ஒற்றுமைக்கான சிலை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்பது இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும்.[2]
பணி நிறைவுறும் நிலையில் | |
ஆள்கூறுகள் | 21°50′16″N 73°43′08″E |
---|---|
இடம் | கெவாடியா, நர்மதா மாவட்டம், குஜராத் இந்தியா |
வடிவமைப்பாளர் | ராம் வி. சுடர் |
வகை | சிலை |
உயரம் |
|
திறக்கப்பட்ட நாள் | அக்டோபர் 31, 2018 |
இணையதளம் | www |
வடிவமைப்பு, கட்டுமானம், நிர்வகிப்பு என்ற நிலைகளில் குறைந்த அளவிலான ஒப்பந்தப்புள்ளி தந்ததன் அடிப்படையில் இந்த சிலையினை அமைப்பதற்கான திட்டம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் அக்டோபர் 2014இல் வழங்கப்பட்டது. 31 அக்டோபர் 2014இல் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டு அக்டோபர் 2018இல் இடையில் முடிவுற்றது.
இந்தியச் சிற்பியான ராம். வி.சுடர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று திறக்கப்பட்டது.[3]
இந்த திட்டத்தினைப் பற்றிய செய்தி 7 அக்டோபர் 2010இல் அறிவிக்கப்பட்டது.[4] இந்த சிலையை அமைப்பதற்காக குஜராத் அரசால் சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரிய ஏக்தா டிரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.[5] இந்த சிலையினை அமைப்பதற்காக தேவைப்படும் இரும்புகாகாக இந்தியாவின் அனைத்துக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்தும் அவர்களிடம் உள்ள பயன்படுத்தாத இரும்புக் கருவிகள் நன்கொடை பெறப்பட்டது.[6] இத்தகு இரும்பு உபகரணங்களை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்காக இந்த டிரஸ்ட் 36 அலுவலர்களை நியமித்தது.[5] இதற்காக 5,00,000க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்டது.[7] இந்த முயற்சிக்கு ஒற்றுமைக்கான சிலை இயக்கம் என்று அதற்கு பெயரிடப்பட்டது.[8][9] இந்த சிலையை அமைப்பதற்காக இரும்புத் துண்டுகளை 6,00,000 கிராமங்களிலிருந்து திரட்ட மூன்று மாதங்களுக்கு நாடளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[9] இக்காலகட்டத்தில் 5,000 டன்னுக்கு மேற்பட்ட இரும்பு சேகரிக்கப்பட்டது.[10] இவ்வாறாகச் சேகரிக்கப்படும் பொருள்கள் இச்சிலையை அமைக்கப் பயன்படுத்தப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும், பின்னர் அது சிலையின் பீடத்தை அமைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது தெரியவந்தது.[11]
ஒற்றுமைக்கான சிலை இயக்கம், சுரஜ் விண்ணப்பம் என்பதன் மூலமாக மக்களிடம் நல்ல நிர்வாகத்திற்கான கருத்துக்களைக் கேட்டறிந்தது. சுரஜ் விண்ணப்பம் 20 மில்லியன் மக்களால் கையொப்பமிடப்பட்டிருந்தது. உலகிலேயே அதிகமாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பமாக அது கருதப்படுகிறது.[8] இந்தியா முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மராத்தன் 15 டிசம்பர் 2013இல் நிகழ்த்தப்பெற்றது.[12] அந்த மராத்தானில் அதிக எண்ணிக்கையில் பலர் கலந்துகொண்டனர்.[8][13][14][15]
இந்த நினைச்சின்னம் இந்திய விடுதலை இயக்கத்தலைவரும் முதல் துணை பிரதம மந்திரியுமான வல்லபாய் படேலின் சிலையாகும். சர்தார் சரோவர் அணையின் எதிரில் 3.2 கிமீ தொலைவில் சாது பெட் தீவில் கட்டப்பட்டது. 58 மீட்டர் பீடமும், 182 மீட்டர் உயரமும் கொண்ட இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக்கொண்டு இது அமைந்துள்ளது.[1] இதனைக் கட்டுவதற்கு 75,000 கன மீட்டர் கான்கிரீட்டும், 5,700 டன் இரும்பும், 18,500 டன் இரும்புப்பட்டைகளும், 22,500 டன் செப்புத்தகடுகளும் தேவைப்பட்டன.[16][17] வல்லபாய் படேலைக் குறிக்கின்ற இச்சிலையில் அவர் வழக்கமாக அணியும் ஆடையுடன் நடந்து வரும் நிலையில் உள்ளது.[18]
முதல் கட்டமாக சிலையினையும் நிலப்பகுதியையும் இணைக்கும் பாலம், நினைவுச்சின்னம், பார்வையாளர் மையம், நினைவுப்பூங்கா, உணவு விடுதி, ஆய்வு மையங்கள் உள்ளிட்டவைகள் கட்டப்படவுள்ளன.
பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இச்சிலை அமைக்கப்பட்டது. இதற்கான பெரும்பாலான தொகை குஜராத் அரசால் வழங்கப்பட்டது. 2012–13 வரவு செலவுத்திட்டத்தில் ரூ. 200 கோடியும், 2014-15இல் ரூ.500 கோடியும் ஒதுக்கியுள்ளது.[19][20][21][22][23] 2014-15 நடுவண் வரவுசெலவுத்திட்டத்தில், சிலை அமைப்பதற்கு 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[24][25][26] பொதுத்துறை நிறுவனங்கள் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கும் நிதியில் இருந்தும் இச்சிலை அமைப்பதறாகான நிதி பெறப்பட்டது.[27]
திட்டமிட 15 மாதங்களும், கட்டுவதற்கு 40 மாதங்களும் ஒப்படைக்க இரண்டு மாதங்களும் என்ற வகையில் இத்திட்டத்தினை நிறைவு செய்ய 56 மாதங்கள் ஆனது.[18] இதன் ஒட்டுமொத்த செலவின மதிப்பீடு ரூ.2,500 கோடியாகும்.[19] இதன் முதல் கட்டப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 2013இல் கோரப்பட்டு, நவம்பர் 2013இல் நிறைவுற்றன.[28]
அப்போது முதலமைச்சராக இருந்த (தற்போது பிரதமராக உள்ள) நரேந்திர மோடி, வல்லபாய் படேலின் பிறந்த 138 ஆவது பிறந்த நாளான 31 அக்டோபர் 2013 அன்று இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.[4][29][30][31] வடிவமைப்பு கட்டுமானம் மற்றும் நிர்வகிப்பு என்பதற்கான குறைந்த விலைப்புள்ளியின் அடிப்படையில் 27 அக்டோபர் 2014இல் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் ஒப்பந்தத்திற்கான ஏற்பினைப் பெற்றது.[16][32] அந்நிறுவனம் 31 அக்டோபர் 2014இல் கட்டுமானப் பணியைத் துவங்கியது. திட்டத்தின் முதல் கட்டமாக சிலைக்கு ரூ.1347 கோடியும், காட்சி மற்றும் மாநாட்டு அரங்கிற்காக ரூ.235 கோடியும், இணைப்புப் பாலத்திற்கு ரூ.83 கோடியும், பணி நிறைவு செய்த பின் 15 ஆண்டுகளுக்கு அதனை நிர்வகிக்க ரூ.657 கோடியும் ஒதுக்கப்பட்டது.[16][32][33][34] இந்த சிலை அக்டோபர் 2018இன் இடையில் கட்டி முடிக்கப்பட்டது.[35] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 31 அக்டோபர் 2018இல் திறந்து வைக்கப்பட்டது.[36][37] 33 மாதங்களுக்குள் இச்சிலை கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான அடித்தளம் 2013இல் அமைக்கப்பட்டது.[38]
சிலையினைச் சுற்றி சுற்றுலா மேம்பாட்டு வசதிகளுக்காக நிலம் கையப்படுத்தப்படுவதை உள்ளூர் பழங்குடி மக்கள் எதிர்த்தனர். சாது பெட், உள்ளூரிலுள்ள ஒரு தெய்வத்தின் பெயரால் வரதா பாவா தேக்ரி என்று முன்னர் அழைக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவ்விடம் சமய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாகவும் கூறுகின்றனர்.[29] அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.[39][40]
இந்தத் திட்டத்திற்காக அமைச்சரவையிலிருந்து உரிய சுற்றுச்சூழலுக்கான மறுப்பின்மைச் சான்று பெறப்படவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடுவண் அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.[41]
கேவாடியா, கோத்தி, வாகோடியா, லிம்டி, நகவரம், கோரா ஆகிய கிராமத்தைச் சேர்ந்தோர் இந்த சிலைக் கட்டுமானத்தை எதிர்க்கின்றனர். கையகப்படுத்தப்பட்ட 927 ஏக்கர் நில உரிமையினையும் அவர்கள் திரும்பக் கோருகின்றனர். அவர்கள் கேவாடியா திட்ட வளர்ச்சி அமைப்பினையும், கருடேஸ்வரர் திட்டத்தையும் எதிர்க்கின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை அரசு ஒத்துக்கொண்டுள்ளது.[42]
அரசின் வரவு செலவுத்திட்டத்தில் மகளிர் பாதுகாப்பு, கல்வி மற்றும் விவசாயத் திட்டங்களுக்காக அல்லாமல் இச்சிலைக்காக தொகை ஒதுக்கப்பட்டபோது பொது மக்களில் பலரும், அரசியல் கட்சிகளும் எதிர்த்தனர்.[43][44][45][46] இச்சிலையின்மீது செப்பு பூசும் பணிக்காக லார்சன் நிறுவனம், சீனாவில் நான்சங் நகரில் உள்ள ஜியான்சி டாக்கின் நிறுவனத்தின் சகோதர நிறுவனத்துடன் டி.க்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதை குஜராத் சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கிறது.[47]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.