கல்லீரல்

From Wikipedia, the free encyclopedia

கல்லீரல்

கல்லீரல் (English: liver) (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில விலங்குகளின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்[1]. மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது, வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன[2].

Thumb
கல்லீரல்
விரைவான உண்மைகள் Liver, அடையாளங்காட்டிகள் ...
Liver
Thumb
வயிற்றறையில் மனிதக் கல்லீரல்
Thumb
மனிதனின் கல்லீரல் அமைவிடம் (சிவப்பு) இயங்குபடம்
அடையாளங்காட்டிகள்
MeSHD008099
TA98A05.8.01.001
TA23023
FMA7197
உடற்கூற்றியல்
மூடு
Thumb
கல்லீரல்
Thumb
கல்லீரல் வயிற்றறையினுள் இரைப்பையின் வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு

வளர்சிதை மாற்றம், கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது[2]. கல்லீரல் ஒரு சுரப்பியாகும். ஒரு துணை செரிமான சுரப்பியாக கல்லீரல் பித்தநீரை உருவாக்குகிறது, பால்மமாக்குதல் வழியாகக் கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பை, கல்லீரலின் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவால் ஆன ஒரு சிறிய பையாகும். கல்லீரல் மூலம் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் இங்கு சேமிக்கப்படுகிறது[3].

எப்பாட்டோசைட் எனப்படும் கல்லீரல் செல்லால் கல்லீரலின் மிக உயர்ந்த சிறப்பு திசு ஆக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பலமுக்கியமான உயர்-அளவு உயிர்வேதியியல் வினைகளை இது ஒழுங்குபடுத்துகிறது [4].கல்லீரலின் மொத்தச் செயல்பாடுகளின் எண்ணிக்கைத் தொடர்பான மதிப்பீடுகள் வேறுபடுகின்றன, ஆனால் பாடநூல்கள் பொதுவாக 500 செயற்பாடுகளை மேற்கோள் காட்டுகின்றன [5].

மீளுருவாக்கம்

கல்லீரல், தான் இழந்த இழையங்களை இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது[6][7]. சிலவகையான குருத்தணுக்கள் இவ்வுறுப்பில் காணப்படுவதே இவ்வியல்புக்குக் காரணமாகும்[8] ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, ஈடுசெய் வளர்ச்சி (Compensatory growth) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது[9]. ஒரு உறுப்பில் உண்மையான மீளுருவாக்கம் நடைபெறுமாயின், அதன் மூலமான தொழில்கள் நடைபெறுவது மீளப்பெறப்படுவதுடன், அதன் அமைப்பும் பழைய நிலைக்கு மீளும். ஆனால் கல்லீரலில் ஒரு சோணை அகற்றப்படுமாயின், அது மீளவும் உருவாவதில்லை. ஆனால் அதன் தொழில்கள் ஈடுசெய்யப்படும் வளர்ச்சி நடைபெறும்.

மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு உதவும் வகையில், கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன[10][11]

அமைப்பு

மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும். கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும்[12]. மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரலே ஆகும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.

Thumb
மனித கல்லீரல் எட்டு துணைப்பிரிவுகளுடன் இயங்குபடம்

கல்லீரல் வலது இடது இழைகள் என இரண்டு பங்காகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரு இழைகளும் மேலும் எட்டுப் பகுதி இழைகளாக அல்லது துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது.இவை ஒவ்வொன்றும் திசுவியல் அலகுகளான அலகிழைகளால் ஆக்கப்பட்டுள்ளன. எப்பாட்டிக் தமனி மற்றும் போர்டல் சிரை என்ற இரண்டு பெரிய இரத்த நாளங்களுடன் கல்லீரல் இணைக்கப்பட்டுள்ளது. போர்டல் பாதை திசுக்களே கல்லீரலின் முக்கிய இணைப்புத்திசுவாக விளங்குகிறது. எப்பாட்டிக் தமனி ஆக்சிசன் நிறைந்த இரத்தத்தை பெருந் தமனியிலிருந்து கொண்டு செல்கிறது. இதேபோல போர்டல் சிரையானது இரைப்பைக் குழாயிலிருந்தும், மண்ணீரல் மற்றும் கணையத்தில் இருந்தும் செரிமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதனால் உடலின் பொது இரத்த ஓட்ட சுழற்சிக்குள் காணப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களின் அளவினை தீர்மானிப்பதில் கல்லீரல் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

கல்லீரலின் செயல்பாடுகள்

மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது [13]. பித்தநீர் சுரக்கவும், ஈமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்டிரால், கிளைகோஜன் வடிவில் காபோவைதரேட்டு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், யூரியா உற்பத்தி, பிளாசுமா புரத உற்பத்தி போன்ற உற்பத்திகளில் ஈடுபடுவதும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.

கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்தப்பையில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் மஞ்சள் காமாலை நோய் உண்டாகும்.

உணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான ஊட்டக்கூறுகள், தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, குருதியினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும் உடலுக்குள் நுழையும் வெளிப்பொருட்கள் யாவற்றையும் போர்டல் இரத்த ஓட்டம் மூலமாகத் தன்னுள் கல்லீரல் இழுத்துக் கொள்கிறது.

கல்லீரல் நோய்கள்

இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. இரத்தத்தில் இவற்றின் அளவை அளந்தறிதல் மூலம் கல்லீரல் நோய்களைப் பற்றி அறிய இயலும். கேளா ஒலி அலைப் பகுப்பாய்வு மூலம் கல்லீரல் நோய்கலைக் கண்டறியலாம்.

கல்லீரல் அழற்சி

கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்த பெயரானது பண்டைய கிரேக்கமொழி சொல்லான ஹெபர் (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் ஹெபட் -(ἡπατ-) ஆகும், அதாவது கல்லீரல் என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான -இடிஸ் (-itis) என்பது "அழற்சி அல்லது வீக்கம்" என்ற பொருள் கொண்டதாகும், இச்சொல் இவை இரண்டும் கலந்ததாகும் (c. 1727)[14]. இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி (ஒலிப்பு: /sɪˈroʊsɪs/) என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),[15][16][17] போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய மூலமறியா தான்தோன்றியானவை.

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு

கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ஈரல் ஆழ்துயில் அல்லது கோமா ஹெப்பாடிகம் என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம்.[18]

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.