குமரி அனந்தன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

குமரி அனந்தன் (Kumari Ananthan, பிறப்பு: மார்ச் 19, 1933) தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர்.

விரைவான உண்மைகள் குமரி அனந்தன், தனிப்பட்ட விவரங்கள் ...
குமரி அனந்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆனந்தகிருஷ்ணன்
மார்ச்சு 19, 1933 (1933-03-19) (அகவை 91)
குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்கிருஷ்ணகுமாரி
பிள்ளைகள்1 மகன்,4மகள்
வாழிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சமயம்இந்து
மூடு

பிறப்பும் கல்வியும்

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் பின்னாளில் குமரி அனந்தன் ஆனார். தொழில் அதிபர் எச். வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.

தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

குடும்பம்

இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும், தெலங்காணா மேனாள் ஆளுநர் ஆவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இவர் 1977 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1977 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தேர்வு பெற்றார்.[1] இதற்கு முன்பு பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி இதுவாகும். இதற்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அடுத்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1996 தேர்தலில் இதே நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[3] பின்னர் 1998 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1998 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[4]

சட்டமன்ற உறுப்பினர்

இவர் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[5] திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இது போல 1984 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1989 மற்றும் 1991 சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தெடுக்கப்பட்டார்.[5][8]

1980களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார். பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்தார். பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.[9] தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

காங்கிரஸ் தொண்டர்

இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், தற்போது காங்கிரஸ் தொண்டராகவே இருந்து தனது கடமையை ஆற்றி வருகிறார். இவருடைய 80 ஆவது பிறந்த நாள் விழா 2012 ஆம் ஆண்டு மார்ச்சு 20 ஆம் நாள் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் கொண்டாடப்பட்டது.[10]

தற்போது குமரிஅனந்தன் காந்தி பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்த இவர். உடல்நலக்குறைவு காரணமாக, தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தின் தலைவர் பதவியை 2011 ஆம் வருடம் மே மாதம் 14 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

பாத யாத்திரை

தமிழக தலைவர்களில் நிறைய பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார். இவர் 1967 ஆண்டு முதல் பல பாத யாத்திரைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சூலை மாதம் ஒன்பதாவது முறையாக நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ. தூரம் பாத யாத்திரையை மேற்கொண்டார்.[11] அந்த நான்கு அம்ச கோரிக்கைகளிவை:

  • பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்;
  • புதுச்சேரி மாந்தோப்பை, பாரதியின் குயில் தோப்பாக மாற்ற வேண்டும்;
  • தர்மபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டவேண்டும்;
  • நதிகள் இணைக்க வேண்டும்.

நதிகள் இணைப்பு

நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் இவர் வலியுறுத்திக் கூறும் கருத்துக்கள்.[12] இவை:

  • இந்தியாவில் கிடைக்கும் மொத்த நீரில், 31 சதவீதம் தான் பயன்படுகிறது. மீதி 69 சதவீத தண்ணீர், கடலுக்குப் போகிறது.
  • நதிகளை இணைத்தால், நீர் வழிச்சாலை கிடைக்கும்.
  • கப்பல் பயணம் எளிதாகும்.
  • நதி நீர் இணைப்பால் 1 லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகா வாட் அளவிற்கு, மின்உற்பத்தி செய்ய முடியும்.

எங்கும் தமிழ்

நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கிய குமரி அனந்தன்,[சான்று தேவை] தமிழில் தந்தி விண்ணப்பங்கள், காசாணை (மணியார்டர்) வேண்டும் எனப் போராடிப் பெற்றுத் தந்தவர்.[சான்று தேவை] தமிழில் விமானங்களில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என இவர் வலியுறுத்தி வருகிறார்.

நூல்கள்

கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29 நூல்களின் ஆசிரியர்.

  1. கங்கையே வருக... குமரியைத் தொடுக!; 1987; 136 பக்கங்கள்
  2. பேச்சாளராக

சிறப்புகள்

  • 2011 ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது: வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருது குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட்டது.
  • சென்னை மகாஜன சபை வழங்கும் 2011 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது சமுதாயத் தொண்டும், தேசத் தொண்டும் ஆற்றி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகைசால் தமிழர்

தகைசால் தமிழர் விருதினை சென்னையில் 15 ஆகத்து 2024 அன்று நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்க முதல்வர் மு. க. ஸ்டாலின் குமரி அனந்தனுக்கு வழங்கினார்.[13]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.