Remove ads
விலங்குகளின் உடலில் ஓடும் நீர்மம் From Wikipedia, the free encyclopedia
குருதி என்பது விலங்கினங்களின், உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஓர் உடல் திரவம் ஆகும். குருதியானது தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் எனப்படும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக குருதிச் சுற்றோட்டத்தொகுதி என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். தமிழில் குருதியை அரத்தம், இரத்தம், உதிரம், எருவை, செந்நீர் என்ற பிறபெயர்களாலும் அழைப்பர்.
குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச் சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
Blood | |
---|---|
Venous (darker) and arterial (brighter) blood | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | haema |
MeSH | D001769 |
TA98 | A12.0.00.009 |
TA2 | 3892 |
FMA | 9670 |
உடற்கூற்றியல் |
குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, குருதிச் சிறுதட்டுக்கள்) 1%.
மனிதரின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதிப்பெருக்கினால் குருதியிழப்பு ஏற்படும்போது அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.
குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புக்களும் துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.
குருதி நீர்மம் (அல்லது குருதித் திரவவிழையம்) என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுப்பொருட்கள் சிலவாகும்.
குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin), நாரீனி (புரதம்) (fibrinogen), குளோபுலின் (globulin), என்பவை சில. ஆல்புமின் என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் சவ்வூடு பரவல் அழுத்தத்தைச் சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ள இழையங்களினுள் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் புரதம் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி குருதி உறைந்து, மேலதிக குருதிப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் குருதி உறையாமை ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது பிறபொருளெதிரியாகும். இது [[நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, நோய்த்தொற்றுக்களுக்கு எதிராகத் தொழிற்படும்.
குருதியிலுள்ள திண்ம நிலையில் காணப்படும் உயிரணுக்களாகும். இவற்றில் செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பன காணப்படுகின்றன. குருதிக்குச் செந்நிறம் தருவது செங்குருதியணுக்கள். ஒரு மைக்ரோ லிட்டரில் (லிட்டரின் மில்லியனில் ஒரு பகுதி) சுமார் 4 முதல் 6 மில்லியன் சிவப்பணுக்கள் உள்ளன. ஒவ்வொரு சிவப்பணுவும் சுமார் 7 மைக்ரோ மீ விட்டம் கொண்டது (ஒரு மைக்ரோ மீ = ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு). வெண்குருதியணுக்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். குருதிச் சிறுதட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும்.
அனைத்து பாலூட்டிகளினதும் குருதியின் பொதுவான மாதிரியை ஒத்தே மனித குருதி இருக்கின்றது. இருப்பினும் உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு, புரதத்தின் வடிவம் போன்றவற்றின் துல்லியமான விபரங்களில் வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இனங்களிடையே குருதி அமைப்பில் வேறுபாடு இருக்கின்றது. பாலூட்டி அல்லாத முதுகெலும்பிகளின் குருதியில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன[1].
உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குருதிக்குழாய்கள் ஊடாக குருதியோட்டம் நிகழ்கின்றது. இதயம் ஒரு பாய்வு எக்கியாகச் செயற்படுவது குருதியின் சுற்றோட்டத்திற்கு இன்றியமையாதது ஆகும். மனிதரில் இடது இதயக் கீழறையில் இருந்து நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் ஆக்சிசனும் நிறைந்த குருதி எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னர் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் விநியோகம் நடந்த பின்னர் ஒட்சிசன் அகற்றப்பட்ட காபனீர் ஒட்சைட்டு செறிந்த குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இதயத்தைத் தவிர உடலின் அசைவின் போது தசைகள் நாளத்தை அழுத்துவதும் வலது இதய மேலறையை குருதி அடைவதற்குத் தேவையானதொன்றாகும். இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இக்குருதி தொடர்ந்து வலது இதயக் கீழறையில் இருந்து நுரையீரலை அடைந்து உட்சுவாசம் மூலம் உள்ளெடுக்கப்படும் ஆக்ஸிஜன் கலக்கப்பட்டு இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.
1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வே என்பவரால் சுற்றோட்டத் தொகுதி விவரிக்கப்பட்டது.[2]
குருதிக் கலங்கள் பிரதானமாக செவ்வென்பு மச்சையிலேயே உருவாக்கப்படுகின்றன. அங்குள்ள தண்டுக் கலங்கள் படிப்படியாக பல்வேறு வகை குருதிக் கலங்களாக வியத்தமடைகின்றன. சிறு வயதில் உடலிலுள்ள அனேக செவ்வென்பு மச்சைப் பகுதிகள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டாலும், வளர்ந்தோரில் பெரிய என்புகள், முள்ளென்பு உடல்கள், மார்புப் பட்டை, விலா என்புகள் போன்ற சில என்புகளின் செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் குழியங்களின் உற்பத்தி நடைபெறும். பாலர் பருவத்தில் நிணநீர்க் குழியங்கள் கீழ்க் கழுத்துச் சுரப்பியில் T-நிணநீர்க் குழியங்களாக வியத்தமடைகின்றன. முதிர் மூலவுருவாகக் கருப்பையில் இருந்த போது, ஈரலில் செங்குழியங்கள் உருவாக்கப்பட்டன. 120 நாட்கள் கொண்ட செங்குழியங்களின் வாழ்நாளின் பின் இவ்வாறு முதிர்ந்த செங்குழியங்களும், சேதமுற்ற செங்குழியங்களும் மண்ணீரலாலும், ஈரலின் கூப்பரின் கலங்களாலும் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும் போது கலங்களின் கூறுகளாக உள்ள புரதம், இரும்பு, இலிப்பிட்டு போன்ற போசணைப் பொருட்கள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றன.
குருதியில் ஆக்சிசன் கொண்டு செல்லப்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமானது ஹீமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி எனப்படும் ஒரு உலோகப் புரதம் ஆகும். ஏறத்தாழ 97[3] தொடக்கம் 98[4] வரையிலான விழுக்காடுகள் ஆக்சிசன் குருதிவளிக்காவியுடன் பிணைப்பில் ஈடுபட்டு எடுத்துச்செல்லப்படுகின்றது. மிகுதி விழுக்காடுகள் குருதி நீர்மத்துடன் கரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றது.
குருதியில் பல வகைகள் உள்ளன. அவையாவன:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.