From Wikipedia, the free encyclopedia
ஹோலோசீன் பேரழிவு (Holocene extinction) என்பது தற்போதைய ஹோலோசீன் சகாப்தத்தில் (குறிப்பாகக் கூறின் இன்னும் அண்மைக்காலமான ஆந்திரோபோசீன் காலகட்டத்தில்) மனித நடவடிக்கைகளின் விளைவாக நிகழும் உயிரினங்களின் தொடர்ச்சியான அழிவு நிகழ்வாகும்.[3][4][5][6] இது ஆறாவது பெருமழிவு என்றும் மானுடப் பெருமழிவு என்றும் குறிப்பிடப்படுகிறது.[7][8] இப்பேரழிவு பல பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், தாவரங்கள் மட்டுமின்றி[9][10][11] பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன், முதுகெலும்பிலிகள் எனப் பலதரப்பட்ட விலங்குகளையும் உள்ளடக்கியது. பவளப் பாறைகள், மழைக்காடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாழ்விடங்களின் பரவலாக அழிவையும் உள்ளடக்கிய இப்பேரழிவில், பல இடங்களில் நிகழும் பெருமழிவுகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் போய்விடுகின்றன. பெருமழிவிற்கு ஆட்பட்ட பல உயிரினங்கள் அவை அழியும் தருவாய் வரை அறிவியலால் இனங்கண்டு கொள்ளப்படாமலேயே இருந்து விடுவதும், அறிவியலால் இனங்காணப்பட்ட உயிரினங்களின் பெருமழிவு இன்னும் அறியப்படாமலிருப்பதும் பெரும்பாலான உயிரினங்களின் பெருமழிவுகள் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். இப்பேரழிவில் உயிரினங்களின் தற்போதைய அழிவு விகிதம் இயற்கையான பின்னணி அழிவு விகிதங்களை விட 100 முதல் 1,000 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[15]
கடைப் பனிப்பாறை காலத்தின் (Last Glacial Period) முடிவில், அதாவது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்னர், தொடங்கிய பெருவிலங்குகள் (megafauna) எனப்படும் மிகப் பெரிய நிலவாழ் விலங்குகளின் அழிவே ஹோலோசீன் பேரழிவின் துவக்கப் புள்ளியாக அறியப்படுகிறது. ஆரம்பகால மனிதன் புவி முழுவதும் பரவி வேட்டையாடத் துவங்கியது முதல் ஆப்பிரிக்க நிலப்பரப்புக்கு வெளியே மனிதர்களுடன் இணைந்து பரிணமிக்காத பெருவிலங்குகள் மனிதனின் வேட்டையாடலுக்கும் மனிதனால் அந்நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளால் நடந்த வேட்டையாடலுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் அழியத்துவங்கின.[16][17] பல ஆப்பிரிக்க விலங்கினங்கள் இவ்வாறு ஹோலோசீன் காலகட்டத்தில் முற்றிலுமாக அழியத்துவங்கிய போதும், சில பெருவிலங்குகள் கடந்த சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருமளவில் பாதிக்கப்படாமலிருந்தன.[18] ப்ளீஸ்டோசீன்–ஹோலோசீன் எல்லைகோட்டுக்கு அருகில் நிகழ்ந்த இந்த அழிவுகள் குவாட்டர்னரி பேரழிவு நிகழ்வு என்று குறிப்பிடப்படுகின்றன.
பேரழிவின் காலகட்டமானது மனிதகுல தோன்றல் மற்றும் வளர்ச்சியின் காலகட்டத்துடன் மிகவும் ஒத்துப்போவது இங்கு நோக்கத்தக்கது. அப்போதிருந்த சூழலுக்கு வலுசேர்ப்பதாய் மனிதனின் பெருமளவிலான வேட்டையாடல் இருந்தது என்ற கோட்பாட்டினை உயிரியல் அறிஞர்கள் முன்வைப்பதற்கு இதுவே காரணமாக அமைகிறது. மனித வேட்டையாடுதல் எந்த அளவுக்குக் விலங்கினங்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்றாலும், நியூசிலாந்து மற்றும் ஹவாய் போன்றவற்றில் நிகழ்ந்த பேரழிவு நிகழ்வுகள் மனித செயற்பாட்டோடு நேரடியாகத் தொடர்புடையவை என்பது உறுதிபடத் தெரியவந்துள்ளது. மனித நடவடிக்கைகளுடன் கூட காலநிலை மாற்றமும், குறிப்பாக ப்ளீஸ்டோசீனின் இறுதிக்கட்டத்தில், பெருவிலங்குகளின் அழிவுகளுக்கு உந்து காரணியாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சூழலியல் ரீதியாக மனிதகுலம் என்பது இடைவேளையின்றி மற்ற உயர் வேட்டையின விலங்குகளை கொன்று நுகர்ந்து அதன் வாயிலாக உலக அளவில் உணவு வலைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு வரலாறுகாணா "உலகளாவிய இனக்கொல்லி" என்றே அறியப்படுகிறது.[19] ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா, சிறு தீவுகள் என உலகின் அனைத்து நிலப்பகுதிகளில் மட்டுமின்றி ஒவ்வொரு கடற்பகுதிகளிலும் உயிரினங்கள் மனிதகுலத்தால் அழிக்கப்பட்டு வந்துள்ளன. மொத்தத்தில், ஹோலோசீன் பேரழிவானது சுற்றுச்சூழலின் மீதான மனிதகுலத்தின் தாக்கத்தோடு முழுமையாக இணைக்கப்படுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் ஹோலோசீன் பேரழிவிற்கு அடிக்கோலிடும் முதன்மை இயக்கிகளாக இறைச்சி நுகர்வு,[25] மனித மக்கட்தொகை அதிகரிப்பு, மற்றும் அதன் விளைவாக அதிகரித்து வரும் தனிநபர் நுகர்வு[29] ஆகியவை அறியப்படுகின்றன. காடழிப்பு,[3] பெருகிவரும் மீன்பிடிப்பு, கடல் அமிலமயமாக்கல், சதுப்புநில அழிப்பு,[30] நீர்நில வாழ்வன எண்ணிக்கைக் குறைவு[31] போன்றவை உலகளாவிய விலங்கினப் பெருமழிவிற்கு வழிவகுக்கும் அவற்றின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு பிரதான எடுத்துக்காட்டுகளாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.