Remove ads
From Wikipedia, the free encyclopedia
நிறப்புரி அல்லது நிறமூர்த்தம் (Chromosome, குரோமோசோம்) என்பது மரபியல் தகவல்களை கடத்தக்கூடிய மரபணுக்களைக் கொண்ட, உயிரணுக்களில் காணப்படும் டி.என்.ஏ மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த புரதங்களையும் குறிக்கின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் உயிரணுவில் இருக்கும் கருவில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; பாக்டீரியாக்களிலும், மெய்க்கருவுயிரிகளின் இழைமணிகளிலும், தாவரங்களின் பச்சையவுருமணிகளிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது[1][2].
நிறப்புரியானது, மரபணுக்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய நியூக்கிளியோட்டைடு தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். இந்த டி.என்.ஏ இழையுடன் இணைந்த சில புரதங்களே டி.என்.ஏ யை ஒரு கட்டுமானத்துக்குள் வைத்திருக்கவும், அதன் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உயிரினங்களின் மரபியல் தகவல்களுக்கான மரபுக்குறியீடுகளைப் பொதுவாக இந்த நிறப்புரிகளே கொண்டிருக்கின்றன. ஆனாலும் சில இனங்களில் கணிமிகளோ, அல்லது வேறு நிறப்புரியல்லாத மரபியல் கூறுகளோ இத்தகைய தகவல் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன.
குரோமோசோம் என்னும் சொல் கிரேக்க மொழியில் நிறம் என்னும் பொருள் தரும் குரோமா (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு உடல், உடலம் என்னும் பொருள் தரும் சோமா (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. புரோப்பிடியம் ஐயோடைடு, Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான நிறம் ஏற்கும் பண்பு உள்ளதால் இவற்றுக்கு நிறப்புரி என்றுபெயர்.
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு உயிரினம் வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்[3][4]. பல விதிவிலக்குகள் காணப்பட்டாலும், பொதுவாக மெய்க்கருவுயிரிகள் நீண்ட நேரிழையாலான நிறப்புரிகளையும், நிலைக்கருவிலிகள் வட்டவடிவான நிறப்புரிகளையும் கொண்டிருக்கின்றன. ஒரு உயிரணுவிலேயே வேறுபட்ட வகையான நிறப்புரிகளும் உள்ளன. மெய்க்கருவுயிரிகளில், உயிரணுக் கருக்களில் நீண்ட இழை அமைப்பையும், இழைமணிகளில் வட்டவடிவான அமைப்பையும், தாவர உயிரணுக்களில் வட்டமான அமைப்பையும் கொண்டிருக்கின்றன.
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது நிறமியன் (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. கலப்பிரிவின்போது, இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகளாகவும் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும். இந்த அரைநிறவுருக்கள் மையப்படி (Centromere) என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இது நடுவில் இருக்கையில் நிறப்புரி நான்கு கைகளையும், ஒரு முடிவுக்கு அருகில் இருப்பின் இரு கைகளையும் கொண்டிருக்கும். நீண்ட இழைகள் நெடுங்கை இழைகள் எனவும், குறிகியவை குறுங்கை இழைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.