From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் மத்தியகால இராச்சியம் (Middle Kingdom of Egypt) (இது எகிப்திய இராச்சியத்தின் ஒருங்கிணைப்புக் காலம் என்றும் அறியப்படுகிறது). கிமு 2050 முதல் 1650 முடிய 400 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட இராச்சியம் ஆகும். பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப், மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்து, கிமு 2050-இல் மத்தியகால இராச்சியத்தை நிறுவினார்.[1]
கிமு 2055–கிமு 1650 | |||||||||
தலைநகரம் | தீபை, இட்ஜ்தாவி | ||||||||
பேசப்படும் மொழிகள் | பண்டைய எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | தெய்வீக முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• கிமு 2061 – 2010 | இரண்டாம் மெண்டுகொதேப் (முதல்) | ||||||||
• கிமு 1806 | நான்காம் அமெனம்ஹத் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 2055 | ||||||||
• முடிவு | கிமு 1650 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
மத்தியகால எகிப்திய இராச்சியத்தை, எகிப்தின் பதினொன்றாம் வம்சம் மற்றும் பனிரெண்டாம் வம்சத்தினர் ஆண்ட காலப் பகுதிகளாக பிரிக்கலாம். 11வது வம்சத்தினர் தீபை நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தை ஆண்டனர். 12-வது வம்சத்தினர் லிஸ்டு நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். மத்தியகால எகிப்திய இராச்சியத்தில் ஒசைரிஸ் கடவுள் மக்களிடையே புகழ்பெற்றது.[1][2]
கிமு 2181-இல் பழைய எகிப்து இராச்சியம் சீர்குலைவடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய இராச்சியம் முழுவதும் பல சிற்றரசுகள் கிளைத்தன. இக்காலத்தை எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் என்பவர் [3] எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் முடிவில் எகிப்தின் பத்தாம் வம்சம் மற்றும் பதினொன்றாம் வம்ச மன்னர்கள், எகிப்து இராச்சியத்தை கைப்பற்றும் போட்டியில் களத்தில் நின்றனர். தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு தெற்கு எகிப்தை ஆண்ட 11-வது அரச மரபின் மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப் [4], வடக்கு எகிப்தை ஆண்டு கொண்டிருந்த 10-வது வம்சத்தினரை[4] வென்று கிமு 2055ல் தீபை நகரத்தில் அரியணை ஏறினார்.[5] இவர் எகிப்தை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் ஆண்டார். இரண்டாம் மெண்டுகொதேப் மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்.[6]
இரண்டாம் மெண்டுகொதேப் நுபியா (தற்கால சூடான்) மற்றும் சினாய் தீபகற்பம் மீது படையெடுத்து இராச்சியத்தை விரிவாக்கினார்.[7] எகிப்திய இராச்சியத்தின் மீது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, எகிப்திய வழக்கப்படி, தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டார்.[8] மன்னர் இரண்டாம் மெண்டுகோதேப்பின் 51 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு மறைந்த பின், அவரது மகன் [[மூன்றாம் மெண்டுகோதேப் பார்வோனாக முடி சூட்டிக்கொண்டார்.[7]
பனிரெண்டு ஆண்டுகள் ஆண்ட மூன்றாம் மெண்டுகொதேப், மெசொப்பொத்தேமியா மற்றும் பாரசீக இராச்சியங்களிடமிருந்து எகிப்தை பாதுகாக்க, எகிப்தின் கிழக்கு பகுதியான சினாய் தீபகற்பம் முழுவதிலும் நகரங்களையும், கோட்டைகளையும் கட்டினார்.[7] மேலும் செங்கடலில் போர்க் கப்பல்கள் கட்டும் துறைமுகம் அமைத்தார்.[9] மூன்றாம் மெண்டுகொதேப்பிற்குப் பின் ஆட்சிக்கு வந்த நான்காம் மெண்டுகொதேப்பின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகள் பண்டைய எகிப்திய வரலாற்று குறிப்புகளில் இடம் பெறவில்லை.[10]
எகிப்தை ஆண்ட 12-வது வம்சத்தின் பார்வோன்கள் ஆட்சியில், பண்டைய அண்மைக் கிழக்கின் எதிரிகளிடமிருந்து எகிப்தை காக்க, நுபிய மக்களையும் உள்ளடக்கிய எகிப்திய படைகளுக்கு சிறப்பான போர் பயிற்சி வழங்கப்பட்டது.[11]
11-வது வம்சத்தின் பார்வோன்கள் முக்கியத்துவம் வழங்காத, வடக்கு எகிப்தின் நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளை காக்க, 12-வது வம்ச மன்னர் முதலாம் அமெனம்ஹத் இராணுவப் படைகளை அனுப்பினார்.[12] மேலும் எதிரிகளிடமிருந்து எகிப்தை காக்க, கிழக்கு எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதிகளில் பல அரண்களை நிறுவி எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தினான்.[13] மேலும் பாதுகாப்பிற்காக வடக்கு எகிப்தில் இட்ஜ்தாவி எனும் புதிய தலைநகரை நிறுவினார்.[14]இரண்டாம் மெண்டுகொதேப் போன்று, முதலாம் அமெனம்ஹத் தன்னை எகிப்தின் பார்வோன் என்பதை விளம்பரப்படுத்துவதன் மூலம் தன் ஆதிக்கத்தை பரப்பினார்.[15]
பார்வோன் முதலாம் அமெனம்ஹத் தன் வலிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக, அனைத்து நிலங்களை அரசிடம் பதிவு செய்து கொள்ள வகை செய்தான். மேலும் நிலங்களை குத்தகைக்கு விட்டு நிலக்கிழார்கள் மூலம் வேளாண்மை உற்பத்தியை பெருக்குவதுடன், அரசனுக்கு உறுதுணையாக, உள்ளூர் பகுதியை எதிரிகளிடமிருந்து காத்து, அரசிற்கு அவ்வப்போது எதிரிகளின் நடமாட்டத்தை தெரிவிக்க வகை செய்தான்.[16]
பார்வோன் முதலாம் அமெனம்ஹத், தனது 20-ஆம் ஆண்டு ஆட்சியின் போது, தன் மகன் முதலாம் செனுசுரெத்திற்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.[17]
முப்தாம் ஆண்டு அட்சியின் போது முதலாம் அமெனம்ஹத், ஒரு சதித் திட்டத்தால் கொல்லப்பட்ட பின்னர், அவர் மகன் முதலாம் செனுஸ்ரெத் எகிப்தின் அரியணை ஏறினார். இவர் எகிப்து மீதான லிபியா நாட்டு ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தார்.[18]
மேலும் எகிப்து இராச்சியம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் அமைத்து, உள்ளூர் பூசாரிகளை கோயில்களை பராமரிக்கவும், வழிபாட்டிற்கும் பணியமர்த்தினார்.[19]
இவரது ஆட்சியில் இராணுவப்படைகள் தெற்கு எகிப்தை தாண்டி, தற்கால நூபியாவைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்.[20]
எகிப்தின் மேற்கில் உள்ள பாலவனச் சோலைகளின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, அனதோலியா மெசொப்பொத்தேமியா பகுதிகளுடன் எகிப்தின் வணிகத்தை விரிவுப்படுத்தினார்.[21]
முதலாம் செனுஸ்ரெத் தனது 43-வது ஆண்டின் ஆட்சியின் போது, இரண்டாம் அமெனம்ஹத்தை எகிப்து இராச்சியத்தின் இளவரசனாக முடிசூட்டினார். பின்னர் தனது 46-வது ஆண்டி ஆட்சியின் போது இறந்தார்.[22]
இரண்டாம் அமெனம்ஹத்தின் ஆட்சிக் காலத்தில், எகிப்திய இராச்சியம் அமைதியாக இருந்தது.[21] மெம்பிசு மற்றும் தோட் போன்ற இடங்களின் கோயில் சுவர்களின் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகளின் படி, எகிப்திய இராச்சியம் பண்டைய அசிரியா மற்றும் பிலிஸ்தியர்களுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டதை கூறுகிறது.[23]
33 ஆண்டு கால ஆட்சியின் போது மன்னர் இரண்டாம் அமெனம்ஹத், தன் மகன் இரண்டாம் செனுஸ்ரெத்திற்கு இளவரசு பட்டம் சூட்டினார்.[24] இரண்டாம் செனுஸ்ரெத்தின் 15 ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அவரது மகன் மூன்றாம் செனுஸ்ரெத் அரியணை ஏறினார்.
எகிப்திய மன்னர் மூன்றாம் செனுஸ்ரெத் பெரும் வீரன் ஆவான். வடக்கு எகிப்திலிருந்து, வடக்கு நுபியா வரை செல்வதற்கு நைல் ஆற்றிலிருந்து கால்வாய்களை வெட்டி நீர்வழி தடத்தை அமைத்தார்.[25] இந்த நீர்வழி தடம் வழியாக எகிப்தியர்கள் பல முறை நுபியாவை பகுதியை தாக்கினர்.[25] பல வெற்றிகளுக்குப் பின்னர் மன்னர் சென்சுரேட் கைப்பற்றிய நூபியா பகுதிகளில் வளுவான கோட்டைகளைக் கட்டினார்.[25] மேலும் கோட்டை அதிகாரிகள், எதிரிகளின் நடமாட்டம் குறித்து அடிக்கடி மன்னருக்கு கடிதம் வாயிலாக தகவல்கள் தெரிவித்தனர்.[26] நைல் ஆற்றின் கால்வாய் நீர்வழித்தடங்கள் மூலம், நுபியா நாட்டவர்களை எகிப்தில் அனுமதிக்கப்படவில்லை எனினும், வணிகர்கள் மட்டும் எகிப்தின் கோட்டைகளுக்கு உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டனர்.[27]
மன்னர் மூன்றாம் செனுஸ்ரெத்தின் படைவீரர்கள், மத்திய தரைக் கடலின் கிழக்கே வாழ்ந்த பிலிஸ்தியர்களுடன் போரிட்டு, அவர்களை பாலஸ்தீனப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.[28] மன்னர் சென்சுரேட் மைய ஆட்சியின் நிர்வாகத்தை சீர்திருத்தி வலுப்படுத்தினார். பிரதேச நிர்வாகிகளை விட மைய நிர்வாகிகளுக்கு அதிக அதிகாரம் இருந்தது.[25] எகிப்து இராச்சியம் மேல் எகிப்து, கீழ் எகிப்து, மைய எகிப்து என மூன்று நிர்வாக பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[29] நுபியாவில் வாழ்ந்த எகிப்தியர்கள், பார்வோன் மூன்றாம் செனுஸ்ரெத்திற்கு கோயில் கட்டி, சிலை எழுப்பி எகிப்தின் காவல் தெய்வமாக வழிபட்டனர்.[30]
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத் ஆட்சிக் காலத்தில், எகிப்தின் மத்திய கால இராச்சியம் வேளாண்மை, பொருளாதாரத்தின் உச்சாணிக்கு சென்றது. இவர் காலத்தில் அரச குடும்பத்தினரின் இறந்த உடல்களை மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்துக் காத்தனர். சினாய் தீபகற்பப் பகுதியில் காவல் கூடங்கள், கோட்டைக் கொத்தளங்கள், மதில் சுவர்கள் அதிகமாக நிறுவப்பட்டது.[31]
மூன்றாம் அமெனம்ஹத்தின் 45 ஆண்டு கால ஆட்சிக்குப் பின் நான்காம் அமெனம்ஹத்தின் 9 ஆண்டு கால ஆட்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.[31][32] பார்வோன் நான்காம் அமெனம்ஹெத் ஆட்சியில் நைல் ஆற்றில் ஏற்பட்ட கரை புரண்டு ஓடிய வெள்ள நீரால் எகிப்து இராச்சியத்தின் வேளாண்மை நிலங்கள் அழிந்து, இராச்சியமும் வீழ்ச்சியடையக் காரணமாயிற்று.
நான்காம் அமெனம்ஹத்திற்கு பின் அரியணை ஏறிய பெண் அரசி சோபெக்நெபரு வாரிசு இன்றி இறந்ததால், எகிப்தின் 12-வது வம்சமும், எகிப்தின் மத்தியகால இராச்சியமும் உடனடியாக முடிவிற்கு வந்து, எகிப்தில் இரண்டாம் இடைநிலக் காலம் துவகியது.
மழைக் காலங்களில் கரைபுரண்டு பாயும் நைல் ஆற்றின் நீரால் வளம் எகிப்தின் வேளாண்மை செழித்தது. பழைய எகிப்து இராச்சியம் நைல் ஆற்றின் மிகு வெள்ளத்தால் சீர்குலைந்து, பஞ்சத்தால் அழிந்தது.[33] இதே போன்று எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் பார்வோன் மூன்றாம் அமெனிம்மேத்தின் ஆட்சிக் காலத்தில், நைல் ஆறு அடிக்கடி கரைபுரண்டு பாய்ந்த வெள்ளத்தால் வேளாண்மை மற்றும் குடியிருப்புகள் பாழாயின.[34][35]
எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் பார்வோன்கள் மற்றும் பூசாரிகளின் சிற்பங்கள் கருங்கற்களால் வடிக்கப்பட்டதாகும். இக்கலை கிமு 300களில் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி சோத்தர் காலம் வரை தொடர்ந்தது.[36]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.