செங்கல்பட்டு
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
செங்கல்பட்டு (ஆங்கிலம்: Chengalpattu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியாகும். 2019-ஆம் ஆண்டு சூலை மாதம் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கற்பட்டு,செங்கழுநீர்பட்டு | |
---|---|
![]() செங்கல்பட்டு புறநகரில் உள்ள கொலவாய் ஏரி | |
அடைபெயர்(கள்): செங்கை,ஏரி நகரம் | |
ஆள்கூறுகள்: 12.681900°N 79.988800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
பகுதி | பல்லவ நாடு, தொண்டை நாடு |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | செங்கல்பட்டு நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | க. செல்வம் |
• சட்டமன்ற உறுப்பினர் | ம. வரலட்சுமி |
• மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 16 km2 (6 sq mi) |
ஏற்றம் | 66 m (217 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 65,695 |
• அடர்த்தி | 4,100/km2 (11,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 603 001, 603 002, 603 003, 603 004. |
தொலைபேசிக் குறியீடு | +91-44 |
வாகனப் பதிவு | TN-19 |
சென்னையிலிருந்து தொலைவு | 60 கி.மீ. (37 மைல்) |
காஞ்சியிலிருந்து தொலைவு | 42 கி.மீ. (26 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 109 கி.மீ. (68 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 269 கி.மீ. (167 மைல்) |
இது மாநிலத் தலைநகரான சென்னைக்குத் தென்மேற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 45-இல் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் நுழைவாயிலான, மீனம்பாக்கத்திலிருந்து 41 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆனது, தெற்கு ரயில்வேயின் முக்கிய தொடருந்து சந்திப்புகளில் ஒன்றாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த நகரத்தில் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றமும், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் உள்ளன.
இந்நகரின் வழியாக பாலாறு செல்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரில் 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். தற்போதைய நிலவரப்படி சுமார் 85,000 மக்கள் இங்கு வசிக்கலாம்.
செங்கல்பட்டு நகராட்சி 24 ஆகஸ்ட் 2021 அன்று அஞ்சூர், குன்னவாக்கம், திம்மாவரம், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், சிங்கபெருமாள்கோயில், புலிப்பாக்கம், வீராபுரம், பட்டரவாக்கம், பழவேலி, செட்டிப் புண்ணியம், திருமணி ஆகிய கிராமங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மூலம்
முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.
வரலாறு
செங்கல்பட்டு முன்பு விஜயநகர மன்னர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் பொ.ஊ. 1565இல் நடந்த தாலிகோட்டா போரில், தக்காண சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட செங்கல்பட்டு கோட்டை, அதன் பக்கவாட்டில் உள்ள ஏரி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
பொ.ஊ. 1639 ஆம் ஆண்டில் ஓர் உள்ளூர் ஆளுநர் இந்த மன்னர்களுக்கு உட்பட்டு, ஒரு கடற்கரை நிலத்தைத் தற்போது இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். இது மதராசு நகரின் முக்கிய இடமாக மாறியது. செங்கல்பட்டு 1751 இல் பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு, 1752 ஆம் ஆண்டில் ராபர்ட் கிளைவ் என்பவரால் திரும்பப் பெறப்பட்டது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.7°N 79.98°E ஆகும்.[1] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
மதவாரியான கணக்கீடு | ||||
---|---|---|---|---|
மதம் | சதவீதம்(%) | |||
இந்துக்கள் | 85.33% | |||
முஸ்லிம்கள் | 9.69% | |||
கிறிஸ்தவர்கள் | 6.48% | |||
பௌத்தர்கள் | 0.13% | |||
சைனர்கள் | 0.13% | |||
சீக்கியர்கள் | 0.02% | |||
மற்றவை | 1.79% | |||
சமயமில்லாதவர்கள் | 0.02% |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, செங்கல்பட்டில் இந்துக்கள் 85.33%, முஸ்லிம்கள் 9.69%, கிறிஸ்தவர்கள் 6.48%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.13%, சைனர்கள் 0.13%, 1.79% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.02% பேர்களும் உள்ளனர்.
கல்வி
இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | ம. வரலட்சுமி |
மக்களவை உறுப்பினர் | க. செல்வம் |
செங்கல்பட்டு நகராட்சியானது செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இதற்கு முன்பு இந்நகரம் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருந்தது. 1951 முதல் 2004 வரை செங்கல்பட்டு ஒரு மக்களவைத் தொகுதியாக இருந்தது. பின்னர் தொகுதி மறு சீரமைப்பினால் செங்கல்பட்டு என்ற பெயரை மாற்றி காஞ்சிபுரம் தொகுதி உருவாக்கப்பட்டது. புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவை ஆகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த க. செல்வம் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த ம. வரலட்சுமி வென்றார்.
போக்குவரத்து
செங்கல்பட்டு நகராட்சியானது சாலை மற்றும் தொடருந்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை விமான நிலையம், வடக்கே 38 கி.மீ தொலைவில், ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய அளவில் அமைந்துள்ளது. மேல்மருவத்தூர், செங்கல்பட்டிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 69 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தை அடைய, ஜி. எஸ். டி சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 45 வழியாகச் சுமார் 1.3 மணி நேரம் ஆகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், இந்நகரின் வழியாகச் செல்கிறது. ஆனால் பெரும்பாலான பேருந்துகள் இந்நகரின் உள்ளே வராமல், புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது.

செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையமானது முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பெரும்பாலான தொடருந்துகள் இங்கு நின்று செல்கின்றன. இங்கிருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு தொடருந்து இணைப்பு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னைக் கடற்கரை வரை பல தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து இங்கும் புறநகர் தொடருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு தொடருந்து என்ற வகையில் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சில:
தடம் எண் | புறப்படும் இடம் | சேரும் இடம் | வழி |
---|---|---|---|
82C | செங்கல்பட்டு | திருவள்ளூர் | திருப்பெரும்புதூர் |
108 B | செங்கல்பட்டு | மாமல்லபுரம் | திருக்கழுகுன்றம் |
108 | கல்பாக்கம் | சென்னை | செங்கல்பட்டு, தாம்பரம் |
157 Cut | கல்பாக்கம் | காஞ்சிபுரம் | செங்கல்பட்டு |
157 | கல்பாக்கம் | வேலூர் | செங்கல்பட்டு, காஞ்சிபுரம் |
157 M | மாமல்லபுரம் | செய்யாறு | செங்கல்பட்டு, காஞ்சிபுரம் |
164 C | கல்பாக்கம் | சித்தூர் | செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் |
144 C | செங்கல்பட்டு | சித்தூர் | காஞ்சிபுரம், இராணிப்பேட்டை |
197 UD (SETC) | கல்பாக்கம் | நாகர்கோவில் | செங்கல்பட்டு, திருச்சி |
831 UD (SETC) | தாம்பரம் | பெங்களூர் | செங்கல்பட்டு, வேலூர் |
212 H | கல்பாக்கம் | திருப்பதி | செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி |
EXP | கல்பாக்கம் | திருச்சி | செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் |
471 UD (SETC) | கல்பாக்கம் | கோவை | செங்கல்பட்டு, திண்டிவனம், சேலம் |
834 UD (SETC)/ 444K EXP | கல்பாக்கம் | பெங்களூர் | செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, ஒசூர் |
செங்கல்பட்டு நகரத்தை நோக்கி வரும் சில எம்.டி.சி பேருந்துகள்.:
தடம் எண் | புறப்படும் இடம் | சேரும் இடம் | வழி |
---|---|---|---|
500 | தாம்பரம் | செங்கல்பட்டு | வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் |
500 Dlx | தி. நகர் | செங்கல்பட்டு | சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் |
500A | குரோம்பேட்டை | செங்கல்பட்டு | தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் |
500B A/C | பிராட்வே | செங்கல்பட்டு | சென்ட்ரல், டி.வி.எஸ், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் |
கொலவை ஏரி

மதுரந்தகம் ஏரிக்குப் பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியாக கொலவை ஏரி உள்ளது. கொலவை ஏரி வற்றாத தன்மையுடைய ஏரியாகும். ஆனாலும் கோடைகாலத்தில் வறண்டு போனதாக பதிவுகள் உள்ளன. சென்னையில் உள்ள ஏரிகள் வறண்டு போகும் போது, இது சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு கூட தண்ணீரை வழங்குகிறது. செங்கல்பட்டு விரைவாக நகரமயமாக்கப்பட்டதால் ஏரி தற்போது மாசுபட்டு வருகிறது. இந்த ஏரியில் அதிகாலை சூரிய உதயமும், சந்திரன் ஏரிக்கு மேலே அதன் நீரின் மேல் இரவில் வருவதும், கண்களுக்கு அழகாக இருக்கும். செங்கல்பட்டு நிலையத்திலிருந்து பரணூருக்கு ரயிலில் செல்லும் போது, ஏரியின் அழகை காண முடியும்.
தொழிற்சாலைகள்
சென்னைக்கு நகரத்தின் அருகாமையில் இருப்பதாலும், தொடருந்து மற்றும் சாலை வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல நன்கு போக்குவரத்து வசதிகள் இருப்பதாலும், செங்கல்பட்டுவைச் சுற்றி பல நவீன தொழிற்சாலை உள்ளன.
டெக் மஹிந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ, போர்டு, ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், சேம்சங், இன்ஃபோசிஸ், பெப்சி, டிவிஎஸ், சீமென்ஸ், நிசான் ரெனால்ட், அப்பல்லோ டயர்ஸ், மஹிந்திரா ஆர் & டி ஆகிய தொழிற்சாலைகள் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகள் ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.