கருடன் (Garuda), காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர்கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.[1][2]

விரைவான உண்மைகள் கருடன், அதிபதி ...
கருடன்
Thumb
கருடன்
அதிபதிபறவைகளின் அரசன்
தேவநாகரிगरुड़
சமசுகிருதம்கருடா
வகைபருந்து
இடம்வைகுந்தம், திருபாற்கடல்
துணைசுகீர்த்தி மற்றும் ருத்திரை
மூடு

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்

கருடனின் பிறப்பு

வாலகில்ய முனிவர்களின் தவ ஆற்றலால் பிறந்த வினதாவிற்கு பிறந்தவர் கருடன். கருடன் முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின்னர் நண்பராகவும் விளங்குவார் என வாலகில்ய முனிவர்கள் கூறினர்.

புராண வரலாறு

Thumb
கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்

சுகீர்த்தி மற்றும் ருத்திரை, கருடனின் மனைவியர். பெருமாள் கோயில் கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். (சிறிய திருவடி – அனுமார்)

தாய் அடிமை ஆதல்

ஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் வாலின் நிறம் குறித்து, நாகர்களின் தாயான கத்ரு, கருடனின் தாயான வினதையிடம் கேட்டார். தவறாக விடை கொடுத்தால் தனக்கு அடிமை ஆவாய் என ஒப்பந்தம் ஆயிற்று. வினதையும் குதிரை வாலின் நிறம் வெண்மை என்று கூறினார். வினதையின் கூற்றை பொய்யாக்க நினைத்த கத்ரு, தன் கருநிற பாம்புக் குழந்தைகளிடம், குதிரையின் வெண்மை நிற வாலை சுற்றுக்கொள்ளுகள் என்று கட்டளையிட்டாள். கருநிற நாகர்களும் குதிரையின் வாலைச்சுற்றிக் கொண்டதால், குதிரையின் வால் கருமையாகக் காணப்பட்டது. எனவே போட்டியில் தோற்ற வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன், நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.

அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

Thumb
அமிர்த கலசத்துடன் கருடன் தேவ லோகத்திலிருந்து திரும்பல்

கருடன், கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுவிக்குமாறு வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.

ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர்.[3]

கருடனின் அணிகலன்கள்

Thumb
பஞ்சலோக கருடச் சிற்பம்

நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.

கருடச் சின்னங்கள்

பல நாட்டுக் கொடிகளில் கருட உருவம் காணப்படுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளின் தேசிய சின்னமாக கருடன் உள்ளது. இந்தோனேசியா நாட்டின் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயர் கருடா ஆகும்.[4]

கருட மந்திரம்

'தத்புருஷாய வித்மஹே ஸுபர்ண பஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்'

ஒருவர் தொடர்ந்தி ஆறு மாதங்கள் இதனை உச்சரித்து வந்தால் அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் [5]

Thumb
கருடாழ்வார்
Thumb
கருடாழ்வார், பேளூர், கர்நாடகா

கருடாழ்வார் என்ற கருடன்[6] இந்து சமயப் புராணங்களில் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

பெயர்க் காரணம்

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலத்தை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார். பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியர்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.[7]

கருடன் பறவை

தமிழில் கருடன் என்ற சொல் செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய செம்பருந்து[8] (Brahminy Kite, Haliastur indus) என்ற பறவையைக் குறிக்கும். கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.[9]

கருட சன்னதிகள்

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன.[10] கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது. சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்.[11]

தெய்வ பக்தி நிறைந்த சிற்பி ஒருவன் சிற்ப கலை அம்சம் பொருந்திய கருடனின் திருவுருவம் ஒன்றை உருவாக்கினான். சிற்பம் முழுமை பெற்றவுடன் கருடன் உயிர் வரப்பெற்று பறக்கத் துவங்கியது.

பல்வேறு விஷ்ணு ஆலயங்களை தரிசித்தவாறு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள பறக்கை என்ற இடத்தை சென்றடைந்தது. அங்கு கோயில் தேர் செப்பனிடும்

பணியிலிருந்த தச்சன் தான் செதுக்கி, உயிர்பெற்றுப் பறந்த அந்த கருடனைப் பார்த்தான். உடனே தனது உளியை எடுத்து கருடனை நோக்கி வீசி, வலது இறக்கையில் காயம் ஏற்படுத்தினான்.

‘‘மதுசூதனா’’ என்று அலறியவாறு கோயிலின் தென்மேற்கு மூலையில் போய் வீழ்ந்தது கருடன். அது விழுந்த இடத்தில் அதன் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து தனி சந்நதி அமைத்தார்கள். பறக்கை திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார்.[12]

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும். இது போல கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் மைசூர் அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டதாகும்.

கருட வாகனம்

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

கருட சேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

  • சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது[13]
  • வைகாசி விசாக கருட சேவை நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது
  • ரத சப்தமியன்று திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ கருட வாகன சேவை புகழ் பெற்ற விழாவாகும்[14]
  • புதுச்சேரி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் கருடசேவை
  • நாச்சியார் கோவில் கல் கருட சேவை[15]
  • காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கருட சேவை[16]
  • ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை[17]
  • ஸ்ரீ ஹயக்ரீவர் ஆனி கருட சேவை[18]
  • திருநாங்கூர் பதினொரு கருட சேவை[19]
  • கும்பகோணத்தில் அட்சய திருதியையொட்டி 12 வைணவக் கோவில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 12 கருட சேவை[20]
  • தஞ்சை மாமணிக் கோவிலில் 23 வைணவக் கோவில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 23 கருட சேவை[21]
  • காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் தலத்தில் வைகாசி மாதம் 15 வைணவக் கோயில்களின் பெருமாள் எழுந்தருளி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காட்சி தரும் 15 கருட சேவை[22]

மேற்கண்ட கருட சேவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகும்.

கருடபஞ்சமி

ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமி பெருமாளின் வாகனமான கருடாழ்வார் அவதரித்த நன்னாளக கருதப்படுகிறது. இந்நாள் கருடபஞ்சமி என்று பெயர் பெற்றுள்ளது. பெருமாள் கோவில்களில் இந்த தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.[23]

ஸ்ரீ கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு–இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[24]

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.