Remove ads
From Wikipedia, the free encyclopedia
சுற்றோட்டத் தொகுதி (Circulatory system) என்பது, குருதியில் கலந்துள்ள ஊட்டச்சத்துகள், ஆக்சிசன், கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்கள், இயக்குநீர்கள், குருதியணுக்கள், கழிவுகள் என்பவற்றை உடலின் பல பாகங்களுக்கும் சுற்றியோடச் செய்வதன் மூலம் உடலிலுள்ள உயிரணுக்களுக்கும், உயிரணுக்களிலிருந்தும் எடுத்துச் செல்லும் உறுப்புத் தொகுதியாகும் [1]. இது, உடலுக்குத் தேவையான உணவூட்டத்தை அளிப்பதற்கும், நோய்களை எதிர்ப்பதற்கும், உடல் வெப்பநிலை (Thermoregulation), நீர்ச் சமநிலை (homeostasis), மற்றும் காரகாடித்தன்மை போன்றவற்றைச் சமநிலையில் வைத்திருந்து பேணுவதற்கும் உதவுகிறது.
நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் வளர்சிதைமாற்றங்கள் மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், காபனீரொட்சைட்டு போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. இதயத்தின் இயக்கத்தால் குருதியைக் கடத்தும் குருதிக்குழல்கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
இத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், நிணநீரைக் (Lymph) கொண்டு செல்லும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதியான நிணநீர்த் தொகுதியையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர்[2].
மனிதரும், பிற முதுகெலும்பிகளும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், தமனி அல்லது நாடி, சிரை அல்லது நாளம் மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில முதுகெலும்பிலிகளில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.[3]
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் இதயம், நுரையீரல், குருதி, குருதிக் கலங்கள் என்பனவாகும்[4]. ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை ஒட்சிசனேற்றுவதற்காக நுரையீரலுக்குக் கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட நுரையீரல் சுற்றோட்டத்தையும் (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் தொகுதிச் சுற்றோட்டத்தையும் (systemic circulation) உள்ளடக்கியது [5].
ஒரு முதிர்ந்த மனிதனில் சராசரியாக 4.7 - 5.7 லீட்டர் குருதி சுற்றியோடிக்கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆகும்.[6] சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து, சமிபாட்டுத்தொகுதி செயற்படுவதனால், இதயம் சுருங்கி விரிவதன்மூலம் உடல் பகுதிகள் அனைத்துக்கும் குருதி சுற்றியோடச் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.[7]
தமனிகள் அல்லது நாடிகள் ( Arteries) என்பவை இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.
தந்துகிகள் அல்லது மயிர்த்துளைக் குழாய்கள் (Capillaries) என்பவை தமனி மற்றும் சிரைகளின் நுண் இழையங்களாகும். இவையே உயிரணுக்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் அல்லது உயிரணுக்களிலிருந்து அசுத்த இரத்தத்தை சேகரித்து வரும் நுண் உறுப்புகளாகும்.
சிரைகள்' அல்லது நாளங்கள் (Veins) என்பவை இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன.
சிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் காபனீரொக்சைட்டு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நுரையீரலில் காபனீரொக்சைட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் குருதியானது நுரையீரல் சிரை மூலம் இதயத்தின் இடது மேலறைக்குச் செல்லும். அங்கிருந்து இடது கீழறைக்குச் செல்லும் குருதி மீண்டும் உடலின் பல பக்திகளுக்கும் கொண்டு செல்லப்படும்.
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.
இதயமானது ஆக்சிஜன் நிறைந்த சுத்தக்குருதியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கரியமிலவாயு நிறைந்த அசுத்தக்குருதியை நுரையீரலுக்கும் (சுத்திகரிக்க) அனுப்புகிறது.மனிதன் மற்ற பாலூட்டி இனங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றில் இதயமானது நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.மேல் அறைகள் (atrium) இடது மேலறை, வலது மேலறை மற்றும் கீழ் அறைகள் (ventricle ) இடது கீழறை , வலது கீழறை ஆகும்[8][9]. இதயம் அல்லது இருதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.[10] இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் போசாக்குப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.
முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இருதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.[11]
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இருதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.
சுற்றோட்டத் தொகுதியின் மற்றோர் முக்கிய உறுப்பு நுரையீரல் ஆகும். இது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூச்சுவிடல் என்று பெயர். வாயுப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (Bronchi) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் (Alveoli) எனப்படும் காற்றுப்பைகளில் முடிவுறும். இந் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பனீரொசைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பனீரொசைட்டை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிரைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது.
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள நுண்மயிர்கள், மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.[12]
பல நோய்கள் சுற்றோட்டத் தொகுதியைப் பாதிக்கின்றன. இதயக் குழலிய நோய் இதய குழலிய அமைப்பைப் பாதிக்கும் மற்றும் நிணநீரிய நோய்கள் நிணநீரிய அமைப்பை பாதிக்கும். இதயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயவியல் மருத்துவர்கள் ஆவர். இதயமார்பக நிபுணர்கள் நெஞ்சக பகுதிக்குள் இதய சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். குழலிய அறுவை மருத்துவர்கள் சுற்றோட்ட அமைப்பு பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.