இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
பண்டிதர் மதன் மோகன் மாளவியா (Madan Mohan Malaviya, இந்தி: पंडित मदन मोहन मालवीय; 25 திசம்பர் 1861 — 12 நவம்பர் 1946) ஓர் இந்திய கல்வியாளரும் இந்திய விடுதலை இயக்கத்தில் முதன்மை பங்களித்த விடுதலை வீரரும் இந்து தேசியத்தை வளர்த்தெடுத்தவரும் ஆவார். அவரது முதிய அகவையில் பலரும் அவரை 'மகாமனா' என்றழைக்கலாயினர்.[1]
மதன் மோகன் மாளவியா Madan Mohan Malaviya | |
---|---|
3-ஆவது பனாரசு இந்துப் பல்கலைக்கழக உபவேந்தர் | |
பதவியில் 1919–1938 | |
முன்னையவர் | பி. எஸ். சிவசுவாமி ஐயர் |
பின்னவர் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் |
இந்திய தேசிய காங்கிரசு தலைவர் | |
பதவியில் 1909–1910 | |
முன்னையவர் | ராஜ்பிகாரி கோசு |
பின்னவர் | வில்லியம் வெட்டர்பர்ன் |
பதவியில் 1918 | |
முன்னையவர் | அன்னி பெசண்ட் |
பின்னவர் | சையத் ஹசன் இமான் |
பதவியில் 1932–1933 | |
முன்னையவர் | வல்லபாய் பட்டேல் |
பின்னவர் | நெல்லி சென்குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரயாக்ராஜ், வடமேற்கு மாகாணங்கள், இந்தியா (இன்றைய பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம்) | 25 திசம்பர் 1861
இறப்பு | 12 நவம்பர் 1946 84) அலகாபாது, ஐக்கிய மாகாணம், இந்தியா | (அகவை
அரசியல் கட்சி | காங்கிரசு தேசியவாதிகள் கட்சி இந்து மகாசபை |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (முன்னர்) |
துணைவர் | குமாரி குந்தன்தேவி மாளவியா |
பிள்ளைகள் | 6 |
கல்வி | கொல்கத்தா பல்கலைக்கழகம் (இளங்கலை) |
தொழில் | |
விருதுகள் | பாரத ரத்னா (2015) (இறப்பின் பின்) |
கையெழுத்து | |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாளவியா நான்கு முறை பொறுப்பாற்றி உள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரும் தங்கியிருந்து படிக்கும் பல்கலைக்கழகமாக விளங்கும்[2] வாரணாசியில் அமைந்துள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை (BHU) 1916இல் நிறுவியதற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1919 முதல் 1938 வரை [3][4] பணியாற்றி உள்ளார். இந்தியாவில் சாரணர் இயக்கத்தை நிறுவியவர்களில் பண்டிதர் மாளவியாவும் ஒருவர்.[5] மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த ஆங்கில நாளிதழ் த லீடரை 1909இல் அலகாபாத்திலிருந்து வெளியிட்டார்.[6]
மேலும், மாளவியா ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பதவி வகித்தார். இவரது முயற்சியால் இந்த நாளிதழின் இந்திப் பதிப்பு 1936ஆம் ஆண்டு முதல் வெளியானது.[6]
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் திசம்பர் 25, 1861 அன்று மதன் மோகன் மாளவியா ஒரு பிராமணக் குடும்பத்தில், பிரிஜ்நாத், மூனாதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளுமுடைய குடும்பத்தில் ஐந்தாவது மகவாகப் பிறந்தார். இவரது மூதாதையர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாதலால் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவரது தந்தை சமசுகிருதத்தில் பல சமய நூல்களில் தேர்ந்தவராக இருந்தார்.[7][8]
மாளவியா ஐந்து அகவையிலேயே சமசுகிருதம் கற்கத் தொடங்கினார். அலகாபாத் சில்லா பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழதி பள்ளி இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியிட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மெட்றிகுலேசன் படிப்பை முடித்தார். பின்னர் படிப்புதவித் தொகை பெற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அலகாபாத் சில்லா பள்ளியில் ஓர் ஆசிரியராகத் தம் பணி வாழ்வைத் தொடங்கினார்.பின்னர் சில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
மாளவியா தமது சட்டத்துறையில் பணிவாழ்வை 1891இல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கினார். பின்னர் 1893ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொடர்ந்தார்.[8][9] இந்திய தேசிய காங்கிரசில் கட்சித்தலைவராக 1909, 1918, 1930 மற்றும் 1932ஆம் ஆண்டுகளில் பொறுப்பேற்றார்.
இந்தியாவில் சாரணர் இயக்கம் முறையாக 1909ஆம் ஆண்டு பெங்களூருவின் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் பிரித்தானிய அரசு துவங்கினாலும் உள்நாட்டு இந்தியர்களுக்காக நீதியரசர் விவியன் போசு, மதன்மோகன் மாளவியா, இருதயநாத் குன்சுரு, கிரிஜா சங்கர் பாஜ்பாய், அன்னி பெசண்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் 1913ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. மேலும் சாரணர் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட மாளவியா சேவா சமிதி என்ற சேவை அமைப்பையும் நிறுவினார்.[10]
இன்று பெருமையுடன் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை 1916இல் அன்னி பெசண்ட்டின் துணையுடன் நிறுவினார்.[3][11]
1912இல் இம்பீரியல் சட்டப் பேரவை உறுப்பினரான மாளவியா இது 1919இல் மத்திய சட்டப் பேரவை எனப் பெயர் மாற்றம் பெற்றபோதும் தொடர்ந்து 1926 வரை உறுப்பினராகப் பொறுப்பாற்றினார்.[12]
1920களில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.[13] 1928இல் சைமன் குழுவிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார். மே 1932இல் காங்கிரசுத் தலைவராக "இந்தியப் பொருட்களையே வாங்கு" இயக்கத்திற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.[14]
தேர்தல் நோக்கில் ஒரு சாராரை மனநிறைவுப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிரான மாளவியா, முசுலிம்களுக்கு 1916ஆம் ஆண்டின் இலக்னோ உடன்பாட்டின்படி தனி வாக்குத்தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தார். இந்தப் போக்கினால் நாடு பிளவுபடும் வாய்ப்பு இருப்பதாக தமது கருத்துக்களைத் தெளிவாகக் காந்திக்குத் தெரியப்படுத்தினார்.[15]
1930இல் நடந்த முதல் வட்டமேசை மாநாட்டில் இந்திய சார்பாளராக பங்கேற்றார். 1939இல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றார்.[16]
மாளவியா இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பணியாற்றினார். இந்த நாளிதழின் இந்திப் பதிப்பை 1936ஆம் ஆண்டில் துவக்கினார். நிதி நெருக்கடியால் இந்த நாளிதழ் தத்தளித்தபோது தொழிலதிபர் ஜி. டி. பிர்லா, லாலா லஜ்பத் ராய், எம். ஆர். ஜெயகர் ஆகியோரின் துணையுடன் கையகப்படுத்தி கூடுதல் நிதி ஏற்பாடு செய்தார்[17]. இதில் பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட பிர்லாவின் குடும்பம் தற்போது இந்த நாளிதழை நிர்வகித்து வருகிறது.
மாளவியா சமூகநீதிக்காகவும் கோவில்களில் அனைத்து சாதியினரும் நுழைவதற்கும் போராடினார். இவரது தலித் தொடர்புகளைக் கண்டித்து இவரது சாதியினர் இவரை தங்கள் சாதியிலிருந்து வெளியேற்றினர். இவர் கலாராம் கோவிலில் இரத யாத்திரையின்போது 200 தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.[18]
அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கப்படி தனது 16 ஆவது அகவையிலேயே மாளவியா மிர்சாப்பூரின் குந்தன் தேவியைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் பிறந்தனர். இவர்களில் பலரும் சமூகத்தின் பல உயர்நிலைகளை அடைந்தனர்; சிலர் தமது தந்தையின் வழியில் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்தனர். நவம்பர் 12, 1946ஆம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா மரணமடைந்தார்.
இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது மதன் மோகன் மாளவியா இறந்து 68 ஆண்டுகள் கழிந்து அவருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து 2014 திசம்பர் 24 ஆம் தேதி அன்று இந்திய அரசு அறிவித்தது. 2015 மார்ச்சுத் திங்கள் 30இல் மதன் மோகன் மாளவியாவின் வாரிசுகள் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர். மதன் மோகன் மாளவியா ஆற்றிய கல்வித் தொண்டுக்காகவும் இந்திய விடுதலைப் போராட்டங்களில் அவரின் பங்களிப்புக்காகவும் பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.