Remove ads
வைரஸ் From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:நுண்நஞ்சு
நுண்நஞ்சு | |
---|---|
எச்.ஐ.வி நுண்நஞ்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
தீநுண்மி அல்லது நுண்நஞ்சு அல்லது வைரஸ் (virus) என்பது ஒரு தொற்றுநோய்க் கிருமியாகும். இது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக இவை காணப்படுகின்றன. இவை செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். விலங்குகள் மற்றும் தாவரங்கள் முதல் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் வரை அனைத்து வகையான வாழ்க்கை வடிவங்களையும் இந்தத் தீநுண்மிகள் பாதிக்கின்றன[1][2].
இவை தாம் வாழும் ஓம்புயிர்களின் உயிரணுக்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு இனப்பெருக்கம் அடைகின்றன. [3] தீநுண்மிகளிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான நுண்ணுறுப்பு கட்டமைப்பு இல்லாததாலும், அதன் காரணமாக, அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது என்பதாலும், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.[4] இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி இவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.[5] அதாவது இவை வேறொரு உயிரினத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (inert) இருக்கும், ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையைப் பெறுகிறது. வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கைத் தேர்வு மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள்[6] மற்றும் பிரதிபலிப்புகள்[7] என விவரிக்கப்படுகின்றன.
சில நுண்ணியலாளர்கள் நுண்நஞ்சை ஒரு நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை நோய்க் காரணி என்றே குறிப்பிடுகின்றனர்.[8]
வைரசு என்ற சொல் பொதுவாக மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு நுண்ணுயிர் தின்னி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத நோய்க்காரணியைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 1898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.[9] சுமார் 6,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.[10][11] இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.[12]
பூமியிலுள்ள ஒவ்வொரு சூழல் மண்டலத்திலும் தீநுண்மிகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான உயிரியல் வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் தீநுண்மி அறியப்படுகிறது[13]. வைரசுகள் பற்றிய ஆய்வு தமிழில் நுண்நஞ்சியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
வைரசுத் தொற்று மனிதர்களிலும் விலங்குகளிலும் தாவர வகைகளிலும் நோயை உண்டாக்க வல்லது. மனிதர்களிலும் விலங்குகளிலும் பொதுவாக இவை நோயெதிர்ப்பு அமைப்பால் அழிக்கப்படுகின்றன. மேலும் தொற்று ஏற்பட்ட உயிரியானது சிலசமயம் வாழ்நாள் முழுதும் அந்தக் குறிப்பட்ட வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுகிறது. நுண்ணியிர் எதிர்ப்பிகள் வைரசுகளுக்கு எதிராகச் செயலாற்றுவது இல்லை. எனினும் தீநுண்மி எதிர்ப்பி அல்லது வைரசு எதிர்ப்பி எனப்படும் வைரசு எதிர்ப்பு மருந்தினை உயிரைக் கொல்லும் தன்மையுள்ள நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம். தடுப்பூசிகள் சில வகைத் தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வாழ்நாள் முழுதும் அளிக்கின்றன.
vīrus என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளைக் கொண்டு ஆங்கிலத்தில் 1398 இல் Virus என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.[14][15] இலத்தீனில் virulentus என்ற சொல்லில் இருந்து Virulent என்ற சொல்லும் 1400 ஆம் ஆண்டளவில் வந்தது.[16][17] 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகி வைரசைக் கண்டறிவதற்கு பலகாலம் முன்னரே, 1728 இல் முதல் முறையாக தொற்றுநோய்களை உருவாக்கும் காரணி என்ற பொருள் பதிவு செய்யப்பட்டது.[15]
வாழ்வின் பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில் தீநுண்மிகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி. என். ஏ. யான கணிமிகளில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். படி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை பாலியல் இனப்பெருக்கத்தில் போன்று மரபியற் பல்வகைமையைக் கூட்டுவதில் உதவுகின்றன.[18]
வைரசுகள் தாங்கள் தொற்றியுள்ள உயிருடன் சேர்ந்து வாழ்கின்றன. உயிருள்ள செல்கள் தோன்றியதில் இருந்தே வைரசுகளும் இருந்திருக்கக் கூடும். தொல்லுயிர் எச்சங்களில் இவை கிடைப்பதில்லை. எனவே இவற்றின் தோற்றம் குறித்த தெளிவான கருத்துகள் இல்லை. மூலக்கூற்று உயிரியியலே இவற்றின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற நுட்பமாக விளங்குகிறது. இதற்கு வைரசுகளின் பழைமையான டி. என். ஏ அல்லது ஆர். என். ஏ தேவை. ஆனால் இது வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளவை 90 ஆண்டுகளுக்குப் பின் உள்ளவையே. வைரசின் தோற்றம் குறித்து மூன்று முதன்மையான கோட்பாடுகள் உள்ளன:
பின்னடைவுக் கோட்பாடு (Regressive theory) வைரசுகள் முன் ஒரு காலத்தில் பெரிய செல்களை ஒட்டி/சார்ந்து வாழ்ந்த சிறிய செல்களே. காலப்போக்கில் அவற்றுக்குத் தேவையில்லாத மரபணுக்களை அவை இழந்துவிட்டன. இரிக்கெட்சியா, கிளாமிடியா போன்ற பாக்டீரியங்கள் வாழும் செல்களே எனினும் அவை வைரசுகளைப் போலவே ஓம்புயிரியின் செல்களுக்கு உள்ளே தான் பெருகுகின்றன. இது இந்த பின்னடைவுக் கோட்பாட்டின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.[19]
உயிரணுவழித் தோற்றக் கோட்பாடு (Cellular origin theory) சில வைரசுகள் பெரிய உயிரினங்களின் மரபணுக்களில் இருந்து தவறி வெளியேறிய டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வில் இருந்து தோன்றியிருக்கலாம். இந்த டி.என்.ஏ க்கள் ஓர் உயிரணுவில் இருந்து இன்னொன்றுக்கு நகரும் கணிமி எனப்படும் டி.என்.ஏ துண்டுகளில் இருந்து வந்திருக்கலாம். வேறு சில பாக்டீரியங்களில் இருந்து படிவளர்ச்சி அடைந்து தோன்றி இருக்கலாம்.[20]
இணை படிவளர்ச்சி (கூர்ப்பு)க் கோட்பாடு (Coevolution theory) செல்கள் உருவான அதே காலகட்டத்திலேயே வைரசுகளும் சிக்கலான புரத மூலக்கூறுகளில் இருந்தோ டி.என்.ஏ வில் இருந்தோ தோன்றியிருக்கலாம். அப்போதிருந்தே அவை செல்களைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கலாம்.[21]
மேலுள்ள அனைத்துக் கோட்பாடுகளிலும் ஏதோ ஒருவிதத்தில் குறையுள்ளதாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு செல்களைச் சார்ந்து வாழும் பிற உயிரிகளுக்கும் வைரசுகளுக்கும் ஏன் ஒரு ஒற்றும் கூட இல்லை என்பதை பின்னடைவுக் கோட்பாடு விளக்குவதில்லை. வைரசு ஆய்வாளர்கள் இந்த மூன்று கோட்பாடுகளையும் மறு மதிப்பீடு செய்து வருகின்றனர்.[22][23]
1884-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லசு சேம்பர்லேண்டு எனும் ஆய்வாளர் சேம்பர்லேண்டு வடிகட்டி என்று அறியப்படும் ஒரு வடிகட்டியை உருவாக்கினார். இதன் துளைகள் பாக்டீரியாவினை விடச் சிறியன. இதன் மூலம் இவர் பாக்டீரியம் உள்ள ஒரு நீர்மத்தை இந்த வடிகட்டியில் வடிகட்டும் போது பாக்டீரியங்கள் நீர்மக் கரைசலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டன. 1890-களில் திமித்ரி இவானோவ்சுக்கி என்னும் இரசிய உயிரியியலார் இந்த முறையைப் பயன்படுத்தி புகையிலை மொசாயிக்கு வைரசு என்பதைப் பற்றி ஆராய்ந்தார். அதாவது, பாதிக்கப்பட்ட புகையிலைகளை அரைத்து அதை வடிகட்டிய பின் கிடைத்த நீர்மம் மீண்டும் புகையிலையில் நோயை உண்டுபண்ணக்கூடியதாக இருந்தது.
அதே காலகட்டத்தில் வேறுபல ஆய்வாளர்கள் பாக்டீரியத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு சிறிதான (பின்னாளில் வைரசு என்று அழைக்கப்பட்ட) அந்தப் பொருட்கள் கூட நோயை உண்டாக்க வல்லன என்று கண்டறிந்தனர். 1899-இல் மார்ட்டினசு பைசரிங்கு என்னும் இடச்சு ஆய்வாளர் இந்தப் பொருட்கள் பிரியும் செல்களில் மட்டுமே பெருகுவதை உணர்ந்தார். இவர் அதனை பரவக்கூடிய உயிருள்ள திரவம் என்று அழைத்தார். ஏனெனில் அவரால் கிருமி போன்ற துகள்களைக் கண்டறிய முடியவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடெரிக்கு துவோர்த்து என்னும் ஆங்கில பாக்டீரிய ஆய்வாளர் பாக்டீரியத்தைத் தொற்றும் வைரசுகளைக் கண்டுபிடித்தார். பின்னர் பெலிக்சு தி-எரெல்லி என்னும் பிரெஞ்சு-கனேடிய ஆய்வாளர் அகார் என்னும் உணவுப் பொருளில் வளரும் பாக்டீரியாக்களுடன் வைரசுகளைச் சேர்க்கையில் அப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் இறந்துவிட்டதைக் கண்டறிந்தார். இந்த இறந்த பகுதிகளைக் கொண்டு அவரால் வைரசுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடிந்தது.[24]
1931-இல் எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும் எதிர்மின்னி நுண்ணோக்கி புதிதாக உருவாக்கப்பட்ட பின் வைரசுகளின் படங்கள் கிடைக்கத்தொடங்கின.[25] 1935-இல் வெண்டெல் மெரெடித்து ஸ்டான்லி என்பார் புகையிலை மொசாயிக்கு வைரசினை ஆராய்ந்து அது பெரும்பாலும் புரதத்தால் ஆனது என்று கண்டறிந்தார். சிறிது காலம் கழித்து அந்த வைரசு புரதத்தாலும் ஆர். என். ஏ வினாலும் ஆனது என்று கண்டறியப்பட்டது. தொடக்ககாலத்தில் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தாமல் வைரசுகளை எவ்வாறு வளர்ப்பது என்று தெரியவில்லை. இது வைரசுகளைப் பற்றிய ஆய்வில் ஒரு தடையாக இருந்தது. 1931-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் எர்ணஸ்ட்டு வில்லியம் குட்பாச்சர்-உம் அலைசு மைல்சு வுட்ரபு-உம் இன்புளுவென்சா உள்ள பல வைரசுகளை கருவுற்ற கோழியின் முட்டையில் வெற்றிகரமாக வளர்த்தனர். 1949-இல் சான் பிராங்கிளின் என்டர்சு முதலானோர் போலியோ வைரசினை உயிருள்ள விலங்குகளின் செல் திசுக்களில் வளர்த்துக் காட்டினர்.[26] இதன் மூலம் வைரசு ஆய்வில் இருந்த இச்சிக்கல் தீர்ந்தது. 4800-க்கும் மேலான வைரசு இனங்கள் இது வரை கண்டறியப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
வைரசுகளின் அளவு 20 முதல் 400 நானோமீட்டர் வரை (மிகப் பெரியது 500 நானோமீட்டர்) விட்டத்தையும், 700-1000 நானோமீட்டர் வரை நீளத்தையும் கொண்டிருக்கிறது.[27] அதாவது ஒரு சென்ட்டிமீட்டர் நீளத்திற்கு இவற்றை நீட்டி வைக்க வேண்டுமானால் 33,000 முதல் 500,000 வைரசுகள் தேவை.
தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும். அவையாவன:
சில நுண்நஞ்சுகளில் வெளிப்புறத்தில் முள் (Spikes) போன்ற அமைப்பும் உள்ளன. இவை கிளைக்கோ புரதங்களால் ஆக்கப்பட்டு இருக்கும்.[28]
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் நுண்நோக்கிகளால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
வைரசுகள் மரபுப் பொருளைக் கொண்டிருப்பதனால், சடுதி மாற்றம் அடையவும் படிவளர்ச்சி அல்லது பரிணாமக் கூர்ப்பில் தன்னைத் தகவமைத்துக்குக் கொள்ளவும் வழிவகுக்கின்றது. அத்துடன் இவ்வாறான மரபுப் பொருளைக் கொண்டிருக்கும் காரணத்தால் புரதப்பீழைகளிலிருந்தும் வேறுபடுகின்றன.
வைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம் (based on the transcription) பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம்.
டி.என்.ஏ யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
எ.கா: மையோ வைரசு.
இவைகளும் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கின்றன.
எ.கா: ரெட்ரோ நுண்நஞ்சு, போலியோ நுண்நஞ்சு, போட்டி நுண்நஞ்சு (poty virus).
ரியோ நுண்நஞ்சு, ரோட நுண்நஞ்சு, என ஆர்.என்.எ நுண்நஞ்சுகள் பகுக்கப்படுகிறது.
மரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து நுண்நஞ்சு நேர்மறை (+), எதிர்மறை (-) இழை நுண்நஞ்சுகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகளுக்கு பொருந்தும்.
சில நுண்நஞ்சுகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன், தீநுண்மியின் ஓரிழை ஆர். என். எ நேரடியாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவ்வகையான நுண்நஞ்சுக்கள் நேர்மறை (+) இழை நுண்நஞ்சு என அழைக்கப்படும்.
எதிர்மறையான (-) இழை நுண்நஞ்சு (பாரமிக்சோ தீநுண்மி அம்மை நோயெய் உண்டாக்குகின்றன), தாவரங்களிலோ அல்லது விலங்குகளிலோ உள்சென்றவுடன் நேரடியாகத் தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.ஏ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டுப், புரதமாக மாற்றப்படுகிறது.
ஒரு நுண்நஞ்சுவினால் தொற்றுக்குட்படும் ஓம்புயிரானது, அசல் நுண்நஞ்சை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. நுண்நஞ்சுகள் தாம் உட்செல்லும் உயிரணுக்களினுள், அந்த உயிரணுக்களின் பொறிமுறையைப் பயன்படுத்தி இனப்பெருக்கமடைகின்றன. இவ்வினப்பெருக்கத்தில் நுண்நஞ்சின் மரபணுப் பகுதிகளின் பிரதிகள் உருவாக்கப்பட்டு பின்னர் அப்பிரதிகள் ஒருங்கிணைதல் மூலம் சேய் நுண்நஞ்சுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தங்களுக்கான சக்தியை அல்லது புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய வளர்சிதைச் சாதனங்களை இந்தத் நுண்நஞ்சுகள் கொண்டிருப்பதில்லை.
நுண்நஞ்சுகள் பூச்சிகள் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்று, நீர், குருதி மாற்றீடு மூலம் பரவும் திறன் கொண்டவை. ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் ஐ உருவாக்கும் நுண்நஞ்சான எச்.ஐ.வி பாலியல் தொடர்பு மூலம் பரவும் பல நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மற்றும் தூய்மையற்ற ஊசிகள் மூலம் பரவுகிறது. வெறிநாய்க்கடி நோயை ஏற்படுத்தும் நுண்நஞ்சு நாய், பூனைகள் சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவுகிறது. அண்மையில் வவ்வால்கள் மூலமும் வெறிநாய்க்கடி நோய் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாவரங்களில் உள்ள நுண்நஞ்சுகள் ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு பொதுவாகப் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள நுண்நஞ்சுகள் சில இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. எடுத்துக்காட்டாக டெங்குக் காய்ச்சல் ஐ உருவாக்கும் வைரசு போன்றவை குருதி உறிஞ்சும் கொசு முதலான பூச்சிகளால் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அல்லது காவிகளாக அறியப்படுகின்றன.
இருமல் மற்றும் தும்மல் போன்ற செயல்களின்போது ஒருவருக்கு இருக்கும் இன்ஃபுளுவென்சாவிற்குக் காரணமான நுண்நஞ்சுகள்மூச்சுத் திவலைகள் மூலம் பரவுகின்றன. வைரசுகள், இவற்றிலும் குறிப்பாக ஆர்.என்.ஏ வைரசுகள், சட்டெனத் தன்னியல்பில் இருந்து மாறி புதிய வகை வைரசாக மாற வல்லன. ஓம்புயிரிகள் (வைரசுகள் பாதிக்கும் உயிரிகள், Host) இத்தகைய புதிய வகை வைரசிற்கு எதிராகக் குறைந்த எதிர்ப்புத் திறனையே கொண்டிருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக இன்புளுவென்சா நுண்நஞ்சு இவ்வாறு அடிக்கடி மாற்றம் அடைவதால் ஒவ்வோர் ஆண்டும் புதிய தடுப்பூசி தேவைப்படுகிறது. வைரசுகளில் ஏற்படும் இத்தகைய பெரும் மாற்றங்கள் உலகம்பரவுநோய்களை ஏற்படுத்தக்கூடும். இதற்கு எடுத்துக்காட்டாக 2009-ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவிய பன்றிக் காய்ச்சலைக், 2020 இல் பரவிய கோவிட்-19 போன்றவற்றைக் கூறலாம். பொதுவாக இத்தகைய பெரும் மாற்றங்கள், வைரசுகள் மற்ற விலங்கினங்களில் முதலில் தொற்றும் போதுதான் ஏற்படுகின்றன. வௌவால்களில் கொரோனா வைரசு, பன்றிகளிலும் பறவைகளிலும் இன்புளுவென்சா வைரசு போன்றவை மனிதர்களைத் தாக்கும் முன் அத்தகைய மாற்றத்தை அடைகின்றன.
நோரோவிரசு (en:Norovirus) மற்றும் ரோட்டாவிரசு (en:Rotavirus) வகை நுண்நஞ்சுகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது [29].
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் தடுப்பூசிகளால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு நுண்நஞ்சுத் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில நுண்நஞ்சுகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்நஞ்சுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல மருந்துகள் (en:Antiviral drug) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
வைரசு இனங்களில் மரபுப்பொருள் அமைப்பில் மிகவும் வேறுபட்ட பல்வகைமை காணப்படுகின்றது. தாவரம், விலங்கு, ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற குழுக்களை விடவும், மிகவும் அதிகளவில் இந்த வேறுபாடு வைரசுக்களில் காணப்படுகின்றது. மில்லியன் அளவில் வைரசுக்களின் வகைகள் இருப்பினும்[12], 7000 அளவிலான வைரசுக்களே மிகவும் விபரமாக அறியப்பட்டுள்ளன.[11] ஜனவரி 2021 இன் தரவுகளின்படி, en:National Center for Biotechnology Information இன் வைரசு மரபணுத்தொகையின் 193,000 க்கும் மேலான வைரசுக்களின் முழுமையான sequences பெறப்பட்டுள்ளது[30]. இன்னும் பல கண்டுபிடிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.[31][32]
வைரசுகளில் கருவமிலங்கள் டி.என்.ஏ. யாகவோ, ஆர்.என்.ஏ யாகவோ இருக்கும். அவை எவ்வகையாக இருப்பினும், கருவமிலமானது ஓரிழையாகவோ, அல்லது ஈரிழையாகவோ இருக்கலாம். Hepadnaviridae போன்ற வகையைச் சார்ந்த சில வைரசு வகைகளில் ஒரு பகுதி மரபுப் பொருள் ஓரிழையையும், இன்னொரு பகுதி ஈரிழையயும் கொண்டிருக்கும். [33]
அதிகளவிலான வைரசுக்கள் ஆர்.என்.ஏ யையே கொண்டுள்ளன. பொதுவாக தாவர வைரசுக்கள் ஓரிழை ஆர்.என்.ஏ யையும், நுண்ணுயிர் தின்னிகள் ஈரிழை ஆர்.என்.ஏ யையும் கொண்டிருக்கும்.[33] வைரசு மரபுப்பொருள் நீள் வடிவிலோ (எ.கா. அடினோ வைரசு), அல்லது வட்ட வடிவிலோ (எ.கா.பொலியோம வைரசு) காணப்படும்.
சில புற்று நோய்கள், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா,கொரோனா போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.