From Wikipedia, the free encyclopedia
ஒரு முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்குள் பண்டமாக்கல் (commodification) என்பது பொருட்கள், சரக்குகள், சேவைகள், சிந்தனைகள், இயற்கை, தனிப்பட்ட/தனியார் தகவல்கள், மக்கள், விலங்குகள் போன்றவற்றை வர்த்தகப் பண்டங்களாக மாற்றுவதாகும்.[1][2][3][4][5] அர்ஜுன் அப்பாதுரையின் கூற்றுப்படி ஒரு பண்டம் என்பது மிக அடிப்படையான விளக்கத்தின்படி "பரிமாற்ற நோக்கத்திற்காகப் பயன்படும் பொருள்" அல்லது "பொருளாதார மதிப்புள்ள ஒரு பொருள்" ஆகும்.[6]
தண்ணீர், கல்வி, தரவு, தகவல், அறிவு, மனித வாழ்க்கை, விலங்கு வாழ்க்கை போன்ற சில விஷயங்களைப் பண்டங்களாகக் கருதக்கூடாது என்ற அடிப்படையில் பண்டமாக்கல் பெரும்பாலும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.[4][5] இருப்பினும், முதலாளித்துவம் நிலைபெற சந்தையின் நிலையான தொடர் வளர்ச்சி தேவைப்படுகிறது என்பதால், முதலாளித்துவப் பொருளாதாரத்தால் அதன் தொடர் வளர்ச்சிக்காக வேண்டி புதிய பொருட்கள் தொடர்ச்சியாகப் பண்டமாக்கப்படுகின்றன.[7]
பண்டமாக்கல் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்லின் ஆரம்பகாலப் பயன்பாடு 1975-ம் ஆண்டிலிருந்து இருப்பதாக ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் பதிவாகியுள்ளது.[8] குறியியலில் விமர்சனப் பேச்சுப் பகுப்பாய்வின் வளர்ச்சியின் காரணமாக பண்டமாக்கல் என்னும் கருத்தாக்கத்தின் பயன்பாடு பொதுவானதாகிவிட்டது.[9]
பண்டமாக்கல் (commodification) என்ற சொல் பண்டப்படுத்துதல் (commoditization) என்ற சொல்லிலிருந்து சற்றே வேறுபட்டாலும்[10] இவ்விரு சொற்களும் ஏறக்குறைய ஒன்றாகவே பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படாத பொருட்களையும் வர்த்தகப் பண்டமாக மாற்றும் செயல்முறையை விவரிக்கவும் பண்டமாக்கல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது; பண்டமாக்கல் மற்றும் பண்டப்படுத்துதல் ஆகிய சொற்களின் வேறுபாட்டிற்கு அவற்றின் மானுடவியல் பயன்பாட்டை ஒப்பிடுக.[11][12]
இருப்பினும் பல அறிஞர்கள் இவ்விரு சொற்களையும் பல இடங்களில் (இக்கட்டுரையில் செய்யப்பட்டது போல்) வேறுபடுத்திக் காட்டுகின்றனர். சமூகச் சூழல்களில் வணிகமல்லாத ஒரு பொருள் வணிகமாக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் (அதாவது "வணிகத்தால் சிதைக்கப்பட்டது" என்ற தோரணையில்) பண்டமாக்கல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வணிகச் சூழல்களில் ஏற்கனவே உள்ள ஒரு பொருளின் தேவை அதிகரித்து அதற்கான வழக்கமான சந்தை ஒரு பண்டச் சந்தையாக மாறி அதன் மூலம் அப்பொருளும் மற்ற பண்டங்களும் ஒன்றுக்கொன்று மாறக்கூடியவையாக ஆகி கடுமையான விலைப் போட்டி இருக்கும் வகையில் மாறுவதை. வதைக் பண்டப்படுத்துதல் என்ற சொல் குறிக்கிறது. சுறுங்கக் கூறின், "இன்றைய சூழலில் கணினியின் நுண்செயலிகள் பண்டப்படுத்தப்படுகின்றன, காதல் பண்டமாக்கப்படுகிறது."[13]
இன்றைய உலகில் வணிகமயமாக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் கருத்துக்கள் தேசப்பற்று,[14] விளையாட்டு,[15] நெருக்கம்,[16] மொழி,[17] இயற்கை,[18] உடல்[19] என்பன போன்ற பரவலான விடயங்களும் அடங்கும்.
அடிமைத்தனத்தில்[20] தொடங்கி வாடகைத் தாய்மை[21][22] வரை பல்வேறு சூழல்களில் மனிதர்கள் பண்டமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியன் பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது ஒருவகையாக மனிதப் பண்டமாக்கலின் எடுத்துக்காட்டாக விவாதிக்கப்படுகிறது.[23][24][25] கன்னித்தன்மை ஏலங்கள் (virginity auctions) சுயபண்டமாக்கலுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.[26] மனித உறுப்பு வர்த்தகம், "கருப்பைப் பண்டமாக்கல்" என்ற பெயரில் அறியப்படும் கட்டண வாடகைத் தாய் (paid surrogacy), மனிதக் கடத்தல் போன்றவற்றில் மனிதப் பண்டம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.[1][2][27] மனித கடத்தலின் ஒரு பகுதியான அடிமை வர்த்தகம் என்பது மக்களைப் பண்டமாக்குவதன் ஒரு வகையாகும். ஒரு கூலிச் சந்தையில் ஒரு முதலாளியிடம் தங்கள் உழைப்பினை விலை பேசுகையில் மக்கள் பண்டமாக்கப்படுகிறார்கள் அல்லது "பொருட்களாக மாற்றப்படுகிறார்கள்" என்று காஸ்டா எஸ்பிங்-ஆன்டர்சன் கூறுகிறார்.[28]
விலங்குகளை பண்டமாக்கல் என்பது பண்டமாக்கலின் மிகவும் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாகும். விலங்குகளை மனிதன் வளர்க்கத் தொடங்கிய காலத்திலிருந்து விலங்குப் பண்டமாக்கலை அறிய முடிகிறது.[29]:208 இது விலங்குகளை உணவுக்காகவும், மருந்துக்காகவும், ஒய்யார மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்காகவும், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காகவும், சுமைதாங்குதல் உள்ளிட்ட இன்னபிற உழைப்புக்காகவும், போக்குவரத்துக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், வனவிலங்கு வர்த்தகத்திற்காகவும், செல்லப்பிராணி வளர்ப்புக்காகவும்[30][31] என விலங்கடிமைத்தனத்தின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும்.[32]:xvi–xvii உணவுக்காக மனிதரல்லா விலங்குகளைப் பண்டமாக்கல் என்பது மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலனைக் காட்டிலும் "ஏகபோக சார்பு நிதி நலன்களுக்கு" முன்னுரிமை அளிக்கும் முதலாளித்துவ அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[33] ஒவ்வொரு ஆண்டும் 200 பில்லியனுக்கும் அதிகமான நிலவாழ் விலங்குகளும் நீர்வாழ் விலங்குகளும் மனித நுகர்வுக்காகக் கொல்லப்படுகின்றன. அறிவியல் அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்கள் இச்செயலை "விலங்கு இனப்படுகொலை" (animal holocaust) என்று அழைக்கின்றனர்.[34][35]:29-32, 97[36] தானியங்களை மனித நுகர்வுக்கு நேரடியாகப் பயன்படுத்துவதை விட்டு அவற்றை விலங்குகளுக்கு ஊட்டி அவற்றைக் கொழுக்கவைத்து பின்னர் அவற்றிலிருந்து இறைச்சி உற்பத்தி செய்யப்படும் செயலானது நிலம் மற்றும் பிற வளங்களை மாபெரும் அளவில் விரயமாக்குவதே உலகெங்கிலும் ஊட்டச்சத்து குறைபாடு, பஞ்சம், பட்டினிச்சாவு ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.[29]:204
பண்டத்தைப் பற்றிய மார்க்சியப் புரிதல் அதன் வணிகப் பொருளிலிருந்து வேறுபட்டதாகும். கார்ல் மார்க்ஸின் நூல் முழுவதும் பண்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பண்டத்தை முதலாளித்துவத்தின் மூலக்கூற்று வடிவமாகவும், அதன் அரசியல்-பொருளாதார அமைப்பினைப் பகுப்பாய்வு செய்வதற்கான முக்கிய தொடக்கப் புள்ளியாகவும் மார்க்ஸ் கருதினார்.[37] பண்ட வெறித்தனம் என்றும் அந்நியத்தனம் என்றும் பலவாறாக பண்டமாக்கலின் சமூகத் தாக்கத்தை மார்க்ஸ் பெரிய அளவில் விமர்சித்துள்ளார்.[38]
ஒரு பொருள் பண்டமாக மாற்றப்படுவதற்கு முன்பு அதற்கென்று ஒரு "குறிப்பிட்ட தனிப்பட்ட பயன்பாட்டுத் தன்மை" உண்டு.[7] பண்டமாக மாற்றப்பட்ட பிறகு அதே பொருளுக்கு வேறுவகையான தன்மை வந்துவிடுகிறது—அதாவது மற்றொரு பொருளுடன் அப்பண்டத்திற்குறிய பண்டமாற்று மதிப்பு என்ற அளவுகோலில்.[7] பண்டத்தின் இந்த புதிய மதிப்பு என்பது அப்பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்பட்ட நேரத்திலிருந்து கணக்கிடப்படுகிறது என்றும் மேலும் இம்மதிப்பானது அப்பண்டத்தின் அறம்சார்த் தன்மை, அப்பண்டம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அப்பண்டத்தின் வெளிப்புறத் தோற்றவியல் ஆகிய தன்மைகளை கருத்தில் கொள்ளப்படாதவைகளாகவும் வழக்கற்றுப் போனவைகளாகவும் ஆக்கிவிடுகிறது என்றும் மார்க்ஸ் கூறுகிறார்.[7]
எல்லாமே இறுதியில் பண்டமாக்கப்பட்டுவிடும் என்று மார்க்ஸ் கூறினார். "அதுவரை வெளிப்படுத்தப்பட்ட ஆனால் ஒருபோதும் பரிமாறிக்கொள்ளப்படாத, கொடுக்கப்பட்ட ஆனால் விற்கப்படாத, பெறப்பட்ட ஆனால் ஒருபோதும் வாங்கப்படாத விஷயங்களான அறம், அன்பு, மனசாட்சி ஆகிய அனைத்தும் இறுதியாக வணிகத்தில் இருத்தப்படும்" என்று கூறினார் மார்க்ஸ்.[39]
Seamless Wikipedia browsing. On steroids.