பன்றி
From Wikipedia, the free encyclopedia
பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன. இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது.
பன்றி | |
---|---|
![]() | |
கொல்லைப்படுத்தப்பட்ட பன்றியும் அதன் குட்டியும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Theria |
உள்வகுப்பு: | Eutheria |
வரிசை: | |
குடும்பம்: | பன்றிக் குடும்பம் |
துணைக்குடும்பம்: | Suinae |
பேரினம்: | Sus |
இனங்கள் | |
Sus barbatus |
கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும்.[1][2] பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும். பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்[3].
பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
செல்ல விலங்கு
பன்றிகள் அறிவுக்கூர்மை உள்ள விலங்குகளாகக் கருதப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்க முடியும்[4]. எனவே இவற்றை செல்ல விலங்குகளாகவும் மக்கள் வளர்க்கின்றனர். பன்றிகள் இசுலாமியர்களால் வெறுக்கப்படுகின்றன.
பன்றி இறைச்சி
பேக்கன் (பன்றி இறைச்சி) என்பது ஒரு பன்றியிலிருந்து தயாரித்த பதனம் செய்த மாமிச உணவு ஆகும். அது முதலில் உப்புக் கரைசல் அல்லது உலர்ந்த பொதிதலில் அதிக அளவு உப்புடன் சேர்த்து பதனம் செய்த மாமிச உணவு ஆகும்; அதில் இருந்து கிடைப்பதே புத்தம் புதிய பேக்கன் அல்லது பன்றி இறைச்சி ஆகும்.
பன்றிக் காய்ச்சல்
பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய இந் நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.
பன்றி வளர்ப்பு
பன்றி வளர்ப்பு பெரும்பாலும் இறைச்சிக்காகவே நடைபெறுகின்றது.
பயன்கள்
பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சிக் கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை உண்கின்றன.பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது. பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி பெறப்படுகிறது.[5] பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12 பன்றிக்குட்டிகளை ஈனும்.பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
இனவிருத்திக்காக பன்றிகளை தேர்வு செய்தல்
பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
- குட்டி ஈனும் திறன்
- குட்டிகளின் உடல் பலம் மற்றும் வலிமை
- பால் கொடுக்கும் திறன்
- தீவனத்தினை உடல் எடையாக மாற்றும் திறன்
- சினைப்பிடிக்கும் திறன்
ஒரு குறிப்பிட்ட பன்றி இனத்தினை தேர்வு செய்வதை விட ஒரு பன்றி பண்ணையிலிருந்து ஒரு நல்ல பன்றியினை தேர்வு செய்வதே மிக முக்கியமாகும். பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது நோயில்லாத பன்றிப்பண்ணையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு முறை பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்த பின்பு மீண்டும் இரண்டாம் முறையாக தேர்வு செய்வதற்கு பன்றிகளின் உற்பத்தி திறனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் பன்றி வளர்ப்பு
பன்றி வளர்ப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களி்ன் கரையோரப் பகுதிகளில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்துறையில் விசாலமான நடுத்தர உள்ளக, உள்ளக வளர்ப்பு போன்ற முறைமைகள் காணப்படுகின்றன. நிகழ்கால பன்றி சனத்தொகையில் ஏறக்குறைய 80,000 ஆகவும், வருடாந்த பன்றியிறைச்சி உற்பத்தி 9,500 மொத்த தொகை ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பன்றியிறைச்சி 1% ஐ செலுத்துகிறது. ஆடு வளர்ப்புத் துறையை போன்றே பன்றி வளர்ப்புத் துறையும் கடந்த சில தசாப்பங்களாக குறிப்பிடக்கூடிய வளர்ச்சி எய்தவில்லை.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.