From Wikipedia, the free encyclopedia
ஆத்திரேலியத் தொல்குடிகள் (Aboriginal Australians) எனப்படுவோர் ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பு, அதன் பல தீவுகளின் பல்வேறு தொல்குடிகளைக் குறிக்கும். தொரெசு நீரிணைத் தீவுகளின் இன ரீதியாக வேறுபட்ட மக்கள் ஆத்திரேலியத் தொல்குடிகளாகக் கருதப்படுவதில்லை. ஆத்திரேலியத் தொல்குடிகளும், டொரெசு நீரிணைத் தீவினரும் ஒரு இனத்தவராக ஆத்திரேலியப் பழங்குடிகள் என அழைக்கப்படுகின்றனர்.
ஆத்திரேலியத் தொல்குடியினக் கொடி. இது டொரெசு நீரிணைத் தீவினரின் கொடியுடன் 1995 இல் ஆத்திரேலியாவின் ஒரு கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
984,000 (2021)[1] ஆத்திரேலிய மக்கட்தொகையில் 3.8% | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
வட ஆட்புலம் | 30.3% |
தாசுமேனியா | 5.5% |
குயின்ஸ்லாந்து | 4.6% |
மேற்கு ஆஸ்திரேலியா | 3.9% |
நியூ சவுத் வேல்ஸ் | 3.4% |
தெற்கு ஆஸ்திரேலியா | 2.5% |
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் | 1.9% |
விக்டோரியா | 0.9% |
மொழி(கள்) | |
பல நூறு தொல்குடி மொழிகள், பெரும்பாலானவை பேசப்படுவதில்லை, ஆத்திரேலிய ஆங்கிலம், பழங்குடியினரின் ஆங்கிலம், கிரியோல் மொழிகள் | |
சமயங்கள் | |
பெருமாலானோர் கிறித்தவர் (குறிப்பாக ஆங்கிலிக்கர், கத்தோலிக்கர்),[2] சிறுபான்மையினர் எந்த சமயச் சார்பும் இல்லாதோர்,[2] மேலும் சிறிய எண்ணிக்கையிலானோர் சமயங்களையும், ஆத்திரேலியத் தொல்குடிப் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு உள்ளூர் பூர்வீக சமயங்கள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
டொரெசு நீரிணை தீவினர், தொல்குடி தாசுமானியர், பப்புவான்கள் |
மக்கள் முதலில் ஆத்திரேலியாக் கண்டத்திற்குக் குறைந்தது 65,000 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர், காலப்போக்கில் 500 மொழி அடிப்படையிலான குழுக்களை அவர்கள் உருவாக்கினர்.[3] இக்குழுக்கள் பரந்த அளவில் பகிரப்பட்ட, சிக்கலான மரபணு வரலாற்றைக் கொண்டுள்ளன, ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் பின்னரே அவை மற்றவர்களால் வரையறுக்கப்பட்டு, ஒரு தனிக் குழுவாக சுயமாக அடையாளம் காணத் தொடங்கின. தொல்குடியினரின் அடையாளம் குடும்ப வம்சாவளி, சுய அடையாளம், சமூக ஒப்புதல் ஆகிய பல்வேறு முக்கியத்துவங்களுடன் காலப்போக்கில், இடத்திற்கு இடம் மாறியுள்ளது.
தொல்குடி ஆத்திரேலியர்கள் பல்வேறு வகையான கலாச்சார நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர், இவை உலகின் மிகப்பழமையான தொடர்ச்சியான கலாச்சாரங்கள் ஆகும்.[4][5] ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்தின் போது, தொல்குடி மக்கள் 250-இற்கும் மேற்பட்ட மொழிகளையும்,[6] சிக்கலான கலாச்சார சமூகங்களையும் கொண்டிருந்தனர்.
சமகாலத் தொல்குடிகளின் நம்பிக்கைகள் ஒரு சிக்கலான கலவையாகும், அவை ஆத்திரேலியக் கண்டம் முழுவதும் பிராந்தியம் வாரியாகவும் தனிநபர் வாரியாகவும் வேறுபடுகின்றன.[7] அவை பாரம்பரிய நம்பிக்கைகள், குடியேற்றவாதிகளினால் ஏற்பட்ட சீர்குலைவுகள், ஐரோப்பியர்களால் கண்டத்திற்கு கொண்டு வரப்பட்ட சமயங்கள், சமகால பிரச்சினைகள் போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளன.[7][8][9] பாரம்பரிய கலாச்சார நம்பிக்கைகள் நடனம், கதைகள், பாடல் வரிகள், கலை ஆகியவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, அவை நவீன நாளாந்த வாழ்க்கை மற்றும் கனவு நேரம் எனப்படும் பண்டைய உருவாக்கம் ஆகியவற்றின் உள்ளியமாகக் கூட்டாகப் பின்னுகின்றன.
தொல்குடியினக் குழுக்களின் மரபணு அமைப்பு பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, ஆனால் அவை பண்டைய ஆசியர்களிடமிருந்து மரபணு மரபுரிமையைக் கொண்டுள்ளன, ஆனால் நவீன மக்களிடமிருந்து இல்லை என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் பப்புவா நியூ கினியின் பப்புவான் பழங்குடியினருடன் சில ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் மிக நீண்ட காலமாக தென்கிழக்காசியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவை பரந்த அளவில் பகிரப்பட்ட, சிக்கலான மரபணு வரலாற்றைக் கொண்டுள்ளன, ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் மட்டுமே அவை மற்றவர்களால் வரையறுக்கப்பட்டு, ஒரு தனிக் குழுவாக சுயமாக அடையாளம் காணத் தொடங்கின. ஆத்திரேலியத் தொல்குடியினரின் அடையாளம் குடும்ப வம்சாவளி, சுய அடையாளம், சமூக அடையாள போன்ற பல்வேறு முக்கியத்துவங்களால் காலப்போக்கில் இடத்திற்கு இடம் மாறியுள்ளது.
2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆத்திரேலியாவின் மக்கள்தொகையில் 3.8% ஆத்திரேலியப் பழங்குடிகள் உள்ளனர்.[1] பெரும்பாலான பழங்குடியினர் இன்று ஆங்கிலம் பேசுகிறார்கள், நகரங்களில் வாழ்கின்றனர். சிலர் ஆத்திரேலியத் தொல்குடியின ஆங்கிலத்தில் பழங்குடியினரின் சொற்றொடர்களையும் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள் (இது ஒலியனியல் மற்றும் இலக்கண அமைப்பில் தொல்குடியின மொழிகளின் உறுதியான தாக்கத்தையும் கொண்டுள்ளது). சிலர் தங்கள் குலங்கள் மற்றும் மக்களின் பல்வேறு பாரம்பரிய மொழிகளைப் பேசுகிறார்கள். பரந்த ஆத்திரேலிய சமூகத்துடன் ஒப்பிடுகையில், தொல்குடியின மக்கள், டொரெசு நீரிணை தீவு மக்களுடன் சேர்ந்து, பல கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதாரக் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர்.
டிஎன்ஏ ஆய்வுகள், "ஆத்திரேலியத் தொல்குடியினர் உலகில் வாழும் மிகப் பழமையான மக்களில் ஒருவர் எனவும், ஆப்பிரிக்காவிற்கு வெளியே மிகப் பழமையானவர்கள்" எனவும் உறுதிப்படுத்தியுள்ளன. தொல்குடியினரின் முன்னோர்கள் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் பூமியில் பழமையான தொடர்ச்சியான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கலாம்.[10] ஆத்திரேலியாவின் வட ஆள்புலத்தில் உள்ள ஆர்னெம் நிலத்தில், சிக்கலான கதைகளை உள்ளடக்கிய வாய்வழி வரலாறுகள் யோல்னு மக்களால் நூற்றுக்கணக்கான தலைமுறைகளாகக் கடத்தப்பட்டுள்ளன. தொல்குடியினரின் பாறைக் கலை, நவீன உத்திகளால் தேதியிடப்பட்டது, அவர்களின் பண்பாடு பண்டைய காலங்களிலிருந்து தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது.[11]
இன்றைய தொல்குடியின ஆத்திரேலிய மக்களின் மூதாதையர்கள் பிலிசுடோசின் ஊழியில் தென்கிழக்காசியாவிலிருந்து கடல் வழியாகக் குடிபெயர்ந்து, கடல் மட்டங்கள் குறைவாக இருந்தபோது ஆத்திரேலியக் கண்ட அடுக்குகளின் பெரிய பகுதிகளில் வாழ்ந்தனர். அந்த நேரத்தில், ஆத்திரேலியா, தசுமேனியா, நியூ கினி ஆகியவை சாகுல் என்று அழைக்கப்படும் ஒரே நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தன.
ஏறத்தாழ 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்பாறைகளுக்கு இடையேயான காலத்தில், கடல் மட்டம் உயர்ந்தது. இதன்போது ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பிலும், அருகிலுள்ள தீவுகளிலும் உள்ள மக்களும், ஹோலோசீனின் தொடக்கத்தில் நிலம் மூழ்கியபோது தசுமேனியா மற்றும் சில சிறிய கடல் தீவுகளில் குடியிருந்தோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.[12] இந்த பண்டைய வரலாற்றின் அறிஞர்கள், தொல்குடி மக்கள் முற்றிலுமாக ஆசியாவின் பெருநிலப்பகுதியிலிருந்து தோன்றியிருப்பது கடினமாக இருந்திருக்கும் என்று நம்புகின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட மக்கள்தொகையின் அளவின் தொடக்கத்தை பூர்த்தி செய்யப் போதுமான மக்கள் ஆத்திரேலியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கு குடிபெயர்ந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான தொல்குடி ஆத்திரேலியர்கள் தென்கிழக்காசியாவிலிருந்து வந்தவர்கள் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். அவ்வாறெனில், ஆத்திரேலியத் தொல்குடியினர் கடல் பயணத்தை முடித்த உலகிலேயே முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறது.[13]
நேச்சர் இதழில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை, கக்கடு தேசியப் பூங்காவில் உள்ள கலைப்பொருட்களை மதிப்பீடு செய்தது. அதன் ஆசிரியர்கள் "மனித ஆக்கிரமிப்பு ஏறத்தாழ 65,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது" என்று முடிவு செய்தனர்.[14]
ஆத்திரேலியப் பல்லுயிர் மற்றும் பாரம்பரியத்திற்கான ஆத்திரேலிய ஆய்வுப் பேரவை மையத்தின் ஆய்வாளர்களின் 2021-ஆம் ஆண்டு ஆய்வில், மக்கள் ஆத்திரேலியக் கண்டம் முழுவதும் அதன் தெற்குப் பகுதிகளுக்கும், இப்போது தசுமேனியாவின் முக்கியப் பகுதிக்கும் நகர்ந்தபோது அவர்கள் இடம்பெயர்வதற்கான வழிகளை வரைபடமாக்கியுள்ளனர். இந்த மாதிரிவுருவமை தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள், சூழலியலாளர்கள், மரபியலாளர்கள், காலநிலை வல்லுநர்கள், புவிப்புறவியலாளர்கள், நீரியலாளர்கள் ஆகியோரின் தரவை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தரவுகளை தொல்குடியின மக்களின் கனவுக் கதைகள், ஆத்திரேலிய பாறைக் கலை மற்றும் பல தொல்குடியின மொழிகளின் மொழியியல் அம்சங்கள் உட்பட வாய்வழி வரலாறுகளுடன் ஒப்பிடும்போது, தொல்குடி மக்கள் எவ்வாறு தனித்தனியாக வளர்ந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
மொனாசுப் பல்கலைக்கழகத்தின் லினெட் ரசல் என்பவர், புதிய ஒப்புரு பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் வரலாற்றை வெளிப்படுத்த உதவும் ஒரு தொடக்கப் புள்ளி என்று நம்புகிறார். தோராயமாக 60,000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிம்பர்லி பகுதியில் முதல் மனிதர்கள் இறங்கியிருக்கலாம் என்று புதிய ஒப்புருக்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 6,000 ஆண்டுகளுக்குள் கண்டம் முழுவதும் இடம்பெயர்ந்தனர்.[15][16] தொல்தாவரவியலைப் பயன்படுத்தி 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய மணல் பாலைவனத்தில் உள்ள கார்னார்வோன் மலைத்தொடரில் கர்னாட்டுகுல் என்ற இடத்தில் தொடர்ந்து மனிதர்கள் தங்கியிருப்பதற்கான ஆதாரங்களைத் தந்தது.[17][note 1][18][19]
தொல்குடியின ஆத்திரேலியர்கள் பெரும்பாலும் தொடக்க பின்னைப் பழங்கற்காலத்தில் கிழக்கு யூரேசிய மக்கள் அலையிலிருந்து வந்தவர்கள் என்று மரபணு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இவர்கள் மெலனீசியர்கள் போன்ற மற்ற ஓசியானியர்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவர்கள். தொல்குடியின ஆத்திரேலியர்கள் நெகிரிட்டோ போன்ற பிற ஆத்திரேலிசிய மக்களுடனும், கிழக்காசிய மக்களுடனும் தொடர்பைக் காட்டுகிறார்கள். தொடக்கக் கிழக்கு மரபு தெற்காசியாவில் எங்காவது பிரிந்து, ஆத்திரேலியர்கள் (ஓசியானியர்கள்), பண்டைய மூதாதைத் தென்னிந்தியர், அந்தமானியர், அமெரிக்க முதற்குடிமக்கள் உட்பட கிழக்கு/தென்கிழக்கு ஆசிய வம்சாவளியை உருவாக்கியது என்று இன உறவுமுறைத் தரவு தெரிவிக்கிறது. சாகுல் மண்டலத்தில் உள்ள கூடுதல் தொன்மைக் கலவைக்கு அடுத்தபடியாக,[20][note 2][21] பப்புவான்கள் முந்தைய குழுவின் (xOOA) கிட்டத்தட்ட 2% மரபணு ஓட்டத்தைப் பெற்றிருக்கலாம்,[22]
தொல்குடியின மக்கள் மரபணு ரீதியாக பப்புவா நியூ கினியின் பழங்குடி மக்களைப் போலவே உள்ளனர், அத்துடன் கிழக்கு இந்தோனேசியாவிலிருந்து வரும் குழுக்களுடன் மிகவும் தொலைவில் தொடர்புடையவர்கள். பப்புவா நியூ கினி, இந்தோனேசியா நாடுகளில் இருந்து வந்த குழுக்களுடன் ஒப்பிடும்போது போர்னியோ, மலேசியாப் பழங்குடி மக்களிடமிருந்து இவர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து ஆத்திரேலியாவில் மக்கள் நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை இது குறிக்கிறது. அந்தப் பகுதிக்கு இடம்பெயர்தல், மக்கள்தொகை விரிவாக்கங்கள் போன்ற காரணிகளால் இவர்கள் தீண்டப்படாமல் இருந்தனர், இது வாலசுக் கோட்டால் விளக்கப்படலாம்.[23]
2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், வட ஆள்புலத்தில் உள்ள வார்ல்பிரி மக்கள் சிலரிடமிருந்து அவர்களின் மரபணு அமைப்பை ஆய்வு செய்வதற்காக குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வார்ல்பிரி பண்டைய ஆசியர்களின் மரபைச் சேர்ந்தது என்று ஆய்வு முடிவு செய்தது, அதன் டிஎன்ஏ தென்கிழக்கு ஆசியக் குழுக்களில் இன்னும் ஓரளவு உள்ளது, இருப்பினும் பெருமளவு குறைந்துள்ளது. வார்ல்பிரி டிஎன்ஏ நவீன ஆசிய மரபணுக்களில் காணப்படும் சில தகவல்களைக் கொண்டிருக்கவில்லை, மேலும் பிற மரபணுக்களில் காணப்படாத தகவல்களைக் கொண்டுள்ளது. இது பண்டைய தொல்குடியினரைத் தனிமைப்படுத்துதல் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.[23]
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொல்குடியினத்தவர் ஒருவரின் தலைமுடியின் டி.என்.ஏ மாதிரியை மோர்ட்டன் ரசுமுசன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் எடுத்த மரபியல் தரவு, தொல்குடியின மூதாதையர்கள் தெற்காசியா, கடல்சார் தென்கிழக்காசியா வழியாக ஆத்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து அங்கேயே தங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, ஆப்பிரிக்காவிற்கு வெளியே, இத்தொல்குடியின மக்கள் மற்ற எந்த மாந்தரை விடவும் தொடர்ந்து அதே பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புகள், 75,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய கிழக்கு அலையின் நேரடி வழித்தோன்றல்கள் நவீன தொல்குடியின ஆத்திரேலியர்கள் என்று கூறுகின்றன.[25][26] இந்தக் கண்டுபிடிப்பு முங்கோ ஏரிக்கு அருகில் உள்ள மனித எச்சங்களின் முந்தைய தொல்பொருள் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது, இது தோராயமாக 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்காசார் மீனவர்கள் டச்சு ஆய்வாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு, வெளிப்புற கலாச்சாரங்களுடன் சிறிதளவு அல்லது எவ்விதத் தொடர்பும் இல்லாமல், தொல்குடியின மக்களின் புவியியல் தனிமைப்படுத்தலின் அடிப்படையில் "பழமையான தொடர்ச்சியான கலாச்சாரம்" இருந்துள்ளது.
ராசுமுசென் ஆய்வில், ஆசியாவின் டெனிசோவன்களுடன் (நியாண்டர்தால்களுடன் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட மனித இனம்) தொடர்புடைய சில மரபணுக்களைத் தொல்குடியின மக்கள் கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தையும் கண்டறிந்தது; மற்ற யூரேசியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, டெனிசோவன், தொல்குடி ஆத்திரேலிய மரபணுக்களுக்கு இடையே மாற்றுருப் பகிர்வு அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. சைபீரியாவில் தோண்டிய விரல் எலும்பில் இருந்து டிஎன்ஏயை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், டெனிசோவன்கள் சைபீரியாவிலிருந்து ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர் என்றும் அவர்கள் தென்கிழக்கு ஆசியாவில் நவீன மனிதர்களுடன் 44,000 ஆண்டுகளுக்கு முன்னரும், நியூ கினியில் இருந்து ஆத்திரேலியா பிரிவதற்கு ஏறத்தாழ 11,700 ஆண்டுகளுக்கு முன்பும் இணைந்தனர் என்றும் முடிவு செய்தனர். இவர்கள் டிஎன்ஏ-ஐ தொல்குடி ஆத்திரேலியர்கள், இன்றைய நியூ கினியர்கள், பிலிப்பீன்சின் மாமன்வா என்று அழைக்கப்படும் பழங்குடிகள் போன்றோருக்கு வழங்கினர். இந்த ஆய்வு, தொல்குடியின ஆத்திரேலியர்களை உலகின் மிக வயதான மக்கள்தொகையில் ஒருவராக உறுதிப்படுத்துகிறது. அவை ஆப்பிரிக்காவிற்கு வெளியே மிகப் பழமையானவை எனவும், புவியில் மிகப் பழமையான தொடர்ச்சியான கலாச்சாரத்தைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[27]
கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்படி, ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மக்கள் சாகுலை (இன்றைய ஆத்திரேலியா, அதன் தீவுகள், நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய மீப்பெரும் கண்டம்) அடைந்தனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்து ஆத்ஸ்திரேலியாவைத் தனிமைப்படுத்தியது, ஆனால் தொல்குடியின ஆத்திரேலியர்களும் பாப்புவான்களும் மரபணு ரீதியாக, சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர், ஒருவேளை மீதமுள்ள தரைப்பாலம் கடந்து செல்ல முடியாததாக இருந்திருக்கலாம். இந்தத் தனிமை ஆதிவாசி மக்களை உலகின் பழமையான கலாச்சாரமாக ஆக்குகிறது. டெனிசோவன்களுடன் தொலைதூரத் தொடர்புடைய அறியப்படாத ஹோமினின் குழுவின் ஆதாரங்களையும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அவர்களுடன் தொல்குடியினரும் பாப்புவான் மூதாதையர்களும் இனக்கலப்பு செய்திருக்க வேண்டும், பெரும்பாலான தொல்குடி ஆத்திரேலியர்களின் மரபணுவில் சுமார் 4% தடயத்தை விட்டுச்செல்கிறது. இருப்பினும், புவியியல் பரம்பலின் அடிப்படையில் தொல்குடியின ஆத்திரேலியர்களிடையே மரபணு வேறுபாடு அதிகரித்துள்ளது.[28][29]
2021 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் தெற்கு சுலாவெசியில் இருந்து கோலோசீன் வேட்டைக்காரரின் மாதிரி ("லியாங் பன்னிங்கே") பகுப்பாய்வு செய்யப்பட்டது, இது தொல்குடியின ஆத்திரேலியர்கள் பப்புவான்களுடன் அதிக அளவு மரபணு மிதப்பைப் பகிர்ந்து கொள்கிறது. தொல்குடி ஆத்திரேலியர்கள், பப்புவான்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து மக்கள் பிரிந்தனர் என்று இது அறிவுறுத்துகிறது. மாதிரியானது கிழக்காசியர்கள், தெற்காசியாவின் அந்தமானிய மக்களுடன் மரபணுத் தொடர்பைக் காட்டுகிறது. இந்த வேட்டைக்காரன் மாதிரியை ~50% பப்புவான் தொடர்பான வம்சாவளியினர் மற்றும் ~50% கிழக்காசிய அல்லது அந்தமானிய ஓங்கே வம்சாவளியைக் கொண்டு வடிவமைக்க முடியும், இது லியாங் பன்னிங்கே மற்றும் தொல்குடியினர்/பப்புவான்களுக்கு இடையே உள்ள ஆழமான பிளவை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[30][note 3]
2016 இல் மாலிக், 2017 இல் மார்க் லிப்சன் ஆகியோர் நடத்திய ஆய்வில் கிழக்கு யூரேசியர்கள், மேற்கு யூரேசியர்களின் பிளவு குறைந்தது 45,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், கிழக்கு யூரேசிய உட்கட்டமைப்பில் பழங்குடி ஆத்திரேலியர்களின் வாழ்விடங்கள் அமைந்திருந்தன என்றும் காட்டியுள்ளனர்.[31][32]
2021 ஆம் ஆண்டில் லாரெனா மற்றும் சிலர் நடத்திய இரண்டு மரபணு ஆய்வுகள், பிலிப்பீன்சு, நெகிரிட்டோ மக்கள் தொல்குடியின ஆத்திரேலியர்கள்/பப்புவான்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து பிரிந்தனர் என்று கூறுகிறது. பிந்தைய இருவரும் ஒருவரையொருவர் பிரிவதற்கு முன்பு, அவர்களின் பொதுவான மூதாதையர் கிழக்காசிய மக்களின் மூதாதையரிடமிருந்து பிரிந்தனர் என்றும் கூறுகிறது.[33][34][35]
டிங்கோ நாய் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திரேலியாவை அடைந்தது. அந்தக் காலப்பகுதியில், குறிப்பாக மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன (பாமா-நியுங்கன் மொழி குடும்பம் நிலப்பரப்பின் பெரும்பகுதியில் பரவியது). கல் கருவித் தொழில்நுட்பத்தில், சிறிய கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மனிதத் தொடர்பு இவ்வாறு ஊகிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆத்திரேலியாவிற்கான ஒரு மரபணு ஓட்டத்தை ஆதரிக்க இரண்டு வகையான மரபணுத் தரவுகள் முன்மொழியப்பட்டன: முதலாவதாக, தொல்குடி ஆத்திரேலிய மரபணுக்களில் தெற்காசியக் கூறுகளின் அறிகுறிகள், மரபணு அளவிலான SNP (ஒற்றை உட்கரு அமிலமூலப் பல்லுருவம்) தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது; இரண்டாவதாக, ஒரு Y நிறப்புரி (ஆண்) வம்சாவளியின் இருப்பு, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சமீபத்திய பொதுவான மூதாதையருடன், ஒருமைப் பண்புக் குழு C∗ முன்மொழியப்பட்டது.[36]
தொல்குடியின ஆத்திரேலியர்கள், நியூ கினியர்கள், தென்கிழக்கு ஆசியர்கள், இந்தியர் ஆகியோரின் தொகுப்பிலிருந்து பெரிய அளவிலான மரபணு வகைத் தரவுகளைப் பயன்படுத்தி பரிணாம மானிடையலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் நடத்திய 2013 ஆய்வில் இருந்து முதல் வகை சான்றுகள் கிடைத்தன. நியூ கினி, மாமன்வா (பிலிப்பைன்ஸ் பகுதி) குழுக்கள் சுமார் 36,000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்குடியினரிடமிருந்து பிரிந்து சென்றதைக் கண்டறிந்தது. மேலும் இந்திய, ஆத்திரேலிய மக்கள் ஐரோப்பியத் தொடர்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கலந்துள்ளனர், இந்த மரபணு ஓட்டம் ஓலோசீன் காலத்தில் (அண். 4,200 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்பட்டது.[37] ஆய்வாளர்கள் இதற்கு இரண்டு கோட்பாடுகளைக் கொண்டிருந்தனர்: சில இந்தியர்கள் இந்தோனேசியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர், அவர்கள் இறுதியில் அந்த இந்திய மரபணுக்களை தொல்குடி ஆத்திரேலியர்களுக்கு மாற்றினர், அல்லது இந்தியர்களின் குழு இந்தியாவில் இருந்து ஆத்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் நேரடியாக கலந்தது.[38][39]
இருப்பினும், நடப்பு உயிரியலில் வெளிவந்த 2016 ஆம் ஆண்டு ஆய்வில், இந்தியாவில் இருந்து ஆத்திரேலியாவிற்குள் அண்மைக்கால சமீபத்திய மரபணு ஓட்டத்திற்கு ஆதாரமாக Y நிறப்புரி விலக்கப்பட்டது. ஆய்வு ஆசிரியர்கள் மரபணு வரிசைமுறைத் தொழில்நுட்பத்திலதண்மைக்கால முன்னேற்றங்களைப் பயன்படுத்தி 13 தொல்குடி ஆத்திரேலிய Y நிறப்புரிகளை வரிசைப்படுத்தினர். ஒருமைப் பண்புக் குழு "C" நிறப்புரிகளை ஒப்பிடுவது உட்பட, ஏனைய கண்டங்களில் உள்ள Y நிறப்புரிகளிலிருந்து அவற்றின் மாறுபட்ட காலங்களை அவர்கள் ஆராய்ந்தனர். அவர்கள் சாகுல் C நிறப்புரி மற்றும் அதன் நெருங்கிய உறவினர் C5 இடையே சுமார் 54,100 ஆண்டுகள், அதே போல் ஒருமைப் பண்புக் குழுக்கள் K*/M மற்றும் அவற்றின் நெருங்கிய குழுக்கள் R, Q ஆகியவற்றுக்கு இடையே சுமார் 54,300 ஆண்டுகள் வேறுபடுகின்றன. 50,000-க்கும் அதிகமான ஆண்டுகள் தெற்காசிய நிறப்புரி மற்றும் "தொல்குடி ஆத்திரேலிய C-க்கள் மிக சமீபத்திய பொதுவான மூதாதையரை பப்புவான் C-உடன் உடன் பகிர்ந்து கொள்கின்றன" என்பது சமீபத்திய மரபணுத் தொடர்பை விலக்குகிறது.[36]
மேற்படி 2016 ஆம் ஆண்டின் ஆய்வின் ஆய்வாளர்கள், அந்த நேரத்தில் தெற்காசியாவில் இருந்து எந்த ஓலோசீன் மரபணு ஓட்டம் அல்லது மரபணு அல்லாத தாக்கங்கள் இருப்பதை நிரூபிக்கவில்லை என்றாலும், டிங்கோவின் தோற்றம் வெளிப்புறத் தொடர்புகளுக்கு வலுவான ஆதாரங்களை வழங்குகிறது. மரபணு ஓட்டத்தின் முழுமையான பற்றாக்குறையுடன், ஒட்டுமொத்த ஆதாரம் இசைவானதாக உள்ளது. அத்துடன் இது தொழில்நுட்ப மற்றும் மொழியியல் மாற்றங்களுக்கான பூர்வீகத் தோற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வாளர்களின் முடிவுகளுக்கும் முந்தைய கண்டுபிடிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் காரணம்; ஏனைய ஆய்வுகள் எதுவும் முழுமையான Y நிறப்புரி வரிசைமுறையைப் பயன்படுத்தவில்லை, இது மிக உயர்ந்த துல்லியம் கொண்டது. எடுத்துக்காட்டாக, பத்து Y நுண்மரபணு வரிசை முறையின் பயன்பாடு வேறுபட்ட நேரங்களை பெருமளவில் குறைத்து மதிப்பிடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. தீவுப்-புள்ளியிடப்பட்ட 150-கிலோமீட்டர் அகல (93 மைல்) டொரெசு நீரிணை முழுவதும் மரபணு ஓட்டம், புவியியல் ரீதியாக நம்பத்தகுந்ததாகவும், தரவுகளால் நிரூபிக்கப்பட்டதாகவும் உள்ளது, இருப்பினும் கடந்த 10,000 ஆண்டுகளுக்குள் அதை இந்த ஆய்வில் இருந்து தீர்மானிக்க முடியவில்லை.[36]
பெர்க்சுட்ரோம் என்பவரின் 2018 ஆம் ஆண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வறிக்கை சாகுலின் மக்கள்தொகையைப் பார்க்கிறது, ஒப்பீட்டளவில் அண்மைக்கால கலப்பைத் தவிர, பிராந்தியத்தின் மக்கள் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வேறுபட்டதிலிருந்து உலகின் பிற பகுதிகளிலிருந்து மரபணு ரீதியாக சுயாதீனமாக இருப்பதாகத் தெரிகிறது. "ஆத்திரேலியாவிற்கு தெற்காசிய மரபணு ஓட்டத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை;.... [8,000 ஆண்டுகளுக்கு முன்பு] சாகுல் ஒரு இணைக்கப்பட்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், ஆத்திரேலியா முழுவதும் உள்ள வெவ்வேறு குழுக்கள் பப்புவான்களுடன் கிட்டத்தட்ட சமமாக தொடர்புடையவை. ஏற்கனவே [சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு] மரபணு ரீதியாக இரண்டும் பிரிந்திருக்க வேண்டும்". என அவர் கூறுகிறார்.[40]
தொல்குடியின ஆத்திரேலியர்கள் பல்வேறு வழிகளில் பரந்த அளவிலான சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மரபுவழித் திறன்களைக் கொண்டுள்ளனர். 1958 இல் பாலைவனத்தில் வசிக்கும் பிட்சான்ட்சட்சாரா மக்களின் குளிர்கால அமைவுகளை ஐரோப்பிய மக்கள் குழுவுடன் ஒப்பிடும் ஓர் ஆய்வில், தொல்குடியினக் குழுவின் குளிர்ச்சியான தழுவல் வெள்ளையர்களிடமிருந்து வேறுபட்டது, மேலும் அவர்கள் பாவலிவன இரவில் குளிர்ச்சியின் போது அதிக நிம்மதியாகத் தூங்க முடிந்தது என்பதைக் காட்டுகிறது.[41] 2014 ஆம் ஆண்டு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக ஆய்வில், உடல் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு இயக்குநீரான தைராக்சினை இயக்கும் இரண்டு மரபணுக்களில் நன்மை பயக்கும் மாற்றம், காய்ச்சலுக்கு பதிலளிக்கும் விதமாக உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இதன் விளைவாக, பாலைவன மக்கள் உடல் முழுவதையும் முடுக்கிவிடாமல் அதிக உடல் வெப்பநிலையைப் பெற முடிகிறது, இது குறிப்பாகக் குழந்தைப் பருவ நோய்களில் தீங்கு விளைவிக்காமல் இருக்கும். அத்துடன் நோய்த்தொற்றின் பக்கவிளைவுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க உதவுகிறது.[42][43]
ஆத்திரேலியக் கண்டத்தின் நிலப்பரப்பில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தொல்குடியினர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இன்று ஆத்திரேலியாவின் எல்லைக்குள் உள்ள பகுதியில் தசுமேனியாத் தீவுகள், பிரேசர் தீவு, இஞ்சின்புரூக் தீவு,[44] தீவி தீவுகள், கங்காரு தீவு, குரூட் தீவு ஆகியவை அடங்கும். இருப்பினும், டொரெசு நீரிணைத் தீவுகளின் பழங்குடி மக்கள் ஆத்திரேலியத் தொல்குடியினர் அல்ல.[45][46][47][48]
கணக்கெடுப்பு | எண்ணிக்கை | மாற்றம் (எண்ணிக்கை) | மாற்றம் (விழுக்காடு) |
---|---|---|---|
2006 | 455,028 | 45,025 | 11.0% |
2011 | 548,368 | 93,340 | 20.5% |
2016 | 649,171 | 100,803 | 18.4% |
2021 | 812,728 | 163,557 | 25.2% |
2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், மொத்தமுள்ள 25,422,788 ஆத்திரேலியர்களில் 812,728 பேர் தொல்குடிகள் மற்றும்/அல்லது டொரெசு நீரிணைத் தீவு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என சுயமாக அடையாளம் கண்டுகொண்டவர்கள். இது ஆத்திரேலியாவின் மக்கள்தொகையில் 3.2% ஆகும்[50] இது 2016 கணக்கெடுப்பை விட 163,557 (25.2%) அதிகரிப்பு ஆகும்.[49] அதிகரிப்புக்கான காரணங்கள் பரவலாக பின்வருமாறு:
பெரும்பாலான தொல்குடியின மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்,[51] ஆத்திரேலியத் தொல்குடியின ஆங்கிலத்தை உருவாக்க தொல்குடியினரின் சொற்றொடர்களும் சொற்களும் சேர்க்கப்படுகின்றன (இது ஒலியனியல் மற்றும் இலக்கண அமைப்பில் தொல்குடியின மொழிகளின் உறுதியான தாக்கத்தையும் கொண்டுள்ளது).[52] சில தொல்குடியினர், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள், பல மொழி பேசுபவர்களாக உள்ளனர்.[51] ஆத்திரேலியக் கண்டத்தில் 250-இற்கும் மேற்பட்ட மொழிகளும், சுமார் 800 பேச்சுவழக்கு வகைகளும் உள்ளன, பண்டைய 250-400 தொல்குடியின மொழிகளில் பல அழிந்து வருகின்றன,[53] இருப்பினும் சில மொழிகளுக்கு மொழிப் புத்துயிர்ப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, 13 பாரம்பரிய உள்நாட்டு மொழிகள் மட்டுமே இன்னும் குழந்தைகளால் படிக்கப்படுகின்றன,[54] மேலும் கிட்டத்தட்ட 100 மொழிகள் பழைய தலைமுறையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.[53]
பண்டைய மக்கள் காலப்போக்கில் ஆத்திரேலியக் கண்டம் முழுவதும் பரவி, விரிவடைந்து வெவ்வேறு குழுக்களாக ஒவ்வொன்றும் அதன் சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்துடன் வேறுபட்டனர்.[55] 400-இற்கும் மேற்பட்ட தனித்துவமான ஆத்திரேலியத் தொல்குடி மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களின் மூதாதையர் மொழிகள், பேச்சுவழக்குகள் அல்லது தனித்துவமான பேச்சு முறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்களால் அவர்கள் வேறுபடுத்தப்பட்டனர்.[56] புகழ்பெற்ற மானிடவியலாளரும், தொல்லியல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான ஹாரி லூராண்டோசு என்பவரின் கூற்றுப்படி, வரலாற்று ரீதியாக, இந்தக் குழுக்கள் வடக்கு, தெற்கு, மத்திய கலாச்சாரப் பகுதிகளில் மூன்று முக்கிய கலாச்சார பகுதிகளில் வாழ்ந்தனர். வடக்கு, தெற்குப் பகுதிகள், வளமான இயற்கைக் கடல், வன வளங்களைக் கொண்டவை, மத்திய பகுதியை விட அதிக மக்கள் தொகை கொண்டவை.[55]
ஆத்திரேலியத் தொல்குடியின மொழிகளிலிருந்து பல்வேறு பெயர்கள் பொதுவாக புவியியல் அடிப்படையில் குழுக்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகின்றன:
பிற குழுப் பெயர்கள் மொழிக் குழு அல்லது பேசப்படும் குறிப்பிட்ட பேச்சுவழக்கு அடிப்படையில் அமைந்தவை. இவை வெவ்வேறு அளவுகளின் புவியியல் பகுதிகளுடன் ஒத்துப்போகின்றன. அவற்றில் சில வருமாறு:
இந்தப் பட்டியல்கள் முழுமையானவையோ அல்லது உறுதியானவையோ அல்ல. தொல்குடியினரல்லாத அறிஞர்களால் தொல்குடியினரின் கலாச்சாரத்தையும் சமூகங்களையும் புரிந்துகொள்வதற்கும் வரையறுப்பதற்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் எடுக்கப்பட்டுள்ளன, சில நுண்ணளவு (பழங்குடி, குலம், முதலியன) மீது கவனம் செலுத்துகின்றன, மற்றவை, சுற்றுச்சூழல் காரணிகளால், பகிரப்பட்ட மொழிகளை, கலாச்சார நடைமுறைகளை வரையறுக்கின்றன. தொல்குடியின மக்கள்/சமூகம்/குழு/பழங்குடியினர் என்றால் என்ன என்பதை வரையறுப்பதில் மானுடவியலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குடியேற்றத்திற்கு முந்தைய தொல்குடியினரின் கலாச்சாரங்கள், சமூகக் குழுக்கள் பற்றிய அறிவு இன்னும் பெரும்பாலும் பார்வையாளர்களின் விளக்கங்களைச் சார்ந்து உள்ளது, அவை குடியேற்றக்காலத்தில் சமூகங்களைப் பார்க்கும் முறைகள் மூலம் வடிகட்டப்பட்டன.[59]
சில தொல்குடியின மக்கள் உப்பு நீர், நன்னீர், மழைக்காடுகள் அல்லது பாலைவன மக்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஆத்திரேலியத் தொல்குடிகள் (Aboriginal Australians) என்ற சொல் ஆத்திரேலியா முழுவதும் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த பல வேறுபட்ட மக்களை உள்ளடக்கியது.[14][60] இந்த மக்கள் பரந்த அளவில் பகிரப்பட்ட, சிக்கலான, மரபணு வரலாற்றைக் கொண்டுள்ளனர்,[61][39] ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளில் மட்டுமே இவர்கள் சமூக-அரசியல் ரீதியாக ஒரு குழுவாக வரையறுக்கப்பட்டு சுய-அடையாளத்துடன் செயற்படுகின்றனர்.[62][63] அபோரிஜின் என்ற சொல்லின் பயன்பாடு சமீபத்திய தசாப்தங்களில் குறைந்துவிட்டது, பலர் இந்தச் சொல்லை குடியேற்றக்கால ஒரு இனவெறித் தாக்குதலாகக் கருதுகின்றனர்.[64][65]
குடும்ப வம்சாவளியின் முக்கியத்துவம், சுய-அடையாளம், சமூகத்தை ஏற்றுக்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவங்களினால், "தொல்குடியினர்" என்ற சொல்லின் வரையறை காலப்போக்கில் மாறிவிட்டது.[66][67][68]
"பழங்குடி ஆத்திரேலியர்கள்" (Indigenous Australians) என்ற சொல் தொல்குடி ஆத்திரேலியர்கள், டொரெசு நீரிணைத் தீவு மக்கள் ஆகிய இரு இனக்குழுக்களையும் குறிக்கிறது, ஆனாலும் இச்சொல் இரண்டு குழுக்களும் பேசப்படும் ஒரு தலைப்பில் சேர்க்கப்படும்போது அல்லது ஒருவர் பழங்குடியினராக சுயமாக அடையாளம் காணும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. (டொரெசு நீரிணைத் தீவினர் இனரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வேறுபட்டவர்கள்,[69] சில தொல்குடியினக் குழுக்களுடன் விரிவான கலாச்சார பரிமாற்றம் இருந்தபோதிலும்,[70] டொரெசு நீரிணைத் தீவுகள் பெரும்பாலும் குயின்சுலாந்தின் ஒரு பகுதியாகும், ஆனால் ஒரு தனி அரசாங்க அலகாக உள்ளது.) சில தொல்குடியினர் தம்மை "பழங்குடிகள்" என முத்திரை குத்தப்படுவதை எதிர்க்கிறார்கள்.[63]
ஆத்திரேலியத் தொல்குடி மக்கள் தமது ஒவ்வொரு குழுவும் (ஆதிவாசிகள்) தமக்குரிய தனித்துவமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர், அனைவரும் தமது நிலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர்.[4][5] சமகால பூர்வீக ஆத்திரேலிய நம்பிக்கைகள் ஒரு சிக்கலான கலவையாகும், அவை கண்டம் முழுவதும் பிராந்தியம் மற்றும் தனி நபர் வாரியாக வேறுபடுகின்றன.[7] அவை பாரம்பரிய நம்பிக்கைகள், குடியேற்றவாதிகளின் சீர்குலைவு, ஐரோப்பியர்களால் கண்டத்திற்கு கொண்டு வரப்பட்ட சமயங்கள், சமகாலப் பிரச்சினைகள் போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளன.[7][8][9] பாரம்பரியப் பண்பாட்டுக் கலாச்சார நம்பிக்கைகள் நடனம், கதைகள், பாடல் வரிகள், கலை (குறிப்பாக பப்புன்யா தூலா (புள்ளி ஓவியம்)), கனவுநேரம் என அறியப்படும் படைப்பின் கதையை கூட்டாகக் கூறுவதன் மூலம் கடத்தப்பட்டுப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.[71][4] மேலும், பாரம்பரிய குணப்படுத்துபவர்கள் அவர்களின் மருத்துவப் பணிகளுடன் முக்கியமான கனவுக் கதைகளின் பாதுகாவலர்களாக இருந்தனர் (உதாரணமாக மேற்குப் பாலைவனத்தில் உள்ள நங்கங்காரி).[72] சில முக்கிய கட்டமைப்புகளும் கருப்பொருள்களும் மொழி, பண்பாட்டுக் கலாச்சார குழுக்களுக்கு இடையே மாறுபடும் விவரங்களுடனும் கூடுதல் கூறுகளுடனும் கண்டம் முழுவதும் பகிரப்படுகின்றன.[7] எடுத்துக்காட்டாக, பெரும்பாலான பிராந்தியங்களின் "கனவுக்காலத்தில்", ஒரு ஆவி பூமியை உருவாக்குகிறது, பின்னர் மனிதர்களிடம் விலங்குகளையும் பூமியையும் நிலத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் நடத்தச் சொல்கிறது. வட ஆட்புலத்தில், இது பொதுவாக ஒரு பெரிய பாம்பு அல்லது பாம்புகள் என்று கூறப்படுகிறது, அது பூமி, வானம் வானம் வழியாக மலைகளையும் பெருங்கடல்களையும் உருவாக்குகிறது. ஆனால் கண்டத்தின் மற்ற இடங்களில் உலகத்தை உருவாக்கிய ஆவிகள் வான்சினா மழை என்றும் நீர் ஆவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. முக்கிய மூதாதையர் ஆவிகளில் வானவில் பாம்பு, பையாம், திராவோங், புஞ்சில் ஆகியவை அடங்கும். இதேபோல், நடு ஆத்திரேலியாவின் அரேர்ன்டே மக்கள், அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும் பூமியின் மேற்பரப்பை உடைத்ததன் விளைவாக சூரியன், காற்று, மழை ஆகியவற்றைக் கொண்டுவந்த மாபெரும் மனிதநேயமற்ற மூதாதையர்களிடமிருந்து மனிதகுலம் தோன்றியது என நம்பினர்.[13]
டொரெசு நீரிணைத் தீவு மக்களுடன் தொல்குடி ஆத்திரேலியர்களை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், பரந்த ஆத்திரேலிய சமூகத்துடன் ஒப்பிடுகையில் அவர்கள் பெரும் உடல்நல, பொருளாதாரக் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர்.[73][74]
இதன் காரணமாக, தொல்குடி ஆத்திரேலிய சமூகங்கள், ஏனைய ஆத்திரேலிய சமூகங்களுடன் ஒப்பிடும்போது, அதிக தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளனர். வரலாற்று அதிர்ச்சி,[75] சமூகப் பொருளாதாரக் குறைபாடு, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சினைகள் உருவாகின்றன.[76] அத்துடன், பல தொல்குடி இளைஞர்கள் தங்கள் கலாச்சாரத்தில் இருந்து துண்டிக்கப்படுவதால், இந்தப் பிரச்சனை பெரும்பாலும் தொல்குடி இளைஞர்களைப் பாதிக்கிறது.[77]
அதிகரித்த தற்கொலை விகிதத்தை எதிர்த்து, பல ஆய்வாளர்கள் தற்கொலைத் தடுப்புத் திட்டங்களில் அதிகமான கலாச்சார அம்சங்களைச் சேர்ப்பது சமூகத்தில் உள்ள மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் என்று பரிந்துரைத்துள்ளனர். பல தொல்குடித் தலைவர்களும் சமூக உறுப்பினர்களும், உண்மையில், கலாச்சார-அறிவுள்ள சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களை விரும்புவதாக கடந்தகால ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.[78] இதேபோல், பழங்குடி இளைஞர்களை இலக்காகக் கொண்ட கலாச்சார-உறவினர் திட்டங்கள் இளம் பழங்குடி மக்களிடையே தற்கொலை எண்ணத்தைத் தீவிரமாக சவால் செய்துள்ளன, பல சமூக மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுத் திட்டங்கள் கலாச்சார தகவல்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் வழிமுறைகளையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.[79][80]
1970கள், 1980களின் வெளிமாநிலப் பரம்பலில், தொல்குடியின மக்கள் பாரம்பரிய நிலத்தில் உள்ள சிறிய தொலைதூரக் குடியிருப்புகளுக்குச் சென்றபோது, சுகாதார நலன்களைக் கொண்டுவந்தது,[81][82] ஆனால் அவர்களுக்கு நிதியளிப்பதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் வழங்கப்படவில்லை, மேலும் இதற்கான ஆதரவு 2000களில், குறிப்பாக ஹவார்டு அரசாங்கத்தின் காலத்தில், குறைந்துவிட்டன.[83][84][85]
தொலைதூர ஆத்திரேலியாவில் உள்ள பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் பாரம்பரியமாக சொந்தமான நிலத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களாக இருக்கின்றன. இந்த சமூகங்களில் 20 முதல் 300 பேர் வசிக்கின்றனர், கலாச்சாரக் காரணங்களுக்காக வெளியாட்களுக்கு இந்நகரங்கள் பெரும்பாலும் மூடப்படும். பாலைவனப் பகுதிகளில் தொல்குடியின சமூகங்களின் நீண்ட கால நம்பகத்தன்மை, மீள்தன்மை போன்றவை அறிஞர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலும் விவாதிக்கப்பட்டது. ஆத்திரேலிய அறிவியல், தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் (CSIRO) வின் 2007 அறிக்கையில், பாலைவனக் குடியிருப்புகளில் சேவைகளுக்கான தேவை-உந்துதல் அணுகுமுறையை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.[86]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.