From Wikipedia, the free encyclopedia
1953-இல் சென்னை மாநில முதல்வர் ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றோரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை ஜாதி அமைப்பை பலப்படுத்தும் குலக் கல்வித் திட்டமென திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜாஜியின் காங்கிரசு கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது.
1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாநிலத்தில் 21 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[1] 1950-51 நிதியாண்டில் சென்னை மாநில அரசு தொடக்கக் கல்விக்காக 6.87 கோடி ரூபாய்கள் செலவு செய்தது. இது அரசின் மொத்த வருவாயில் 11.5 விழுக்காடு. பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே பள்ளியில் சேர்த்தல் விகிதம் 47.8 ஆக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகள் (Directive principles) இந்திய அரசை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கல்வியளிக்கும்படி பணிக்கின்றன. இதற்கிணங்க சென்னை மாநில அரசின் கல்வித் துறை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்க 1950-இல் ஒரு பத்தாண்டுத் திட்டத்தைத் தீட்டியது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; அதற்காக ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் 1950-51 நிதியாண்டில் இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு கல்வியளிக்க ஆண்டொன்றும் ரூ. 22.80 செலவானது. இதில் அரசு ரூ.16.30-ஐ மட்டுமே அளித்து வந்தது. இவ்வாறான பற்றாக்குறை செயல்பாடுகளால் பள்ளியில் விலகும் மாணவர் விகிதம் கூடுதலாக இருந்தது. 1946-47 கல்வியாண்டில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 12,22,775 மாணவர்களில் 4,61,686 (37%) பேர் மட்டுமே 1950-51 கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். இத்தகைய கல்விச்சூழல் நிலவிய போது தான் ராஜாஜியின் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது (ஏப்ரல் 10, 1952).[2]
1939ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது இது போன்ற ஒரு சீர்திருத்த முயற்சியினை மேற்கொண்டார். அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவிகளும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பள்ளி வந்தால் போதும், மற்ற பொழுதுகளை பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்கலாம். 1949-50 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த போது பத்து வட்டங்களில் சோதனை அடிப்படையில் பள்ளிகளில் நேர சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு பிற பகுதிகளிலும் விருப்பமிருந்தால் தேர்ந்தெடுக்கலாம் என்ற அடிப்படையில் விரிவாக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்திய பள்ளிகள் இரு நேரசுழற்சிகளாக செயல்பட்டன. இரு வேளையும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாதம் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1951-இல் மாநிலத்தில் இருந்த 38,687 தொடக்கப்பள்ளிகளில் 155 மட்டுமே இம்முறையை செயல்படுத்தி வந்தன.[2]
1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.[2][3][4][5]
திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பில் முக்கிய பங்காற்றிய பேரறிஞர் அண்ணா அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்:[6][7][8][8][9]
1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியார் ராமசாமியின் தி.க வும் பேரறிஞர் அண்ணாவின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அண்ணாவின் அறிவுத்தலின் படி சென்னையில் இத்திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.[5][10][11]
ஆகஸ்ட் 1953-இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954-இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954-இல் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.[12][13][14][15][16][17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.