனால் காமராசர் பெயரில் வரி கட்டி ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய தேவர், இவரை தேர்தலில் நிற்கும்படி செய்தார்.[18][19] 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி விருதுநகரில் உள்ள தபால் நிலையம் மற்றும் காவல் நிலையகளில் குண்டுவெடித்தது. நவம்பர் 9 ஆம் தேதி, உள்ளூர் காவல் ஆய்வாளரின் எதிர்ப்பையும் மீறி காமராசர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்திய காவல்துறை அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் சேர்ந்து பல தந்திர வழிகளிலும் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு இந்த வழக்கில் காமராசரின் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். நீதிமன்றத்தில் காமராசர் சார்பில் வரதராசுலு நாயுடு மற்றும் சார்ச் சோசப் ஆகியோர் வாதிட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிருபித்தனர்.[20] வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், காமராசார் இந்த வழக்கின் செலவுக்காக வீட்டைத் தவிர தனது மூதாதையர் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை விற்க நேரிட்டிருந்தது.[21] 1934 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் காங்கிரசிற்கான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தார். 1936 இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937 இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23]
1940 இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[24] சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தினார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[25] அங்கிருக்கும் போதே 1941 இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டு விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.[26][27]
ஆகத்து 1942 இல், காமராசர் பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்த இவர். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.[26][28] சிறையில் இருந்தபோது, மார்ச் 1943 இல் சத்தியமூர்த்தி காலமானார்.[29] சூன் 1945 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு இவர் மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் கடைசி மற்றும் நீண்ட சிறைத் தண்டனையாகும்.[13] காமராசரின் விடுதலை ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் ஆறு முறை ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[30]
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, இராசாசி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரசு கணிசமாக பலவீனமடைந்திருந்ததை கண்டார். இருவருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இராசாசியைச் சந்தித்தபோதிலும், காமராசரின் விருப்பத்திற்கு மாறாக ராசாசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதால் காமராசர் கோபமடைந்தார். சர்தார் படேல் ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946ல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, இராசாசி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகக் தன்னை குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராசர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து ராசினாமா செய்தார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராசர் தனது ராசினாமாவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதற்கிடையில், காமராசருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக இராசாசி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.[31][32] 1946 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. த. பிரகாசம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே காமராசருடன் ஏற்பட்ட கருது மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு குமாரசுவாமி ராசா 1949 இல் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், காங்கிரசு கட்சியின் தலைவராக காமராசர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.[33][34] 1947 ஆகத்து 15 அன்று, காமராசர் இந்திய தேசியக் கொடியை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.[35] 1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில், திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.[36]
1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (375ல் 152) வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராசர் விரும்பவில்லை. ஆனால் காங்கிரசின் மத்தியக் குழு ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. இந்தியத் தலைமை ஆளுநராக பதவி வகித்து ஓய்வுக்காலத்துக்குச் சென்ற ராசாசிதான் தலைமை தாங்க சரியானவர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய பிரதமர் சவகர்லால் நேரு உடனான ஆலோசனைக்குப் பிறகு, இராசாசி அரசாங்கத்தை அமைத்தார்.[37][38] காமராசர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராசினாமா செய்தார். இராசாசியுடன் பணியாற்றக்கூடிய ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதன் பேரில் பி. சுப்பராயன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1953 இல் காமராசர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது..[39]
இராசாசியின் குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-இல் ஆண்டு ஆந்திரா பிரிக்கப்பட, காங்கிரசு கட்சியின் உள்ளேயே இராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சி மேலிடத்தின் அனுமதியுடன் இராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, தானே விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசரை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். காமராசர் சட்டமன்ற உறுப்பினர்களால் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13 தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்னை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.[39][40] நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராசினாமா செய்துவிட்டு குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[41] அப்பொழுது காமராசருக்கு பெரியார் மற்றும் அண்ணாதுரை போன்ற பிற கட்சி தலைவர்களின் ஆதரவும் இருந்தது.[42]
காமராசர் அமைச்சரவையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியம் மற்றும் அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்தார்.[43] இவர் கச்சிதமான செயல்திறனில் நம்பிக்கை கொண்டிருந்ததால், அறிவு மற்றும் திறனின் அடிப்படையில் தனது அமைச்சர்களைத் தேர்வு செய்ததார்.[44] மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் திறம்படப் பயன்படுத்தினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய மாநில வளர்ச்சிக் குழுக்களை உருவாக்கினார், அவை வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்தன மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தன.[45]
காமராசர் கல்வி முறையிலும் உள்கட்டமைப்பிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். இராசாசி கொண்டு வந்திருந்த குடும்பத் தொழில் அடிப்படையிலான தொடக்கக் கல்வியின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திரும்பப் பெறப்பட்டு, 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு 3 km (1.9 mi) சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. இதன் விளைவாக, முன்பு மூடப்பட்ட ஏறத்தாழ 6,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பப்பட்டன மற்றும் 12,000 புதிய பள்ளிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.[46] மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டபோது, காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஒரு நாளைக்கு ஒரு வேலை இலவச உணவாவது வழங்க ஏற்பாடு செய்தார். கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, பொது மக்களின் உதவி மற்றும் பங்களிப்புகள் கோரப்படும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[47] பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்பு அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைய இலவச சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[48]
புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கல்வி முறை சீர்திருத்தப்பட்டு வேலை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1959 இல் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை உட்பட பல புதிய உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.[22] இந்த முயற்சிகள் பத்தாண்டுகளில் மாநிலத்தில் பள்ளிச் சேர்க்கையில் கணிசமான முன்னேற்றம் மற்றும் கல்வியறிவு விகிதங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இது காமரசருக்கு கல்வி தந்தை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.[49][50][51]
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் அணைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. உள்ளூர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இவற்றுக்கு அரசாங்கத்தால் மின்சார உதவி வழங்கப்பட்டது. சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை,ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகு மின் நிறுவனம், மணலி சுத்திகரிப்பு நிலையம், நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன.[52][53]
1957 மற்றும் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 தேர்தல்களில் வெற்றி பெற்ற காமராசார் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 1960களின் நடுப்பகுதியில், காங்கிரசு கட்சி மெல்ல அதன் வீரியத்தை இழந்து வருவதைக் கவனித்த இவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த முதல்வர் பதவியை ராசினாமா செய்ய முன்வந்தார்.[54] 2 அக்டோபர் 1963 காந்தி ஜெயந்தி தினத்தன்று அன்று முதல்வர் பதவியை துறந்தார்.[41][40]
காமராசர் தனது முதல்வர் பதவியை துறந்த செய்த பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராசினாமா செய்துவிட்டு, காங்கிரசு கட்சியின் மறுமலர்ச்சிக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மூத்த காங்கிரசு தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு காட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையானது "காமராசர் திட்டம்" என்று அறியப்பட்டது. இது காங்கிரசார் அதிகாரத்தால் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தைப் போக்கவும், கட்சியின் மதிப்புகள் மற்றும் நோக்கங்களுக்காக அர்ப்பணிப்பை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டது.[55] காங்கிரசின் ஆறு மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் இதைத் தொடர்ந்து தங்கள் பதவிகளை ராசினாமா செய்தனர்.[56] இதைத் தொடர்ந்து காமராசர் காங்கிரசின் தேசியத் தலைவராக 9 அக்டோபர் 1963 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[57]
1964 இல் நேருவின் அகால மரணத்திற்குப் பிறகு, கொந்தளிப்பான காலகட்டத்தில் காமராசர் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். கட்சியின் தலைவராக இருந்த போதிலும், அடுத்த பிரதமராக வர மறுத்து, 1964ல் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் 1966ல் நேருவின் மகள் இந்திரா காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முக்கியப் பங்காற்றினார். இதனால் 1960 களில் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாகப் பாராட்டப்பட்டார்.[58][59]
1965 இல், உணவு நெருக்கடியின் போது, காமராசர் அப்போதைய நிதி அமைச்சரான டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் உதவியோடு ரேசன் உணவு விநியோக முறையை அறிமுகம் செய்தார். காங்கிரசு கட்சியின் மீதான மக்களின் ஏமாற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் வளர வழிவகுத்தது. 1967 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு வழிவகுத்தது. காமராசர் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார்.[60][61] பின்னர் நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[62]
இந்திரா காந்தி பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கும் காமராசர் தலைமையிலான "சிண்டிகேட்" எனப்படும் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பிளவு மேலும் விரிவடையத் தொடங்கியது. 1969 இல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இந்திரா காந்தி காங்கிரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் விளைவாக கட்சி இரண்டாக பிளவுபட்டது. காமராசர் தலைமையில் நிறுவன காங்கிரசு செயல்பட்டது. இந்திரா காந்தி சிறிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகத் தொடர்ந்தார்.[63] 1970 இல் நாடளுமன்ற கீழவையை கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். 1971 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திரா தலைமையிலான அணி பெற்ற 352 இடங்களில் வென்றது. இதனுடன் ஒப்பிடுகையில் நிறுவன காங்கிரசு வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்றது.[64] 1975 இல் இறக்கும் வரை நிறுவன காங்கிரசின் ஒரு பகுதியாகவே இருந்தார் காமராசர்.[65]
இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்தார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, மதிய உணவுக்குப் பிறகு காமராசருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 72 வயதில் மாரடைப்பு காரணமாக தூக்கத்தில் உயிர் பிரிந்தது.[66] காமராசரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இராசாசி மண்டபத்தில் வைக்கப்பட்டது. மறுநாள், காந்தி மண்டபதிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[67] காமராசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சென்னை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.[68][69]
காமராசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியலில் செலவிட்டார், உறவுகள் மற்றும் குடும்பத்திற்காக அதிக நேரத்தை செலவிடவில்லை.[70] காமராசர் தனது எளிமை மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர். இவர் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினார், எப்போதும் எளிமையான காதி சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்தார். இதனால் இவர் மக்களால் அன்போடு "கருப்பு காந்தி" என்று அழைக்கப்பட்டார்.[71] எளிய உணவை உண்ட இவர் அரசின் சிறப்புச் சலுகைகளைப் பெற மறுத்தார்.[72] இவர் முதலமைச்சராக இருந்தபோது, விருதுநகர் நகராட்சி தனது வீட்டிற்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கியபோது, சிறப்புச் சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு அல்ல என்று கூறி உடனடியாக அதைத் துண்டிக்க உத்தரவிட்டார். காவல்துறையின் பாதுகாப்பை மறுத்து, அது பொது மக்களின் பணத்தை வீணடிப்பதாக கூறினார்.[52]காமராசருக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. இறக்கும் போது இவரிடம் கைவசம் ஒரு சில புத்தகங்களைத் தவிர ₹130 பணம், இரண்டு சோடி செருப்புகள், நான்கு சட்டைகள் மற்றும் வேட்டிகள் மட்டுமே இருந்தன.[73]
எந்தவொரு இலக்கையும் சரியான வழிமுறையின் மூலம் அடைய முடியும் என்று நம்பிய இவர் கர்ம வீரர் மற்றும் பெருந்தலைவர் என குறிப்பிடப்படுகிறார்.[74][75] இவர் முறையான உயர்கல்வி இல்லாவிட்டாலும், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு மற்றும் மனித இயல்பைப் பற்றிய புரிதலைக் கொண்டிருந்தார். இதனால் இவர் படிக்காத மேதை என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டார்.[2]
காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவப்படுத்தியது.[76] 2004 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் காமராசரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ₹ 100 மற்றும் ₹ 5 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டது.[77]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் எண்ணூர்துறைமுகம் ஆகியவற்றிற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[78][79][80] பல தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[81][82][83][84] இவரை போற்றும் வகையில், புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் மற்றும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முகப்பு உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் உள்ளன.[85]
இந்தப் பிரிவு எந்த ஆதாரங்களையும் மேற்கோள்களாகக் கொண்டிருக்கவில்லை. |
2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[86]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.