விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
செஞ்சி (Senji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும்), ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
செஞ்சி
GINGEE | |
---|---|
சிறப்பு நிலை பேரூராட்சி | |
அடைபெயர்(கள்): செஞ்சிக் கோட்டை நகரம் | |
ஆள்கூறுகள்: 12.2522697°N 79.4188343°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
சட்டமன்றத் தொகுதி | செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | பேரூராட்சி |
• மக்களவை உறுப்பினர் | திரு. எம். கே. விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. கே.எஸ்.மஸ்தான் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் பழனி, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.66 km2 (4.50 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 211 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,045 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 04175 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 604 202 |
வாகனப் பதிவு | TN 16 & TN 32 |
ஊராட்சி ஒன்றியம் | செஞ்சி |
சென்னையிலிருந்து தொலைவு | 155 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 40 கி.மீ |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 40 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 54 கிமீ |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 28 கிமீ |
பெங்களூரிலிருந்து தொலைவு | 244 கிமீ |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 67 கிமீ |
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.[2]
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க தேசிங்கு ராஜா ஆட்சிப்புரிந்த செஞ்சிக் கோட்டை உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் சென்னை நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - ஆற்காடு, நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.
செஞ்சி பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே உள்ள தொடருந்து நிலையம், 27 கிமீ தொலைவில் உள்ள திண்டிவனம் ஆகும். இதன் மேற்கே திருவண்ணாமலை 37 கிமீ; வடக்கே சேத்துப்பட்டு 27 கிமீ மற்றும் ஆரணி 54 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
செஞ்சி நகரை பொறுத்தவரை புதுச்சேரி, திண்டிவனம், சென்னை மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 இந்நகரை கடந்து செல்கிறது. அதேபோல் மாநில நெடுஞ்சாலை 4 உம் விழுப்புரம் மற்றும் ஆரணி, ஆற்காடு மற்றும் வேலூர் ஆகிய பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், சேத்துப்பட்டு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கம், பெங்களூரு, புதுச்சேரி, வந்தவாசி, கடலூர், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
வழி | சேருமிடம் |
---|---|
சேத்துப்பட்டு மார்க்கம் | சேத்துப்பட்டு, ஆரணி, ஆற்காடு, வேலூர், சித்தூர், திருப்பதி, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் |
தேசூர் மார்க்கம் | தேசூர், வந்தவாசி, தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம், செய்யாறு செல்லும் பேருந்துகள் |
திண்டிவனம் மார்க்கம் | திண்டிவனம், புதுச்சேரி, மேல்மருவத்தூர், சென்னை, மாதவரம், தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள் |
விழுப்புரம் மார்க்கம் | விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், நன்னிலம், மன்னார்குடி, வேளாங்கண்ணி, விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் |
கீழ்பெண்ணாத்தூர் மார்க்கம் | கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர், தானிப்பாடி, பென்னாகரம், பெங்களூரு செல்லும் பேருந்துகள் |
மேல்மலையனூர் மார்க்கம் | மேல்மலையனூர், சேத்துப்பட்டு, ஆரணி, அவலூர்பேட்டை செல்லும் பேருந்துகள் |
11.66 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,259 வீடுகளும், 27,045 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,365 மற்றும் 303 ஆகவுள்ளனர்.[4]
இவ்வூரின் அமைவிடம் 12.25°N 79.42°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 92 மீட்டர் (301 அடி) உயரத்தில் இருக்கின்றது.
செஞ்சிக் கோட்டையை சிறிய அளவில் கட்டியவர் ஆனந்த கோன் என்பவர். இவர் 11 வயதிலேயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். ஆனந்த கோன், ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ணகோன் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர்.
மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களது ஆட்சி கி.பி. 1190 முதல் கி.பி. 1330 வரை நடைபெற்று வந்திருக்கிறது.[8]
கோனார்களுக்குப் பின்னால், குறும்ப இடையர் ஆண்டனர். கோபலிங்கன் அல்லது கோட்டியலிங்கன் 1320-1330.[சான்று தேவை]
13-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் போசளர் ஆட்சி (ஹோய்சாலர்) நடைபெற்றது.[8]
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர், கிருஷ்ணப்ப நாயக்கரை ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1521 வரை ஆண்ட இந்த கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர்தான் செஞ்சியை ஆண்ட முதல் செஞ்சி நாயக்கர் அரசர் ஆவார்.[8] செஞ்சி நாயக்கர்களின் இறுதி மன்னரான இராமகிருஷ்ணப்ப நாயக்கர் செஞ்சிப் பகுதியை 1649 முடிய அரசாண்டார்.
கி.பி.1649-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் கடைசியாக செஞ்சியை ஆண்டு வந்த நாயக்க அரசர், பீஜப்பூர் படைத்தலைவனால் வெல்லப்பட்டார். கி.பி.1677 வரை பீஜப்பூர் ஆட்சியின் கீழ் செஞ்சி இருந்து வந்தது.[8]
தெற்கு நோக்கி சிவாஜி படையெடுத்து வந்த போது, செஞ்சியை ஆண்டு வந்த பீஜப்பூர் சுல்தானின் கவர்னர் நாசர் முகம்மதுவை சிவாஜியின் படைத்தலைவன் சந்தித்து ஐம்பதனாயிரம் உரூபாய் வருவாயுள்ள பெரிய ஜாகீரைக் கொடுத்து செஞ்சியை விட்டுச் செல்லும்படி தூண்டினான். அவரும் ஜாகீரைப் பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியரிடம் விட்டுச் சென்றுவிட்டார். சிவாஜி செஞ்சியின் ஆட்சியை சம்பாஜியிடம் ஒப்புவித்தார். பின்னர், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முற்றுகைக்குப் பிறகு, மராத்திய மன்னரான ராமராஜா என்பவரிடமிருந்து செஞ்சியின் ஆட்சி பறிக்கப்பட்டு, அங்கு முகலாயர்களின் ஆட்சி ஆரம்பமாயிற்று.[8]
மராத்தியருக்கு எதிரான வெற்றியை முகலாயருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் ஔரங்கசீப் அரசவையில் பெரும்புகழுடன் விளங்கிய தளபதி ஜுல்பிர்கான் ஆவார். செஞ்சியில் முகலாயர் ஆட்சியை நடத்தி வந்த ஔரங்கசீப், பண்டில்கண்டின் தலைவரான சொரூப் சிங்கை செஞ்சியின் ஜாகீர்தாராக ஆக்கி கி.பி.1700ல் அவரிடம் அதன் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் மொகலாய அரசுக்குக் கட்ட வேண்டிய பாக்கித்தொகை பத்து வருடங்களாக கட்டப்படாமலிருந்ததால் 70 இலக்கம் உரூபாய்க்கும் மேலாகப் பாக்கி இருந்தது. அப்போது, கருநாடக நவாபு, இதை தில்லி பாதுஷாவுக்குத் தெரிவித்தார். பல தடவைகள் பாக்கித் தொகையை வசூலிக்க முயன்ற போதெல்லாம், சொரூப் தொகையைக் கட்டாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இதற்கு தில்லியில் முகலாயர் ஆட்சியில் ஏற்பட்டிருந்த சிக்கல்களும், கருநாடக நவாபு பதவி பற்றிய உரிமையில் எழுந்திருந்த சர்ச்சைகளும் காரணமாக இருந்திருக்கலாம். இந்த நிலையில், சொரூப் சிங் கி.பி.1714ன் ஆரம்பத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகக் காலமாகி விட்டார். பின்னர், சொரூப் சிங்கின் மகனான தேசிங்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி செஞ்சிக்கு அரசராக ஆனார். இதை ஆற்காடு நவாபான சாதத் உல்லாகான் ஆட்சேபித்தார். செஞ்சிக்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி தேசிங்கு அரசராக வந்தது, தில்லியில் முகலாயர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பிரதிநிதியாக இங்கு இருந்த ஆற்காடு நவாபு சாதத் உல்லாகானுக்கும் பிடிக்கவில்லை. இதனிடையே ஆற்காடு நவாபு முன்னறிவிப்பு இல்லாமல் செய்த படையெடுப்பில், தேசிங்கும் அவர் படைத்தளபதியான மகமத்கானும் இறந்தனர்.[8]
6-4-1761 முதல் 1780[8]
1799-[8] செஞ்சி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
செஞ்சி என்ற ஊர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சி விஜய நகர அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில் செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது. விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529) நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம் பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர் என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக் கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார். இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம் கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர்களாக இருந்தனர்.
இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர் டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம் செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம் வெங்கடன் செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம் கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள் செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை பாதுஷா பாத் என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல் மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது. சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி சுல்பிகர்கானின் நீண்ட முற்றுகைக்குப்பின் செஞ்சி மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான் சொரூப்சிங் என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின் ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.
சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார். இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார். அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார். இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார். ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆர்க்காட்டு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு அருகில் உண்டாக்கினார்.
கி.பி. 1750இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சுத் தளபதி செஞ்சியைக் கைப்பற்றினார். 1750முதல் 1761வரை செஞ்சிக் கோட்டை பிரெஞ்சுக்காரர் வசம் இருந்தது. 1761இல் ஸ்டீபன் சுமித் என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப் பட்டது. 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியைப் பிடித்தார். ஆனால், மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர் வசம் வந்தது. இதன்பின் செஞ்சிக்கோட்டை அதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது. இன்று செஞ்சிக் கோட்டை ஒரு தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது.
கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண வடிவில் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள இக்கோட்டை கீழ்க்கோட்டை (Lower Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும் பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்கோட்டையினுள் நுழைய ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில், பாண்டிச்சேரி வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன.
திசைகளை வைத்துப் பார்ப்பின் கிருஷ்ணகிரிக் கோட்டை வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும், சந்த்ரயன் துர்க்கம் தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின் உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது. இம்மூன்றில் இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உயரம் 235 மீட்டர் ஆகும்.
கிருஷ்ணகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில் லையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது. மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு பெரிய தானியக் களஞ்சியங்களைக் காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும் இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.
இராஜகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம் சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில் பட்டாபி ராமர் கோவில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள் மராத்தியக் கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண மண்டபம் உள்ளது. 7 அடுக்குகளைக்கொண்ட இக்கட்டடம் மரத்தைப் பயன்படுத்தாது கட்டப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தை அடுத்து வெடிமருந்துச்சாலை, பெரிய தானியக் களஞ்சியம், வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை, வெங்கட ரமணா கோயில் ஆகியவை உள்ளன. வெங்கடரமணா கோவிலின் வேலைப்பாடுமிகுந்த ஒற்றைக் கற்றூண்கள் சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இராஜகிரி மலைக்கோட்டையில் 9 வாயில்கள் உள்ளன. எட்டாவது வாயிலுக்குள் நுழையுமிடத்தில் மரப்பாலம் ஒன்று உள்ளது. உச்சியில் நாணயச்சாலை, தெய்வமில்லாத ரெங்க நாதர் கோவில், இராஜா தேசிங்கு ‘தர்பார்’ மண்டபம், மணிக் கூண்டு ஆகியவற்றைக் காணலாம்.
இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை (Inner Fort) உள்ளது. இக்கோட்டைப் பகுதியில் புதுச்சேரி வாயில், வேலூர் வாயில் ஆகியவை உள்ளன. புதுச்சேரி வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயிலருகிலுள்ள கோட்டைச் சுவரில், ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாகான் கி.பி. 1713இல் தேசிங்குராஜனை வீழ்த்தி இக்கோட்டையைப் பிடித்த வெற்றிச் செய்தியைக் குறிக்கும் ‘பாரசீக மொழிக் கல்வெட்டு’ உள்ளது.
இராஜகிரி மலைக்கோட்டைக்குத் தெற்கில் சந்த்ரயன் துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.
தமிழ்நாட்டில் செஞ்சி கோட்டையைப்போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்னமாகும்.
செஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் தளவனூர் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பஞ்ச பாண்டவர் மலையின் தென் பகுதியில் பல்லவர்காலக் குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600-630) இக்கோவில் குடையப்பெற்றதாக அறியப்படுகிறது. கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரைக் கோவில் சத்ரு மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.
தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மண்டகப்பட்டு குகைக்கோயில் உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர் விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார். மற்றும் செஞ்சியிலிருந்து 23 கிமீ தொலைவில் கெங்கவரம் மலை பகுதியில் துருவன் கோட்டை மற்றும் மொக்கை ஓடை அருவியும் உள்ளது.25 கி.மீ தொலைவில் கல்யாணம் பூண்டி கிராமத்தில் ஒரு கொத்தளமும், அரங்கநாதசுவாமி கோயிலும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.