Remove ads
From Wikipedia, the free encyclopedia
விலங்குத் தொழிற்கூட்டு, அல்லது விலங்குத் தொழிற்துறை கூட்டுத்தொகுதி (ஆங்கில மொழி: Animal–industrial complex), என்பது மனிதரல்லாத விலங்குகளை நிறுவனமயமாக்கிய மனிதப் பயன்பாட்டுச் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் செயலுக்குக் காரணமாக அமையும் மனிதத் தேவைகளின் குவியமாகும். விலங்குகள் உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மனித நடவடிக்கைகளும் இதில் அடங்கும், முக்கியமாக உணவுத் தொழில் (எ.கா., இறைச்சி, பால், முட்டை, தேனீ வளர்ப்பு), விலங்கு ஆராய்ச்சி (எ.கா., அறிவியல் கல்வி, தொழில்துறை, விண்வெளிக்கு அனுப்பப்படும் விலங்குகள்), மதச் சம்பிரதாயங்கள் (எ.கா., பலி விலங்குகள், கோயில்களில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள்), மருந்து (எ.கா., கரடியின் பித்தநீர், கோரோசனை, புலியெலும்பு மற்றும் பிற விலங்குப் பொருட்கள்), ஆடை (எ.கா., தோல், பட்டு, கம்பளி, உரோமம்), பொதி சுமத்தல் (இழுவை) மற்றும் போக்குவரத்து (எ.கா., உழைக்கும் விலங்குகள், விவசாயம், போர் விலங்குகள், தொலையியக்கி விலங்குகள்), ஒய்யாரம், அழகுசாதனப் பொருட்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு (எ.கா., சர்க்கஸ், உயிரியல் பூங்காக்கள், இரத்த விளையாட்டு, வேட்டை, சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள்), தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் (எ.கா., செல்லப்பிராணி வளர்ப்புத் தொழில்) மற்றும் பல. ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட விலங்குச் சுரண்டல் என்ற வகையில் தனிப்பட்ட விலங்கு கொடுமைச் செயல்களிலிருந்து விலங்குத் தொழிற்கூட்டு முற்றிலும் வேறுபடுகிறது. சீரிய விலங்குக் கல்வியியலின் முக்கியத் தலைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
விலங்குத் தொழிற்கூட்டானது ஒவ்வொரு ஆண்டும் 200 பில்லியனுக்கும் அதிகமான நிலவாழ் மற்றும் நீர்வாழ் விலங்குகளைக் கொல்வதோடு மட்டுமல்லாது காலநிலை மாற்றம், கடல் அமிலமயமாக்கல், பல்லுயிர் இன அழிவு எனத் தொடர்ந்து ஹோலோசீன் பேரழிவு வரை காரணமாக அமைகிறது. தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் கோவிட்-19 உலகளாவிய பொருந்தொற்று உட்பட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் பொரும்பாலான நோய்களுக்கும் விலங்குத் தொழிற்கூட்டே பொறுப்பாகும்.
விலங்குத் தொழிற்கூட்டு என்ற சொல் டச்சு கலாச்சார மானுடவியலாளரும் தத்துவஞானியுமான பார்பரா நோஸ்கே தனது 1989-ஆம் ஆண்டு ஹ்யூமன்ஸ் அண்டு அதர் அனிமல்ஸ் புத்தகத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதில் அவர் "விலங்குகள் நம்மால் கணினிகள் மற்றும் இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன" என்று கூறினார்.[1]:299[2]:20 இந்த சொல் விலங்குகளை உணவு மற்றும் பிற பொருட்களாக மாற்றும் நடைமுறைகள், அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த தொழிற் நடவடிக்கைகளை இராணுவ-தொழிற்கூட்டு முறையோடு தொடர்பு படுத்தியது.[1]:xii, 298 இச்சொல்லின் விளக்கம் பின்னர் ரிச்சர்ட் ட்வைன் என்பவரால் மேலும் துல்லியமாக்கப் பட்டது. பெருநிறுவன (விவசாய) துறை, அரசுகள், பொது மற்றும் தனியார் அறிவியல் துறைகளுக்கு இடையிலான சற்றே மறைக்கப்பட்ட வலைபின்னலே விலங்குத் தொழிற்கூட்டு என்றும், பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் கூடிய இத்தொழிற்கூட்டானது நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், படிமங்கள், அடையாளங்கள் மற்றும் சந்தைகளின் விரிவான வரம்பை உள்ளடக்கியது என்றும் விளக்குகிறார் ட்வைன்.[3]:23 மேலும் சிறை-தொழிற்கூட்டு, பொழுதுபோக்கு-தொழிற்கூட்டு, மருந்து-தொழிற்கூட்டு போன்ற இன்ன பிற தொழிற்கூட்டு முறைகளோடு விலங்குத் தொழிற்கூட்டுக்கு உள்ள குறுக்கீட்டுச் செயற்பாடுகளை ட்வைன் அதில் விவாதிக்கிறார்.[3]:17–18 சமூகவியலாளர் டேவிட் நிபர்ட் விலங்குத் தொழிற்கூட்டின் வரையறையை "தானிய உற்பத்தியாளர்கள், பண்ணைத் தொழில்கள், இறைச்சித் தயாரிப்பு மற்றும் பொட்டல நிறுவனங்கள், துரித மற்றும் பற்கிளை உணவகங்கள் மற்றும் அரசு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய வலைபின்னல்" என்று மேலும் விரிவுபடுத்துகிறார். இது "உலக வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.[4]:197
அடிப்படையில் விலங்குத் தொழிற்கூட்டு என்பது இறைச்சி உற்பத்தி பற்றிய முழுமையான அறிவுகொண்ட, அனைத்தையும் கட்டுப்படுத்தும் செல்வாக்குமிக்க சக்தி வாய்ந்த மூன்று அமைப்புகளைக் கொண்ட—அதாவது அரசு, தொழிற் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்—ஒரு பின்னலைக் குறிக்கிறது.[5]
விலங்குத் தொழிற்கூட்டு என்பது ஆதிகாலத்தில் தோன்றிய ஒன்றாகும்.[4]:208 பழங்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வளா்க்கத் துவங்கியதிலிருந்து இதன் தோற்றத்தை வரலாற்றில் குறிக்க இயலும். இருப்பினும், 1945-ம் ஆண்டிலிருந்தே விலங்குத் தொழிற்கூட்டு கணிசமாக வளரத் தொடங்கியது எனலாம்.[1]:299[4]:208 விலங்குரிமை அறிஞரும் எழுத்தாளருமான கிம் ஸ்டால்வூடின் கருத்துப்படி விலங்குத் தொழிற்கூட்டானது தனியார்மயமாக்கலை அதிகரித்து அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்கும் நாடுகடந்த புதிய தாராளமயச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். "இது நாடுகடந்த நிறுவனங்களுக்கும் உலகளாவிய மூலதனத்திற்கும் சாதகமானதாகும்" என்கிறாா் அவா்.[1]:299 சோரன்சனின் கூற்றுப்படி, வரலாற்றில் இரண்டு விடயங்கள் மனிதன் விலங்குகளைப் பாா்க்கும் பாா்வையை மாற்றி, விலங்குத் தொழிற்கூட்டை வலுவடையச் செய்துள்ளன: முதலாவது 1865 முதல் தொடங்கி சிகாகோ மற்றும் அதன் கிடங்குகளும் வதைகூடங்களும். இரண்டாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தீவிர விலங்குத் தொழிற்பண்ணைகள், தொழில்துறை ரீதியான மீன்பிடித்தல், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துதல் ஆகிய முறைகள். இவை இரண்டும் விலங்குகள் மீதான மனித மனப்பான்மையின் மாற்றத்திற்கு தேவையான முடுக்கத்தைத் தந்துள்ளன.[1]:299–300 "சிகாகோ இறைச்சிக்கூடங்கள் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மாபொரும் பொருளாதார சக்தியாகத் திகழ்ந்தன" என்றும் "கோடிக்கணக்கான விலங்குகளை அடுக்கடுக்காகக் கொடூரமான முறையில் கொன்று அவற்றின் உடலைப் பிரித்தெடுப்பதில் பெயர்போனவை" என்றும் நிபர்ட் கூறுகிறார்.[4]:200 அப்டன் சின்க்ளேரின் 1906 நாவலான தி ஜங்கிள் பிறப்பிலிருந்து இறைச்சிக்கூடத்தில் முடிவடையும் வரை விலங்குகள் வாழ்நாள் முழுவதும் தவறாகவும் கொடூரமாகவும் நடத்தப்படுவதை வெளிப்படையாக விவரிக்கிறது என்று ஸ்டால்வூட் விவரிக்கிறார்.[1]:300 சார்லஸ் பேட்டர்சனின் எடா்னல் டிரெப்லிங்கா என்னும் நூல் வதைகூடங்களில் விலங்குகள் வெட்டப்பட்டு உடற்பாகங்கள் பிரித்தெடுக்கப்படும் முறைகளிலிருந்து ஹென்றி ஃபோர்டு எப்படி தனது தொழிற்சாலைகளில் கார்களின் பாகங்கள் ஒருங்கிணைக்கப்படும் முறைகளை உருவாக்கினார் என்றும், மேலும் நாஜி ஜெர்மனியில் மூன்றாம் ரீக் கட்டிய வதைமுகாம்கள் மற்றும் எரிவாயு அறைகளின் கட்டமைப்பிலும் செயற்பாட்டிலும் எந்த அளவுக்கு வதைகூடங்களின் தாக்கமும் பங்களிப்பு இருந்தது என்பதைப் பற்றியும் விவரிக்கிறது என்றும் ஸ்டால்வூட் சுட்டுகிறார்.[1]:300
விலங்குத் தொழிற்கூட்டு மனித நுகர்வுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக விலங்குகளை பில்லியன் கணக்கில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த விலங்குகள் அனைத்தும் விலங்குத் தொழிற்கூட்டின் சட்டப்பூர்வ சொத்தாகக் கருதப்படுகின்றன. விலங்குத் தொழிற்கூட்டு மனித மற்றும் மனிதரல்லாத விலங்குகளுக்கு இடையில் ஏற்கனவே நிலவியுள்ள குழப்பமான உறவை மேலும் குழப்பமான ஒன்றாக மாற்றியமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது நுகர்வை கணிசமாக அதிகரித்து மனித உயிர்வாழலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.[1]:299 விலங்குத் தொழிற்கூட்டின் பரவலான தன்மையே அதை நம் கவனத்திலிருந்து மறைப்பதாக அமைந்துள்ளது.[1]:299
விவசாய சமூகங்கள் தோன்றிய காலத்திலேயே தேன்றியிருந்தாலும் விலங்குத் தொழிற்கூட்டானது இறுதியில் தன் தொடர்ச்சியான விரிவாக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு முதலாளித்துவ அமைப்பின் கணிக்கக்கூடிய, நயவஞ்சகமான நீட்சியாகத் திகழ்கிறது என்று நிபர்ட் வாதிடுகிறார். விலங்குத் தொழிற்கூட்டானது ஒரு கொடுங்கோல் மன்னனுக்கு ஒப்பாக நிலம், நீர் போன்ற அத்தியாவசிய வளங்களைச் சுறண்டி விலங்குகளைக் கொண்டு இலாபம் பார்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் அழிவுகரமான ஓரமைப்பு என்று நிபர்ட் கூறுகிறார். 21-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மனித மக்கள்தொகை 9 பில்லியனாக வளர்ச்சியடைவிருக்கையில் அச்சமயம் உலகில் இறைச்சி உற்பத்தி 40% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4]:208 சமூகவியலாளர் டேவிட் நிபர்ட் கூறுகையில்:
“ | பிற விலங்குகளின் மீது நிகழ்த்தப்படும் ஆழமான கலாச்சார மதிப்பிழப்பும் அதன் விளைவாக விலங்குத் தொழிற்கூட்டில் விலங்குகளுக்கு நிகழ்ந்தேறும் வன்முறைகளும், நம் சமூகத்தை தொலைவிளைவுள்ள விலங்கினவாத சமூகமயமாக்கலின் மூலம் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முதலாளித்துவ முறையின் கீழ் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி முறையானது இளைய தலைமுறையினருக்கு பெருமளவில் முதலாளித்துவ–விலங்கினவாத சித்தாந்தங்கள் உள்ளிட்ட மேலாதிக்கச் சிந்தனைகளை கற்பிக்கிறது. இது மிக இளவயதிலேயே அவர்களது மனதில் விலங்குகளின் மீதான மதிப்பிழந்த ஒரு நிலையை ஆழமாக விதைத்து விடுகிறது; பள்ளிக்குழந்தைகளுக்கு விலங்குகள் வெறும் கூண்டில் அடைக்கப்பட்ட "செல்லப்பிராணிகளாகவும்", உடற்கூறாய்வுக்குப் பயன்படுத்தப்படும் பாடப் பொருட்களாகவும், மதிய உணவாகவும் மட்டுமே தோன்றும்படிச் செய்யப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் விலங்குகள் முன்னெடுத்துக் காட்டப்படாததும், அப்படியே காட்டப்பட்டாலும் அவை வெறும் பயன்பாட்டுப் பண்டங்களாக்கப்பட்டும், ஓரங்கட்டப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், தரம்தாழ்த்தப்பட்டும் காட்டப்படுவதும், மென்மேலும் விலங்குகள் உரிமைக்குத் தகுதியற்றவைகளாகப் பார்க்கப்படுவதையே பறைசாற்றுகின்றன. இவ்வாறான விலங்கினவாதச் செயல்கள் கருத்தியல் ரீதியாக சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. இதனை எதிர்த்து யாரேனும் குரலெழுப்பினால் அவர்கள் பெரும்பாலும் ஏளனம் செய்யப்பட்டு நிராகரிக்கப்படுவதும் இவ்விலங்கினவாதச் சிந்தனையின் சமூகத் தாக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.[4]:208 | ” |
சீரிய விலங்குக் கல்வியியல், சீரிய அமைதிக் கல்வியியல் ஆகிய துறைகளை இணைக்கும் அனிமல்ஸ் அண்டு வார்ஸ்[6] என்ற 2013-ம் ஆண்டு நூலை இயற்றிய அறிஞர்கள் விலங்குத் தொழிற்கூட்டிற்கும் இராணுவ-தொழிற்கூட்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராய்ந்ததன் விளைவாக "இராணுவ–விலங்குத் தொழிற்கூட்டு" என்ற ஒரு சிந்தனையை அந்நூலில் அறிமுகப்படுத்துகின்றனர்.[7]:16 விலங்குளைப் பயன்பாட்டுக்காகச் சுரண்டுதல் என்பது இராணுவ-தொழிற்கூட்டிற்கு அவசியமில்லை என்றாலும், இராணுவ-தொழிற்கூட்டு என்ற ஒன்றின் இருப்பிற்குக் காரணமே விலங்குப் பயன்பாட்டுச் சுரண்டல் தான் என்று காலின் சால்டர் நிறுவுகிறார்.[7]:20 அந்நூலின் முக்கிய சாராம்சங்களில் ஒன்று இராணுவ–விலங்குத் தொழிற்கூட்டேடு அனைத்து வகையான போர்களும் ஒழிக்கப்பட வேண்டியவை என்பதாகும்.[6]:120
தொழிற்சாலைப் பண்ணைகள், விலங்கு உடற்கூறாய்வு, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல், உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு வர்த்தகம் போன்ற விலங்குத் தொழிற்கூட்டின் உள்ளடக்க செயற்பாடுகளின் கருத்தியல் அச்சாணியாக விலங்கினவாதம் விளங்குவதாக பியர்ஸ் பெய்ர்ன் கருதுகிறார்.[8] விலங்குத் தொழிற்கூட்டானது ஒருபுறம் விலங்கினவாதத்தின் விளைவாகவும் மறுபுறம் விலங்கினவாதத்தின் காரணமாகவும் விளங்குகிறது என்று ஏமி ஜே. பிட்ஸ்ஜெரால்ட், நிக் டெய்லர் ஆகியோர் தெளிவுபடுத்துகின்றனர்.[9] மேலும் விலங்கினவாதமானது நிறவாதம், பால்வாதம் போன்ற பாகுபாடுகளின் வரிசையில் விளங்கும் ஓர் அடிப்படை பாகுபாடாக இருப்பதையும் அவர்கள் நிறுவுகின்றனர்.[9] இறைச்சி என்பது விலங்குகளிடமிருந்து வருவது என்ற உண்மையினை வெளிப்படுத்தாத வகையில் இயங்குவதே முதலாளித்துவ மற்றும் நவதாராளவாத சிந்தனைகளின் பிடியில் செயற்படும் விலங்குத் தொழிற்கூட்டின் மிக முக்கியப் பகுதி என்பதையும் அவர்கள் சுட்டத் தவறுவதில்லை.[9] மனிதரல்லா விலங்குகளைப் தங்கள் தேவைக்குப் பயன்படுத்த மனிதர்களுக்கு உரிமை உண்டு என்பதுபோன்ற எண்ணமே விலங்கினவாதத்தின் விளைவால் வருவதாகும் என்பதும் நவீன சமுதாயத்தில் இவ்வெண்ணம் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.[9]
விலங்குகளை வெறும் பொருளாதார வளங்களாக மட்டுமே குறைத்துப் பார்க்கும் அளவிற்கு அனைத்து வகையான விலங்குப் பொருட்களின் உற்பத்தியும் விலங்கினவாதத்தில் வேரூன்றியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.[10]:422 இயற்கைக்கு மாறாக விலங்குகளை உருவாக்கி அவற்றைப் பெருக்குவதையும் கொல்வதையுமே முதலீடாகக் கொண்ட விலங்குத் தொழிற்கூட்டானது விலங்கினவாதத்தின் செயலாக்கக் கருவியாகக் கருதப்படுகிறது. இங்கு விலங்கினவாதம் ஒரு உற்பத்திச் சாதனமாக மாறுவதைக் காணமுடிகிறது.[10]:422 தனது 2011-ஆண்டின் நூலான கிரிட்டிகல் தியரி அண்டு அனிமல் லிபரேஷன் என்ற நூலில் அறிஞர் ஜே. சன்பொன்மட்சு என்பவர் "விலங்கினவாதம் என்பது அறியாமையினாலோ அறமின்மையின் காரணமாகவோ விளையும் ஒன்றாக இல்லாது முதலாளித்துவத்தின் உந்துதலால் எழும் ஒரு உற்பத்தி முறை" என்று வாதிடுகிறார்.[10]:420
விலங்குத் தொழிற்கூட்டு என்பது தற்கால முதலாளித்துவத்தின் கீழ் விலங்குகள் பண்டமாக்கப்படுவதை மையமாகக் கொண்டது. இது விலங்குகளை வைத்து நடைபெறும் அனைத்து வகையான பொருளாதார செயற்பாடுகளையும் உள்ளடக்கியது. சுருங்கக் கூறின், விலங்குத் தொழிற்கூட்டானது உணவு, ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, நாகரிகம், செல்லப் பிராணி வளர்ப்பு என பயன்பாடு கருதி விலங்குகளைச் சுரண்டும் செயல்களின் மொத்த விளைவாகக் கருதப்படுகிறது.[10]:421[11] விலங்குத் தொழிற்கூட்டின் செயற்பாடுகள் வெறும் விலங்கு வேளாண் வணிகத்துடனும் அதோடு தொடர்புடைய வேளாண்–தொழிற்கூட்டோடும் (விலங்கு விவசாயம், இறைச்சி மற்றும் பால் உற்பத்தி, தொழிற்சாலைப் பண்ணைகள், கோழிப்பண்ணை, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது) மட்டும் நில்லாது[10]:422[12][13] அதன் நீட்சியாக மருந்து–தொழிற்கூட்டு, மருத்துவ–தொழிற்கூட்டு, விலங்கு உடற்கூறாய்வு–தொழிற்கூட்டு, ஒப்பனை–தொழிற்கூட்டு, பொழுதுபோக்கு–தொழிற்கூட்டு, கல்வி–தொழிற்கூட்டு, பாதுகாப்பு–தொழிற்கூட்டு, சிறை–தொழிற்கூட்டு என விலங்குச் சுரண்டல் நிகழும் இன்ன பிற தொழிற்கூட்டுகளிலும் நீள்கின்றன.[4]:207[10]:422[14]:xvi–xvii[15]
இவ்வனைத்து தொழிற்கூட்டுகளும் விலங்குத் தொழிற்கூட்டோடு தொடர்புடையதாகவே இயங்குகின்றன என்றும் இவையனைத்துத் தொழிற்கூட்டுகளும் சேர்ந்து "அடிமை விலங்குகளைப் பயன்பாட்டுக்காகச் சுரண்டுவதன்" மூலம் விலங்குத் தொழிற்கூட்டை மென்மேலும் வலுவடையச் செய்கின்றன என்றும் ஸ்டீவன் பெஸ்டு கூறுகிறார்.[14]:xvi–xvii எடுத்துக்காட்டாக கல்வி–தொழிற்கூட்டானது தனது கல்விச் சாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் "விலங்கு ஆராய்ச்சி" என்ற பெயரில் விலங்குச் சுரண்டலைச் செய்வதன் வாயிலாக மருத்துவ–தொழிற்கூட்டு மற்றும் மருந்து–தொழிற்கூட்டு ஆகியவற்றிற்கு உதவுகிறது.[14]:xvi–xvii மருந்து–தொழிற்கூட்டு தனது மருந்து விற்பனைக்கு ஒரு மூலதனமாகக் கருதி வழங்கும் நிதிகளைக் கொண்டே கல்வி–தொழிற்கூட்டின் இந்த விலங்குச் சுரண்டல்களும் அதன் மூலம் நடக்கும் கேள்விக்குரிய விலங்கு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.[14]:xvi–xvii இவ்வாறு ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்படும் மருந்துகளின் காப்புரிமை பெறப்பட்டு, அவரச கதியில் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துவரப்பட்டு ஊடக–தொழிற்கூட்டினால் விளம்பரப்படுத்தப்படுகின்றன.[14]:xvii விலங்குகளின் மீது பரிசோதிக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் இவை பெரும்பாலும் மனித நோய்த்தடுப்புக்குப் பயன்படுமா என்பதே கேள்விக்குறியாக இருந்துவிடுகின்றன.[14]:xvii உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 115 மில்லியன் விலங்குகள் இவ்வாராய்ச்சிகளுக்காகக் கொல்லப்படுகின்றன என்று பெஸ்டு கணிக்கிறார்.[14]:xvii இவ்வாறு தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொண்டு மருத்துவ–தொழிற்கூட்டு நோய் அறிகுறிகளை மட்டுமே தணிப்பதன் மூலம் தன் இலாபத்திற்காக மனிதர்களை அடிமைகளாக்கி விடுகின்றன என்கிறார் பெஸ்டு.[14]:xvii இதை எதிர்க்கும் விலங்குரிமை ஆர்வலர்களை பாதுகாப்பு–தொழிற்கூட்டு குற்றவாளிகளாக்கி சிறைபிடித்து சிறை–தொழிற்கூட்டிடம் ஒப்படைத்துவிடுகிறது.[14]:xvii பரவலாக உலகின் உணவுக் கட்டமைப்பின் ஒரு பிரதான அங்கமாக விலங்குத் தொழிற்கூட்டு திகழ்வதாக ட்வைன் கூறுகிறார்.[3]:14
விலங்குத் தொழிற்கூட்டைக் குறுக்குவெட்டுப் பார்வையில் பார்க்கையில், நோஸ்கே, ட்வைன் இருவரும் மனித சிறுபான்மையினர் மீதும் சுற்றுச்சூழல் மீதும் விலங்குத் தொழிற்கூட்டு ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை.[16]:62 கேத்லீன் ஸ்டாச்சோவ்ஸ்கியின் கூற்றுப்படி, விலங்குத் தொழிற்கூட்டு "மனிதனை மற்ற விலங்குகளின் நுகர்வோராக இருப்பதை இயல்பானதாக்குகிறது."[17] விலங்குத் தொழிற்கூட்டின் பிரம்மாண்டத்தை "நம் வாழ்வில் அதற்கு இருக்கும் செல்வாக்கிலிருந்தும் 'விலங்குகளுக்கும் வாழ்வுண்டு' என்பதையே நாம் மறந்துபோகும் அளவிற்கு அவற்றை வதைப்பதை மிக இயல்பானதொரு செயலாக ஆக்கும் பணியை அது வெற்றிகரமாகச் செய்துமுடித்ததிலிருந்தும் அறியமுடியும்" என்று ஸ்டாச்சோவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.[17] "தொழில் நோக்குடன் செயற்படும் பால் உற்பத்தித் தொழில், அரசாங்கம், பள்ளிகள் என இம்மூன்றும் விலங்குத் தொழிற்கூட்டின் செல்வாக்கு மிக்க முக்கூட்டாக விளங்குகின்றன" என்று கூறும் ஸ்டாச்சோவ்ஸ்கி, "இவை மூன்றும் கூட்டாகச் சேர்ந்து பால் உற்பத்தியில் நிகழும் விலங்குரிமை மீறல்களையும் கொடுமைகளையும் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து விடுகின்றன" என்று விளக்குகிறார்.[17] சீரிய விலங்குக் கல்வியியல் உள்ளிட்ட துறைகள் பல்கலைக்கழகங்களை அறிவு உற்பத்தியின் மையங்களாகக் கருதும் அதே வேளையில் பல்கலைக்கழகங்கள் விலங்குத் தொழிற்கூட்டின் கொடிய செயற்பாடுகளுக்கு வலு சேர்க்கும் முக்கிய பங்குதாரராகவும் விளங்குகின்றன என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.[16]:62
முன்னாள் அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் வழங்கிய இராணுவ-தொழிற்கூட்டு எச்சரிக்கையின் வழியில், ஸ்டாச்சோவ்ஸ்கி ஒரு எச்சரிக்கை விடுகிறார்.[17] அவர் கூறுகையில், "மிகப் பிரம்மாண்டமானதும் அபார சக்திவாய்ந்ததுமான விலங்குத் தொழிற்கூட்டு நம் குழந்தைகள் என்ன உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது."[17] மக்கள் தங்கள் சந்ததியினரை "தேவையற்ற தாக்கங்களிலிருந்து காக்கத் தவறியதே" இதற்குக் காரணம் என்கிறார் அவர்.[17] விலங்குத் தொழிற்கூட்டு நம் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் இழைந்தோடி இருப்பதால் அது சமூகத்தின் பொருளாதாரம், அரசியல் எனத் துவங்கி ஆன்மீகம் உட்பட அனைத்துத் தரப்பிலும் கோலோச்சுகிறது.[17] இவ்வகையில் அது எய்ஸன்ஹோவர் அளித்த எச்சரிக்கையை மிக நெருக்கமாக ஒத்துள்ளது.[17] K-12 பள்ளிக் கல்வியானது தனது ஊட்டச்சத்துப் பாடத்திட்டத்தில் பால் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதன் வாயிலாக மேற்சொன்ன "விலங்குத் தொழிற்கூட்டு முக்கூட்டு பள்ளிக் குழந்தைகளை மூளைச்சலவை" செய்து அவர்களை "தொழிற்துறை விலங்குத் தயாரிப்புகளை" உண்ணச்செய்கின்றது" என்று ஸ்டாச்சோவ்ஸ்கி நிறுவுகிறார்.[17]
விலங்குத் தொழிற்கூட்டின் ஒரு அங்கமான விலங்கு விவசாயமானது[18] காலநிலை மாற்றம், கடல் அமிலமயமாக்கல், பல்லுயிர் அழிப்பு, ஆண்டுதோறும் 60 பில்லியனுக்கும் அதிகமான நிலவாழ் விலங்குகள் கொல்லப்படுவது உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுச்சூழல் தீங்கிற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.[19] இதன் பின்விளைவுதான் புவியின் வரலாற்றில் மனிதனால் ஏற்பட்டுள்ள ஒரே பேரழிவான ஹோலோசீன் பேரழிவு எனப்படும் ஆறாவது பேரழிவாகும்.[20] இவையல்லாது கூடுதலாக உணவுக்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஆண்டுக்கு சுமார் 103.6 பில்லியன் நீர்வாழ் விலங்குகளும், முட்டை உற்பத்தித் தொழிலில் பல மில்லியன் கணக்கில் கொல்லப்படும் ஆண் குஞ்சுகளும், மீன்பிடிப்பின்போது பிடிபட்டு கொல்லப்படும் பல பில்லியன் கடல்வாழ் உயிரினங்களும், ஆசிய நாடுகளில் கொல்லப்பட்டு உண்ணப்படும் நாய், பூனை உள்ளிட்ட எண்ணற்ற விலங்குகளும் அடங்கும்.[21] மொத்தத்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 166 முதல் 200 பில்லியனுக்கும் அதிகமான நிலவாழ் மற்றும் நீர்வாழ் விலங்குகள் அவற்றின் உடற்பொருட்களுக்காகக் கொல்லப்படுகின்றன. இதனை ஸ்டீவன் பெஸ்ட், பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் போன்றோர் உட்பட பல அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்களும் "விலங்குகளின் இப்படுகொலை" என்று வர்ணிக்கின்றனர்.[21][22]:29-32, 97[23] அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 20 மில்லியனுக்கும் அதிகமான பண்ணை விலங்குகள் வதைகூடங்களுக்கு கொண்டு செல்லும்போது இறக்கின்றன.[24] தானியங்களை விடுத்து மனித நுகர்வுக்கு இறைச்சி உற்பத்தி செய்வதன் விளைவாகவே நிலம் உள்ளிட்ட பல இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு உலகெங்கிலும் ஊட்டச்சத்து குறைபாடு, பசி, பஞ்சம் ஆகியவை தோன்றுகின்றன என்று அறியப்படுகிறது.[4]:204
விலங்குத் தொழிற்கூட்டின் மற்றுமோர் அங்கமான விலங்கு ஆராய்ச்சி மற்றும் விலங்கு உடற்கூறாய்வு ஆண்டுதோறும் பல நூறு மில்லியன் விலங்குகளைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குவதோடு நில்லாமல் ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 115 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவதற்கும் காரணமாக விளங்குகின்றன.[14][15][21]:45 விலங்குரிமை விழிப்புணர்வு, அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள், பெருகிவரும் நேரடிச் சான்றுகள் போன்றவற்றால் பொதுமக்களிடம் இதைப் பற்றி பெருகிய அளவில் விழிப்புணர்வு காணப்பட்டாலும், விலங்குரிமை ஆர்வலர்களின் பரப்புரை செயற்பாட்டிற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் உள்ளிட்ட விலங்குத் தொழிற்கூட்டின் குறுக்கீடுகளால் பெரும்பாலும் இவ்விழிப்புணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.[15]
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் தொற்றுவதில் விலங்குத் தொழிற்கூட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[4]:198[8][25] மாட்டிறைச்சி மூலம் தொற்றும் போவைன் ஸ்பாஞ்ஜிஃபார்ம் என்செபலோபதி எனப்படும் மாட்டுப் பித்தநோய்,[25] சீனாவில் உள்ள ஈரச் சந்தைகளில் தோன்றி[26][27][28] இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று[8][29] ஆகியவை இதில் அடங்கும். கோவிட்-19 பெருந்தொற்று விலங்குத் தொழிற்கூட்டின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் இத்தொற்றின் மூலம் விலங்குத் தொழிற்கூட்டு "ஒரு கட்டுக்கடங்கா இராட்சத இயந்திரம்" என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சார்லோட் பிளாட்னர் போன்றோர் கூறுகின்றனர்.[29]:247 இவற்றிற்கான தீர்வாக இறைச்சித் தயாரிப்பை எப்படி மென்மேலும் பெருக்குவது என்று மட்டுமே சிந்திக்கும் நாம், இறைச்சி உண்ணும் வழக்கம் சரியானதுதானா என்பதைச் சிந்திக்கத் தவறுகிறோம் என்று கூறும் கரோல் ஜே. ஆடம்ஸ், "மனிதர்களை மட்டுமே மையப்படுத்தி எழும் இப்பிரச்சனைகளுக்கு நாம் தேடும் தீர்வுகளும் இப்பிரச்சனைகளைப் போன்றே நம்மை மட்டும் மையப்படுத்தியவையாகவே உள்ளன" என்று கடிந்துகொள்கிறார்.[25] இப்பிரச்சனையை மேலும் ஆழமாக அலசுவதும் நிரந்தரப் புலால் மறுப்பும் தான் இவற்றிற்கான உண்மையான தீர்வு என்று ஆடம்ஸ் கூறுகிறார்.[25]
விலங்குத் தொழிற்கூட்டின் தாக்கங்களில் முதன்மையான ஒன்று மனிதரல்லா விலங்குகளைப் பண்டமாக்கல் (அதாவது, வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதுதல்) ஆகும். மனிதனின் உணவு அமைப்பில் விலங்குகளைப் பண்டமாக்கல் என்பது மனித, விலங்கு, மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்கு எதிராக தனது "ஏகபோகத் தனியுரிமை கொண்ட பொருளாதார நோக்கை" மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் முதலாளித்துவ அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையது என்ற பார்பரா நோஸ்கேயின் கூற்றை எஜுகேஷன் ஃபார் டோட்டல் லிபரேஷன் என்ற தனது நூலில் மேனகா ரெப்கா சுட்டுகிறார்.[30] இதே கருத்தை ரிச்சர்ட் ட்வைன் "விலங்குப் பொருட்களின் நுகர்வை ஒரு இன்பமளிக்கும் விஷயமாகச் சித்தரிக்கும் வகையில் அதைச் சுவைகூட்டி விளம்பரப்படுத்துவதில் செல்வாக்கு மிக்க வணிக வல்லமைப்புகள் தனித்த ஆர்வம் காட்டுகின்றன" என்று வழிமொழிகிறார்.[30]
வரலாற்று அறிஞர் லூயிஸ் ராபின்ஸ் 18-ஆம் நூற்றாண்டில் வனவிலங்குகள் பிரான்சில் இறக்குமதி செய்யப்பட்டதைப் பற்றி எழுதுகையில், "விலங்குகள் அவற்றின் உண்மையான இருப்பிடங்களிலிருந்து எடுத்துவரப்பட்டு பாரிஸ் நகரில் பொருட்களைப் போன்று இறக்கப்பட்ட போது பண்டங்களின் நிலைக்குச் சரிவதும் அந்நிலையிலிருந்து உயர்வதுமாக மாறிமாறி இருந்துவந்ததும் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறாக மதிப்பிடப்பட்டு வந்ததையும் பார்க்க முடிகிறது" என்று குறிப்பிடுகிறார்.[31]:10 இவ்வாறு மனிதன் விலங்குகளோடு கொண்ட உறவின் தன்மையைப் பொறுத்து விலங்குகளின் "பண்டத்" தன்மை மாறுபடுவதைக் குறிக்கும் வகையில் சமூகவியலாளர் ரோடா வில்கி இவ்விலங்குகளை "உணர்திறன் கொண்ட பண்டம்" என்று வர்ணிக்கிறார்.[32] புவியியலாளர்களான ரோஸ்மேரி-கிளேர் கொலார்ட், ஜெசிகா டெம்ப்சே ஆகியோர் இதையே "உயிருள்ள பண்டங்கள்" என்ற சொல்லையிட்டு விவரிக்கின்றனர்.[33]
விலங்குகள் மீதான பொதுமக்களின் பொது அக்கறையின் காரணமாக 1990-களில் இருந்து விலங்கு நலனே பண்டமயமாக்கப்பட்டுள்ளது என்று அரசியல் அறிஞர் சாமி டோர்சோனென் உரைக்கிறார்.[34] "அறிவியல் ரீதியில் சான்றளிக்கப்பட்ட இந்த நலன் பொருட்கள் பண்டகச் சங்கிலியின் பல்வேறு முனைகளிலும் உற்பத்தி செய்யப்படுபவையாகவும் விற்கப்படுபவையாகவும் உள்ளன" என்றும் "மற்ற பொருட்களைப் போலவே இவையும் போட்டிக்கு உட்பட்டது" என்றும் கூறுகிறார் அவர்.[34] விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பண்டமாக்கப்படாமல் இருப்பதற்கான உள்ளார்ந்த உரிமை இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் விலங்குகள் பண்டமாக்கப்படுவதை எதிர்ப்பதற்கு வலுவான நடைமுறை காரணங்கள்—அவை கொடூரமானதா அல்லது மோசமானவையா என்பதையும் தாண்டி—ஏராளமாக உள்ளன என்று சமூக அறிஞர் ஜேசி ரீஸ் ஆந்திஸ் நிறுவுகிறார்.[35]
வரலாறு முழுவதும் விலங்குகள் சுரண்டப்பட்டு அடக்கியாளப்பட்டதே மனிதர்களும் அவ்வண்ணமே சுரண்டப்பட்டு அடக்கியாளப்பட்டதற்குக் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[4]:198 இவை ஒன்றுக்கொன்று வலுசேர்ப்பதாக அமைந்தவை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.[4]:198 இதன் விளைவாக அரசு அதிகாரங்கள் ஒரு வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுகையில்—அதாவது, எடுத்துக்காட்டாக, பழைய பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாற்றமடைதல்—மாற்றமடைந்த அதிகார வடிவங்கள் "வன்முறையிலும் ஒடுக்குமுறையிலும்" தங்களது முந்தைய அதிகார வடிவங்களுக்குச் சற்றும் சளைக்காதவையாகவே இருந்தன.[4]:198 எடுத்துக்காட்டாக, அரசு ஆதரவு பெற்று இலாபநோக்குடன் செயல்பட்ட முதலாளித்துவ விரிவாக்கம்தான் வட அமெரிக்காவின் பழங்குடி மக்களும் விலங்குகளும் பெருமளவில் கொல்லப்பட்டதற்கும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் காரணமாக இருந்தது.[4]:199 விலங்குப் பண்ணை முறைகளின் உருவாக்கமானது அப்பண்ணை விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வேண்டி அமெரிக்காவின் பூர்வீக நிலங்களுக்குள் ஊடுருவி அங்குள்ள மக்களை வன்முறை கொண்டு இடம்பெயரச்செய்தது.[4]:199 இதன் பின்னர் அங்கு பல இறைச்சிக்கூடங்கள் கட்டப்பட்டன. [4]:199 இவ்வதைகூடங்கள் புலம்பெயர்த தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியே விரிவடைந்தன.[4]:199 இவர்கள் பொரும்பாலும் உணவின்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டுடனும், பணிச்சுமையால் பிழிந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இருப்பிட வசதியற்றவர்களாகவும் இருந்தனர்.[4]:199 வதைகூடங்களில் தங்களைக் கொண்டே "தொடர்ச்சங்கிலியாக விலங்குகள் கோடிக்கணக்கில் இறைச்சிக்காகப் படுகொலை செய்யப்படுவதை" அறிந்தவர்கள் என்ற வகையிலும் "கொல்லப்படும் விலங்குகள் அச்சத்தில் கோரமாக மரண ஓலமிட்டு அலறுவதைக்" கேட்டவர்கள் என்ற வகையிலும் இத்தொழிலாளர்கள் இறைச்சிக்கூட வேலையின் "கொடூரமான" தன்மையை உணர்ந்தவர்களாகவே இருந்தனர்.[4]:199 இதன் விளைவாகவே இப்புலம்பெயர்த் தொழிலாளர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருந்தனர்.[4]:199 1980-களில் தொடங்கி, கார்கில், கானக்ரா, டைசன் ஃபுட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய உணவு நிறுவனங்கள் தொழிலாளர்களது நலனைச் சற்றும் கருத்தில் கொள்ளாது தங்களது பெரும்பாலான வதைகூடங்களைத் தொழிற்சங்க முறைகளற்ற தென்பகுதி கிராமப்புறங்களுக்கு நகர்த்தின.[4]:205 பிரேசிலிய அமேசான் பகுதிகளில் சுமார் 25,000 பேர் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மெய்நிகர் அடிமைகளாக வேலை செய்து வருவதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.[36]
வதைகூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றி தனது நூலில் விரிவாக விவரிக்கிறார் நோஸ்கே.[3]:16 அமெரிக்காவிலும் கனடாவிலும் வதைகூடங்களில் விலங்குகளைக் கொன்று இறைச்சி தயாரிக்கத் தேவைப்படும் மலிவுவிலைக் கூலியாட்களாக அங்குள்ள சிறைக் கைதிகள் பயன்படுத்தப்படுவதை ஏமி ஜே. பிட்ஸ்ஜெரால்ட் சுட்டிக்காட்டுகிறார்.[3]:17 இச்செயலின் மூலம் விலங்குகளும் "மிருகமாக்கப்பட்ட" மனிதர்களும் குறியீடாக இணைக்கப்படுவதாகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட சிறைக்கைதிகள் நிரந்தரப் பொருளாதார வளங்களாகப் பயன்படுத்தப்படுவதை நியாயப்படுத்துவதாகவும் உள்ள காரணத்தால் இதனை ராபர்ட் ஆர். ஹிக்கின்ஸ் உள்ளிட்ட அறிஞர்கள் "சுற்றுச்சூழல் நிறவெறி" என்று கருதுகின்றனர்.[3]:17 இது உளவியல்-சமூகவியல் ரீதியாக இத்தொழிலாளர்களையும் அவர்களது உழைப்பையும் கொடூரமயமாக்கும் போக்கையே வெளிப்படுத்துகிறது என்றும் இது அக்கைதிகளின் மறுவாழ்வை முற்றிலுமாகச் சிதைத்துவிடுகிறது என்றும் பிட்ஸ்ஜெரால்ட் கூறுகிறார்.[3]:17
அமெரிக்க வதைகூடத் தொழிலாளர்கள் சராசரி அமெரிக்கத் தொழிலாளியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பெரிய அளவிலான காயங்களுக்கு ஆளாகின்றனர்.[37] அமெரிக்க தேசிய வானொலியான NPR அறிக்கையின்படி, மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு பன்றி வதைகூடத் தொழிலாளர்களுக்கும் மாட்டு வதைகூடத் தொழிலாளர்களுக்கும் சராசரியை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம்.[38] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வதைகூடத் தொழிலாளர்களுக்கு பணியிட விபத்துகளின் காரணமாக உடலுறுப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சை நிகழ்வு ஒரு வாரத்திற்கு இரண்டு என்ற அளவில் நடந்தேறுகின்றன என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.[39] சராசரியாக மாதத்திற்கு ஒருமுறையேனும் அமெரிக்காவின் மிகப்பெரிய இறைச்சி உற்பத்தியாளரான டைசன் ஃபுட்ஸின் ஊழியர் ஒருவருக்கு ஒரு விரலோ அல்லது கைகால்களோ துண்டிக்கப்படுகிறது.[40] இங்கிலாந்தில் ஆறு வருட காலப்பகுதியில், 78 வதைகூடத் தொழிலாளர்கள் தங்களது விரல்கள், விரல் பகுதிகள் மற்றும் கைகால்களை இழந்துள்ளனர் என்றும் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் குறைந்தது 4,500 பேர் பணியிட விபத்துகளால் மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது என்றும் "தி ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்" என்ற புலனாய்வுப் பத்திரிகைப் பணியகம் தெரிவித்துள்ளது.[41] தி இத்தாலியன் ஜர்னல் ஆஃப் ஃபுட் ஸேஃப்டி ஆய்விதழில் வெளிவந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வதைகூடத்தில் விலங்குகளின் தொடர்ச்சியான அலறல்களிலிருந்து வதைகூடத் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டி காதுகளுக்குப் பாதுகாப்புக் கருவிகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.[42] 2004-ஆம் ஆண்டு தி ஜர்னல் ஆஃப் ஆக்குபேஷனல் அண்ட் என்வைரோன்மெண்டல் மெடிசின் ஆய்விதழில் வெளிவந்த ஆய்வில், நியூசிலாந்து இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் "நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களாலும் அனைத்து காரணங்களாலும் இறப்பதற்கான ஆபத்து அதிகப்படியாகக் காணப்படுகின்றன" என்று கண்டறியப்பட்டுள்ளது.[43]
வதைகூடத் தொழிலாளர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்பினை ஐஸ்னிட்ஸ் தனது நூலில் கீழ்வருமாறு விவரிக்கிறார்:
“ | வதைத் தொழிலில் உடல் நலத்திற்கு விளையும் கேடுகளைவிட மிக மோசமானது மனதளவில் ஏற்படும் பாதிப்புகளே ஆகும். சில காலங்கள் நீங்கள் வதைகூடத்தின் கொலைக்களத்தில் [பன்றிகள் கொல்லப்படும் இடத்தில்] வேலை செய்தால்—அது உங்களைக் கொலை செய்ய மட்டுமே அனுமதிக்குமேயன்றி அது குறித்துக் கவலைக் கொள்ள அனுமதிக்காது. உங்களுடன் இரத்தக் களத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பன்றியைப் பார்த்து, 'கடவுளே, இது ஒன்றும் அவ்வளவு மோசமான விலங்கு அல்லவே' என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அதைச் செல்லமாகத் தடவிக்கொடுக்கவும் துவங்கலாம். கொலைக்களத்தில் பல முறை பன்றிகள் ஒரு நாய்க்குட்டியைப் போல என்னிடம் வந்து என் கைகளை முகர்ந்து நக்கிக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இரண்டொரு நிமிடங்களில் அவை எனது அதே கைகளால் கொல்லப்பட்டிருக்கும் — ஒரு இரும்புக் குழாயால் அவைகளை அடித்துக் கொல்வேன். இது குறித்து என்னால் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. | ” |
— கெயில் ஏ. ஐஸ்னிட்ஸ், [44] |
விலங்குகளை வெட்டுவதும், வளர்ப்பதும், அவற்றை இறைச்சிக்காக வதைகூடத்திற்கு கொண்டு செல்வதும் என அனைத்துமே அதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மன அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் தந்து அவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளைத் தரவல்லவை.[45][46][47][48][49][50][51][52][53][54][55][56] ஆர்கனைஸேஷன் என்ற ஆய்விதழில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு ஒன்று, "44 வெவ்வேறு தொழில்களில் உள்ள 10,605 டேனிஷ் தொழிலாளர்களின் தரவுகளின் பின்னடைவு பகுப்பாய்வுகள், வதைகூடத் தொழிலாளர்கள் உடலளவிலும் மனதளவிலும் தொடர்ச்சியாக நலம்குன்றி வாழ்கின்றனர் என்றும் கூடுதலான எதிர்மறை எண்ணங்களுடனும் செயற்பாடுகளுடனும் வாழ்கின்றனர் என்றும் நிறுவுகின்றன" என்று கூறுகிறது.[57] கொலராடோ பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் "வதைகூடத் தொழிலாளர்கள் 'குற்றவுணர்வால் ஏற்படும் அதிர்ச்சிகரமான மன அழுத்தம்' எனப்படும் ஒரு வகையான பின்னதிர்ச்சி மனவழுத்த (PTSD) நோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்று அன்னா டோரோவ்ஸ்கிக் கூறுகிறார்.[58] குற்றவியல் நிபுணரான ஏமி ஃபிட்ஸ்ஜெரால்டின் 2009-ஆம் ஆண்டு ஆய்வில் "மற்ற அனைத்துத் தொழில்களைக் காட்டிலும் இறைச்சித் தொழிலில் ஈடுபடுவதே வன்குற்றங்களுக்கான கைதுகள், கற்பழிப்புக்கான கைதுகள், இதர பாலியல் குற்றங்களுக்கான கைதுகள் உட்பட மொத்தக் கைது விகிதங்கள் அதிகமாக இருக்கக் காரணம்" என்று குறிப்பிடுகிறார்.[59] PTSD ஜர்னல் ஆய்விதழில் அறிஞர்கள் விளக்குவது போல், "இந்த பணியாளர்கள் பன்றிகள், பசுக்கள் போன்ற சாதுவான ஜீவன்களைக் கொல்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தச் செயலைச் செய்வதற்கு அத்தொழிலாளர்கள் தங்களது வதைச் செயல்களிலிருந்தும் தம் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அப்பாவி ஜீவன்களிலிருந்தும் சற்றும் தொடர்பற்றவர்களாக தங்களை ஆக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த வகையான உணர்ச்சி முரண்பாடுகள் அத்தொழிலாளர்களிடம் குடும்ப வன்முறை, சமூக விலகல், பதட்டம், போதைப்பொருள் பழக்கம், குடிப்பழக்கம், PTSD எனப்படும் பின்னதிர்ச்சி மனவழுத்த நோய் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும்".[60]
அமெரிக்காவில் வதைகூடங்கள் குழந்தைத் தொழிலாளர்களையும் ஆவணங்களின்றிக் குடியேறியவர்களையும் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தி அவர்களைச் சுரண்டுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.[61][62] மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமெரிக்காவில் வதைகூடத்தில் பணியமர்த்தப்படும் செயலையே 2010-ஆம் ஆண்டு ஒரு மனிதவுரிமைக் குற்றமாக விவரித்தது.[63] வதைகூடத் தொழிலாளர்கள் ஓய்வு இடைவேளை ஏதும் அனுமதிக்கப்படாமலும், அடிக்கடி டயப்பர்கள் அணிய வேண்டிய நிலைக்கு ஆட்படுத்தப்பட்டும், குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டும் இருந்ததை ஆக்ஸ்ஃபாம் அமெரிக்காவின் தனது அறிக்கையொன்றில் வெளியிட்டது.[64]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.