From Wikipedia, the free encyclopedia
யமீன் உத் தவ்லா அபுல் காசிம் மகுமூது இப்னு செபுக்தெகின் (பாரசீக மொழி: یمینالدوله ابوالقاسم محمود بن سبکتگین; 2 நவம்பர் 971 – 30 ஏப்ரல் 1030) என்பவர் துருக்கிய மக்கள் குழுவினரின்[2][3] கசனவித்து அரசமரபைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் 998 - 1030இல் ஆட்சி புரிந்தார். இவர் கசினியின் மகுமூது அல்லது மகுமூது கசனவி (பாரசீக மொழி: محمود غزنوی)[4] என்றும் அழைக்கப்படுகிறார். இவரது இறப்பின் போது இவரது இராச்சியமானது ஒரு விரிவான இராணுவப் பேரரசாக மாறி இருந்தது. வடமேற்கில் பொதுவான ஈரான் முதல் இந்திய துணைக்கண்டத்தில் பஞ்சாப் வரையிலும், திரான்சாக்சியானாவில் குவாரசமியா, மற்றும் மக்ரான் வரையிலும் பரவியிருந்தது.
| |||||
---|---|---|---|---|---|
| |||||
கலீபா அல் காதிரிடம் இருந்து ஒரு மேலங்கியைப் பெறும் கசினியின் மகுமூது (நடுவில்); இரசீத்தல்தீன் அமாதனியின் ஓவியம் | |||||
கசனவித்துப் பேரரசின் சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் |
| ||||
முன்னையவர் | கசினியின் இசுமாயில் | ||||
பின்னையவர் | கசினியின் முகம்மது | ||||
பிறப்பு | 2 நவம்பர் 971 காசுனி, சபுலிசுதான், சாமனிட் பேரரசு (தற்கால ஆப்கானித்தான்) | ||||
இறப்பு | 30 ஏப்ரல் 1030 58) காசுனி, சபுலிசுதான், கசனவித்துப் பேரரசு (தற்கால ஆப்கானித்தான்) | (அகவை||||
புதைத்த இடம் | |||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
பாரசீகம் | یمینالدوله ابوالقاسم محمود بن سبکتگین | ||||
அரசமரபு | கசனவித்து குடும்பம் | ||||
தந்தை | சபுக்திகின் | ||||
மதம் | சன்னி இசுலாம் (அனாபி) | ||||
இராணுவப் பணி | |||||
சேவைக்காலம் | அண். 998 – 1030 | ||||
விருதுகள் | பொ. ஊ. 1000இல் கலீபா அல் காதிரிடம் இருந்து மரியாதைக்குரிய மேலங்கியைப் பெறுதல். |
அதிகப்படியான பாரசீகமயமாக்கப்பட்ட[5] மகுமூது தனக்கு முன்னிருந்தவர்களான சாமனிடு பேரரசின் அதிகாரக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தார். பஞ்சாப்பில் ஒரு எதிர்கால பாரசீகமயமாக்கப்பட்ட அரசுக்கான தளத்தை இவர் நிறுவினார். தான் வென்ற ஒரு நகரமான இலாகூரை மையமாகக் கொண்டு இந்த அரசு அமைந்தது.[6] இவரது தலைநகரமான காசுனி இஸ்லாமிய உலகில் ஒரு முக்கியமான கலாச்சார, வணிக மற்றும் கல்வி மையமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. கிட்டத்தட்ட முக்கிய நகரமான பகுதாதுவுக்குச் சவால் விடுக்கும் வகையில் இது திகழ்ந்தது. இத்தலைநகரமானது அல்-பிருனி மற்றும் பிர்தௌசி போன்ற பல முக்கிய நபர்களைக் கவர்ந்திழுத்தது.[6]
மகுமூது அரியணைக்குத் தன் 27ஆம் வயதில்,[7] தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு, தன் தம்பி இசுமாயிலுடனான ஒரு குறுகிய வாரிசுப் போருக்குப் பிறகு அரியணைக்கு வந்தார். சுல்தான் ("அதிகாரமுடையவர்") என்ற பட்டத்தை முதன் முதலில் வைத்திருந்த ஆட்சியாளர் இவர் தான். இப்பட்டம் இவரது சக்தியின் விரிவையும், அதே நேரத்தில் அப்பாசியக் காலீபாக்கள் இவரது மேற்பார்வையாளர்கள் என்ற ஒரு சித்தாந்தத் தொடர்பையும் அழியாது வைத்திருந்தது. இவரது ஆட்சியின் போது நடுக்கால இந்தியாவில் மதுரா மற்றும் சோம்நாத் போன்ற செல்வச்செழிப்பு மிக்க நகரங்கள் மற்றும் கோயில் பட்டணங்கள் மீது 17 முறை படையெடுத்துக் கொள்ளையடித்தார். இந்தக் கொள்ளையடித்த பொருட்களைக் கொண்டு காசுனியில் தனது தலைநகரத்தைக் கட்டினார்.[8][9]
மகுமூது சபுலிசுதான் (தற்போதைய ஆப்கானித்தான்) பகுதியில் காசுனி பட்டணத்தில் 2 நவம்பர் 971 அன்று பிறந்தார். இவரது தந்தை சபுக்திசின் ஒரு துருக்கிய மக்கள் குழுவைச் சேர்ந்த அடிமைத் தளபதி ஆவார். அவர் 977இல் காசுனியில் கசனவித்து அரசமரபுக்கு அடித்தளத்தை உருவாக்கினார். சாமனியப் பேரரசின் ஆட்சியாளர்களின் கீழ்படிந்தவராக அவர் ஆட்சி செய்தார். சாமனியப் பேரரசினர் குராசான் மற்றும் திரான்சாக்சியானாவை ஆட்சி செய்து வந்தனர். மகுமூதுவின் தாய் சபுலிசுதான் பகுதியைச் சேர்ந்த ஒரு செல்வச் செழிப்பு மிக்க நில உடைமையைக் கொண்ட உயர் குடிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தஜிக் பெண் ஆவார்.[10][11][12] எனவே, இவர் சில நூல்களில், மகுமூது-இ சவுலி (சபுலிசுதானைச் சேர்ந்த மகுமூது") என்று குறிப்பிடப்படுகிறார்.[12] இவரது ஆரம்ப வாழ்க்கை பற்றி அதிகத் தகவல்கள் தெரியவில்லை. சபுலிசுதானைச் சேர்ந்த ஒரு பாரசீகரான அகமது மய்மந்தி இவருடன் பள்ளியில் ஒன்றாகப் பயின்றார் என்று குறிப்பிடப்படுகிறது. அகமது மய்மந்தி இவரின் தத்துச் சகோதரரும் ஆவார்.[13]
மகுமூது கௌசரி ஜகான் என்று பெயருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்தனர். அவர்கள் பெயர் மொகம்மது மற்றும் மசூத் ஆகும். இவருக்குப் பிறகு அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்சிக்கு வந்தனர். மசூத் மூலமாக பிறந்த இவரது பேரனான மவுதுத் கசனவியும் பேரரசின் ஆட்சியாளராகப் பிற்காலத்தில் வந்தார். இவரது சகோதரி சித்ரே முவல்லா ஆவார். அவர் தாவூத் பின் அதௌல்லா அலாவி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். அலாவி காசி சலர் சாகு என்றும் அழைக்கப்படுகிறார். அவரது மகன் காசி சைய்யது சலர் மசூத் ஆவார்.[சான்று தேவை]
மகுமூதுவின் தோழர் ஒரு சியார்சிய அடிமையான மாலிக் அயாசு ஆவார். மாலிக் அயாசைப் பற்றிக் கவிதைகளும், கதைகளும் கூறப்பட்டுள்ளன.[14]
994இல் கிளர்ச்சியாளரான பயிக்கிடமிருந்து குராசானைக் கைப்பற்றுவதற்காகச் சாமனியப் பேரரசின் எமீரான இரண்டாம் நூவுக்கு உதவுவதில் தன் தந்தை சபுக்திசினுடன் மகுமூது இணைந்தார். இக்காலத்தின் போது சாமனியப் பேரரசானது பெருமளவுக்கு நிலையற்ற தன்மைக்கு உள்ளானது. பல்வேறு பிரிவுகள் கட்டுப்பாட்டைப் பெற போட்டியிட்டதால் மாறிக் கொண்டிருந்த உள்நாட்டு அரசியல் அலைகள் ஏற்பட்டன. இதில் முதன்மையானவர்கள் அபுல் காசிம் சிம்சுரி, பயிக், அபு அலி[சான்று தேவை], தளபதி பெக்துசின் மேலும் அண்டை நாட்டவர்களான புயித் அரசமரபினர் மற்றும் காரா கானிடு கானரசு ஆகியோர் ஆவர்.
சபுக்திசின் 997இல் இறந்தார். கசனவித்து அரசமரபின் ஆட்சியாளராக அவருக்குப் பிறகு அவரது மகன் இசுமாயில் பதவிக்கு வந்தார். மிகுந்த அனுபவமுடைய மற்றும் வயது முதிர்ந்த மகுமூதுவைத் தவிர்த்து இசுமாயிலை வாரிசாக நியமிக்க சபுக்திசினின் தேர்ந்தெடுப்புக்குப் பிந்தைய காரணமானது தெளிவாகத் தெரியவில்லை. இசுமாயிலின் தாய் சபுக்திசினின் பழைய எசமானரான அல்பிதிசினின் மகள் என்பது ஒரு வேளை காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[12] சீக்கிரமே மகுமூது புரட்சி செய்தார். போசுதுவின் ஆளுநரும், தன்னுடைய மற்றொரு சகோதரரான அபுல் முசாபரின் உதவியுடன் அடுத்த ஆண்டு நடைபெற்ற காசுனி யுத்தத்தில் இசுமாயிலைத் தோற்கடித்தார். கசனவித்து இராச்சியத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற்றார்.[15] அந்த ஆண்டு 998இல் மகுமூது பிறகு பல்குவுக்குப் பயணித்தார். அமீர் இரண்டாம் அபுல் அரித் மன்சூருக்கு மரியாதை செலுத்தினார்.[16] பிறகு தன்னுடைய உயர் அதிகாரியாக அபுல் அசன் இசுபரைனியை நியமித்தார்.[17] காசுனியில் இருந்து மேற்கு நோக்கிக் காந்தாரப் பகுதியைக் கைப்பற்றுவதற்குச் சென்றார். பிறகு போசுதுவைக் (லாசுகர் கா) கைப்பற்றினார். போசுதுவை இவர் ஒரு இராணுவ நகராக மாற்றினார்.
வட இந்தியா மீதான ஏராளமான படையெடுப்புகளில் முதல் படையெடுப்பை மகுமூது தொடங்கினார். 28 நவம்பர் 1001இல் பெசாவர் யுத்தத்தில் காபூல் ஷாகிக்களின் மன்னரான இராஜா ஜெயபாலனின் இராணுவத்தை இவரது இராணுவம் சண்டையிட்டுத் தோற்கடித்தது. 1002இல் மகுமூது சிசுதான் மீது படையெடுத்தார். கலப் இப்னு அகமதைப் பதவியில் இருந்து இறக்கினார். சபாரித்து அரசமரபை முடிவுக்குக் கொண்டு வந்தார்.[19] அங்கிருந்து தென் கிழக்கே இந்துசுதான் மீது தனது கவனத்தைத் திருப்ப இவர் முடிவு செய்தார். குறிப்பாக பஞ்சாபின் மிகுந்த வளமான நிலங்களை நோக்கிக் கவனத்தைத் திருப்பினார்.
தெற்கு நோக்கி மகுமூதுவின் முதல் படையெடுப்பானது இசுமாயிலி அரசுக்கு எதிரானதாகும். இந்த அரசு முதன் முதலில் முல்தானில் 965இல் பாத்திமா கலீபகத்தைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தில் சேர அழைக்கும் ஒரு தயால் நிறுவப்பட்டது. அப்பாசியக் கலீபகத்திடமிருந்து அரசியல் அனுகூலம் மற்றும் அங்கீகாரத்தைப் பெரும் ஒரு முயற்சியாக மகுமூது இப்படையெடுப்பை மேற்கொண்டார். பிற பகுதிகளிலும் பாத்திமா கலீபகத்தினருக்கு எதிராக இவர் சண்டையிட்டார். இந்நேரத்தில் மகுமூதுவின் தந்தையிடம் தான் அடைந்திருந்த ஒரு ஆரம்ப இராணுவத் தோல்விக்குப் பழி வாங்குவதற்காக ஜெயபாலன் முயற்சி மேற்கொண்டார். மகுமூதுவின் தந்தை 980களின் பிற்பகுதியில் காசுனியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயபாலனிடம் இருந்து விரிவான நிலப்பரப்பைக் கைப்பற்றினார். இவரது மகன் அனந்தபாலன் இவருக்குப் பிறகு அரியணைக்கு வந்தார். தன்னுடைய தந்தையின் உடன் கட்டைத் தற்கொலைக்குப் பழிவாங்கப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அனந்தபாலன் ஒரு சக்தி வாய்ந்த கூட்டமைப்பை ஒருங்கிணைத்தார். யுத்தத்தில் ஒரு முக்கியமான தருணத்தின் போது, அவரது யானை திரும்பியது போரை மகுமூதுவின் பக்கம் மீண்டும் ஒரு முறை திருப்பியது. அனந்தபாலன் தோல்வி அடைந்தார். 1008இல் இலாகூரில் நடந்த இந்த யுத்தத்தில் மகுமூது வென்றார். உப்தன்புரத்தின் ஷாகி நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டை மகுமூது பெற்றார்.[20]
இந்தியக் கூட்டமைப்பின் தோல்வியைத் தொடர்ந்து, அவர்களது ஒன்றிணைந்த எதிர்ப்புக்கு எதிர் வினை புரிய முடிவெடுத்ததற்குப் பிறகு, அவர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான போர்ப் பயணங்களில் மகுமூது ஈடுபட்டார். வெல்லப்பட்ட இராச்சியங்களைத் திறை செலுத்திய இந்து மன்னர்களிடம் கொடுத்து விட்டு பஞ்சாபை மட்டும் இணைத்துக் கொண்டார்.[20] மேலும் ஒவ்வொரு ஆண்டும் வட மேற்கு இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க பகுதி மீது திடீர்த் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிப்பேன் என்று சபதம் எடுத்தார்.[21]
1001இல் கசினியின் மகுமூது முதலில் தற்போதைய பாக்கித்தான் மீதும், பிறகு இந்தியாவின் பகுதிகள் மீதும் படையெடுத்தார். தன்னுடைய தலைநகரைப் பெசாவருக்கு (தற்போதைய பாக்கித்தான்) நகர்த்தி இருந்த இந்து ஷாகி இராஜாவான ஜெயபாலனை மகுமூது தோற்கடித்து, கைது செய்து, பிறகு விடுவித்தார். தன் மகன் அனந்தபாலனுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டு உடன்கட்டை நெருப்பிலேறி ஜெயபாலன் தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் அனந்தபாலன் ஆட்சிக்கு வந்தார். 1005இல் கசினியின் மகுமூது பாட்டியா (ஒரு வேளை பெரா) மீது படையெடுத்தார். 1006இல் முல்தான் மீது படையெடுத்தார். அந்நேரத்தில் இவரை அனந்தபாலனின் இராணுவம் தாக்கியது. தொடர்ந்த ஆண்டில் கசினியின் மகுமூது சுகபாலனைத் தாக்கித் தோற்கடித்தார். சுகபாலன் பட்டிண்டாவின் ஆட்சியாளர் ஆவார். அவர் ஷாகி இராச்சியத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியாளராக மாறியிருந்தார். 1008-1009இல் சச் யுத்தத்தில் இந்து ஷாகிக்களை மகுமூது தோற்கடித்தார். 1013இல் கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில் மகுமூது தன் எட்டாவது போர்ப் பயணத்தின் போது ஷாகி இராச்சியமானது ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டது. அப்போது ஷாகி இராச்சியம் அனந்தபாலனின் மகனான திரிலோசனபாலனின் கீழ் இருந்தது.[22]
1014இல் மகுமூது தானேசருக்கு ஒரு போர்ப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டு காஷ்மீர் மீதான இவரது தாக்குதல் தோல்வியில் முடிந்தது. கசனவித்துகளுக்கு எதிராக இந்து ஷாகிக்களின் ஒரு கூட்டாளியாக காஷ்மீரின் மன்னரான சங்கிரமராஜா இருந்தார். மகுமூது அவரைத் தாக்க விரும்பினார்.[23][24] திரிலோசனபாலனுக்குச் சங்கிரமராஜா உதவி செய்ததால் வெறுப்புக் கொண்ட மகுமூது காஷ்மீர் மீது படையெடுத்தார். தோகி ஆற்றுப் பள்ளத்தாக்கின் பக்கவாட்டில் முன்னேறினார். தோசா மைதானம் கணவாய் வழியாகக் காஷ்மீருக்குள் நுழையத் திட்டமிட்டார். எனினும் இவரது முன்னேற்றத்தை வலுவான லோகர்கோட் கோட்டை தடுத்தது. ஒரு மாதத்திற்குக் கோட்டையை முற்றுகையிட்ட பிறகு, மகுமூது முற்றுகையைக் கைவிட்டு விட்டுப் பின் வாங்கினார். பின்வாங்கும் வழியில் தனது துருப்புக்களில் பெரும்பாலானவர்களை இழந்தார். கிட்டத்தட்ட தன் உயிரையும் இழக்கும் நிலைக்குச் சென்றார். 1021இல் காஷ்மீர் மீது படையெடுக்க மகுமூது மீண்டும் முயற்சி செய்தார். ஆனால், லோகர்கோட் கோட்டை தாண்டி மீண்டும் முன்னேற அவரால் இயலவில்லை. இரண்டு தோல்வியில் முடிந்த படையெடுப்பு முயற்சிகளுக்குப் பிறகு காஷ்மீர் மீது மீண்டும் படையெடுக்க இவர் முயற்சிக்கவில்லை.[23][24][25]
1018இல் மகுமூது மதுராவைத் தாக்கினார். ஆட்சியாளர்களின் ஒரு கூட்டமைப்பைத் தோற்கடித்தார். சந்திரபாலன் என்று அழைக்கப்பட்ட ஒரு ஆட்சியாளரையும் கொன்றார். மதுரா நகரமானது "வன்னெஞ்சத்துடன் சூறையாடப்பட்டு, சேதப்படுத்தி அவமதிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது".[5][26] குறிப்பாக, அல் உத்பி தன் தரிக்-இ-யாமினி நூலில் மகுமூது கசனவி ஒரு "பெரிய மற்றும் பிரமிக்கத்தக்க கோயிலை" மதுராவில் அழித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.[27] பெரிஷ்தா தன் "இந்துஸ்தானின் வரலாறு" நூலில், 16-17ஆம் நூற்றாண்டில் மதுராவானது இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க நகராக இருந்தது என்றும், வாசுதேவர் வழிபாட்டுக்கு உரியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். கசினியின் மகுமூதுவால் இது தாக்கப்பட்ட போது, "அனைத்து கடவுள் சிலைகளும்" 20 நாள் காலத்தில் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். தங்கமும், வெள்ளியும் உருக்கிக் கொள்ளையடிக்கப்பட்டது என்றும், நகரமானது தீக்கிரையாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[28] மதுரா நகரத்தின் கலையானது இதற்குப் பிறகு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.[29]
1021இல் மகுமூது சந்தேல கன்டாவுக்கு எதிராகக் கன்னோசி மன்னருக்கு ஆதரவு அளித்தார். சந்தேல கன்டா தோற்கடிக்கப்பட்டார். அதே ஆண்டில், ஷாகி திரிலோசனபாலன் கொல்லப்பட்டார். அவரது மகன் பீமபாலன் ஆட்சிக்கு வந்தார். இலாகூர் (தற்போது பாக்கித்தான்) மகுமூதுவால் இணைத்துக் கொள்ளப்பட்டது. மகுமூது 1023இல் குவாலியரை முற்றுகையிட்டார். அங்கு அவருக்குத் திறை கொடுக்கப்பட்டது. 1025இல் மகுமூது சோமநாதர் கோயிலைத் தாக்கினார். அதன் ஆட்சியாளரான முதலாம் பீமதேவன் தப்பித்து ஓடினார். அடுத்த ஆண்டு இவர் சோம்நாத்தைக் கைப்பற்றினார். முதலாம் பீமதேவனுக்கு எதிராக கச்சுக்கு அணி வகுத்தார். அதே ஆண்டு, சூடின் ஜாத்களை மகுமூது தாக்கினார். அவர்களைத் தோற்கடித்தார்.[22] பொ. ஊ. 1024இல் குசராத்தில் சோமநாதர் கோயிலை மகுமூது சேதப்படுத்தி அவமதித்த செயலால் இராசபுத்திர மன்னரான போஜராஜன் மகுமூதுவுக்கு எதிராக ஓர் இராணுவத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தூண்டப்பட்டார். எனினும், சோம்நாத் தாக்குதலுக்குப் பிறகு மகுமூது கசனவி சிந்து வழியாக ஒரு மிகுந்த ஆபத்தான வழியைத் தேர்ந்தெடுத்தார். போஜராஜனின் சக்தி வாய்ந்த படையெடுக்கும் இராணுவங்களை எதிர் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, ஒரு பாலைவனம் வழியாக மகுமூது கடந்தார். அங்கு உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையானது இவரது பெரும் எண்ணிக்கையிலான படை வீரர்களையும், விலங்குகளையும் கொன்றது. அப்தல் கய் கர்திசியின் "கிதாப் சைனுல் அக்பர்" (அண். பொ. ஊ. 1048) நூலிலும், நிசாமுதீன் அகமதின் "தபகத்-இ-அக்பரி" நூல் மற்றும் பெரிஷ்தாவின் நூல்களும் இந்நிகழ்வைக் குறிப்பிடுகின்றன.[30][31]
கிறிதோப் பௌமெர் என்கிற சுவிச்சர்லாந்து வரலாற்றாளரின் கூற்றுப்படி, பொ. ஊ. 1026இல் சோம்நாத்தில் இருந்து முல்தானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மகுமூதுவின் இராணுவத்திற்கு ஜாட்கள் "கடுமையான இழப்பைக் கொடுத்தனர்". பிறகு பொ. ஊ. 1027இல் ஜாட்களைத் தாக்கியதன் மூலம் மகுமூது பழி தீர்த்துக் கொண்டார். ஜாட்கள் அதற்கு முந்தைய 300 ஆண்டுகளாகக் "கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாறுவதை" எதிர்த்து வந்தனர். சிந்து ஆற்றில் ஜாட்களின் படகுகளை மகுமூது தாக்கினார். மகுமூதுவின் படகுகளை விட ஜாட்களிடம் படகுகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், தன்னுடைய ஒவ்வொரு 1400 படகுகளிலும் 20 வில்லாளர்களை மகுமூது கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. நெய்தை கொண்ட "தனி வகை எறிகணைகளைக்" கொண்டிருந்த இவரது படையினர் ஜாட்களின் படகுகளை எரிக்கப் பயன்படுத்தினர்.[32]
நகர்கோட், தானேசர், கன்னோசி மற்றும் குவாலியர் போன்ற இந்திய இராச்சியங்கள் அனைத்தும் வெல்லப்பட்டன. இந்து, சமண மற்றும் பௌத்த மன்னர்களின் கைகளில் திறை செலுத்தும் நாடுகளாகக் கொடுக்கப்பட்டன. கூட்டணிகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்காத அளவுக்கு மகுமூது நடைமுறை மெய்மைகளைப் பின்பற்றினார். தன் இராணுவங்களில் அனைத்துத் தர நிலைகளிலும் உள்ளூர் மக்களைச் சேர்த்தார். வடமேற்குத் துணைக்கண்டத்தில் மகுமூது என்றுமே ஒரு நிலையான இருப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்துக்கள் தன் பேரரசைத் தாக்குவதற்கான எந்தவொரு நகர்வையும் எடுப்பதைத் தடுப்பதற்காக இந்துக் கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அழிக்கும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார். நகர்கோட், தானேசர், மதுரா, கன்னோசி, கலிஞ்சர் (1023)[33] மற்றும் சோம்நாத் ஆகிய அனைத்து அரசுகளும் பணிந்தன அல்லது திடீர்த் தாக்குதலுக்கு உள்ளாயின.
1025இல் மகுமூது குசராத்து மீது திடீர்த் தாக்குதல் நடத்தினார். சோமநாதர் கோயிலைக் கொள்ளையடித்தார். கோயிலின் சோதிர்லிங்கத்தை உடைத்தார். 20 இலட்சம் தினார்களைக் கொள்ளையடித்துச் சென்றார். சோம்நாத்தை வென்ற பிறகு அன்கில்வாரா மீது ஒரு தண்டனை கொடுக்கும் படையெடுப்பை நடத்தினார்.[34][35][36] சில வரலாற்றாளர்களின் கூற்றுப்படி, 1038இல் சோமநாதர் கோயிலுக்குப் புனிதப் பயணம் சென்ற பதிவுகள் உள்ளன. அவை கோயிலுக்குச் சேதம் அடைந்ததைப் பற்றிக் குறிப்பிடவில்லை.[37] எனினும், துருக்கிய-பாரசீக இலக்கியத்தில் மகுமூதுவின் திடீர்த் தாக்குதல் குறித்த சிக்கலான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட சக்தி வாய்ந்த கதைகள் உருவாயின.[38] அறிஞர் மீனாட்சி ஜெயினின் கூற்றுப்படி, முஸ்லிம் உலகத்தை இது "மிகு கிளர்ச்சியூட்டியது".[39]
தாபர், ஈட்டன் மற்றும் ஏ. கே. மசூம்தார் உள்ளிட்ட வரலாற்றாளர்கள் இந்த நிகழ்வின் சிலை உடைப்பு வரலாற்றைக் கேள்விக்கு உள்ளாகின்றனர். மசூம்தாரின் (1956) கூற்றைத் தாபர் பின் வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்:
சுல்தான் மகுமூதின் திடீர்த் தாக்குதல்கள் குறித்து இந்து நூல்கள் எந்த விதத் தகவல்களையும் தெரிவிப்பதில்லை என்பது நன்றாக அறியப்பட்ட ஒன்றாகும். எனவே, இந்நிகழ்வு குறித்த தகவல்கள் முஸ்லிம் நூலாசிரியர்களின் சான்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது.[40]
பரவலாகக் காணப்படும் கருத்துக்கு எதிராகவும் தாபர் வாதிடுகிறார்:
வழக்கத்திற்கு மாறான முரண்பாடான வகையிலே துருக்கிய-பாரசீகக் குறிப்புகள் வரலாற்று ரீதியாக முறைமை வாய்ந்தவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இத்தகவல்களின் உள் முரண்பாடுகள் கூடப் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில், மற்ற நூல்களைக் காட்டிலும் துருக்கிய-பாரசீக நூல்கள் வரலாறு மீதான தற்போதைய ஐரோப்பியப் பார்வையுடன் ஒத்துப் போவதால் இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.[41]
நடு ஆசியாவைச் சேர்ந்த ஒகுஸ் மற்றும் செல்யூக் துருக்கியர்களின் வருகை மற்றும் புயித் அரசமரபு ஆகியவற்றுடன் போட்டியிடுவதிலே மகுமூதுவின் வாழ்வின் கடைசி நான்கு ஆண்டுகள் கழிந்தன. ஆரம்பத்தில் மகுமூதுவால் முறியடிக்கப்பட்ட பிறகு செல்யூக்குகள் குவாரசமியாவுக்குத் திரும்பினர். ஆனால், தொகுருல் மற்றும் கக்ரி ஆகியோர் செல்யூக்குகளை மெர்வ் மற்றும் நிசாபூரை (1028-1029) கைப்பற்றுவதற்குத் தலைமை தாங்கினர். பிறகு அவர்கள் குராசான் மற்றும் பல்கு முழுவதும் மகுமூதுவுக்குப் பின் பதவிக்கு வந்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து திடீர்த் தாக்குதல்களை நடத்தி நிலப்பரப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். 1037இல் காசுனியைக் கூட அவர்கள் சூறையாடினர். 1040இல் தந்தனகன் யுத்தத்தில் மகுமூதுவின் மகனான முதலாம் மசூதை அவர்கள் தீர்க்கமாகத் தோற்கடித்தனர். மசூத் தனது மேற்கு நிலப்பரப்புகளில் பெரும்பாலானவற்றைச் சொல்யூக்கியர்களிடம் கைவிடும் நிலைக்கு இது இட்டுச் சென்றது.
சுல்தான் மகுமூது 30 ஏப்ரல் 1030இல் இறந்தார். இவரது கல்லறையானது காசுனி, ஆப்கானித்தானில் உள்ளது.
அங்கிருந்த ஐம்பதாயிரம் அப்பாவி மக்கள் எவ்வித காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.[44] இருபதாயிரம் பேரை அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர்.[52] பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கட்டாயமாக இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். மத மாற்றத்திற்கு உட்படாத மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[சான்று தேவை] கசினி முகமதுவின் படைகளுக்கு அஞ்சி தப்பி ஓடிய 90 வயது முதியவர் கோகா இராணா என்ற அரசக் குலத் தலைவரை கொலை செய்தனர்.
சோமநாதபுர கோயிலின் சிவலிங்கத்தின் உடைந்த கற்களைக் கொண்டு, 1026 இல் கசினியில் உள்ள ’ஜூம்மா மசூதியின்’ (வெள்ளிக்கிழமை தொழுகை மசூதி) வாசற் படிகளிலும் மற்றும் தனது அரண்மனை வாசற்படிகளிலும் பதித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தினார்.[சான்று தேவை] கோயில் செல்வக் களஞ்சியங்களையும், தங்கம், வெள்ளி மற்றும் சந்தனக் கதவுகளையும், கசினி நகருக்கு அருகில் உள்ள கொரசான் நகருக்கு கொண்டு சென்றார்.
பின் துவாரகை நகரை சூறையாடி அங்குள்ள கிருட்டிணன் கோயிலில் உள்ள வெள்ளியால் ஆன இரண்டு அடி உயர கிருட்டிணன் சிலையை உடைத்தெறிந்தார்.[சான்று தேவை] மேலும் சௌராட்டிர நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சமணர் கோயில்களை முகமதின் படைகள் இடித்து தள்ளினர்.[சான்று தேவை]
சோமநாதபுரத்தில் மட்டும் கொள்ளையடித்த செல்வங்களின் மதிப்பு இரண்டு மில்லியன் தினார்கள் என்று, கசினி முகமதுவின் படைகளுடன் இந்தியாவிற்கு வந்த இசுலாமிய வரலாற்று அறிஞர் அல்-பருணி தனது நூலில் குறித்துள்ளார்.[சான்று தேவை]
சௌராஷ்டிர நாட்டை தொடந்து ஆள, தனது குலத்தில் பிறந்த ஒருவனை, அரசனாக நியமித்துச் சென்றார்.[சான்று தேவை] பிறகு தன் நாட்டிற்கு திரும்பிச் செல்கையில் இராசபுத்திரகுல அரசர்களுக்கு அஞ்சி, விரைவாக குறுக்கு வழியில் செல்ல, இராசபுதனத்தின் தார் பாலைவனம் வழியாக தனது நாட்டிற்கு திரும்பினார் கசினி முகமது.
கஜினி முகமதுவின் படையெடுப்புகள் மத சகிப்புத் தன்மை அற்ற அடிப்படையிலேயே இருந்தது. இதனால் இசுலாமியர்களின் கொள்கைகளுக்கு புறம்பாக செயல்படும் மக்களுக்கு எதிராக ஜிகாத் எனும் இசுலாம் வகுத்த புனிதப்போர்களை தொடர்ந்து நடத்தினார். இசுலாமின் சன்னி பிரிவு முசுலிம்களைத் தவிர, இதர பிரிவு முசுலிம்களான ஷியா முஸ்லிம்கள், பையித் ஷியா முஸ்லிம்கள் மற்றும் இசுமாயிலி ஷியா முசுலிம்களையும் படுகொலை செய்தார்.[53]
இறை உருவ வழிபாடு பழக்கம் உள்ள இந்துக்களையும், பௌத்த, சமணர்களையும் கடுமையாக வெறுத்தார். எனவே அவர்களது இறை உருவ வழிபாட்டு இடங்களை தகர்ப்பதில் குறியாக இருந்ததுடன், கோயில்கள், கல்விக்கூடங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் தீக்கிரையாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
மேலும் இந்துக்களை கட்டாயமாக இசுலாமுக்கு மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர். இசுலாமிற்கு மதம் மாறாத மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற விரும்பாத மக்களிடமிருந்து வரி விதிக்கப்பட்டனர்.
இராய் (Raay) மற்றும் இசபாகான் (Isfahan) பகுதியில் இருந்த மாபெரும் நூலகங்களை கஜினி நகரத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தார்.[54]
இதனால் தனது நாட்டின் கல்வி வளத்தை பெருக்கி கொண்டதுடன், தனக்கு கல்வி கற்றுக் கொடுக்க அரசியல், மொழி தொடர்பான அறிஞர்களை நியமித்துக் கொண்டார்.[54]
கி. பி. 1017 இல் கசினி முகமதுடன் சேர்ந்து இந்தியா வந்த அறிஞர் அல்-பரூணியைக் கொண்டு, ’இந்திய மக்களும் அவர்தம் நம்பிக்கைகளும்’ என்ற நூலை எழுத ஊக்கமளித்தார்.
இந்தியாவில் கொள்ளை அடித்த செல்வக் களஞ்சியங்களைக் கொண்டு தனது பேரரசை வலுப்படுத்திக் கொண்டார்.
அப்பாசித் கலிபா, அல்-காதிர்-பில்லாவிடமிருந்து தனது பேரரசை விடுதலை அடைந்த நாடு என்ற தகுதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
இசுலாமுக்கு எதிரான காபிர்கள் (இறை உருவ வழிபாட்டாளர்கள்) மீது புனிதப் போர் மேற்கொண்டதற்காக இசுலாமிய தலைமை மதத் தலைவரான கலிபாவிடமிருந்து ‘ ’யாமின் –உத் – தௌலா’ என்ற மாபெரும் விருது கசினி பெற்றார்.
உருவ வழிபாட்டாளர்களான இந்துக்கள் மீதான ஜிகாத் எனும் புனிதப்போர்களின் (Jihad) போது, கசினி முகமது உடன் வந்த அரபு வரலாற்று அறிஞர் அல்-பரூணி தனது நூலில் கசினி முகமது பற்றிய செய்திகள்:[55]
கசினி முகமது மற்றும் அவரது மகன்களுக்கும அல்லாவின் அருள் இருந்தபடியால், தனது வழித்தோண்றல்களின் நலனுக்காகவும், தனது பேரரசின் நலனுக்காகவும், கசினி நகரத்தின் எல்லைப்புறத்தில் இருந்த இந்து, பௌத்த சமய அரசுகளான, தற்கால கந்தஹார், தற்கால பாக்கித்தான், வடமேற்கு இந்தியா, மதுரா, கன்னோசி, சௌராட்டிர தேசம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளையும் கசினி முகமதுவும் அவரது மகன்களும் நடத்திய முப்பது வருட தொடர் தாக்குதல்கள் காரணமாக, இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்தும், இந்து, சமண, பௌத்த உருவ வழிபாட்டு இடங்களை இடித்தும், இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்ககளை கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர்.[56]
மத மாற்றத்தை விரும்பாத இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிசுத்தான் பகுதிகளில் இருந்து வெளியேறி தற்கால மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், பீகார், வங்காளம் மற்றும் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் குடியேறினர்.[57]
கஜினி முகமதின் இந்திய படையெடுப்புகளின் தொடர் வெற்றியால், துருக்கியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இந்தியாவை எளிதாக வெற்றி கொள்ள முடியும் எண்ணம் மனதில் விதைக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்த அறிவியல், மருத்துவம், சமயம், வானவியல், சோதிடம் தொடர்பான நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்.
கஜினியின் தொடர் படையெடுப்புகளால் ஆப்கானித்தான் இசுலாமிய மயமானது.
பத்தாம் நூற்றாண்டில் பாரசீக மொழி, பண்பாடு, நாகரிகம் ஆப்கானித்தான் முழுவதும் பரவியது.
காந்தார நாட்டு இந்து மன்னன் சாகியை (Shahi) வெற்றி கொண்டு, தட்சசீலத்தில் (பண்டைய கால நாளந்தா பல்கலைக்கழத்திற்கு இணயானது) இருந்த மாபெரும் பல்கலைக் கழகத்தை தாக்கி அழித்தார் கசினி முகமது. காந்தாரா நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்.
கி. பி., 998 முதல் 1030 வரை ஆட்சி புரிந்த கசினி முகமது இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்.
தற்கால பாக்கிஸ்தானிலும், ஆப்கானிசுதானிலும், இசுலாமிய மக்கள் இன்று வரை, கசினி முகமதுவை மாபெரும் வெற்றி வீரனாக கொண்டாடுகிறார்கள்.
பாகிசுதான் நாடு, தான் தயாரித்த ஏவுகணைக்கு ’கசினி’ எனும் பெயர் சூட்டி, கசினிமுகமதுவின் நினைவை பாராட்டினர். மேலும் பாகிசுதான் நாட்டு இராணுவம், தனது ஒரு படைப் பிரிவுக்கு ‘கசினி’ என்ற பெயர் சூட்டி கசினி முகமதை பெருமைப்படுத்தினர்.
ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் மனதில் கசினி முகமது ஒரு மனிதாபமற்ற, கொடுமைக்கார, கொள்ளைக்கார படையெடுப்பாளர் என்றும், ஈவு இரக்கமற்றவர் என்றும், சோமநாதபுரம் (குசராத்து), சிவன் கோயில், மதுராவில் உள்ள , ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தையும், துவாரகை கிருட்டிணர் கோயிலையும், தட்சசீலத்தில் இருந்த மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை அழித்ததையும், காந்தாரம், பெசாவர், முல்தான், காங்கிரா மற்றும் லாகூரில் இருந்த பௌத்தர், சமணர் மற்றும் இந்துக் கோயில்களும், மடாலயங்களும், உயர் கல்விகூடங்களையும் கஜினி முகமது இடித்து தரை மட்டம் ஆக்கி, கோயில் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்ற நிகழ்வுகள் குறித்து வட இந்திய வரலாற்றில் நீங்காத துயர நினைவாக இந்திய மக்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக்கொண்டு தனது பேரரசின் தலைநகரான கசினியை அனைத்து துறைகளிலும் வளப்படுத்தினார்.
பாரசீக மொழி இலக்கியத்தை வளர்த்தார். உயர் கல்வி நிறுவனங்களை நிறுவினார். மத்திய ஆசியாவில் இருந்த அறிஞர்களை ஊக்குவித்து பரிசில்கள் வழங்கினார்.
இந்திய சமூக மக்கள் மற்றும் அவர்களது நம்பிக்கைகள் குறித்தும், தனது இந்திய படையெடுப்புகள் குறித்தும் அல்பருணி என்ற வரலாற்று அறிஞரைக் கொண்டு ‘தாரிக்-அல்-இந்த்’ என்ற நூலை எழுதச் செய்தார்.
கசினி முகமதுவின் புகழ் பாடி, ‘ ஷா நாமா’ எனும் நூலை இயற்றிய கவிஞர் ‘பிர்தௌசி’ ( Ferdowsi) என்பவருக்கு 200 தினார்கள் வெகுமதி அளித்துப் பாராட்டினார் கசினி முகமது.
உயர்நிலை கல்விக்கூடங்களில் கணக்கு, மருத்துவம், அறிவியல், இசுலாமிய மதம், மற்றும் மொழிகள் பற்றிய பாடங்கள் கற்க ஏற்பாடு செய்தார்.
தனது பேரரசு ஒரு இசுலாமிய பேரரசு என்றும், தனது பேரரசின் ஆட்சி மொழியாக பாரசீக மொழியை அறிவித்தார்.
” யாமின் உத் தௌலா அபுல் காசிம் முகமது பின் செபுக்தெசின் “ என்ற மாபெரும் பட்டப் பெயருடன் தனது பேரரசை திறம்பட 32 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
கி. பி. 1159 இன் இறுதியில் கசினி பேரரசு நலிவடைந்த நிலையில் இருந்த போது, எல்லைப்புற பகை மன்னர்கள், பேரரசின் பல பகுதிகளை கைப்பற்றிக்கொண்டனர். இறுதியாக தற்கால ஆப்கானிசுதானில் உள்ள ’கோரி’ என்ற நகரத்து முகமது என்பவர் கசினி பேரரசை கைப்பற்றினார். அத்துடன் கசினி பேரரசு 1159 இல் வீழ்ந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.