வல்லபாய் பட்டேல்

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர் From Wikipedia, the free encyclopedia

வல்லபாய் பட்டேல்

சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.[1] இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் சர்தார் வல்லப்பாய் படேல், 1வது இந்திய துணைப் பிரதமர் ...
சர்தார் வல்லப்பாய் படேல்
1வது இந்திய துணைப் பிரதமர்
பதவியில்
15 ஆகத்து 1947  15 டிசம்பர் 1950
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பின்னவர்மொரார்ஜி தேசாய்
இந்தியாவின் உள்துறை அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்டு 1948  15 டிசம்பர் 1950
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பின்னவர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1875-10-31)31 அக்டோபர் 1875
நடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா)
இறப்பு15 திசம்பர் 1950(1950-12-15) (அகவை 75)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்மனிபன் படேல், தாயாபாய் படேல்
முன்னாள் மாணவர்மிடில் டெம்பில்
தொழில்வழக்கறிஞர்
சமயம்இந்து சமயம்
மூடு

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். இவரை அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.

1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில்(மும்பை)  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை  குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு  கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.

சாதனைகள்

சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்பக் காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி செய்ததன் மூலம் பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

  • குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக அரசு பணிந்தது, வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது.
  • பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
  • வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
  • சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
  • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
  • அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
  • 75-ஆம் வயதில் இறந்தார். 1991-இல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மரபுரிமைப் பேறுகள்

ஒற்றுமைக்கான சிலை

Thumb
சர்தார் வல்லபாய் படேல் நினைவாக ஒற்றுமைக்கான சிலை, நர்மதா மாவட்டம்

இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.[2] இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் 182 மீட்டர் (597 அடி).

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.