Remove ads
From Wikipedia, the free encyclopedia
அரித்துவார் (Haridwar) ⓘ) என்பது இந்தியாவின் உத்தரகண்ட்ட மாநிலத்தில் உள்ள அரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 228,832 ஆகும். இது மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.[3]
அரித்துவார்
Mayapuri | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: ஹரனின் படித்துறையின் மாலைக் காட்சி, சண்டி தேவி கோயில், சண்டி தேவிக்கு கம்பிவடப் பாதை, கங்கை ஆற்றிலிருந்து தோற்றம், அரித்துவார் தொடருந்து நிலையம், ஹர் கி பவுரியில் கங்கா ஆரத்தி, சூரியன் மறையும் போது சிவ மூர்த்தி மற்றும் மானசா தேவி கோயில். | |
ஆள்கூறுகள்: 29.945°N 78.163°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | அரித்துவார் மாவட்டம் |
நகராட்சி | 1868 |
அரசு | |
• வகை | மாநகர சபை |
• நிர்வாகம் | அரித்துவார் மாநகராட்சி |
• மேயர் | அமித் சர்மா (இதேகா) |
• மாநகராட்சி ஆணையர் | அலோக் குமார் பாண்டே, இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மாநகரம் | 12.3 km2 (4.7 sq mi) |
ஏற்றம் | 314 m (1,030 ft) |
மக்கள்தொகை (2011)[1] | 2,28,832[2] |
• பெருநகர் | 2,31,338 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 249401 |
தொலைபேசி குறியீடு | +91-1334 |
வாகனப் பதிவு | UK-08 |
பாலின விகிதம் | 1.18[1] ♂/♀ |
இணையதளம் | haridwar |
இந்த நகரம் கங்கை ஆற்றின் வலது கரையில், சிவாலிக் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[4] அரித்துவார் இந்துக்களுக்கு புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு முதன்மையான சமய நிகழ்வுகள் நடக்கின்றன. மேலும் இது பல முதன்மையான வழிபாட்டு தலங்களுக்கு நுழைவாயிலாகவும் உள்ளது. அரித்துவாரில் நடக்கும் நிகழ்வுகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரித்துவார் கும்பமேளாவின் போது, இலட்சக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அரித்வாரில் கூடி வீடுபேறு அடைவதற்காக தங்கள் பாவங்களைக் கழுவ கங்கைக் கரையில் சடங்கு புனித நீராடளை செய்கிறானர்.
தொன்மக் கதைகளின் படி அரித்துவார், உஜ்ஜெயினி, நாசிக், பிரயாகை ஆகிய நான்கு இடங்களில் அமுதத் துளிகள் இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[5] இறப்பில்லா வாழ்வு தரும் அமுதத்தைப் பெற தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து சமுத்திர மந்தனம் அல்லது பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமுதத்தை கருடன் சுமந்து சென்றபோது தற்செயலாக இந்த இடங்களில் சிந்தியது.[6] அமுதம் சிந்திய இடமான பிரம்ம குண்டம், ஹரனின் படித்துறை (ஹர் கி பவுரி அதாவது, "இறைவனின் அடிச்சுவடுகள்") அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இது அரித்வாரின் மிகவும் புனிதமான காட் (படித்துறை) எனக் கருதப்படுகிறது.[7] இது கன்வார் யாத்திரையின் முதன்மை மையமாகவும் உள்ளது, இங்கு பல இலட்ச்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை எடுத்து நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து சிவன் கோவில்களில் தீர்த்தப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.[8] இன்று, இந்த நகரம் அதன் சமய முக்கியத்துவத்திற்கு அப்பாற்பட்டு, வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நகரத்தின் அருகாமையில் மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (SIDCUL) மற்றும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) மற்றும் அதனுடன் இணைந்த துணை நிறுவனங்கள் உருவாகி தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அரித்வார் இந்திய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியின் பல்வண்ணக் காட்சியை வழங்குகிறது. புனித நூல்களில், இது கபிலஸ்தான், கங்காத்வார், மாயாபுரி என பலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சோட்டா சார் தாம் (உத்தரகாண்டில் உள்ள நான்கு முக்கிய புனிதத் தலங்கள்) செல்லும் ஒரு வழியாகும். இத்தலத்தை சைவர்கள் (சிவ பக்தர்கள்) மற்றும் வைணவர்கள் ( விஷ்ணுவின் பக்தர்கள்) முறையே ஹர்த்வார் மற்றும் ஹரித்வார் என்று அழைக்கிறார்கள், ஹர் என்றால் சிவன் ஹரி என்றால் விஷ்ணு.
நகரத்தின் நவீன பெயர் இரண்டு விதமாக ஹரித்வார் மற்றும் ஹர்த்வார் என்று எழுதப்படுகிறது. இந்த பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பொருளைக் கொண்டுள்ளன.
இந்து சமயத்தின் ஒரு வழிபாட்டு மொழியான சமசுகிருதத்தில், ஹரி என்றால் "விஷ்ணு," மேலும் துவாரம் என்றால் "வாசல்" என்பதாகும். எனவே, ஹரித்வார் என்றால் "விஷ்ணுவின் நுழைவாயில்" என்று பொருள் சொல்லப்படுகிறது. விஷ்ணுவின் முக்கிய கோவிலான பத்ரிநாத் தரிசனம் செய்வதற்காக புனிதப் பயணிகள் பயணத்தைத் தொடங்கும் இடமாக இது உள்ளதால் இந்தப் பெயரைப் பெற்றது.
அதே போல ஹர என்றால் "சிவன்" என்று பொருள் உண்டு.[6] எனவே, ஹர்த்வார் என்பது "சிவனின் நுழைவாயில்" என்று கூறப்படுகிறது. அரித்துவாரானது கயிலை மலை, ஜோதிர்லிங்கங்களில் அதி வடக்கே உள்ள கேதார்நாத், சிறிய சார் தாம் யாத்திரை தலங்களில் ஒன்றான பத்ரிநாத் போன்ற அனைத்து முக்கிய வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் புனிதப் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு பொதுவான இடமாக இந்நகரம் உள்ளது.
தொன்மங்களின் படி மேலிருந்து இறங்கிய கங்கையை, அரித்துவாரில் தான் சிவன் தனது சடாமுடியில் தாங்கி பின்னர் கீழிறக்கினார். அப்போதுதான் கங்கா தேவி அரித்துவாரத்தில் கங்கை ஆறாக இறங்கினாள். கங்கை ஆறு, கங்கோத்ரி பனிப்பாறையின் விளிம்பில் உள்ள கோமுகத்தில் அதன் மூலத்திலிருந்து உருவாகி 253 கிலோமீட்டர்கள் (157 மைல்) பாய்ந்த பிறகு, அரித்துவாரில் முதன்முறையாக கங்கை சமவெளியில் நுழைகிறது. இதுவே இந்த நகரத்திற்கு அதன் பண்டைய பெயரான கங்கத்வாரா ஏற்பட காரணமாயிற்று.
வேதங்களில், அரித்துவார் கபிலஸ்தானம், கங்காத்வாரா [9] மாயாபுரி என்று பலவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சார் தாம் (உத்தரகாண்டில் உள்ள நான்கு முக்கிய புனித்த் தலங்களான பத்ரிநாத் , கேதார்நாத், கங்கோத்ரி யமுனோத்திரி ) எனப்படும் புனிதத்தலங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. எனவே சைவர்கள் (சிவனைப் பின்பற்றுபவர்கள்) மற்றும் வைணவர்கள் விஷ்ணுவை பின்பற்றுபவர்கள்) இந்த இடத்தை ஹர்த்வார் மற்றும் ஹரித்வார் என்று அழைக்கிறார்கள். இதில் உள்ள ஹரா என்பது சிவனையும், ஹரி என்பது விஷ்ணுவையும் குறிப்பிடும் சொற்களாகும். [9] [10] [11]
மகாபாரதத்தின் வனபர்வத்தில், தௌம்ய முனிவர் தருமனிடம் இந்தியாவின் தீர்த்தங்களைப் பற்றிக் கூறும் இடத்தில், கங்காத்வார், அதாவது ஹரித்வார் மற்றும் கன்கால் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் தனது மனைவி, லோபாமுத்திரை ( விதர்பாவின் இளவரசி ) உதவியுடன் இங்கு தவம் செய்ததாகவும் குறிப்பிடுகிறது. [12]
கபிலா முனிவருக்கு இங்கு ஒரு ஆசிரமம் இருந்தாக கூறப்படுகிறது. அதன் பண்டைய பெயர், கபிலா அல்லது கபிலஸ்தானம். [13]
தொன்மவியல் அரசன், சூரிய குல மன்னன், சகரனின் ( இராமனின் மூதாதை) கொள்ளுப் பேரனான பரதன், [14] தன் மூதாதையர்கள் 60,000 பேரின் வீடுபேறுக்காக சத்ய யுகத்தில், பல ஆண்டுகள் தவம் செய்து கங்கை ஆற்றை சொர்க்கத்திலிருந்து இறக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான இந்துக்களால், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் சாம்பலை அவர்களின் வீடுபேறுக்கான நம்பிக்கையில் இங்கு கொண்டு வருகிறார்கள். [15] புனித கங்கை எப்பொழுதும் படும் ஹர் கி பவுரியின் மேல் பகுதியில் உள்ள கல்லில் விஷ்ணு தனது கால் தடத்தை பதித்ததாக கூறப்படுகிறது.
அரித்துவார் மௌரியப் பேரரசின் (கி.மு. 322-185) ஆட்சியின் கீழ் வந்தது, பின்னர் குசானப் பேரரசின் கீழ் (கி.பி. 1-3 ஆம் நூற்றாண்டுகள்) இருந்தது. இப்பகுதியில் கிமு 1700 முதல் கிமு 1200 வரை சுடுமண் பாண்ட கலாச்சாரம் இருந்ததாக தொல்லியல் கண்டுபிடிப்புகள் நிரூபித்துள்ளன. [11] அரித்துவார் குறித்த முதல் நவீன கால எழுத்துச் சான்றுகள் கிபி 629 இல் இந்தியாவுக்கு பயணம் செய்த சீனப் பயணியான சுவான்சாங்கின் பதிவுகளில் காணப்படுகின்றன. [16] மன்னர் ஹர்ஷவர்தனன் (590-647) ஆட்சியின் போது அரித்வாரை 'மோ-யு-லோ' என்று சுவாங்சாங் பதிவு செய்துள்ளார். அதன் எச்சங்கள் நவீன நகரத்திற்கு சற்று தெற்கே உள்ள மாயாப்பூரில் இன்னும் உள்ளன. அங்கு உள்ள இடிபாடுகளில் ஒரு கோட்டை மற்றும் மூன்று கோயில்கள், உடைந்த கல் சிற்பங்கள் போன்றவை உள்ளன. [10] [17] அவர் மோ-யு-லோவின் வடக்கே, கங்கையின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் ஒரு கோயில் இருப்பதைக் குறிப்பிடுகிறார். [10]
அரித்வார் 1206 இல் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.
இந்த நகரம் 13 சனவரி 1399 அன்று மத்திய ஆசிய படையெடுப்பாளர் தைமூர் லாங்கின் (1336-1405) வசம் வீழ்ந்தது. [18]
அரித்துவாருக்கு தனது பயணத்தின் போது, முதல் சீக்கிய குருவான, குரு நானக் (1469-1539) 'குஷாவர்ட் காட்' என்னும் படித்துறையில் குளித்தார், அதில் புகழ்பெற்ற, 'பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்' அத்தியாயம் இயற்றப்பட்டது. [19] [20] அவரது வருகை இங்கு உள்ள குருத்வாரா (குருத்வாரா நானக்வாரா) மூலம் நினைவுகூரப்படுகிறது. இரண்டு சீக்கிய ஜனம்சாகிகளின் (வரலாற்று நூல்கள்) கூற்றுப்படி, இந்த வருகை கிபி 1504 இல் வைசாக்கி நாளில் நடந்தது, பின்னர் அவர் கார்வாலில் உள்ள கோட்வாரா செல்லும் வழியில் கன்காலையும் பார்வையிட்டார். அரித்வாரில் உள்ள பாண்டாக்களில் கொடிவழி (வம்சாவளி) பதிவுகளை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. வாஹிஸ் என்று அழைக்கப்படும், இந்த பதிவுகள் நகரத்திற்கு அவர்கள் ஒவ்வொரு முறை வரும் போதும் புதுப்பிக்கப்படுகின்றன. அது மேலும் வட இந்தியாவில் உள்ள பரந்த குடும்ப மரங்களின் களஞ்சியமாக உள்ளது.[21]
16 ஆம் நூற்றாண்டில், இந்த நகரம் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 16 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது அபுல் ஃபசல் எழுதிய அயினி அக்பரியில், இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாக கங்கைக் கரையில் அர்த்வார் என்று அழைக்கப்படும் மாயா (மாயாபூர்) என்று குறிப்பிடுகிறது. முகலாயப் பேரரசர் அக்பர் தனது பயணத்தின்போதும், தன் இருப்பிடத்தில் இருந்தபோதும், கங்கை ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரைக் குடித்ததாகவும் அது குறிப்பிடுகிறது. சோரூன் மற்றும் பின்னர் ஹரித்வாரில் சிறப்பு ஆட்கள் நிறுத்தப்பட்டு, முத்திரை வைக்கப்பட்ட சாடிகளில், அவருக்காக கங்கை நீர் நிறப்பபட்டு கொண்டு செல்லப்பட்டது. [22]
முகலாயர் காலத்தில், அரித்வாரில் அக்பரின் செப்பு காசுகளை அச்சிடும் சாலை இருந்தது. அம்பெர் அரசர் மான் சிங், இன்றைய அரித்வார் நகருக்கான அடித்தளத்தை உருவாக்கினார் என்றும், ஹர் கி பவுரியில் உள்ள படித்துறைகளை புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு, அவரது அஸ்தியும் பிரம்ம குண்டத்தில் கரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேரரசர் ஜஹாங்கீர் (1596-1627) ஆட்சியில் இந்த நகரத்திற்கு விஜயம் செய்த ஆங்கில பயணியான தாமஸ் கோரியாட், இதை சிவனின் தலைநகரான 'ஹரித்வாரா' என்று குறிப்பிடுகிறார். [10]
பண்டைய காலத்தில் இருந்துவரும் நகரங்களில் ஒன்றான அரித்துவார், புத்தர் காலத்திலிருந்து, மிக அண்மையில் பிரித்தானியர் வருகை வரையிலான வாழ்க்கை மற்றும் காலத்துடன் தொட்ச்சியைக் கொண்டுள்ளதால், பண்டைய இந்து வேதங்களில் இதன் குறிப்பைக் காணலாம். அரித்வார் செழிப்பான, பழமையான சமய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இது இன்னும் பல பழைய அவேலிகள் மற்றும் நேர்த்தியான சுவரோவியங்கள் மற்றும் சிக்கலான கற்களால் ஆன மாளிகைகளைக் கொண்டுள்ளது.
கங்கை ஆற்றின் இரண்டு பெரிய அணைகளில் ஒன்றான பீமகோடா இங்கு அமைந்துள்ளது. இது 1840 களில் கட்டப்பட்டது, இநத அணை கங்கையின் நீரை மேல் கங்கை கால்வாய்க்கு திருப்புகிறது. இதனால் சுற்றியுள்ள நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கட்டு திட்டம் கங்கை நீர் ஓட்டத்தில் கடுமையான சீரழிவை ஏற்படுத்தி உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்களால் உள்நாட்டு நீர்வழிப்பாதையாக பெரிதும் பயன்படுத்தப்பட்ட கங்கையின் நீரோட்டம் சிதைவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இந்த ஆற்றுப் பகுதியில் உள்ள தெக்ரி, துறைமுக நகரமாக கருதப்பட்டது. 1837-38 பஞ்சத்தால் 1842 ஏப்ரலில் [23] இல் வேலை தொடங்கிய பின்னர் 1854 இல் மேல் கங்கை கால்வாய் திறக்கப்பட்டது. கால்வாயின் தனித்துவமான அம்சம் ரூர்க்கியில் உள்ள சோலானி ஆற்றின் மீது அரை கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழியாகும், இது கால்வாயை அசல் நதிக்கு மேலே 25 மீ (82 அடி) உயரத்தில் கொண்டு செல்கிறதுது.
'அரித்வார் ஒன்றிய நகராட்சி' 1868 இல் உருவாக்கப்பட்டது, இதில் மாயாபூர் மற்றும் கன்கால் சிற்றூர்கள் அடங்கும். அரித்வார் முதன்முதலில் 1886 இல், லக்சர் வழியாக, கிளைப் பாதை வழியாக இரயில்வேயுடன் இணைக்கப்பட்டது. அவத் மற்றும் ரோகில்கண்ட் இரயில் பாதை ரூர்க்கி வழியாக சஹரன்பூர் வரை நீட்டிக்கப்பட்டபோது, இது [24] 1900 இல் தோராதூனுக்கு நீட்டிக்கப்பட்டது.
1901 ஆம் ஆண்டில், இது 25,597 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மேலும் ஐக்கிய மாகாணத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [10] [25] 1947 இல் உத்தரப் பிரதேசம் உருவாகும் வரை அது தொடர்ந்தது.
அரித்துவார் உடல், மனம், உள்ளத்தால் சோர்வடைந்தவர்களின் உறைவிடமாக இருந்து வருகிறது. இது பல்வேறு கலைகள், அறிவியல், கலாச்சாரத்தை கற்றுக்கொள்வதற்கான ஈர்ப்பை தரும் மையமாகவும் உள்ளது. ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகை மருந்துகளின் சிறந்த மையமாக இந்த நகரம் நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குருகுல் காங்கிரி விஸ்வவித்யாலயா உட்பட தனித்துவமான குருகுலங்களுக்கான (பாரம்பரியப் பள்ளி) அமைவிடமாக உள்ளது. இந்த கல்வி நிலையம் பரந்த வளாகத்தைக் கொண்டுள்ளதோடு, பாரம்பரிய கல்வியை 1902 முதல் வழங்கிவருகிறது. அரித்வாரின் வளர்ச்சி 1960 களில் வேகம் எடுத்தது, நவீன நாகரிகத்தின் அடையாளமான பாரத மிகு மின் நிறுவனம், 1975 இல் 'மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக' நிறுவப்பட்டது. அருகில் உள்ள ரூர்க்கி பல்கலைக்கழகமும், தற்போதைய இந்திய தொழில் நுட்பக் கழகம்மானது அறிவியல் மற்றும் பொறியியல் துறைக் கல்வியில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.