From Wikipedia, the free encyclopedia
மனித சமிபாட்டு மண்டலமானது, மனித இரையகக் குடற்பாதையுடன், மேலதிகமாக சில உடல் உறுப்புக்கள் இணைந்து, சமிபாடு என்னும் உடலியக்கச் செயற்பாட்டைச் செயற்படுத்துவதற்கான ஒரு தொகுதியாகும்.[1] பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது.[1] இவற்றுடன் மேலதிக உறுப்புக்களான நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், கணையம், கல்லீரல், பித்தப்பை ஆகிய இணைந்து மனித சமிபாட்டு மண்டலத்தை உருவாக்குகிறது[2] இம்மண்டலத்தில் சமிபாடு என்பது பல நிலைகளில் நிகழ்கிறது. சமிபாட்டுச் செயல்முறை வாயில் உணவு அரைக்கப்படுவதிலிருந்து தொடங்கி, உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடலினுள் அகத்துறிஞ்சப்பட்ட பின்னர், குதம் வழியாக கழிவுகள் வெளியேறுவதுவரை நடைபெறுகிறது.
மனித சமிபாட்டு மண்டலம் | |
---|---|
மனித சமிபாட்டு மண்டலம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Systema digestorium |
MeSH | D004064 |
TA98 | A05.0.00.000 |
TA2 | 2773 |
TH | TH {{{2}}}.html HH3.04 .{{{2}}}.{{{3}}} |
FMA | 7152 |
உடற்கூற்றியல் |
உண்ணப்படும் உணவு உமிழ்நீருடன் கலக்கப்படவேண்டும் என்பதற்காக வாய்க்குள் பற்களால் நன்றாக மெல்லப்படுகிறது. நாக்கால் நன்றாகக் கலக்கப்படுகிறது. உணவுப்பொருள்களை கிழித்து அரைத்து உண்ண பற்களும், வாய்த் தசைகளும் உதவுகின்றன. உமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ்நீர் மூலம் சமிபாட்டு நடைமுறைகள் ஆரம்பமாகின்றன. வாய்க்குழியில் உணவுடன் கலக்கச் சுரக்கப்படும் உமிழ்நீரானது நாளமுள்ள சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படுகிறது. வினையூக்க நொதியமான அமைலேசு என்ற நொதியம் உண்ணும் உணவின் மீது முதலாவது வினையைத் தொடங்குகிறது. இதைத்தவிர பிரதான உமிழ்நீர் சுரப்பிகளால் இலிப்பேசு என்ற சமிபாட்டு நொதியும் சுரக்கப்படுகிறது. அத்துடன் உமிழ்நீரானது உணவை வழுவழுப்பாக்கி, கவளங்களாக மாற்ற உதவும். இதன் பின்னர் சிறுசிறு கவளங்களாக விழுங்கப்படும் உணவு, உணவுக்குழாய் வழியாக, ஒரு அலை இயக்க அசைவான சுற்றிழுப்பசைவு மூலம் இரைப்பையைச் சென்றடைகிறது. இரைப்பையினுள் இருக்கும் பதார்த்தங்களால், உணவு மேலதிக சமிபாட்டுக்கு உட்படுகிறது. பின்னர் தொடர்ந்து முன்சிறுகுடலினுள் (en:Duodenum) செல்லும் உணவு, கணையத்தால் சுரக்கப்படும் பல்வேறு நொதியங்களுடன் கலக்கப்பட்டு சமிபாடு நிகழ்கிறது. அத்துடன் பித்தப்பையால் சுரக்கப்படும் பித்தநீரும், முன்சிறுகுடலை அடைந்து சமிபாட்டுக்குத் தேவையான சாதகமான காரகாடித்தன்மையை உருவாக்கிக் கொடுக்கிறது. தொடர்ந்து சிறுகுடலின் அடுத்த பகுதிகளை (en:Jejunum and en:Ileum) அடையும் உணவு அங்குள்ள நொதியங்களுடன் கலக்கப்பட்டு சமிபாட்டுக்கு உட்படுவதுடன், சமிபாட்டின் மூலம் இறுதியாக உருவாகும் எளிய மூலக்கூறுகள் குருதித் தொகுதியினுள் அகத்துறிஞ்சப்படுகின்றன. பெரும்பாலான உணவுப் பதார்த்தங்கள் சிறுகுடலிலேயே அகத்துறிஞ்சப்படுகின்றன. அதைத் தொடர்ந்து பெருங்குடலினுள் செல்லும் பகுதியிலிருந்து நீர் மற்றும் கனிமச் சத்துகள் அகத்துறிஞ்சப்படுகின்றன. மிகுதியான கழிவுப்பொருட்களும், சமிபாட்டுக்கு உட்படாத பதார்த்தங்களும் குதம் வழியாக மலமாக வெளியேற்றப்படும்.
இரையகக் குடற்பாதையில் நிகழும் உணவின் சமிபாட்டில், இரையகக் குடற்பாதை தவிர்ந்த ஏனைய பல உடல் உறுப்புக்கள் மற்றும் சில உடற் கூறுகள் இடம்பெறுகின்றன. கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் முதலியன துணை சமிபாட்டு உறுப்புக்கள் எனப்படுகின்றன. உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாக்கு, பற்கள் மற்றும் குரல்வளையை மூடியிருக்கும் குரல்வளை மூடி, ஆகியவை பிற உடற்கூறுகளாகும்.
மனித இரையகக் குடற்பாதை வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது.[1] வளர்ந்த உயிருள்ள மனித ஆணில் இரையகக் குடற்பாதை 5 மீட்டர் (16 அடிகள்) வரை நீளமுள்ளதாகவும், தசை முறுக்கு இல்லாதவிடத்து இந்த நீளம் 9 மீட்டர் (30 அடிகள்) வரையும் இருக்கும்.[3]. குடற்பாதையின் பகுதிகள் முளைய விருத்தியில் எவ்வாறு தோன்றியது என்பதன் அடிப்படையில், இப்பாதை முன்குடல், நடுக்குடல், பின்குடல் எனவும் பிரித்தறியப்படும்.
சமிபாட்டின் பெரும்பகுதி சிறுகுடலில் நிகழ்கிறது. பிரதானமான சமிபாட்டு உறுப்பு இரைப்பை ஆகும். இரைப்பையின் சளிப்படலமானது பல மில்லியன் எண்ணிக்கையில் இரைப்பைச் சுரப்பிகளைக் கொண்டிருக்கும். இவற்றின் சுரப்புக்கள் சமிபாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானவையாகும்.
சமிபாட்டு மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய பகுதி பெருங்குடல் ஆகும். இங்கு நீர் மீள் உறிஞ்சப்படுவதுடன், மீதமுள்ள கழிவுப்பொருட்கள் மலமாக நீக்கப்படும்வரை, இந்தப் பகுதியில் சேமிக்கப்படும்.[4]. அதனால் இந்தப் பகுதி கழிவு நீக்க மண்டலத்தின் பகுதியாகவும் கொள்ளப்படும்.
பெரும்பாலான முதுகெலும்பிகளில் நடைபெறும் செரித்தல் செயல்முறையை கீழ்கண்ட நான்கு படிநிலைகளில் கூறமுடியும்.
வாய் என்ற உறுப்பு உதடுகளில் ஆரம்பமாகி தொண்டைவரை நீண்டுள்ளது. பற்கள், ஈறுகள், அண்ணம், கடின அண்ணம், மென் அண்ணம், நாக்கு, நாக்கிலுள்ள தசைகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள், தொண்டைக்குழி முதலியன வாயிலுள்ள பிற உறுப்புகளாகும்.வாயும், வாய்க்குழியும் உணவை உண்பதற்கும் பேசுவதற்கும் உதவுகின்றன. இப்பணிகளுக்கு ஏற்றாற்போல இங்குள்ள உறுப்புகள் தகவமைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் திரவப்பொருட்களை உறிஞ்ச உதடுகள் பயன்படுகின்றன. பாலூட்டிகளில், சமிபாட்டுக்கான தொடக்கநிலை வாயிலேயே நடைபெறுகின்றது. மாந்தர்கள் உணவை வாயில் இட்டவுடன் இந்த சமிபாடு ஆரம்பமாகின்றது. முதலில் உணவானது பற்களால் மெல்லப்பட்டு சிறு துணிக்கைகளாக உடைக்கப்படுகின்றது. இதில் உதவுவதற்கு நாக்கு உணவை பிரட்டிக் கொடுக்கிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் உணவை ஈரப்படுத்திக் கொடுப்பதுடன், உமிழ்நீரில் உள்ள அமைலேசு போன்ற நொதியானது மாப்பொருளை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்துகின்றது. பல்லால் மெல்லும்பொழுது மேலும் உமிழ்நீர் சுரக்கின்றது. ஈரப்படுத்திய உணவு சிறு கவளங்களாக தொண்டை வழியாக கீழிறங்கி உணவுக்குழாயை/களத்தை அடைகின்றது.
நமது உடலின் வாய்க்குழியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மூன்று சோடி பிரதான உமிழ்நீர் சுரப்பிகளும் 800 முதல் 1000 வரை நுண்ணிய உமிழ்நீர்ச் சுரப்பிகளும் லாணப்படுகின்றன, இவை யாவும் வாய்க்குழிப்பகுதியை எப்போதும் ஈரமாக வைத்துக் கொள்ளவும் பற்கள் மற்றும் ஈறுகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், வாயில் அரைக்கப்படும் உணவை செரிக்கச் செய்யவும் உமிழ்நீரைச் சுரக்கின்றன. இவையில்லாவிட்டால் பேச்சு என்பதே இயலாததாகிவிடும் [5]. பிரதானச் சுரப்பிகள் அமைத்தும் புறச் சுரப்பிகளாகும். இவை அமைத்தும் வாயில் திறக்கின்றன. உமிழ்நீர்ச் சுரப்பிகளில் மிகப்பெரியது பரோட்டிட் சுரப்பியாகும். இது பெரும்பாலும் சீரம் சார்ந்த திரவத்தையே சுரக்கிறது. தாடைக்கு அடியில் ஒரு சோடி உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகின்றன, இவை கீழ்தாடை கீழ் உமிழ்நீர் சுரப்பி எனப்படுகிறது. இதைத்தவிர நாக்கின் அடியில் ஒரு சோடி உமிழ்நீர் சுரப்பிகளும் காணப்படுகின்றன.
மூன்று சோடி உமிழ்நீர் சுரப்பிகளும் தினந்தோறும் ஏராளமான உமிழ்நீரைச் சுரக்கின்றன. இவ்வுமிழ்நீரில் டயலின்
அல்லது ஆல்பா அமைலேசு என்ற நொதியும். நாக்குச்சுரப்பிகளால் லைப்பேசு என்ற நொதியும் சுரக்கப்படுகின்றன.
உமிழ்நீரில் உள்ள இந்நொதிகள் பல்வேறு செயல்கலைச் செய்கின்றன.
1. வாயையும் பற்களையும் இவை பாதுகாக்கின்றன[6].
2. வாயை ஈரமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
3. உதடுகளும் நாக்குகளும் அசையவும், சுவை அரும்புகளைத் தூண்டவும், உணவை வழவழப்பாகவும் இவை உதவுகின்றன.
4. உணவிலுள்ள மாவுச் சத்தை சிதைக்க உதவுகின்றன.
நாக்கு என்பது சுரப்பிகளும் நிணநீர்த் திசுக்கள், கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தசைப்பகுதியாகும். வாய்க்குழியிலுள்ள இரண்டு பாகம் முன்பகுதி என்றும் தொண்டைக் குழியில் உள்ள ஒரு பாகம் பின்பகுதி என்றும் இரண்டு பகுதிகளாக நாக்கு பிரிக்கப்படுகிறது. முன்பகுதி தடித்த சளிச்சவ்வால் ஆனது. இங்கு சுரப்பிகள் ஏதும் இல்லை. பின் பகுதியில் சளிச்சுரப்பிகள், சீரச்சுரப்பிகள் முதலியன காணப்படுகின்றன. உணவைச் சுவைக்கவும், விழுங்கவும், பேசவும் நாக்கு உதவுகிறது.
உணவைக் கிழித்து, அரைத்து உண்பதற்கு பயன்படுவன பற்களாகும். இவை எலும்பைவிடக் கடினமானவை. ஒவ்வொரு தாடையிலும் 16 பற்கள் என மனிதனுக்கு மொத்தம் 32 பற்கள் காணப்படுகின்றன. செய்யும் வேலையைப் பொறுத்து பற்களின் அமைப்பும் அவற்றின் பெயரும் மாறுபடுகின்றன. வெட்டும் பற்கள், கிழிக்கும் பற்கள், அரைக்கும் பற்கள் என அவைப் பெயரிடப்பட்டுள்ளன.
வாய்க்குழிக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் அமைந்திருப்பது தொண்டைக்குழியாகும். மூக்குத் தொண்டைக்குழி, வாய்த்தொண்டைக்குழி, பெருமூச்சுக்குழாய்த் தொண்டைக்குழி என்று மூன்று வகையாக இதைப் பிரிப்பர்.
தொண்டைக் குழியின் கீழ்ப்பகுதியில் உணவுக்குழாய் ஆரம்பமாகிறது. இது கீழ்நோக்கிச் சென்று மார்புக் குழியினை தாண்டி உதரவிதானத்திற்குள் புகுந்து பின்னர் இரைப்பையாக மாறுகிறது. கழுத்துப்பகுதி, மார்புப்பகுதி, வயிற்றுப் பகுதி என மூண்று பகுதிகளாக உணவுக் குழாய் பிரிக்கப்படுகிறது. இந்த உணவுக்குழாய்/உணவுக்குழல்/களம் சுமார் 20-30 செ.மீ நீளமுள்ளது. இந்த களத்தின் தசைகள் சுருங்கியும் விரிந்தும் ஏற்படுத்தும் சுற்றிழுப்பசைவு எனப்படும் அலை போன்ற அசைவுகளால் உணவானது உணவுக்குழாயில் நகர்ந்து இரைப்பையை அடைகின்றது.
இரைப்பை தசையினால் ஆன ஒரு பை போல உள்ளது. இதன் மேல் கீழ் முனைகள் அசைவற்று பிணைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகள் யாவும் நன்கு அசையக்கூடிய வகையில் தகவமைக்கப்பட்டுள்ளன. விலா எலும்புகளுக்குள் மறைந்து காணப்படும் இரைப்பை நபருக்கு நபர் அளவில் மாறுபடுகிறது.பொதுவாக இரைப்பை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
இரைப்பையில் சமிபாட்டு நொதியங்கள் சில உருவாக்கப்படுகின்றன. உணவை உடைக்கும் வேலை வயிற்றிலும் தொடர்கின்றது. இங்கே வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து உணவைக் கடைவதன் மூலம் அதனை உடைத்து நொதியத்துடன் கலக்குகின்றது. அத்துடன் அங்கே சுரக்கப்படும் அமிலத் தன்மையான நீரானது அங்கு சுரக்கப்படும் நொதியங்கள் சிக்கலான மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைத்து எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. அத்துடன் விட்டமின் B -12, அல்ககோல் போன்ற சில பொருட்கள் இந்த இரைப்பைப் பகுதியிலேயே நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.
மண்ணீரல் | |
---|---|
மண்ணீரல் | |
பாலூட்டி விலங்குகளில் காணப்படும் முக்கியமான உள்ளுறுப்பு மண்ணீரலாகும். வயிற்றின் இடதுபகுதியில் இது உள்ளது. பழைய குருதிச் சிவப்பணுக்களைப் உடைத்து அகற்றுவது இதன் பணியாகும். குருதி உயிரணுக்கள் உடைக்கப்படும்போது பிலிருபின் என்னும் ஒரு நிறமியும், இரும்பும் உருவாகும். பிலிருபின் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே பித்தநீர் உருவாக்கத்தில் பங்கெடுக்கும். இரும்பானது எலும்பு மச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதிய குருதி உயிரணுக்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கும்.[7] நோய் எதிர்ப்பாற்றல் முறைமையிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது[8]. மருத்துவத்தில், மண்ணீரலானது நிணநீர்த்தொகுதியைச் சார்ந்ததாகவே கொள்ளப்பட்டாலும், இதன் முழுமையான தொழிற்பாடு இன்னமும் அறியப்படவில்லை.[9]
மண்ணீரலில் சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ்[10] என இருவகை நிணநீர் இழையங்கள் உண்டு. இவையே உடம்பின் எதிர்ப்புசக்திக்கு மிகவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இரைப்பையையும், சிறுகுடலையும் இணைக்கும் வளைந்த அமைப்பாகும். இதன் வளைந்த பகுதிக்குள் கணையம் அல்லது சதையி காணப்படும். இந்த கணையத்திலிருந்து சுரக்கப்படும் கணையநீரில் பல மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைக்கக்கூடிய நொதிகள் காணப்படும். அத்துடன் பித்தப்பையினால் சுரக்கப்படும் பித்தநீரானது அங்கே தொழிற்படும் நொதியங்களுக்கு உதவுவதற்காக உணவை காரத் தனமை உள்ளதாக மாற்றும்.
முன்சிறுகுடல் நான்கு பகுதிகளாக உள்ளது, ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு திசையை நோக்கிச் செல்கின்றன. சுமார் 5 செ.மீ நீளம் கொண்ட முதல்பகுதி பின்பக்கம் நோக்கிச் செல்கிறது. இரண்டாம் பகுதி வலது சிறுநீரகத்தை நோக்கி கீழிறங்குகிறது. மூம்றாம் பகுதி கனையத்தின் கீழ்விளிம்பை தொடர்பு கொள்ளும் வகையில் வளைந்து முன்நோக்கி வருகிறது. நான்காம் பகுதியானது மகாதமனியை ஒட்டி மேலே சென்று இதன்முடிவில் சிறுகுடல் ஆரம்பமாகிறது.
சமிபாட்டில் கணையம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. சமிபாட்டுக்குத் தேவையான நொதியங்களைச் சுரப்பதுடன், சமிபாட்டுடன் தொடர்புடைய வேறு சில உடலியக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கான இயக்குநீர்களையும் சுரக்கின்றது.
உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மையான உறுப்புகளில் ஒன்று கல்லீரலாகும். மனிதர்களின் வயிற்றில் வலது கீழ்புறத்தில் ஆப்பு வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு மிகப்பெரியச் சுரப்பியாகும். உடலின் உட்சூழலைக் கட்டுபடுத்தி அதைச் சமன் செய்யும் பணியை இது கவனிக்கிறது. இரத்த ஓட்டத்திலுள்ள சத்துப்பொருட்களின் அளவையும் இதுவே தீர்மானிக்கிறது. மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து முதலியனவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் கல்லீரல் பெரும்பங்கு வகிக்கிறது. ஆற்ற்லைச் சேமித்து தேவையான சமயத்தில் உடலுக்கு அளிப்பதும் கல்லீரலேயாகும்.
பித்தப்பையானது கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் முன்சிறுகுடலை அடைவதற்கு முன்னர் சேமித்து வைக்கும் பகுதியாகும்.
சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இரைப்பைக்கும் பெருங்குடலுக்கும் இடையில் சிறுகுடல் அமைந்துள்ளது. முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பெரும்பாலான உணவு இறுதியாக உறிஞ்சப்படுகிறது, சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் குடல் நீட்சி அமைப்புக்கள் உணவிலிருக்கும் ஊட்டசத்துகளையும் கனிமங்களையும் உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன[11]. இந்த சிறுகுடல் அல்லது இரையகக் குடல் பாதையிலேயே அதிகளவில் உறிஞ்சல் நடைபெறுகின்றது.
மனிதர்களின் பெருங்குடல் அவர்களின் இடுப்புச் சரிவின் வலது புறத்தில் இடுப்புக்கு கீழே அல்லது கீழிருந்து தொடங்குகிறது, இலியம் எனப்படும் சிறுகுடலின் இறுதிப்பகுதியில் குடல்களிடை தடுக்கிதழ் வழியாக இணைகிறது. இங்கிருந்துதான் சீக்கம் எனப்படும் பெருங்குடல் பகுதி ஆரம்பமாகிறது. எனவே பெருங்குடலின் ஆரம்பப்பகுதியான சீக்கத்தை ஆரம்பப் பெருங்குடல் என்றும் அழைக்கலாம். ஆரம்பப் பெருங்குடல் பை போன்ற தோற்றத்துடன் அகலமாக விரிந்து கீழ்வயிற்றுப் பகுதியின் வலது கீழ்முனைப்பகுதியில் காணப்படுகிறது. ஆரம்பப் பெருங்குடலின் மேற்பகுதியிலிருந்து ஏறுபெருங்குடல் தொடங்குகிறது. ஏறு பெருங்குடல் முடிவடையும் இடத்தில் ஆரம்பித்து குறுக்கு வாட்டில் பாய்ந்து செல்லும் பகுதி குறுக்குப் பெருங்குடல் எனப்படுகிறது. பின்னர் இது இடுப்புக் குழியில் கீழிறங்கி மலக்குடலாக நீட்சியடைந்து இறுதியாக குதக்கால்வாயில் முடிவடைகிறது [12]. மொத்தத்தில் மனிதர்களின் பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும். குடலிறக்கப்பாதையின் மொத்த நீளத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும் [13].
மேலதிக நீரானது பெருங்குடல் பகுதியில் உறிஞ்சப்படும். இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இலியமும் ஆரம்பப் பெருங்குடலும் இணையும் இடத்தில் ஆரம்பமாகி மேல் நோக்கி செல்வது ஏறு பெருங்குடலாகும். ஏறுபெருங்குடல் முடிவடையும் இடத்தில் கல்லீரல் வளைவில் ஆரம்பித்துகுறுக்கு வாட்டில் சென்று மண்ணிரல் வளைவு வரை செல்வது குறுக்குப் பெருங்குடலாகும். மண்ணிரல் வளைவில் ஆரம்பமாகி இடுப்பு விளிம்பு வரை நீண்டிருப்பது இறங்கு பெருங்குடலாகும். இதன் முடிவில் ஆரம்பமாகி மலக்குடலின் தொடக்கம் வரை நீண்டிருப்பது இடுப்புப் பெருங்குடல் எனப்படுகிறது.
மலக்குடல் மலத்தால் நிரம்பியதும் மலம் வெளியேற்றும் தசைகள் இயங்குகின்றன. நரம்பிழைகளால் தூண்டப்பட்டு சுருக்குத்தசை தளர்ந்து கழிவுப் பொருட்கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன. மலம் வெளியேற்றப்படுவதில் மலக்குடலின் அழுத்தம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.