முகியல்தீன் முகம்மது (Muhi al-Din Muhammad) (அண்.1618 – 3 மார்ச்சு 1707) என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் (பாரசீக உச்சரிப்பு: அவ்ரங்செப், பொருள்.அரியணையின் ஆபரணம்) என்ற பெயராலும், இவரது பட்டப் பெயரான முதலாம் ஆலம்கீர் (பொருள்.உலகத் துரந்தரர்) என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் முகலாயப் பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை அடைந்தது. முகலாயப் பேரரசின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவையும் கொண்டிருந்தது.[2][3][4][5]

விரைவான உண்மைகள் ஔரங்கசீப் முதலாம் ஆலம்கீர், 6வது முகலாயப் பேரரசர் ...
ஔரங்கசீப்
முதலாம் ஆலம்கீர்
  • அல்-முகர்ரம்[a]
  • அல்-சுல்தான் அல்-ஆசம்[1]
  • அமீர் அல்-முமினின்[b]
Thumb
ஒரு வல்லூறைக் கையில் வைத்திருக்கும் ஔரங்கசீப், அண்.1660
6வது முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம்31 சூலை 1658  3 மார்ச்சு 1707
முன்னையவர்ஷாஜகான்
பின்னையவர்முகமது ஆசம் ஷா
பிறப்புமுகியல்தீன் முகம்மது
அண்.1618
தாகோத், குசராத்து சுபா, முகலாயப் பேரரசு
(நவீன கால குசராத்து, இந்தியா)
இறப்பு3 மார்ச்சு 1707 (அகவை 88)
அகமது நகர், அகமது நகர் சுபா, முகலாயப் பேரரசு
(நவீன கால மகாராட்டிரம், இந்தியா)
புதைத்த இடம்
ஔரங்கசீப் கல்லறை, குல்தபாத், மகாராட்டிரம், இந்தியா
மனைவி
  • தில்ரசு பானு பேகம்
    (தி. 1637; இற. 1657)
  • நவாப் பாய்
    (தி. 1638; இற. 1691)
  • ஔரங்கபாதி மகால்
    (இற. 1688)
  • உதய்புரி மகால்
குழந்தைகளின்
பெயர்கள்
மரபு பாபர் குடும்பம்
அரசமரபு தைமூரிய அரசமரபு
தந்தைஷாஜகான்
தாய்மும்தாசு மகால்
மதம்சன்னி இசுலாம்[c]
ஏகாதிபத்திய முத்திரைThumb
மூடு

ஔரங்கசீப்பும், முகலாயர்களும் தைமூரிய அரசமரபின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். தனது தந்தை ஷாஜகானுக்குக் (ஆட்சி. 1628–1658) கீழ் இவர் நிர்வாக மற்றும் இராணுவப் பதவிகளை வகித்து வந்தார். ஒரு செயலாற்றல் மிக்க இராணுவத் தளபதியாக அங்கீகாரம் பெற்றிருந்தார். தக்காணத்தில் 1636-1637இல் அரசரின் நிர்வாகியாகவும், 1645-1647இல் குசராத்தின் ஆளுநராகவும் இவர் சேவையாற்றினார். 1648-1652இல் முல்தான் மற்றும் சிந்து மாகாணங்களை ஒன்றாக இவர் நிர்வகித்தார். அண்டை நாடான சபாவித்து நிலப்பரப்புக்குள் போர்ப் பயணங்களைத் தொடர்ந்தார். செப்தெம்பர் 1657இல் ஷாஜகான் தன்னுடைய மூத்த மற்றும் தாராள மனப்பான்மையுடைய மகனான தாரா சிக்கோவை தனது வாரிசாக முன் மொழிந்தார். இச்செயலை ஔரங்கசீப் ஏற்றுக் கொள்ள மறுத்தார். பெப்பிரவரி 1658இல் தன்னைத் தானே பேரரசனாக ஔரங்கசீப் அறிவித்துக் கொண்டார். ஏப்பிரல் 1658இல் சிக்கோ மற்றும் மார்வார் இராச்சியத்தின் கூட்டணி இராணுவத்தை இவர் தர்மத் யுத்தத்தில் தோற்கடித்தார். மே 1658இல் சமுகர் யுத்தத்தில் ஔரங்கசீப்பின் தீர்க்கமான வெற்றியானது இவரது இறையாண்மையை உறுதிப்படுத்தியது. இவரது மேலாட்சி நிலையானது பேரரசு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூலை 1658இல் உடல்நலக் குறைவிலிருந்து ஷாஜகான் மீண்டதற்குப் பிறகு, ஔரங்கசீப் அவரை ஆட்சி செய்ய போதிய திறனற்றவர் என்று அறிவித்து ஆக்ரா கோட்டையில் சிறை வைத்தார்.

ஔரங்கசீப்பின் தலைமைத்துவத்தின் கீழ் முகலாயர்கள் தங்களது அதிகபட்ச விரிவை அடைந்தனர். இவர்களது நிலப்பரப்பானது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. இவரது அரசாட்சியானது துரிதமான இராணுவ விரிவாக்கத்தினால் அடையாளப்படுத்தப்படுகிறது. முகலாயர்களால் பல அரசமரபுகளும், அரசுகளும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டன. இவரது படையெடுப்புகள் ஆலம்கீர் ('துரந்தரர்') என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தன. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமும், மிகப்பெரிய உற்பத்தி மையமுமாக இருந்த சிங் சீனாவை முகலாயர்கள் முந்தினர். முகலாய இராணுவமானது படிப்படியாக முன்னேற்றப்பட்டது. உலகின் மிக வலிமையான இராணுவங்களில் ஒன்றாக உருவானது. ஔரங்கசீப் ஏராளமான உள்ளூர் கிளர்ச்சிகளை ஒடுக்கியிருந்தாலும் அயல் நாட்டு அரசாங்கங்களுடன் இவர் சுமூகமான உறவு முறைகளைப் பேணி வந்தார்.

நீண்ட காலம் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தான். இந்திய வரலாற்றில் இருந்த மிகப்பெரிய பேரரசுகளில் இவரது பேரரசும் ஒன்றாகும்.[6]

இளமைக் காலம்

ஔரங்கசீப் அண்.1618இல் தாகோத் என்ற இடத்தில் பிறந்தார்.[7][8][9] இவரது தந்தை பேரரசர் ஷாஜகான் (ஆட்சி. 1628–1658) ஆவார். ஷாஜகான் தைமூரிய அரசமரபின் முகலாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.[10] தைமூரியப் பேரரசை நிறுவிய அமீர் தைமூரின் (ஆட்சி. 1370–1405) வழித்தோன்றல் ஷாஜகான் ஆவார்.[11][12] ஔரங்கசீப்பின் தாயார் மும்தாசு மகால் ஆவார். மும்தாசு மகால் பாரசீக உயர் குடியினரான அசாப் கானின் மகள் ஆவார். அசாப் கான் உயரதிகாரி மிர்சா கியாசின் கடைசி மகனாவார்.[13] ஔரங்கசீப் தன்னுடைய தந்தை வழி தாத்தா ஜஹாங்கீரின் (ஆட்சி. 1605–1627) ஆட்சிக் காலத்தின் போது பிறந்தார். ஜஹாஙீர் முகலாயப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்.

சூன் 1626இல் தன்னுடைய தந்தையின் வெற்றிகரமற்ற கிளர்ச்சிக்குப் பிறகு எட்டு வயது ஔரங்கசீப்பும், இவரது அண்ணன் தாரா சிக்கோவும் இலாகூரிலிருந்த முகலாய அரசவைக்கு இவரது தாத்தா ஜஹாங்கீர் மற்றும் அவரது மனைவி நூர் சகான் ஆகியோரிடம் பிணையக் கைதிகளாக அனுப்பப்பட்டனர். இவர்களது தந்தை ஷாஜகானை மன்னிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு அனுப்பப்பட்டனர்.[14][15] 1627இல் ஜஹாங்கீர் இறந்ததற்குப் பிறகு முகலாய அரியணைக்காக தொடர்ந்து நடந்த வாரிசுரிமைப் போரில் ஷாஜகான் வெற்றி பெற்றவராக உருவானார். ஆக்ராவில் ஷாஜகானுடன் ஔரங்கசீப்பும், இவரது அண்ணனும் இறுதியாக மீண்டும் இணைந்தனர்.[16]

ஔரங்கசீப் இளவரசனுக்குரிய ஒரு முகலாயக் கல்வியைப் பெற்றார். சண்டை, இராணுவ உத்தி மற்றும் நிர்வாகம் போன்ற பாடங்களை இது உள்ளடக்கியிருந்தது.[17]

28 மே 1633 அன்று ஒரு சக்தி வாய்ந்த போர் யானையானது முகலாய அரசு முகாம் வழியாக முரண்டு பிடித்து ஓடியது. ஔரங்கசீப் அந்த யானைக்கு எதிராக குதிரையில் சவாரி செய்தார். அதன் தலையை நோக்கி தன்னுடைய ஈட்டியை எறிந்தார். இவர் குதிரையிலிருந்து தள்ளி விடப்பட்டார். ஆனால் உயிர் பிழைத்தார். ஔரங்கசீப்பின் துணிச்சலானது இவரது தந்தையால் பாராட்டப்பட்டது. இவருக்கு பகதூர் (வல்லமையான) என்ற பட்டத்தை அவர் வழங்கினார். இவருக்குப் பரிசுப் பொருட்களையும் அளித்தார்.

மூன்று நாட்கள் கழித்து ஔரங்கசீப் 15 வயதையடைந்தார். ஷாஜகான் இவரது எடைக்குச் சமமான தங்கத்தையும், ₹2,00,000 மதிப்புள்ள பிற பரிசுகளையும் இவருக்கு வழங்கினார். யானைக்கு எதிரான இவரது துணிச்சலானது பாரசீக மற்றும் உருது வரிகளில் கூறப்பட்டுள்ளது.[18]

முன்னோர்

மேலதிகத் தகவல்கள் முன்னோர்கள்: ஔரங்கசீப் ...
மூடு

தொடக்க கால இராணுவப் பயணங்களும், நிர்வாகமும்

பண்டேலா போர்

Thumb
அக்டோபர் 1635 ஓர்ச்சாவை மீண்டும் கைப்பற்றும் ஔரங்கசீப் தலைமையிலான முகலாய இராணுவம்

புந்தேல்கண்டுக்கு அனுப்பப்பட்ட படைக்கு பெயரளவிலான கட்டுப்பாட்டை ஔரங்கசீப் கொண்டிருந்தார். எதிர்ப்பு காட்டிய ஓர்ச்சாவின் ஆட்சியாளரான சுச்சார் சிங்கை அடி பணிய வைக்கும் எண்ணத்தில் இப்படை அனுப்பப்பட்டது. ஷாஜகானின் கொள்கையை மீறும் போக்கில் மற்றுமொரு நிலப்பரப்பை அவர் தாக்கியிருந்தார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க அவர் மறுத்தார். முன்னேற்பாட்டின் படி, ஔரங்கசீப் படையின் பின்புறம் நிலை கொண்டிருந்தார். சண்டை நடந்த இடத்திலிருந்து தூரத்திலிருந்தார். 1635இல் ஓர்ச்சா முற்றுகையை முகலாய இராணுவமானது ஒன்று கூடி நடத்திய போது இவரது தளபதிகளின் ஆலோசனையை இவர் பெற்றார். இந்தப் போர்ப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்தது. சுச்சார் சிங் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார்.[27]

தக்காணத்தின் அரச நிர்வாகி

Thumb
பாட்ஷாநாமா நூலில் உள்ள ஓர் ஓவியம். சுதாகர் என்ற மதம் பிடித்த போர் யானையை எதிர் கொள்ளும் இளவரசன் ஔரங்கசீப்.[28]

1636இல் தக்காணத்தில் அரசரின் நிர்வாகியாக ஔரங்கசீப் நியமிக்கப்பட்டார்.[29] நிசாம் சாகியின் சிறு வயது இளவரசனான மூன்றாம் முர்தசா ஷாவின் ஆட்சிக் காலத்தின் போது அகமது நகரானது அச்சுறுத்தும் வகையில் விரிவடைந்ததால் ஷாஜகானுக்குத் திறை செலுத்தியவர்கள் மிகக் கடுமையான அதிர்ச்சிக்கும், நிலை குலைவுக்கும் உள்ளாயினர். இதற்குப் பிறகு பேரரசர் ஔரங்கசீப்பை அனுப்பி வைத்தார். 1636இல் நிசாம் சாகி அரசமரபை ஔரங்கசீப் முடிவுக்குக் கொண்டு வந்தார்.[30] 1637இல் ஔரங்கசீப் சபாவித்து இளவரசியான தில்ராசு பானுவைத் திருமணம் புரிந்து கொண்டார். இறப்பிற்குப் பிறகு இந்த இளவரசி ரபியா-உத்-தௌரானி என்று அறியப்படுகிறார்.[11][12] இவர் ஔரங்கசீப்பின் முதல் மனைவியும், பட்டத்து இராணியும், இவரது விருப்பத்துக்குரிய மனைவியும் ஆவார்.[31][32][33] ஹீரா பாய் என்ற ஓர் அடிமைப் பெண் மீது இவர் விருப்பம் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே அப்பெண் இறந்தது இவரைப் பெருமளவுக்குப் பாதித்தது. இவரது வயதான காலத்தில் உதய்புரி மகாலை இவர் விரும்பினார்.[34][35] உதய்புரி மகால் முன்னர் இவரது அண்ணன் தாரா சிக்கோவுக்குத் தோழியாக இருந்தார்.[36]

Thumb
அண்.1637ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓர் ஓவியமானது மூன்று சகோதரர்களான (இடமிருந்து வலமாக) சா சுஜா, ஔரங்கசீப் மற்றும் முராத் பக்சு ஆகியோரை அவர்களது இளமைக் காலத்தில் காட்டுகிறது.

அதே ஆண்டு 1637இல் சிறிய இராசபுத்திர இராச்சியமான பக்லானாவை இணைக்கும் பொறுப்பு ஔரங்கசீப்புக்குக் கொடுக்கப்பட்டது. இதை அவர் எளிதாகச் செய்து முடித்தார்.[37] 1638இல் ஔரங்கசீப் நவாப் பாய் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார். இப்பெண் பிற்காலத்தில் ரகுமத் அல்-நிசா என்று அறியப்பட்டார்.[12][11] அதே ஆண்டு, டாமனில் இருந்த போர்த்துகீசிய கடற்கரைக் கோட்டையை அடிபணிய வைக்க ஓர் இராணுவத்தை ஔரங்கசீப் அனுப்பினார். எனினும், இவரது படைகள் பிடிவாதமான எதிர்ப்பைச் சந்தித்தன. ஒரு நீண்ட முற்றுகையின் முடிவில் இறுதியாக முறியடிக்கப்பட்டன.[38][39][40] ஒரு நேரத்தில் ஔரங்கசீப் ஔரங்கபாதி மகாலைத் திருமணம் புரிந்து கொண்டார். இப்பெண் சிர்காசிய அல்லது ஜார்ஜியப் பெண்ணாக இருந்தார்.[41][11]

1644இல் ஔரங்கசீப்பின் சகோதரியான சகானாரா ஆக்ராவில் இருந்த போது அவரது வாசனைத் திரவியத்திலிருந்த வேதிப் பொருட்களானவை அருகிலிருந்த விளக்கால் தீப்பிடித்ததால் காயமடைந்தார். இந்நிகழ்வானது அரசியல் விளைவுகளைக் கொண்ட ஒரு குடும்பப் பிரச்சனையை நடக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே ஏற்படுத்தியது. ஆக்ராவுக்கு உடனடியாகத் திரும்பாமல் மூன்று வாரங்கள் கழித்து திரும்பியதால் ஔரங்கசீப் தனது தந்தையின் அதிருப்தியைப் பெற்றார். அந்நேரத்தில் சகானாராவின் உடல் நலத்தை ஷாஜகான் தேற்றி வந்தார். அந்நேரத்தில் ஆக்ராவிற்கு ஆயிரக்கணக்கான திறை செலுத்தியவர்கள் தங்களது மரியாதையைச் செலுத்த வந்தனர். இராணுவ உடையில் அரண்மனையின் மதில் சுவர்களுக்குள் ஔரங்கசீப் நுழைவதைக் கண்ட ஷாஜகான் சினங்கொண்டார். தக்காணத்தின் அரச நிர்வாகி என்ற பதவியிலிருந்து இவரை உடனடியாக நீக்கினார். சிவப்புக் கூடாரங்களை பயன்படுத்த ஔரங்கசீப்புக்கு அனுமதி கிடையாது அல்லது முகலாயப் பேரரசரின் அதிகாரப் பூர்வ இராணுவ தரத்துடன் ஔரங்கசீப் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள இயலாது என்ற நிலை உருவானது. பிற நூல் ஆதாரங்கள் பகட்டு வாழ்வை விட்டு விட்டு ஔரங்கசீப் ஒரு பக்கிரியாக ஆனதால் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறுகின்றன.[42]

குசராத்தின் ஆளுநர்

1645இல் ஏழு மாதங்களுக்கு அரசவையிலிருந்து இவர் தடைசெய்யப்பட்டார். தன்னுடைய துயரத்தை சக முகலாயத் தளபதிகளிடம் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு ஷாஜகான் இவரை குசராத்தின் ஆளுநராக நியமித்தார்.[43][44]

பல்குவின் ஆளுநர்

1647இல் குசராத்திலிருந்து ஔரங்கசீப்பை ஷாஜகான் நகர்த்தி பல்குவின் ஆளுநராக்கினார். பல்குவில் முன்னர் ஒரு இளைய மகனான முராத் பக்சு ஆளுநராக இருந்தார். அவர் திறமையற்றவராக இருந்தார். இப்பகுதியானது உஸ்பெக் மற்றும் துருக்மேனியப் பழங்குடியினகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளானது. முகலாய சேணேவி மற்றும் கைத்துமுக்கிகளானவை ஓர் அச்சமூட்டுகிற படையாக இருந்த அதே நேரத்தில், இவர்களது எதிரிகளின் சிறு சண்டைகளிடும் திறமையும் அதே அளவுக்கு இருந்தன. இரு பிரிவினரும் வெற்றி தோல்வியின்றி இருந்தனர். போரினால் அழிவுக்குட்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மட்டும் இராணுவமானது உயிர் வாழ முடியாது என்பதை ஔரங்கசீப் அறிந்தார். குளிர்காலம் தொடங்கிய தருணத்தில் இவரும், இவரது தந்தையும் உஸ்பெக்குகளுடன் ஒரு பெருமளவுக்கு அதிருப்தியான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியிருந்தது. முகலாயர்கள் நிலப்பரப்பை விட்டுக் கொடுத்தனர். இதற்குப் பதிலாக உஸ்பெக்கியர் முகலாய இறையாண்மையைப் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டனர்.[45] பனிப் பொழிவு வழியாகக் காபுலுக்குப் பின்வாங்கிய போது முகலாயப் படையானது உஸ்பெக் மற்றும் பிற பழங்குடியினங்களால் மேற்கொண்ட தாக்குதலுக்கு உள்ளானது. இப்போர்ப் பயணத்தின் பிந்தைய நிலையில் ஔரங்கசீப் இதில் மூழ்கியிருந்தார். இந்த இரண்டாண்டுப் போர்ப் பயணத்தின் முடிவில் சிறிய அனுகூலத்திற்காகப் பெருமளவிலான பணமானது செலவழிக்கப்பட்டிருந்தது.[45]

ஔரங்கசீப் முல்தான் மற்றும் சிந்துவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது மேற்கொண்ட துரதிர்ஷ்டமான இராணுவப் பங்கெடுப்புகள் தொடர்ந்தன. 1649 மற்றும் 1652இல் காந்தாரத்திலிருந்து சபாவித்துக்களை வெளியேற்றும் இவரது முயற்சிகள் இரண்டுமே குளிர்காலம் நெருங்கியதால் தோல்வியில் முடிந்தன. இப்பகுதியை ஒரு தசாப்த முகலாயக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு சபாவித்துகள் சமீபத்தில் தான் மீண்டும் கைப்பற்றி இருந்தனர். பேரரசின் தொலை தூர விளிம்பில் இராணுவத்திற்குப் பொருட்களை வழங்கும் உத்தி சார்ந்த பிரச்சனைகள், அதோடு போர்க் கருவிகளின் குறைவான தரம் மற்றும் எதிரிகளின் விட்டுக் கொட தன்மை ஆகியவை தோல்விக்குக் காரணங்களாக யோவான் ரிச்சர்ட்சு என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ளன. 1653ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாரா சிக்கோ தலைமையிலான ஒரு மூன்றாவது முயற்சியும் இதே போன்ற ஒரு முடிவையே கொடுத்தது.[46]

தக்காணத்தின் அரச நிர்வாகியாக 2வது முறை

காந்தாரத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தாரா சிக்கோ நியமிக்கப்பட்டதற்குப் பிறகு தக்காணத்தின் அரச நிர்வாகியாக ஔரங்கசீப் மீண்டும் உருவானார். இதற்காக வருந்தினார். தன்னுடைய சொந்த அனுகூலங்களுக்காகச் சூழ்நிலையை சிக்கோ பயன்படுத்திக் கொண்டார் என்ற எண்ணம் ஔரங்கசீப்பின் மனதில் பதிந்திருந்தது. ஔரங்கசீப் திரும்பியதன் விளைவாக ஔரங்காபாத்தின் இரண்டு சாகிர்கள் (நிலக்கொடைகள்) அங்கு இடம் மாற்றப்பட்டன. தக்காணமானது ஒப்பீட்டளவில் வளம் குன்றிய பகுதியாக இருந்ததால் நிதி ரீதியாக இழப்பை ஔரங்கசீப் சந்திக்க வேண்டி வந்தது. நிர்வாகத்தைப் பேணுவது பொருட்டு மால்வா மற்றும் குசராத்திலிருந்து கொடைகளானவை தேவைப்பட்டன எனும் அளவிற்குத் தக்காணத்தின் ஏழ்மை நிலையானது இருந்தது. இச்சூழ்நிலையானது தந்தை மற்றும் மகனுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அறுவடையை முன்னேற்ற முயற்சிகளை ஔரங்கசீப் மேற்கொண்டால் நிலைமையானது சிறப்படையும் ஷாஜகான் அறிவுறுத்தினார்.[47] விவசாயி நிலம் மீதான ஒரு சுற்றாய்வு மற்றும் அந்நிலம் உற்பத்தி செய்கிற பொருளின் மீதான ஒரு வரி மதிப்பீடு ஆகியவற்றை முர்சித் குலி கான் நடத்தினார். வருவாயை அதிகரிப்பதற்காக விதைகள், பண்ணை விலங்குகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கடன்கள் வழங்கினார். தக்காணமானது சிறப்பான நிலைக்குத் திரும்பியது.[29][48]

கோல்கொண்டா (குதுப் சாகிக்கள்) மற்றும் பீஜப்பூர் (அடில் சாகிக்கள்) ஆகிய அரசமரபு ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்குவதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்க திட்டத்தை ஔரங்கசீப் முன் மொழிந்தார். பிரச்சனைகளை தீர்க்கும் அதே நேரத்தில் இந்த முன் மொழிவானது மேற்கொண்ட நிலப்பரப்புகளைப் பெறுவதன் மூலம் முகலாயச் செல்வாக்கையும் விரிவாக்கும் என்று முன் மொழிந்தார்.[47] பீஜப்பூர் சுல்தானுக்கு எதிராக ஔரங்கசீப் முன்னேறினார். பீதாரை முற்றுகையிட்டார். மதில் சுவர்களைக் கொண்டிருந்த நகரத்தின் கிலாதார் (ஆளுநர்) சிதி மர்சான் ஒரு வெடிமருந்துக் கிடங்கு வெடித்த போது படுகாயமடைந்தார். 27 நாட்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு பீதர் கைப்பற்றப்பட்டது. முகலாயரும், ஔரங்கசீப்பும் தம் முன்னேற்றத்தைத் தொடர்ந்தனர்.[49] தனது தந்தை மீது தாரா சிக்கோ செல்வாக்கைக் கொண்டுள்ளார் என்று இவர் மீண்டும் எண்ணினார். இரு சூழ்நிலைகளிலுமே வெற்றியடையும் தருவாயில் தான் இருந்ததாக நம்பிய போது, முழுமையான வெற்றிக்கு உந்தாமல் எதிரிப் படைகளுடன் ஒப்பந்தங்கள் மூலம் போரை முடிக்க ஷாஜகான் செயல்பட்டதால் ஔரங்கசீப் வெறுப்படைந்தார்.[47]

வாரிசுப் போர்

Thumb
1658இல் ஔரங்காபாத்தில் அரண்மனையைச் சுற்றி தங்களது நிலைகளைப் பேணும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கு விசுவாசமான சிப்பாய்கள்.

ஷாஜகானின் நான்கு மகன்கள் அனைவருமே தங்களது தந்தையின் ஆட்சிக் கா லத்தின் போது ஆளுநர் பதவிகளைப் பெற்றிருந்தனர். பேரரசர் மூத்தமகன் தாரா சிக்கோவுக்கு ஆதரவாக இருந்தார்.[50] இது மற்ற மூன்று இளம் மகன்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நேரங்களில் தங்களுக்கு இடையிலும் மற்றும் தாராவுக்கு எதிராகவும் கூட்டணியை வலுப்படுத்த இவர்கள் விரும்பினர். மூத்த மகன் தான் அரசாள வேண்டும் என்பது முகலாயப் பாரம்பரியத்தில் கிடையாது.[47] மாறாக, தங்களது தந்தையைப் பதவியில் இருந்து மகன்கள் தூக்கி எறிவதும், தங்களுக்கிடையில் சகோதரர்கள் போரிட்டு கொண்டு மடிவதும் பொதுவான வழக்கமாக இருந்தது.[51] "இறுதி நடவடிக்கையாக சக்தி வாய்ந்த இராணுவத் தலைவர்களுக்கு மத்தியிலான தொடர்புகள், இராணுவ வலிமை மற்றும் திறமையே உண்மையான முடிவெடுப்பாளர்களாக இருந்தன" என்கிறார் வரலாற்றாளர் சதீசு சந்திரா.[47] தாரா சிக்கோ மற்றும் ஔரங்கசீப்புக்கு இடையில் தான் அதிகாரப் போட்டியானது முதன்மையாக இருந்தது. தங்களது அலுவலகப் பதவிகளில் ஷாஜகானின் அனைத்து நான்கு மகன்களும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தியிருந்த போதும், இந்த இருவரைச் சுற்றி மட்டுமே ஆதரவளித்த அதிகாரிகள் மற்றும் பிற செல்வாக்கு வாய்ந்த மக்கள் பெரும்பாலும் செயல்பட்டனர்.[52] கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் இருவருக்கும் இடையில் இருந்தன. தாரா சிக்கோ சிந்தனை இன்பத்தில் நாட்டம் உடையவராகவும், அக்பரைப் போல சமய ரீதியாக தாராள மனப்பான்மையுடையவராகவும் இருந்தார். அதே நேரத்தில், ஔரங்கசீப் தாரா சிக்கோவைக் காட்டிலும் பழமைவாதியாக இருந்தார். ஆனால், வரலாற்றாளர்களான பார்பரா தேலி மெட்காப் மற்றும் தாமசு ஆர். மெட்காப் ஆகியோர் "வேறுபட்ட தத்துவச் சிந்தனைகள் மீதான கவனமானது தாரா சிக்கோ ஒரு திறமையற்ற தளபதி மற்றும் தலைவர் என்ற உண்மையைத் தவிர்த்து விடுவதாகவும், வாரிசுச் சண்டையில் பிரிவுகளுக்கிடையிலான கோடுகளானவை பெருமளவில் கொள்கைகளால் வடிவமைக்கப்படவில்லை என்பதையும் பொருட்படுத்தாமல் விட்டு விடுவதாகக்" குறிப்பிடுகின்றனர்.[53] இந்திய ஆய்வாளரும், பிரெஞ்சுப் பேராசிரியருமான மார்க் கபோரியே[54] "[அதிகாரிகள் மற்றும் அவர்களது ஆயுதம் தாங்கிய பிரிவுகளின்] விசுவாசமானது அவர்களது சொந்த அனுகூலங்களாலேயே தூண்டப்பட்டது, குடும்ப உறவுகளுக்கு இடையிலான நெருக்கம் மற்றும் அனைத்திற்கும் மேலாக தலைவர்களின் கவர்ந்திழுக்கும் தன்மையால் அவை ஏற்பட்டன, கொள்கை ரீதியான வேறுபாடுகளால் அல்ல" என்று குறிப்பிடுகிறார்.[51] "ஒரு தலைவர் அல்லது மற்றொருவருக்கான தங்களது ஆதரவில் சமய ரீதியில் முசுலிம்களோ அல்லது இந்துக்களோ பிரிந்து செயல்படவில்லை" என்று சதீசு சந்திரா குறிப்பிடுகிறார். ஜகானாராவும், அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் தங்களது ஆதரவில் பிரிந்திருந்தனர் என்ற நம்பிக்கைக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மையான ஆதாரம் இருப்பதாக சதீசு சந்திரா குறிப்பிடுகிறார். அனைத்து இளவரசர்களுக்குமான ஆதரவில் பல்வேறு நேரங்களில் ஜகானாரா மாறி மாறி ஆதரவு அளித்தார் என்று உறுதிப்படுத்தப்படுகிறது. தாராவின் சமயப் பார்வையை ஜகானாரா பகிர்ந்து கொண்டிருந்த போதிலும், ஜகானாரா ஔரங்கசீப்பால் நன்முறையில் மதிக்கப்பட்டார்.[55]

1656இல் குதுப் ஷாஹி அரசமரபின் கீழான ஒரு தளபதியான மூசா கான் ஔரங்கசீப்பைத் தாக்க 12,000 கைத்துமுக்கியாளர்களைக் கொண்ட ஓர் இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். கோல்கொண்டா கோட்டையை அந்நேரத்தில் ஔரங்கசீப் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இதே போர்ப் பயணத்தில் ஔரங்கசீப் பதிலுக்கு 8,000 குதிரைப்படை வீரர்கள் மற்றும் 20,000 கருநாடகி கைத்துமுக்கியாளர்களை உள்ளடக்கியிருந்த ஓர் இராணுவத்திற்கு எதிராகப் போர்ப் பயணம் மேற்கொண்டார்.[56][57]

தனக்குப் பிறகு தாரா சிக்கோ தான் மன்னனாக வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தியதற்குப் பிறகு ஷாஜகானுக்கு 1657இல் உப்புப் பை அடைப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட ஷாஜகனாபாத் (பழைய தில்லி) நகரத்தில் தன்னுடைய விருப்பத்திற்குரிய மகன் தாரா சிக்கோவின் அரவணைப்பில் ஷாஜகான் ஓய்வெடுத்தார். ஷாஜகானின் இறப்பு குறித்து வதந்திகளானவை அதிகரித்தன. சூட்சுமமான காரணங்களுக்காக தாரா சிக்கோ இதை மறைக்கலாம் என்று இளைய மகன்கள் கவலை கொண்டனர். எனவே அவர்கள் செயல்பட்டனர். வங்காளத்தில் சா சுஜா 1637ஆம் ஆண்டு முதல் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். ராஜ் மகாலில் மன்னனாகத் தனக்குத் தானே இளவரசன் சா சுஜா மகுடம் சூட்டிக் கொண்டார். ஆக்ரா ஆற்றின் நீரோட்டத்திற்கு எதிராக தன்னுடைய குதிரைப் படை, சேணேவி மற்றும் ஆற்றுப் படகுகளைக் கொண்டு வந்தார். தாரா சிக்கோவின் மகனாகிய இளவரசன் சுலைமான் சிக்கோ மற்றும் ராஜா ஜெய் சிங் ஆகியோர் தலைமையில் தில்லியிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தற்காப்பு இராணுவத்தை வாரணாசிக்கு அருகில் சுஜாவின் படைகள் எதிர் கொண்டன.[58] குசராத்தில் தன்னுடைய ஆளுநர் பதவியின் கீழும் இதே செயலை முராத் பக்சு செய்தார். தக்காணத்தில் ஔரங்கசீப்பும் இதே செயலைச் செய்தார். இறப்பு குறித்த வதந்திகளானவை உண்மை என்ற தவறான நம்பிக்கையில் இத்தகைய முன்னேற்பாடுகள் நடந்தனவா அல்லது இச்சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக வெறுமனே சவால் விடுத்தவர்கள் பயன்படுத்திக் கொண்டனரா என்று அறியப்படவில்லை.[47]

Thumb
பேரரசனாகும் ஔரங்கசீப்.

ஓரளவுக்கு உடல் நலம் தேறியதற்குப் பிறகு ஷாஜகான் ஆக்ராவுக்கு வந்தார். சா சுஜா மற்றும் முராத்துக்கு எதிராகப் படைகளை அனுப்புமாறு தாரா சிக்கோ அவரிடம் வலிந்து கூறினார். தங்களது நிலப்பரப்புகளில் மன்னர்களாக முறையே தங்களைத் தாமே இவர்கள் அறிவித்துக் கொண்டிருந்தனர். பெப்பிரவரி 1658இல் பனாரசில் சுஜா தோற்கடிக்கப்பட்டார். அதே நேரத்தில், முராத்தை சரி செய்ய அனுப்பப்பட்ட இராணுவமானது முராத்தும், ஔரங்கசீப்பும் தங்களது படைகளை ஒன்றிணைத்திருந்தனர் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.[55] ஒரு முறை பேரரசின் கட்டுப்பாட்டைத் தாங்கள் பெற்றதற்குப் பிறகு அதை பிரித்துக் கொள்ள இரு சகோதர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர்.[59] ஏப்பிரல் 1658இல் தர்மத் என்ற இடத்தில் இரு இராணுவங்களும் சண்டையிட்டன. ஔரங்கசீப் இதில் வெற்றி பெற்றார். பீகார் வழியாக சுஜா துரத்தப்பட்டார். தாரா சிக்கோவின் இந்த முடிவானது மோசமானது என ஔரங்கசீப்பின் வெற்றியானது நிரூபித்தது. ஒரு பக்கம் ஒரு போர் முனையில் தோல்வியடைந்த ஒரு படையையும், மற்றொரு போர் முனையில் வெற்றியடைந்த ஆனால் தேவையற்ற முறையில் மற்றொரு செயலில் இறங்கியிருந்த மற்றொரு படையையும் தாரா சிக்கோ கொண்டிருந்தார். ஊக்கம் பெற்றிருந்த ஔரங்கசீப்பின் முன்னேற்றத்தை எதிர் கொள்ள ஆக்ராவிற்குத் தக்க நேரத்தில் திரும்ப அழைக்கப்பட்ட பீகார் படைகள் வராது என்பதை உணர்ந்த தாரா சிக்கோ கூட்டணிகளை ஏற்படுத்த விரைந்தார். ஆனால், அனைத்துக் கூட்டணிகளையும் ஔரங்கசீப் ஏற்கனவே ஏற்படுத்தியிருப்பதை அறிந்தார். தாராவின் அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இராணுவமானது, ஔரங்கசீப்பின் நன்றாக-ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த, யுத்ம் புரிந்து வலிமை அடைந்திருந்த இராணுவத்தை மே மாதத்தின் பிந்தைய நேரத்தில் சமுகர் யுத்தத்தில் எதிர் கொண்ட போது தாராவின் வீரர்களோ அல்லது அவரது தளபதித்துவமோ ஔரங்கசீப்புக்கு ஈடு கொடுக்கக் கூடியதாக இல்லை. தன்னுடைய சொந்தத் திறமைகளின் மீதும் தார அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய தந்தை உயிரோடு இருக்கும் போது யுத்தத்தில் தலைமை தாங்க வேண்டாம் என்ற ஆலோசனையைப் பொருட்படுத்தாமல் விட்டிருந்தார். அரியணையை முறையற்ற வகையில் தாரா கைப்பற்றியிருந்தார் என்ற எண்ணத்தை இது மற்றவர்கள் மத்தியில் உறுதிப்படுத்தியது.[55] "தாராவின் தோல்விக்குப் பிறகு ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். தன்னுடைய விருப்பத்துக்குரிய மகள் ஜகானாராவின் கவனிப்பில் எட்டு நீண்ட ஆண்டுகளை ஷாஜகான் அங்கு கழித்தார்".[60]

முராத் உடனான தன்னுடைய ஒப்பந்தத்தை ஔரங்கசீப் முறித்துக் கொண்டார். அநேகமாக, தொடக்கத்திலிருந்தே இதுவே இவரது எண்ணமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[59] முராத் மற்றும் தனக்கு இடையில் பேரரசைப் பிரித்துக் கொள்வதற்குப் பதிலாக இவர் முராத்தைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். 4 திசம்பர் 1661 அன்று முராத் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். சில காலத்திற்கு முன்னர் குசராத்தின் திவானை முராத் கொன்றிருந்தார். எனினும், இதற்காகத் தான் முராத் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டானது ஔரங்கசீப்பால் ஊக்குவிக்கப்பட்டது.[61] இடைப்பட்ட காலத்தில், தாரா தன்னுடைய படைகளை ஒருங்கிணைத்தார். பஞ்சாப்புக்கு நகர்ந்தார். சுஜாவுக்கு எதிராக அனுப்பப்பட்ட இராணுவமானது கிழக்கில் மாட்டிக் கொண்டது. அதன் தளபதியான ஜெய் சிங் மற்றும் திலிர் கான் ஆகியோர் ஔரங்கசீப்பின் தலைமையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், தாராவின் மகனான சுலைமான் சிக்கோ தப்பித்தார். வங்காளத்தின் ஆளுநர் பதவியை சா சுஜாவுக்கு அளிக்க ஔரங்கசீப் முன் வந்தார். இந்த நகர்வானது தாரா சிக்கோவை தனிமைப்படுத்தவும், ஔரங்கசீப்பிடம் மேற்கொண்ட துருப்புக்கள் கட்சி தாவுவதற்குமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வங்காளத்தில் தன்னைத் தானே பேரரசனாக அறிவித்துக் கொண்ட சா சுஜா மேற்கொண்ட நிலப் பரப்புகளை இணைக்கத் தொடங்கினார். ஒரு புதிய மற்றும் பெரிய இராணுவத்துடன் பஞ்சாபிலிருந்து ஔரங்கசீப் விரைந்து அணி வகுத்தார். கச்வா யுத்தம் நடை பெற்றது. இந்த யுத்தத்தின் போது சா சுஜாவும் அவரது வலைக் கவசங்களைக் கொண்டிருந்த போர் யானைகளும் ஔரங்கசீப்பின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. சா சுஜா தற்போதைய பர்மாவின் அரகான் பகுதிக்குத் தப்பித்தார். அங்கு உள்ளூர் ஆட்சியாளர்களால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[62]

சுஜா மற்றும் முராத் நீக்கப்பட்ட பிறகு, ஆக்ராவில் இவரது தந்தை அவரது விருப்பத்திற்கு எதிராக அடைத்து வைக்கப்பட்டார். பிறகு ஔரங்கசீப் தாரா சிக்கோவைப் பேரரசின் வடமேற்கு எல்லைகள் வழியாகத் துரத்தினார். முகலாய உயர் அதிகாரியான சாதுல்லா கானுக்கு விஷம் வைத்ததாகத் தாரா சிக்கோ மீது ஔரங்கசீப் குற்றம் சாட்டினார். ஒரு தொடர்ச்சியான யுத்தங்கள், தோல்விகள் மற்றும் பின் வாங்கல்களுக்குப் பிறகு அவரது தளபதிகளில் ஒருவரே தாரா சிக்கோவுக்குத் துரோகம் செய்தார். தாராவைக் கைது செய்து கூட்டி வந்தார். 1658இல் ஔரங்கசீப் தில்லியில் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடத்தினார்.

10 ஆகத்து 1659 அன்று தாரா மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது தலையானது ஷாஜகானிடம் அனுப்பி வைக்கப்பட்டது.[60] ஔரங்கசீப்பால் நடத்தப்பட்ட முதல் முக்கியமான மரண தண்டனையானது இவரது அண்ணன் இளவரசன் தாரா சிக்கோவைக் கொன்றதாகும். சில ஆதாரங்கள் இவர் அரசியல் காரணங்களுக்காக இதைச் செய்தார் என்று வாதிடுகின்றன.[63] ஔரங்கசீப் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த சகோதரன் இளவரசன் முராத் பக்சுவை கொலைக் குற்றத்திற்காகப் பிடித்து வைத்தார். பிறகு மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[64] சிறை வைக்கப்பட்டிருந்த தன்னுடைய அண்ணன் மகன் சுலைமான் சிக்கோவுக்கும் விஷம் வைத்ததாக ஔரங்கசீப் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.[65] தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தியதற்குப் பிறகு உடல் நலமற்ற தன்னுடைய தந்தையை ஆக்ரா கோட்டையில் ஔரங்கசீப் அடைத்தார். ஷாஜகான் சகானாராவால் கவனிக்கப்பட்டு வந்தார். 1666ஆம் ஆண்டு இறந்தார்.[59]

ஆட்சி

Thumb
தொடக்க கால 18ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப்புக்குக் கீழ் முகலாயப் பேரரசு

பொருளாதாரம்

ஔரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் முகலாயப் பேரரசானது உலகின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 25%க்குப் பங்களித்தது. சிங் சீனாவை முந்தியது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும் உருவானது. இது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டு மொத்தப் பொருளாதார அளவையும் விட அதிகமாகும். தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை இது அறிகுறியாகக் கொண்டிருந்தது.[66][67]

இராணுவம்

Thumb
ஔரங்கசீப்பின் கத்தி.
Thumb
அரசவையில் ஒரு வல்லூறைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு தங்க அரியணையில் அமர்ந்திருக்கும் ஔரங்கசீப். இவருக்கு முன்னாள் நிற்பவர் இவரது மகனாகிய முகமது ஆசம் ஷா ஆவார்.

ஔரங்கசீப் எப்போதுமே தன்னுடைய குதிரைப் படைப் பிரிவுகளை ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[68]

1663இல் இலடாக்கிற்கு ஔரங்கசீப் வருகை புரிந்த போது பேரரசின் அப்பகுதி மீது நேரடியான கட்டுப்பாட்டை இவர் நிறுவினார். தெல்தன் நம்கியால் போன்ற விசுவாசம் மிகுந்த குடிமகன்கள் திறை செலுத்தவும், விசுவாசமாக இருக்கவும் வாக்குறுதியளித்து ஒப்புக் கொண்டனர்.[69]

Thumb
இளவரசன் முவசமை வரவேற்கும் ஔரங்கசீப். ஓவியம் உள்ள இடம்: செசுதர் பீட்டி நூலகம், டப்ளின், அயர்லாந்து.

1664இல் ஔரங்கசீப் சயிஸ்தா கானை வங்காளத்தின் சுபேதாராக (ஆளுநர்) நியமித்தார். சயிஸ்தா கான் அப்பகுதியிலிருந்த போர்த்துக்கீசிய மற்றும் அரகனிய கடற்கொள்ளையர்களை ஒழித்தார். 1666இல் அரகனிய மன்னன் சந்தா துதம்மனிடமிருந்து சிட்டகொங் துறைமுகத்தை மீண்டும் கைப்பற்றினார். முகலாய ஆட்சி முழுவதும் சிட்டகொங்கானது ஒரு முக்கியமான துறைமுகமாகத் தொடர்ந்தது.[70]

1685இல் ஔரங்கசீப் தனது மகன் முகமது ஆசம் ஷாவை கிட்டத்தட்ட 50,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் பீஜப்பூர் கோட்டையைக் கைப்பற்றவும், திறை செலுத்த மறுத்த பீஜப்பூரின் ஆட்சியாளரான சிக்கந்தர் அடில் சாவைத் தோற்கடிக்கவும் அனுப்பினார். பீஜப்பூர் கோட்டை மீதான தாக்குதலில் முகலாயர் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.[71] இதற்கு முதன்மையான காரணம் இரு தரப்பினருமே பீரங்கிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தியதே ஆகும். வெற்றி தோல்வியின்றி இருந்த நிலையால் சினம் கொண்ட ஔரங்கசீப் தானே 4 செப்தெம்பர் 1686 அன்று வருகை புரிந்தார். பீஜப்பூர் முற்றுகைக்குத் தலைமை தாங்கினார்.

எஞ்சியிருந்த ஒரே ஓர் ஆட்சியாளர் மட்டும் சரணடைய மறுத்தார். அவர் கோல்கொண்டாவின் குதுப் சாகி ஆட்சியாளரான அபுல் அசன் குதுப் சா ஆவார். அவரும், அவரது படை வீரர்களும் கோல்கொண்டா கோட்டையில் அரண் அமைத்துக் கொண்டனர். கொல்லூர் சுரங்கத்தை ஆக்ரோசமாகப் பாதுகாத்தனர். அநேகமாக அந்நேரத்தில் உலகில் அதிக வைரங்களை உற்பத்தி செய்த வைரச் சுரங்கமாக அது இருந்தது. ஒரு முக்கியமான பொருளாதார உடைமையாக இருந்தது. 1687இல் கோல்கொண்டா முற்றுகையின் போது ஔரங்கசீப் தன்னுடைய பெரிய முகலாய இராணுவத்தை தக்காணத்தின் குதுப் சாகி கோட்டைக்கு எதிராகத் தலைமை தாங்கினார். குதுப் சாகிக்கள் தலைமுறை தலைமுறையாகப் பெருமளவிலான அரண்களை ஒரு கருங்கல் பாறைக் குன்றின் மீது கட்டமைத்திருந்தனர். இக்குன்று 400 அடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டிருந்தது. நகரத்தைச் சுற்றி ஒரு பெரிய 13 கிலோ மீட்டர் நீள அரண் இருந்தது. போர் யானைகளால் நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் முறியடிக்கும் திறனை கோல்கொண்டாவின் வாயிற்கதவுகள் கொண்டிருந்தன. தங்களது அரண்களை முறியடிக்க முடியாதவையாக குதுப் சாகிக்கள் பேணி வந்த போதும், ஔரங்கசீப்பும், இவரது காலாட் படையினரும் இரவில் நுட்பமான சாரங்களை எழுப்பினர். உயரமான சுவர்கள் மீது ஏற இது இவர்களுக்கு வாய்ப்பளித்தது. எட்டு மாத முற்றுகையின் போது முகலாயர்கள் ஏராளமான கடினங்களை அனுபவித்தனர். இதில் இவர்களது அனுபவம் வாய்ந்த தளபதியான கிலிச் கான் பகதூர் இறப்பும் அடங்கும். இறுதியாக, ஔரங்கசீப்பும், இவரது படைகளும் ஒரு வாயிற் கதவைப் பிடித்து அதன் மூலம் அரண்களைத் தாண்டி உள்ளே செல்ல முடிந்தது. இவர்களது நுழைவானது கோட்டையை அபுல் அசன் குதுப் சா சரணடையச் செய்வதற்கு வழி வகுத்தது.

பீரங்கி உருவாக்கும் முகலாயர்களின் திறமைகளானவை 17ஆம் நூற்றாண்டின் போது முன்னேற்றமடைந்தன.[72] மிகவும் போற்றத்தக்க முகலாயப் பீரங்களில் ஒன்றானது சாபர்பக்சு என்று அறியப்பட்டது. இது ஒரு மிகவும் அரிதான பல வேறு பகுதிகளை உள்ளடக்கிய பீரங்கியாகும். இதை உருவாக்க இரும்பை சுத்தியலால் அடித்து இணைக்கும் திறன் மற்றும் வெண்கலக் குழம்பைச் சூடேற்றி அச்சில் வார்த்து உருவாக்கும் தொழில்நுட்பம் மற்றும் இரு உலோகங்களின் தரம் குறித்த ஆழ்ந்த அறிவு ஆகிய்வை தேவைப்பட்டன.[73] இப்ராகிம் ரௌசா என்பது ஒரு புகழ்பெற்ற பீரங்கியாகும். இப்பீரங்கி இதன் பல குழல்களுக்காக நன்றாக அறியப்பட்ட ஒன்றாகும்.[74] ஔரங்கசீப்பின் மருத்துவரான பிராங்கோயிசு பெர்னியர் முகலாயத் துப்பாக்கி வண்டிகளானவை ஒவ்வொன்றும் இரண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுள்ளார். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளால் இழுக்கப்பட்ட துப்பாக்கி வண்டிகளை விட இவை முன்னேற்றமடைந்தவையாக இருந்தன.[75]

ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது 1703இல் சோழ மண்டலக் கடற்கரையில் இருந்த முகலாயத் தளபதியான தாவுத் கான் பன்னி இலங்கையிலிருந்து 30 முதல் 50 போர் யானைகளை விலைக்கு வாங்குவதற்காக 10,500 நாணயங்களைச் செலவழித்தார்.[76]

கலையும், பண்பாடும்

தனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை விட ஔரங்கசீப் மிகவும் எளிமையான வாழ்க்கை இயல்பைக் கொண்டிருந்தார். முகலாய ஓவியங்களுக்கு அரசவை நிதிக் கொடைகளைப் பெருமளவுக்குக் குறைத்தார்.[77] இதன் காரணமாக சில மாகாண அரசுகளுக்கு முகலாய அரசவையிலிருந்த ஓவிய அறைகள் செல்லும் விளைவு ஏற்பட்டது.[78]

கட்டடக் கலை

தனது தந்தையைப் போல கட்டடக் கலையில் ஈடுபாடு கொண்டவராக ஔரங்கசீப் இல்லை. ஔரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் முதன்மையான கட்டடக் கலைப் புரவலராக முகலாயப் பேரரசரின் நிலையானது வீழ்ச்சியடையத் தொடங்கியது.[79] ஔரங்காபாத்தில் தனக்குத் தானே ஔரங்கசீப் கட்டமைத்த ஓர் அரண்மனையானது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட இருந்தது.[80]

அரண்கள், பாலங்கள், கேரவன்செராய் மற்றும் தோட்டங்கள் போன்ற நகர்ப்புறக் கட்டமைப்புகளை ஔரங்கசீப் மறுசீரமைப்பு செய்தார். எடுத்துக்காட்டாக, ஔரங்காபாத்தின் சுற்றுச் சுவரைக் குறிப்பிடலாம். இதன் பல வாயிற்கதவுகளில் பல இன்றும் எஞ்சியுள்ளன.[81]

ஜவுளிகள்

முகலாயப் பேரரசில் ஜவுளித் துறையானது முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது மிகவும் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்தது. இது முகலாயப் பேரரசருக்கு பிரெஞ்சு மருத்துவராக இருந்த பிராங்கோயிசு பெர்னியரால் நல்ல முறையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கைவினைஞர்களுக்கான பட்டறை அல்லது கர்கனாக்கள் எனப்படுவை, குறிப்பாக ஜவுளித் துறை பட்டறைகள் "நூற்றுக்கணக்கான தையல் பூவேலை செய்பவர்களைப் பணி புரிய வைத்தும், அவர்களை மேற்பார்வையிட ஒரு மேற்பார்வையாளரை நியமித்தும்" செழித்து வளர்ந்தன என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இவர் "கைவினைஞர்கள் பட்டு, சிறந்த உலோக நூல் வேலைப்பாடுள்ள துணிகள் மற்றும் பிற சிறந்த மசுலின் துணிகளைத் தயாரித்தனர். இவற்றிலிருந்து தலைப் பாகைகள், தங்கப் பூக்களையுடைய அங்கிகள், பெண்களால் அணியப்படும் இறுக்கமற்ற ஆடை வகைகள் ஆகியவை தயாரிக்கப்பட்டன. இவை மிகவும் மென்மையாக இருந்ததால் ஒரு நாள் இரவு அணிந்தாலே தளர்ந்து விடும்" என்று குறிப்பிடுகிறார். "சிறந்த ஊசி வேலைப்படுகளால் தையல் பூ வேலையானது இத்துணிகளில் செய்யப்பட்டிருந்தால் அவை இன்னும் அதிகமான விலை உடையவையாக இருக்கும்" என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.[82]

இம்ரு (இப்பெயருக்கு பாரசீக மொழியில் "உலோக நூல் வேலைப்பாடுள்ள துணி" என்று பொருள்), பைதானி (இதன் இரு புறமும் வரையப்பட்ட வடிவங்களானவை ஒரே போல் இருக்கும்), முசரு (ஒண்பட்டுத் துகிலால் நெய்யப்பட்ட துணி) போன்ற ஜவுளிகளை உற்பத்தி செய்ய வெவ்வேறு தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூட இவர் விளக்குகிறார். உருவம் பொறிக்கப்பட்ட அல்லது கட்டிகளைக் கொண்டு அச்சிடப்பட்ட கலாம்காரி என்ற நுட்பத்தைக் குறித்தும் இவர் விளக்குகிறார். இத்தொழில்நுட்பம் உண்மையில் பாரசீகத்திலிருந்து வந்ததாகும். கானி என்று அறியப்பட்ட பாசுமினா சால்வைகளின் வடிவங்கள் மற்றும் மென்மையான, எளிதில் சேதமுறக் கூடிய இழையமைப்பு குறித்த சில முதல் மற்றும் மதிக்கத்தக்க விளக்கங்களை பிராங்கோயிசு பெர்னியர் கொடுத்துள்ளார். இந்தச் சால்வைகள் அவற்றின் கதகதப்பான மற்றும் வசதியான தன்மை ஆகியவற்றுக்காக முகலாயர் மத்தியில் மிகவும் மதிக்கப்பட்டன. இந்த ஜவுளிகளும், சால்வைகளும் இறுதியாக பிரான்சு மற்றும் இங்கிலாந்துக்கு எவ்வாறு தங்களது வழியை அடையத் தொடங்கின என்பது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார்.[83]

அயல்நாட்டு உறவு முறைகள்

Thumb
பெரும் முகல் ஔரங்கசீப்பின் பிறந்த நாள், யோகன் மெல்சியோர் திங்லிங்கர் என்பவரால் 1701–1708 கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது.[84]

1659 மற்றும் 1662இல் தூதுக் குழுக்களை சரீப்புக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களுடன் மக்காவுக்கு ஔரங்கசீப் அனுப்பினார். மக்கா மற்றும் மதீனாவில் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட நன்கொடைகளையும் 1666 மற்றும் 1672இல் இவர் அனுப்பினார். வரலாற்றாளர் நய்மூர் இரகுமான் பரூக்கி எழுதியிருப்பதாவது, "1694 வாக்கில் மக்காவின் சரீப்புகள் மீது இவருக்கு இருந்த மதிப்பானது குறைய ஆரம்பித்தது. சரீப்புகளின் பேராசையானது பேரரசரை முழுவதுமாக ஏமாற்றமடையச் செய்தது. ஹெஜாசுக்கு அனுப்பிய அனைத்து பணத்தையும் சரீப் சொந்த பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டார். இந்த நெறியற்ற செயல் குறித்து ஔரங்கசீப் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். இவ்வாறாக தேவைப்படுவோர் மற்றும் ஏழைகளுக்குப் பணம் கிடைக்கவில்லை".[85] யோவான் பிரையர் என்ற பெயரிடப்பட்ட ஆங்கிலேயப் பயணியின் கூற்றுப் படி, நிலம் மீது தான் பெருமளவு சக்தியைக் கொண்டிருந்த போதிலும், முகலாய நிலப்பரப்பில் போர்த்துக்கீசியப் பேரரசின் கடற்படைகளுடன் பரஸ்பர உறவை நிறுவுவது என்பது செலவீனமற்றது என்று கருதினார். முகலாய நிலப்பரப்பில் தமது கப்பல்களுக்கான அனுகூலத்தை உறுதிப்படுத்துவதற்காக இதைச் செய்ய எண்ணினார். எனவே இவர் வெளிப்படையான பெரிய கடற்படையை உருவாக்கவில்லை.[86]

அச்சேயுடனான உறவு முறைகள்

தசாப்தங்களாக முகலாயப் பேரரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய மலபாரைச் சேர்ந்த மாப்பிளமார் அச்சே சுல்தானகத்திற்கு ஏற்கனவே புரவலர்களாக இருந்தனர்.[87] ஔரங்கசீப்பும், இவரது அண்ணன் தாரா சிக்கோவும் அச்சே வணிகத்தில் பங்கேற்றிருந்தனர். 1641இல் அச்சே சுல்தானுடன் பரிசுப் பொருட்களை ஔரங்கசீப்பும் கூட தானே பரிமாறிக் கொண்டார்[87]. அந்த ஆண்டு இசுகாந்தர் முதாவின மகளாகிய சுல்தானா சபியத்துதீன் ஔரங்கசீப்பிற்கு எட்டு யானைகளைப் பரிசளித்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[88]

இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனமானது தங்களது சொந்த மலக்கா வணிகத்தை மிகு வருவாய் ஈட்டக் கூடியதாக ஆக்குவதற்காக அச்சே வணிகத்திற்கு இடையூறு செய்ய முயற்சித்த போது, இடச்சு தலையீட்டால் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால் குசராத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று இடச்சுக் காரர்களை ஔரங்கசீப் அச்சுறுத்தினார்.[87] முசுலிம் வணிக நடவடிக்கைகளானவை இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தை பாதிப்பதாக இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கருதியதால் இந்த முயற்சியை அவர்கள் மேற்கொண்டனர்.[89] ஔரங்கசீப்பால் வெளியிடப்பட்ட ஆணையானது இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் பின் வாங்குவதற்குக் காரணமானது. மேலும், அவர்கள் இந்திய மாலுமிகளை அச்சே, பேராக் மற்றும் கெடா வழியாக எந்த விதக் கட்டுப்பாடுகளுமின்றி பயணம் செல்ல அனுமதித்தனர்.[87][89][90]

உசுப்பெக்கியருடனான உறவு முறைகள்

பல்குவின் உசுப்பெக் ஆட்சியாளரான சுபான் குலி கான் ஔரங்கசீப்பை 1658இல் முதன் முதலில் அங்கீகரித்தவர் ஆவார். அவர் ஒரு பொதுவான கூட்டணிக்கு வேண்டினார். 1647 முதல் புதிய முகலாயப் பேரரசருடன் அவர் பணியாற்றியிருந்தார்.

சபாவித்து அரசமரபுடனான உறவு முறைகள்

1660இல் பாரசீகத்தின் இரண்டாம் அப்பாசிடமிருந்து வந்த தூதுக் குழுவை ஔரங்கசீப் வரவேற்றார். அவர்கள் திரும்பிச் செல்லும் போது பரிசுப் பொருட்களுடன் அனுப்பினார். எனினும், காந்தாரத்திற்கு அருகில் நிலைப்படுத்தப்பட்டிருந்த முகலாய இராணுவத்தைப் பாரசீகர்கள் தாக்கியதன் காரணமாக முகலாயப் பேரரசு மற்றும் சபாவித்து அரசமரபுக்கு இடையிலான உறவு முறைகளானவை பதட்டத்துக்குரியவையாக இருந்தன. ஒரு பதிலடித் தாக்குதலுக்கு சிந்து ஆற்று வடிநிலத்தில் தனது இராணுவங்களை ஔரங்கசீப் தயார் செய்தார். ஆனால், 1666இல் இரண்டாம் அப்பாசின் இறப்பானது ஔரங்கசீப் அனைத்து எதிர்ப்புகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் காரணமானது. ஔரங்கசீப்பின் எதிர்ப்புக் குணம் கொண்ட மகனான சுல்தான் முகம்மது அக்பர் பாரசீகத்தின் முதலாம் சுலேய்மானிடம் தஞ்சம் வேண்டினார். மஸ்கத்தின் இமாமிடமிருந்து முகம்மது அக்பரைச் சுலேய்மான் காப்பாற்றியிருந்தார். ஔரங்கசீப்புக்கு எதிராக எந்த வித இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கச் சுலேய்மான் பின்னர் மறுத்து விட்டார்.[91]

பிரெஞ்சுக்காரர்களுடனான உறவு முறைகள்

1667இல் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தூதுவர்களான லே கோவுசு மற்றும் பெர்பெர்த்து ஆகியோர் பிரான்சின் பதினான்காம் லூயியின் மடலை ஔரங்கசீப்பிடம் அளித்தனர். தக்காணத்தில் இருந்த பல்வேறு எதிர்ப்பாளர்களிடமிருந்து பிரெஞ்சு வணிகர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி வலியுறுத்தினர். இம்மடலுக்குப் பதிலாக சூரத்தில் ஒரு தொழிற்சாலையைத் திறக்க பிரெஞ்சுக்காரர்களுக்கு அனுமதி வழங்கிய ஓர் ஆணையை ஔரங்கசீப் வெளியிட்டார்.

மாலத்தீவு சுல்தானகத்துடனான உறவு முறைகள்

1660களில் மாலத்தீவுகளின் சுல்தானான முதலாம் இப்ராகிம் இசுகாந்தர் ஔரங்கசீப்பின் பிரதிநிதியான பாலேஸ்வரைச் சேர்ந்த பௌஜ்தாரிடம் உதவி வேண்டினார். மாலத்தீவுகளின் பொருளாதாரம் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் கவலை கொண்ட சுல்தான் இடச்சு மற்றும் ஆங்கிலேய வணிகக் கப்பல்களை எதிர் காலத்தில் வெளியேற்றும் சாத்தியமான செயலுக்காக ஆதரவைப் பெற விரும்பினார். எனினும், ஔரங்கசீப் ஒரு சக்தி வாய்ந்த கடற்படையை வைத்திருக்காதது மற்றும், இடச்சு அல்லது ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு சாத்தியமான எதிர் காலப் போருக்கு இப்ராகிமுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஆர்வம் இல்லாததாலும், இந்த வேண்டுகோளுக்குப் பதிலாக எதுவும் ஔரங்கசீப்பிடமிருந்து கிடைக்கவில்லை.[92]

உதுமானியப் பேரரசுடனான உறவு முறைகள்

தன்னுடைய தந்தையைப் போலவே, உதுமானியர் கலீபகத்திற்கு உரிமை கோரியதை ஔரங்கசீப் ஏற்றுக் கொள்ளவில்லை. உதுமானியப் பேரரசின் எதிரிகளுக்கு இவர் அடிக்கடி ஆதரவளித்தார். பசுராவின் இரண்டு எதிர்ப்புக் குணம் கொண்ட ஆளுநர்களுக்கு இவர் உளங்கனிந்த வரவேற்பை அளித்தார். தன்னுடைய அரசில் ஓர் உயர்ந்த நிலையை அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அளித்தார். சுல்தான் இரண்டாம் சுலேய்மானின் நட்பு ரீதியிலான நடவடிக்கைகள் ஔரங்கசீப்பால் பொருட்படுத்தப்படாமல் விடப்பட்டன.[93] எனினும், ஔரங்கசீப்புக்கு மக்காவின் சரீப்பின் புரவலர் என்ற நிலை கொடுக்கப்பட்டது. அந்நேரத்தில், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு குழுவை சரீப்புக்கு இவர் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் மக்காவானது உதுமானியர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.[94]

ஆங்கிலேயர்களுடனான உறவு முறைகளும், ஆங்கிலேய-முகலாயப் போரும்

Thumb
ஆங்கிலேய-முகலாயப் போரின் போது ஔரங்கசீப்பிடமிருந்து மன்னிப்புக் கோரும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் சோசையா சைல்டு.

1686இல் முகலாயப் பேரரசு முழுவதும் வணிக உரிமைகளை வழங்கும் ஓர் ஆணையைப் பெறும் முயற்சி தோல்வியடைந்ததால் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமானது ஆங்கிலேய-முகலாயப் போரைத் தொடங்கியது.[95] ஔரங்கசீப்பால் 1689இல் அனுப்பப்பட்ட, ஜஞ்சிராவிலிருந்து வந்த ஒரு பெரிய கப்பல் குழு மும்பையைச் சுற்றி அடைப்பை ஏற்படுத்தியது. பிறகு இப்போரானது ஆங்கிலேயருக்கு அழிவுகரமானதாக முடிந்தது. சிதி யகூப்பால் இயக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் பிற இந்தியர்கள் மற்றும் மாப்பிளமார்களால் இயக்கப்பட்டது.[96]

செப்தெம்பர் 1695இல் ஆங்கிலேயக் கடற் கொள்ளையனான என்றி எவ்ரி வரலாற்றில் மிகவும் வருவாய் ஈட்டிய கடற்கொள்ளை ஊடுருவல் ஒன்றை நடத்தினார். சூரத் நகரில் ஒரு பெரிய முகலாயக் கப்பல் குழுவைக் கைப்பற்றினார். கடற் கொள்ளையர்கள் தாக்கிய போது இந்தக் கப்பல்களானவை மக்காவுக்கான தங்களது வருடாந்திரப் புனிதப் பயணத்திலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்தன. முசுலிம் கப்பல்களில் இருந்த மிகப்பெரிய கப்பலான கஞ்சி சவாயைக் கடற் கொள்ளையர்கள் கைப்பற்றினர் என்று குறிப்பிடப்படுகிறது. இச்செயல் முறையில் காவலாளிகளையும் பிடித்தனர். முதன்மை நிலப்பகுதிக்கு இந்த கைப்பற்றல் குறித்த செய்தியானது வந்தடைந்த போது கோபம் கொண்ட ஔரங்கசீப் ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்ட பாம்பே நகரத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்குக் கிட்டத்தட்ட ஆணையிட்டார். நிதி இழப்பீடுகளை வழங்குவதற்குக் கிழக்கிந்திய நிறுவனம் ஒப்புக் கொண்டதற்குப் பிறகு ஔரங்கசீப் இறுதியாக சமரசம் செய்ய ஒப்புக் கொண்டார். முகலாய அரசானது இந்த இழப்பீடுகளை £6,00,000 என மதிப்பிட்டுள்ளது.[97] இடைப்பட்ட காலத்தில், ஔரங்கசீப் ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் நான்கை மூடச் செய்தார். பணியாளர்களையும், கப்பல் தலைவர்களையும் சிறை வைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழுவானது கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டவர்களைக் கொல்லும் நிலைக்குச் சென்றது. எவ்ரி கைது செய்யப்படும் வரை இந்தியாவில் அனைத்து ஆங்கிலேய வணிகத்துக்கும் முடிவு கட்டுவதாக ஔரங்கசீப் அச்சுறுத்தினார்.[97] இங்கிலாந்தின் நீதிபதி பிரபுக்கள் எவ்ரியைப் பிடிக்கப் பரிசுத் தொகையை அளிக்க முன் வந்தனர். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் உலகளவில் நடைபெற்ற முதல் தேடுதல் வேட்டைக்கு இது இட்டுச் சென்றது. எனினும், எவ்ரி வெற்றிகரமாகப் பிடிபடாமல் தப்பினார்.[98]

1702இல் ஔரங்கசீப் முகலாயப் பேரரசின் கர்நாடகப் பிரதேசத்தின் சுபேதாரான தாவூத் கான் பன்னியை அனுப்பினார். சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையை மூன்றுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முற்றுகையிட்டு அவர் அடைப்பு செய்தார்.[99] கோட்டையின் ஆளுநரான தாமசு பிட் கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைதிக்குக் கோரிக்கை விடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

எத்தியோப்பியப் பேரரசுடனான உறவு முறைகள்

எத்தியோப்பியப் பேரரசரான பாசிலிதேசு முகலாயப் பேரரசின் அரியணைக்கு ஔரங்கசீப் வந்ததற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்காக 1664-65இல் இந்தியாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்.[100]

திபெத்தியர், உயுகுர் மற்றும் சுங்கர்களுடனான உறவு முறைகள்

1679க்குப் பிறகு திபெத்தியர் இலடாக்கு மீது படையெடுத்தனர். இலடாக்கானது முகலாயச் செல்வாக்குப் பகுதியில் அமைந்திருந்தது. 1683ஆம் ஆண்டு இலடாக்கின் பக்கமாக ஔரங்கசீப் தலையிட்டார். திபெத்தியை நிலைகளை வலுப்படுத்த சுங்கர் வலுவூட்டல் படைகள் வருவதற்கு முன்னரே ஔரங்கசீப்பின் படைகள் பின் வாங்கின. இதே நேரத்தில், காசுமீரின் ஆளுநரிடமிருந்து ஒரு மடல் வந்தது. அதில் தலாய் லாமாவைத் தோற்கடித்து ஒட்டு மொத்த திபெத்தையும் முகலாயர்கள் வென்று விட்டனர் என்று கூறப்பட்டது. ஔரங்கசீப்பின் அரசவையில் ஆரவாரத்திற்கான ஒரு காரணமாக இது அமைந்தது.[101]

1690இல் சகதாயி மொகுலிசுதானின் முகம்மது அமீன் கானிடமிருந்து ஒரு தூதுக் குழுவை ஔரங்கசீப் வரவேற்றார். "தங்களது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும்" "தம் மதம் சாராத கிர்சுகிசுக்களை" (இதன் பொருள் பௌத்த சுங்கர்கள் என்பதாகும்) வெளியேற்ற உதவி வேண்டி அக்குழு வந்திருந்தது.

உருசியாவின் சாராட்சியுடனான உறவு முறைகள்

17ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் உருசிய-முகலாய வணிக உறவு முறைகளைத் தொடங்குமாறு ஔரங்கசீப்பிடம் உருசிய சார் மன்னரான முதலாம் பேதுரு வேண்டினார். 1696இல் பேதுருவின் தூதரான செம்யோன் மலேன்கியை ஔரங்கசீப் வரவேற்றார். சுதந்திரமான வணிகம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கினார். சூரத்து, புர்ஹான்பூர், ஆக்ரா, தில்லி மற்றும் பிற நகரங்களுக்கு வருகை புரிந்து இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்குத் தங்கியிருந்ததற்குப் பிறகு உருசிய வணிகர்கள் மாசுகோவுக்கு மதிப்பு மிக்க இந்தியப் பொருட்களுடன் திரும்பினர்.[102]

நிர்வாகச் சீர்திருத்தங்கள்

திறை

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமிருந்து ஔரங்கசீப் திறை பெற்றார். இந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி இந்தியாவில், குறிப்பாக கர்நாடக, தக்காண, வங்காள மற்றும் இலாகூர் பகுதிகளில் இராணுவ மையங்கள் மற்றும் அரண்களை நிறுவினார்.

வருவாய்

Thumb
1690 வாக்கில் ஔரங்கசீப் "கன்னியாகுமரி முதல் காபுல் வரையிலான முகலாயச் சுல்தானகத்தின் பேரரசர்" என்று குறிப்பிடப்பட்டார்.[103]

ஆண்டுக்கு £10 கோடிகளை ஔரங்கசீப்பின் நிதித் துறையானது பெற்றது.[104] ஆண்டு வருவாயாக ஐஅ$450 மில்லியன் (3,218.2 கோடி)களை இவர் கொண்டிருந்தார். இவரது சம கால மன்னனான பிரான்சின் பதினான்காம் லூயியின் வருமானத்தைப் போல் இந்த வருவாயானது 10 மடங்குக்கும் அதிகமானதாகும்.[105]

நாணயங்கள்

இவரது நாணயங்கள் அச்சிடப்பட்ட நகரத்தின் பெயர் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டை ஒரு பக்கத்திலும், மறு பக்கத்தில் பின்வரும் வரிகளையும் கொண்டிருந்தன:[106]

மன்னர் ஔரங்கசீப் ஆலம்கீர்
இந்த உலகத்தில், நாணயங்கள் மீது பிரகாசமான முழு நிலவைப் போல் அச்சிட்டார்.[106]

கிளர்ச்சிகள்

Thumb
முகலாயப் பேரரசு முழுவதும் பெரிய மற்றும் சிறிய கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் தனது ஆட்சிக் காலத்தை ஔரங்கசீப் செலவழித்தார்.

மராத்தியர், இராசபுத்திரர், ஜாட்கள், பஷ்தூன்கள் மற்றும் சீக்கியர் போன்ற வட மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்த பாரம்பரிய மற்றும் புதிதாக ஒருங்கிணைந்த சமூகக் குழுக்களானவை முகலாய ஆட்சியின் போது இராணுவ மற்றும் அரசை நிர்வகிக்கும் குறிக்கோள்களைப் பெற்றிருந்தன. ஆதரவு அல்லது எதிர்ப்பு மூலம் இக்குறிக்கோள்களானவை இவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் இராணுவ அனுபவம் ஆகிய இரண்டையுமே கொடுத்தன.[107]

  • 1669இல் மதுராவைச் சுற்றியிருந்த பரத்பூரின் ஜாட் விவசாயிகள் கிளர்ச்சி செய்தனர். பரத்பூர் அரசை உருவாக்கினர். ஆனால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1659இல் ஔரங்கசீப்புக்கு எதிராகப் போரைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே முகலாய அரசின் உயரதிகாரி சயிஸ்தா கான் மீது ஒரு திடீர்த் தாக்குதலை மராத்தியப் பேரரசரான சிவாஜி நடத்தினார். சிவாஜியும், அவரது படைகளும் தக்காணம், ஜஞ்சிரா மற்றும் சூரத்தைத் தாக்கின. பெரும் நிலப்பரப்பின் கட்டுப்பாட்டைப் பெற முயற்சித்தன. 1689இல் ஔரங்கசீப்பின் இராணுவங்கள் சிவாஜியின் மகன் சம்பாஜியைப் பிடித்தன. மரண தண்டனைக்கு உட்படுத்தின. ஆனால், மராத்தியர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர்.[108]
  • 1679இல் மார்வாரின் துர்கதாசு இரத்தோர் தலைமையிலான இரத்தோர் இனமானது, இளம் இரத்தோர் இளவரசனை மன்னனாக்க ஔரங்கசீப் அனுமதி அளிக்கவில்லை மற்றும் சோத்பூரின் நேரடிக் கட்டுப்பாட்டை அவர் கையில் எடுத்ததால் ஔரங்கசீப்புக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது. ஔரங்கசீப்புக்குக் கீழான இராசபுத்திர ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் அமைதியின்மையை இந்நிகழ்வு ஏற்படுத்தியது. இராசபுதனத்தில் பல்வேறு கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது. இப்பகுதியில் முகலாய சக்தியின் வீழ்ச்சி மற்றும் கோயில்கள் அழிக்கப்பட்டதால் சமய ரீதியிலான கசப்புணர்வும் ஏற்பட்டதில் இது முடிவடைந்தது.[109][110]
  • 1672இல் தில்லிக்கு அருகில் இருந்த பகுதியில் திரளாக இருந்த சத்னாமி என்ற ஒரு பிரிவினர் பிர்பானின் தலைமைத்துவத்தின் கீழ் நர்னௌல் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தனர். ஔரங்கசீப் தானே முன் வந்து தலையிட்டதற்குப் பிறகு இறுதியாக இவர்கள் ஒடுக்கப்பட்டனர். வெகு சிலரே இதில் தப்பிப் பிழைத்தனர்.[111]
  • 1671இல் முகலாயப் பேரரசின் கிழக்குக் கோடிப் பகுதிகளில் அகோம் இராச்சியத்திற்கு எதிராக சராய்காட் போரானது சண்டையிடப்பட்டது. இரண்டாம் மிர் சும்லா மற்றும் சயிஸ்தா கான் ஆகியோர் முகலாயர்களுக்குத் தலைமை தாங்கினர். அகோமியரைத் தாக்கினர். ஆனால், தோற்கடிக்கப்பட்டனர்.
  • பண்டேலா இராசபுத்திர இனத்தைச் சேர்ந்த ஒரு போர் வீரனான சத்திரசால் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கு எதிராகச் சண்டையிட்டார். புந்தேல்கண்டில் தன்னுடைய சொந்த இராச்சியத்தை நிறுவினார். பன்னாவின் மகாராசாவாக உருவானார்.[112]

ஜாட் கிளர்ச்சி

Thumb
ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது அக்பரின் சமாதியானது ஜாட் கிளர்ச்சியாளர்களால் சூறையாடப்பட்டது.

1669இல் ஜாட் இன மக்கள் ஒரு கிளர்ச்சியை ஒருங்கிணைத்தனர்.[113][114] தில்பத் பட்டணத்தைச் சேர்ந்த ஓர் எதிர்ப்பாளர், நில உரிமையாளரான கோகுலா என்பவர் ஜாட்களுக்குத் தலைமை தாங்கினார். 1670ஆம் ஆண்டு வாக்கில் 20,000 ஜாட்கள் ஒழித்துக் கட்டப்பட்டனர். தில்பத் பட்டணம், கோகுலாவின் செல்வமான 93,000 தங்க நாணயங்கள் மற்றும் இலட்சக்கணக்கான வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை முகலாய இராணுவமானது பெற்றது.[115]

கோகுலா பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், ஜாட்கள் மீண்டும் ஒரு முறை கிளர்ச்சிக்கு முயற்சித்தனர். தன்னுடைய தந்தை கோகுலாவின் இறப்புக்குப் பழி வாங்கும் பொருட்டு ராஜா ராம் ஜாட் அக்பரின் சமாதியிலிருந்த தங்கம், வெள்ளி மற்றும் சிறந்த தரை விரிப்புகளைக் கொள்ளையடித்தார். அக்பரின் சமாதியைத் திறந்தார். அக்பரின் எலும்புகளை எடுத்து எரித்தார்.[116][117][118][119][120] வாயிற் கதவிலிருந்து அக்பரின் சமாதி வரையிலிருந்த தூபிகளின் குவிமாடங்களையும் ஜாட்கள் உடைத்தனர். தாஜ் மகாலில் இருந்த இரண்டு வெள்ளிக் கதவுகளை உருக்கினர்.[121][122][123][124] ஜாட் கிளர்ச்சியை ஒடுக்க மொகம்மது பிதார் பக்தைத் தளபதியாக ஔரங்கசீப் நியமித்தார். 4 சூலை 1688 அன்று ராஜா ராம் ஜாட் பிடிக்கப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டார்.[125]

எனினும், ஔரங்கசீப்பின் இறப்பிற்குப் பிறகு பதன் சிங் தலைமையிலான ஜாட்கள் பின்னர் தங்களது சுதந்திர அரசான பரத்பூரை நிறுவினர்.

ஜாட் கிளர்ச்சியின் காரணமாக புஷ்திமார்க், கௌடியா, மற்றும் பிராஜிலிருந்த ராதா வல்லப வைஷ்ணவ் கோயில்கள் கைவிடப்பட்டன. இக்கோயில்களின் சிலைகள் வெவ்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன அல்லது மறைத்து வைக்கப்பட்டன.[126]

முகலாய-மராத்தியப் போர்கள்

Thumb
சாத்தாரா யுத்தத்தின் போது முகலாய இராணுவத்திற்குத் தலைமை தாங்கும் ஔரங்கசீப்.

1657இல் தக்காணத்தில் கோல்கொண்டா மற்றும் பீஜப்பூரை ஔரங்கசீப் தாக்கிய நேரத்தில், மராத்தியப் போர் வீரரான சிவாஜி கரந்தடிப் போர் முறை உத்திகளைப் பயன்படுத்தி முன்னர் தனது தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று அடில் சாகிக் கோட்டைகளின் கட்டுப்பாட்டைப் பெற்றார். இந்த வெற்றிகளுடன் பல சுதந்திரமான மராத்திய இனங்களின் நடைமுறை ரீதியிலான தலைமைத்துவத்தை சிவாஜி பெற்றார். போரிட்டுக் கொண்டிருந்த அடில் சாகிக்களின் பக்கவாட்டுப் பகுதிகளை மராத்தியர்கள் தாக்கினர். ஆயுதங்கள், கோட்டைகள் மற்றும் நிலப்பரப்பைப் பெற்றனர்.[127] சிவாஜியின் சிறிய மற்றும் போதிய அளவுக்கு ஆயுதம் வழங்கப்படாத இராணுவமானது அடில் சாகிக்களின் ஒட்டு மொத்த தாக்குதலைத் தாக்குப் பிடித்தது. சிவாஜி தானே அடில் சாகி தளபதியான அப்சல் கானைக் கொன்றார்.[128] இந்நிகழ்வுடன் மராத்தியர்கள் ஒரு சக்தி வாய்ந்த இராணுவப் படையாக உருமாறினர். மேலும், மேலும் அடில் சாகி நிலப் பரப்புகளைக் கைப்பற்றினர்.[129] இப்பகுதிகளில் முகலாய சக்தியை தாக்க விளைவு அற்றதாக சிவாஜி ஆக்கினார்.[130]

1659இல் தன்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதியும், தாய் மாமனுமாகிய சயிஸ்தா கானை ஔரங்கசீப் அனுப்பினார். மராத்தா கிளர்ச்சியாளர்களிடம் இழந்த கோட்டைகளை மீண்டும் பெற கோல்கொண்டாவில் வாலியாக (ஆளுநர்) இருந்த சயிஸ்தா கானை அனுப்பினார். சயிஸ்தா கானை மராத்திய நிலப்பரப்புக்குள் நுழைந்தார். புனேயில் தங்கினார். புனேயில் ஆளுநரின் அரண்மனை மீது ஒரு நள்ளிரவு திருமண விழாவின் போது ஒரு துணிச்சலான ஊடுருவலை சிவாஜி தானே முன்னின்று தலைமை தாங்கி நடத்தினர். மராத்தியர்கள் சயிஸ்தா கானின் மகனைக் கொன்றனர். சயிஸ்தா கானின் கையின் மூன்று விரல்களை வெட்டியதன் மூலம் சிவாஜி சயிஸ்தா கானை ஊனப்படுத்தினார். எனினும், சயிஸ்தா கான் பிழைத்துக் கொண்டார். வங்காளத்தின் நிர்வாகியாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

Thumb
ஔரங்கசீப்பின் தர்பாரில் (அரசவை) ராஜா சிவாஜி. ஓவியர்: எம். வி. துரந்தர்.

மராத்தியர்களைத் தோற்கடிக்க ஔரங்கசீப் தளபதி ராஜா ஜெய்சிங்கைப் பிறகு அனுப்பினார். புரந்தர் கோட்டையை ஜெய்சிங் முற்றுகையிட்டார். அதை மீட்கச் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளையும் சண்டையிட்டு முறியடித்தார். தோல்வியை எதிர் நோக்கியிருந்த போது சிவாஜி நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டார்.[131] ஆக்ராவில் ஔரங்கசீப்பைச் சந்திக்க வருகை புரியுமாறு சிவாஜியை ஜெய்சிங் இணங்க வைத்தார். சிவாஜியின் பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் உத்தரவாதமளித்தார். எனினும், இருவருக்குமிடையிலான சந்திப்பானது முகலாய அவையில் நன் முறையில் செல்லவில்லை. தான் வரவேற்கப்பட்ட விதத்தில் சிவாஜிக்கு வருத்தம் இருந்தது. ஔரக்கசீப் அரசின் பணிவிடைகளை சிவாஜி ஏற்றுக் கொள்ள மறுத்தார். இதற்காகத் தடுத்து வைக்கப்பட்டார். ஆனால், துணிச்சலான முறையில் அங்கிருந்து சிவாஜியால் தப்பிக்க முடிந்தது.[132]

சிவாஜி தக்காணத்திற்குத் திரும்பினார். 1674இல் சத்ரபதியாக அல்லது மராத்தா இராச்சியத்தின் ஆட்சியாளராக முடிசூட்டிக் கொண்டார்.[133] 1680இல் தன்னுடைய இறப்பு வரை தக்காணம் முழுவதும் மராத்தியக் கட்டுப்பாட்டை சிவாஜி விரிவாக்கினார். சிவாஜிக்குப் பிறகு அவரது மகன் சம்பாஜி ஆட்சிக்கு வந்தார்.[134] தக்காணத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க முகலாயர்களின் இராணுவ மற்றும் அரசியல் ரீதியான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்தன.

மற்றொரு புறம் ஔரங்கசீப்பின் மூன்றாவது மகனான அக்பர் ஒரு சில முசுலிம் மான்சப்தார் ஆதரவாளர்களுடன் முகலாய அரசவையிலிருந்து வெளியேறினார். தக்காணத்திலிருந்த முசுலிம் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தார். பதிலுக்கு ஔரங்கசீப் தனது அரசவையை ஔரங்காபாத்துக்கு நகர்த்தினார். தக்காணப் படையெடுப்பின் தலைமையை ஏற்றுக் கொண்டார். கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சிவாஜிக்குப் பின் ஆட்சிக்கு வந்த சம்பாஜியிடம் அடைக்கலம் தேடி அக்பர் தெற்கே தப்பியோடினார். ஏராளமான யுத்தங்கள் தொடர்ந்தன. அக்பர் பாரசீகத்திற்குத் தப்பியோடினர். அதன் பிறகு அவர் திரும்ப வரவேயில்லை.[135]

1689இல் ஔரங்கசீப்பின் படைகள் சம்பாஜியைப் பிடித்து மரண தண்டனைக்கு உட்படுத்தின. சம்பாஜிக்குப் பின் ஆட்சிக்கு வந்த ராஜாராம், பிறகு ராஜாராமின் விதவையான தாராபாய் மற்றும் அவர்களது மராத்தியப் படைகள் முகலாயப் பேரரசின் படைகளுக்கு எதிராகத் தனித் தனி யுத்தங்களைச் சண்டையிட்டன. இடைவிடாத போர் முறை ஆண்டுகளின் (1689–1707) போது நிலப்பரப்பானது தொடர்ந்து கைமாறியது. மராத்தியர் மத்தியில் மையப்படுத்தப்பட்ட அதிகாரமானது இல்லாதால் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்புக்கும் போட்டியிட வேண்டிய கட்டாய நிலைக்கு ஔரங்கசீப் தள்ளப்பட்டார். இதில் உயிர்கள் மற்றும் பணமானது பெருமளவுக்குச் செலவழிந்தது. ஔரங்கசீப் மராத்திய நிலப்பரப்புக்குள் ஆழமாக மேற்கே சென்றாலும் - குறிப்பாக சாத்தாராவை வென்றதன் மூலம் - மராத்தியர்கள் கிழக்கு நோக்கி மால்வா மற்றும் ஐதராபாத் போன்ற முகலாய நிலங்களுக்குள் விரிவடைந்தனர். மராத்தியர்கள் மேலும் தெற்கே தென் இந்தியாவுக்குள்ளும் கூட விரிவடைந்தனர். தென்னிந்தியாவிலிருந்த சுதந்திரமான உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்தனர். தமிழ்நாட்டில் செஞ்சியைக் கைப்பற்றினர். எந்த ஒரு முடிவுமின்றி இரு தசாப்தங்களுக்கும் மேலாக தக்காணத்தில் தொடர்ச்சியான போரை ஔரங்கசீப் நடத்திக் கொண்டிருந்தார்.[136] தக்காண இந்தியாவில் மராத்தியர்களால் தலைமை தாங்கப்பட்ட கிளர்ச்சிகளுக்கு எதிராகச் சண்டையிட்டதில் தன்னுடைய இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கினரை இவ்வாறாக இவர் இழந்தார். மராத்தியர்களை வெல்வதற்காக தக்காணத்திற்கு ஒரு நீண்ட தொலைவுக்குப் பயணித்து இவர் வந்திருந்தார். இறுதியாக தனது 88வது வயதில் மரணமடைந்தார். அப்போதும் கூட மராத்தியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.[137]

தக்காணத்தில் மரபு வழிப் போர் முறையிலிருந்து கிளர்ச்சி எதிர்ப்புப் போர் முறைக்கு ஔரங்கசீப்பின் மாற்றமானது முகலாய இராணுவ எண்ணத்தின் பார்வையை மாற்றியது. புனே, செஞ்சி, மால்வா மற்றும் வடோதரா ஆகிய இடங்களில் மராத்தியர் மற்றும் முகலாயர் இடையே சண்டைகள் நடைபெற்றன. ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது முகலாயப் பேரரசின் துறைமுக நகரமான சூரத்து இருமுறை மராத்தியர்களால் சூறையாடப்பட்டது. மதிப்பு மிக்க துறைமுகமானது சிதிலமடைந்தது.[138] முகலாய-மராத்தியப் போர்களின் போது ஔரங்கசீப்பின் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 25 இலட்சம் பேர் இறந்தனர் என மேத்தியூ வைட் என்கிற வரலாற்றாளர் மதிப்பிடுகிறார். ஒரு கால் நூற்றாண்டின் போது ஆண்டு தோறும் 1 இலட்சம் பேர் இறந்தனர். அதே நேரத்தில், 20 இலட்சம் குடிமக்கள் போரால் பாதிக்கப்பட்ட நிலங்களில் வறட்சி, கொள்ளைநோய் மற்றும் பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக இறந்தனர்.[139]

அகோம் படையெடுப்பு

ஔரங்கசீப்பும், இவரது சகோதரர் சா சுஜாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூச் பெகார் மற்றும் அசாமின் ஆட்சியாளர்கள் முகலாயப் பேரரசின் அமைதியற்ற சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். முகலாய நிலப்பரப்புகளின் மீது படையெடுத்தனர். 1660இல் வங்காளத்தின் அரசு நிர்வாகியான இரண்டாம் மிர் சும்லா இழந்த நிலப்பரப்புகளை மீண்டும் பெறுமாறு ஆணையிடப்பட்டார்.[140]

முகலாயர்கள் நவம்பர் 1661இல் புறப்பட்டனர். வாரங்களுக்குள்ளாகவே இவர்கள் கூச் பெகாரின் தலைநகரத்தை ஆக்கிரமித்தனர். கூச் பெகாரை இணைத்தனர். கோட்டைக் காவல் படையினரின் ஒரு பிரிவினரை பாதுகாப்பதற்காக விட்டுச் சென்றனர். அசாமில் தங்களது இழந்த நிலப்பரப்புகளை முகலாய இராணுவமானது மீண்டும் பெறத் தொடங்கியது. இரண்டாம் மிர் சும்லா அகோம் இராச்சியத்தின் தலைநகரான கர்கவோனை நோக்கி முன்னேறினார். 17 மார்ச்சு 1662 அன்று அதை அடைந்தார். சும்லா வருவதற்கு முன்னதாகவே ஆட்சியாளரான ராஜா சுதம்லா தப்பினார். 82 யானைகள், பணமாக 3 இலட்சம் ரூபாய்கள், 1,000 கப்பல்கள் மற்றும் 173 அரிசிக் கிடங்குகளை முகலாயர்கள் கைப்பற்றினர்.[141]

மார்ச்சு 1663இல் டாக்காவுக்குத் தான் செல்லும் வழியில் இரண்டாம் மிர் சும்லா இயற்கைக் காரணங்களால் மரணமடைந்தார்.[142] சக்ரத்வச் சிங்காவின் எழுச்சிக்குப் பிறகு முகலாயர் மற்றும் அகோமியருக்கு இடையில் சிறு சண்டைகள் தொடர்ந்தன. சிங்கா முகலாயருக்கு மேற்கொண்ட இழப்பீட்டுத் தொகைகளை வழங்க மறுத்தார். போர்கள் தொடர்ந்தன. முகலாயர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர் கொண்டனர். முன்னவர் கான் ஒரு முதன்மையான நபராக உருவாகினார். பலவீனமடைந்து இருந்த முகலாயப் படைகளுக்கு மதுராபூருக்கு அருகில் இருந்த பகுதியில் உணவு வழங்கியதற்காக இவர் அறியப்படுகிறார்.

சராய்காட் யுத்தமானது 1671ஆம் ஆண்டு சண்டையிடப்பட்டது. கச்வக மன்னர் ராஜா முதலாம் ராம் சிங்கால் தலைமை தாங்கப்பட்ட முகலாயப் பேரரசு மற்றும் லச்சித் பர்பூக்கனால் தலைமை தாங்கப்பட்ட அகோம் இராச்சியத்திற்கு இடையே தற்போதைய கௌகாத்தியில் சராய்காட் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அருகில் இந்த யுத்தம் நடைபெற்றது. மிகவும் பலம் குறைவாக இருந்த போதிலும், அகோம் இராணுவமானது தங்களது நிலப்பரப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்தியது, நேரம் வாங்குவதற்காக புத்திசாலித் தனமான தூதரகப் பேச்சு வார்த்தைகளை நடத்தியது, கரந்தடிப் போர் முறை உத்திகள், உளவியல் போர் முறை, இராணுவ உளவியல் தகவல் சேகரிப்பு மற்றும் முகலாயப் படைகளின் ஒற்றைப் பலவீனமான கடற்படைக்கு எதிராக சிறந்த முறையில் மிகு நலம் பெற்றது ஆகியவற்றின் மூலம் முகலாய இராணுவத்தைத் தோற்கடித்தது.

தங்களது பேரரசை அசாமுக்குள் விரிவாக்கம் முகலாயர்களின் கடைசி முக்கியமான முயற்சியில் கடைசி யுத்தமாக சராய்காட் யுத்தம் திகழ்ந்தது. ஒரு பிந்தைய பர்பூக்கன் விலகிச் சென்ற பிறகு கௌகாத்தியைக் குறுகிய காலத்திற்கு முகலாயர்களால் பெற முடிந்த போதிலும், 1682இல் இதகுலி யுத்தத்தில் அகோமியர் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்றனர். தங்களது ஆட்சியின் இறுதிக் காலம் வரை இதே நிலையைப் பேணி வந்தனர்.[143]

சத்னாமி எதிர்ப்பு

Thumb
சத்னாமி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஓர் இராணுவ நடவடிக்கையின் போது தன்னுடைய சொந்த அரசக் காவலர்களை ஔரங்கசீப் அனுப்பி வைத்தார்.

மே 1672இல் சத்னாமி பிரிவினர் முகலாயப் பேரரசின் விவசாய மையப் பகுதிகளில் ஒரு கிளர்ச்சியை ஒருங்கிணைத்தனர். முகலாயப் பதிவுகளின் படி, பற்களற்ற ஒரு மூதாட்டியின் ஆணைகளைப் பின்பற்றி இவர்கள் கிளர்ச்சி செய்தனர். சத்னாமிகள் மொட்டையடித்து, தங்களது புருவங்களையும் கூட நீக்கியிருப்பதற்காக அறியப்பட்டனர். வட இந்தியாவில் பல பகுதிகளில் கோயில்களைக் கொண்டிருந்தனர். தில்லிக்குத் தென்மேற்கே 75 மைல் தொலைவில் ஒரு பெருமளவிலான கிளர்ச்சியை இவர்கள் தொடங்கினர்.[144]

முகலாயத் துப்பாக்கிக் குண்டுகள் தங்களைச் சேதப்படுத்தாது மற்றும் தாங்கள் நுழையும் எந்தப் பகுதியிலும் தங்களால் பல நபர்களாகப் பெருக முடியும் என்று சத்னாமிகள் நம்பினர். தில்லி மீதான தங்களது அணி வகுப்பைச் சத்னாமிகள் தொடங்கினர். சிறிய அளவிலான முகலாயக் காலாட் படைப் பிரிவுகளை எளிதாகத் தோற்கடித்தனர்.[111]

பதிலுக்கு ஔரங்கசீப் 10,000 துருப்புகள், சேணேவி மற்றும் தன்னுடைய அரசக் காவலர்களின் ஒரு பிரிவை உள்ளடக்கிய முகலாய இராணுவத்தை ஒருங்கிணைத்தார். சத்னாமி கிளர்ச்சியை இவரது இராணுவம் ஒடுக்கியது.[144]

பஷ்தூன் எதிர்ப்பு

Thumb
கீழே இருக்கும் மூன்று அரசவையாளர்களுடன் ஓய்வுத் திடலில் ஔரங்கசீப்.

ஆப்கானித்தானின் நவீன கால குனர் மாகாணத்தில் பஷ்தூன் பழங்குடியின மக்களின் பெண்களை முகலாய ஆளுநர் அமீர் கானின் ஆணைப் படி படைவீரர்கள் தவறான முறையில் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போது, கவிஞரும், போர் வீரருமான காபூலின் குசால் கான் கத்தக்[145][146] என்பவரின் கீழ் பஷ்தூன் கிளர்ச்சியானது 1672ஆம் ஆண்டு தொடங்கியது. போர் வீரர்களுக்கு எதிராக சாபி பழங்குடியினங்கள் பதில் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு முகலாயர்கள் பக்கமிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பெரும்பாலான பழங்குடியினங்கள் ஒரு பொதுவான கிளர்ச்சியைத் தொடங்குவதற்கு வழி வகுத்தது. தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சியாக அமீர் கான் ஒரு பெரிய முகலாய இராணுவத்திற்குக் கைபர் கணவாய் வழியாகத் தலைமை தாங்கிச் சென்றார். பழங்குடியினத்தவர்களால் இந்த இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டு, தோற்றோடச் செய்யப்பட்டது. இதில் ஆளுநர் உள்ளிட்ட வெறும் நான்கு பேரால் மட்டுமே தப்பிக்க முடிந்தது.

சொந்த வாழ்க்கை

’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்தது இல்லை.

“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். இஸ்லாத்தினை நன்றாகக் கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழத் த‌வறியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பரச் செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.

1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:

அவுரங்கசீப்பின் உயில்

நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.

தன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312).

என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.

என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்.

குறிப்புகள்

  1. தமிழ்: மாண்புமிகு, ஈகைக் குணமுடைய
  2. தமிழ்: நம்பிக்கைக்குரியவர்களின் தளபதி
  3. பள்ளி: அனாபி

    மேற்கோள்கள்

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.