விலங்குகளின் பயன்பாட்டை நிராகரிக்கும் ஒரு தத்துவம் From Wikipedia, the free encyclopedia
நனிசைவம் (Veganism) விலங்குப் பொருட்களிலிருந்து, குறிப்பாக உணவுமுறைகளில், விலகியிருக்கும் செயற்பாடாகும்; தொடர்புள்ள மெய்யியலாக இது விலங்குகளை வணிகப் பொருட்களாக கருதுவதை மறுக்கிறது.[10] இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர் (vegan) எனப்படுகின்றனர். சில நேரங்களில் நனி சைவத்தின் பல வகைப்பாடுகளுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. உணவுமுறை நனிசைவர்கள் (அல்லது கடுமையான தாவர உணவு முறைகள்) விலங்குப் பொருட்களை விலக்கும்போது இறைச்சியை மட்டுமன்றி முட்டையுணவுகள், பால் பொருட்கள் மற்றும் பிற விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களையும் தவிர்க்கின்றனர்.[11] நனிசைவ உணவுமுறையை பின்பற்றுவதோடன்றி நனிசைவத்தின் மெய்யியலை வாழ்வின் பிற கூறுகளிலும் விரிவாக்கி விலங்குப் பொருட்களை உடை போன்ற மற்ற வாழ்முறைகளிலும் தவிர்ப்பவர்கள் நன்னடத்தை நனிசைவர்கள் எனப்படுகின்றனர்.[12] தொழில்முறை விலங்குப் பண்ணைகள் சுற்றுச்சூழலின் பேண்தகுநிலையை பாதிக்கிறது என்ற காரணத்தால் விலங்குப் பொருட்களை தவிர்ப்பவர்களை சுற்றுச்சூழல் நனிசைவர் எனக் குறிப்பிடுகின்றனர்.[13]
நனிசைவம் | |
---|---|
![]() ![]() ![]() ![]() வலச்சுற்றாக மேலிருந்து இடதுபுறமாக: கோதுமை குளுட்டென் பிட்சா; வறுத்த முளைப்பயிர், டோஃபூவும் பாஸ்தாவும்; கோக்கோ–அவொகாடோ பிரவுனி; பூண்டு-அவரை உணவு | |
விவரிப்பு | விலங்கு பொருட்களின் பயன்பாட்டை நீக்குதல், குறிப்பாக உணவுமுறையில் |
துவக்க கால முன்மொழிபு | |
வீகன் என்ற சொல்லாக்கம் | டோனால்ட் வாட்சன், நவம்பர் 1944[9] |
நனிசைவர்கள் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, பால் பண்ணைப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, தயிர் ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். சில நனிசைவர்கள் தேனும் உண்பதில்லை.[14] இவர்கள் தோல்சரக்கு நுட்பியல், கம்பளி, இறகுகள், எலும்பு, அல்லது முத்து இவற்றைக் கொண்ட பொருட்களையும் பாவிப்பதில்லை. விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டவற்றையும் தவிர்க்கின்றனர். விலங்குகளின் உரிமைகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் அதற்காக போராடுபவர்களாகவும் உள்ளனர்.
நனிசைவர்கள் பழங்கள், காய்கனிகள், அவரைகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் ஆகியவற்றையும் இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நனிசைவ இனிப்புகள், நனிசைவ பாலடைக்கட்டி, நனிசைவ அணிச்சல்களை உணவாகக் கொள்கின்றனர்.
நன்கு திட்டமிடப்பட்ட நனிசைவ உணவுமுறைகள் இதய நோய்கள் உள்ளிட்ட சில வகையான நாட்பட்ட நோய்களுக்குத் தீர்வாகிறது.[15][16][17][18][19] அனைத்து அகவையினருக்கும் ஏற்ற உணவுமுறையாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. குழவிப் பருவத்திலும் கருவுற்ற காலங்களிகளிலும் இதனை அமெரிக்க ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் அகாதமி,[20] கனடிய உணவுமுறையாளர்கள்,[21] பிரித்தானிய உணவுமுறையாளச் சங்கம்[22] பரிந்துரைக்கின்றனர். ஆனால் செருமானிய ஊட்டச்சத்து சமூகம் நனிசைவ உணவுமுறைகளை குழந்தைகளுக்கும் வளர்சிதை மாற்றக்கால சிறாருக்கும் கருவுற்ற பெண்களுக்கும் தாய்ப்பாலூட்டுவோருக்கும் ஏற்கவில்லை. நனிசைவ உணவுமுறையில் நார்ச்சத்து, மக்னீசியம், இலைக்காடி, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து ஈ, இரும்பு, ஃபைட்டோவேதிகள் கூடுதலாக உள்ளன; உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்டிரால், நீள்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்து டி, கல்சியம், துத்தநாகம், உயிர்சத்து B12 ஆகியன மிகக்குறைவாகவே உள்ளன.[23] சமவிகிதமில்லா நனிசைவ உணவுமுறை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகள் வரலாம்.[23][24] [25][26][27] இத்தகைய சில ஊட்டச்சத்துக் குறைகளை சரிக்கட்ட செறிவூட்டிய உணவுகளோ அல்லது வழமையாக உணவுக் குறைநிரப்பிகளை எடுப்பதோ கட்டாயமாகும்.[23][28] குறிப்பாக உயிர்ச்சத்து B12 குறைதல் குருதிக் குறைபாடுகளுக்கும் தொடர்ந்த மீட்கவியலா நரம்புமண்டல சேதத்திற்கும் காரணமாவதால் மாத்திரையாக B12 நிரவல் மிக முக்கியமானது.[25][29][30]
டோனால்டு வாட்சன் 1944இல் வீகன் என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். முதலில் பால்பொருட்களில்லா தாவர உணவுமுறை என்ற பெயரை பயன்படுத்தினார். 1951 முதல் வீகன் சமூகம் "விலங்குகளை தன்னலப்படுத்தாது மனிதன் வாழவேண்டும் என்ற சித்தாந்தமாக" இதனை வரையறுத்தது.[31] 2010களில் நனிசைவத்தில், குறிப்பாக பிந்தைய ஆண்டுகளில் ஆர்வம் மேலோங்கியது. கூடிய நனிசைவ கடைகள் திறக்கப்பட்டன; பல நாடுகளிலும் பல்பொருளங்காடிகளிலும் உணவகங்களிலும் நனிசைவ விருப்பத்தேர்வுகள் கிடைக்கலாயின.
சில நனிசைவர்கள் சமைக்காத உணவுகளையே உண்கின்றனர்; இவர்கள் பச்சைக்கறி சைவர்கள் எனப்படுகின்றனர்.
மேலும் சிலர் எந்த தாவரத்தையும் கொல்லாமலோ பாதிப்பின்றியோ அறுவடை செய்யப்படும் கீழே விழுந்த பழங்கள் போன்றவற்றை மட்டுமே உண்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.