Remove ads
அறிவு மற்றும் திறமை கற்பிப்பதன் மூலம் பரிமாற்றம் செய்யப்படுவது. From Wikipedia, the free encyclopedia
கல்வி (Education) என்பது குழந்தைகளை உடல், மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் சார்ந்த மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.[1] கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். கல்வியானது அறிவு மற்றும் திறமை ஆகியவற்றை அளித்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, பண்பாடு, நற்பண்புகள்போன்றவற்றை அளித்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடையச் செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துகிறது. கல்வி என்பது கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும்[2]. இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் ஆகியவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியில் பங்கு பெற செய்யும் அமைப்பு ஆகும்.
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.
கல்வி என்ற தமிழ்ச் சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது.[3] கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō [4] என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது வளர்த்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் பொருளைத் தருகிறது. ēducō [5] என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இச்சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவதல் ஆகும்.
கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது ஆகும். நம் உடம்பிலுள்ள அறிவின் வாயில்களான மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன.
பண்டைக் காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர். இதன் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன [6]. பிளேட்டோ கிரேக்கத்தில் உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். அரிஸ்டாட்டில் (கி.மு.384-கி.மு.322) அங்கு இருபது ஆண்டு காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல் கல்விக்கூடம் ஆகும்.[7] பின், கி.மு.330-இல் அலெக்சாண்டிரியாவில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. உரோமாபுரியின் வீழ்ச்சி (கி.பி.476) ஐரோப்பாவில் கல்விக்கூடங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.[8]
சீனாவில், கன்பூசியஸ் (கி.மு.551– கி.மு.479) பரப்பி வந்த கருத்துக்கள் இன்றுவரை சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் பின்பற்றப் படுகின்றன.[9]
தென் அமெரிக்காவில், அஸ்டெக் இனத்தவர் (கி.பி. 1300 - கி.பி. 1521 ) தலகாகுஅபகுவாலிஸ்திலி (tlacahuapahualiztli) என்ற ("ஒருவரை அறிவுள்ளவராக ஆக்கும்") முறையைக் கையாண்டு வந்தனர்.[10][11][12] உரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிறித்துவத் திருக்கோவில்கள் கல்வி நிறுவனங்களை அமைத்து நடத்தி வந்தன.[13] பிறகு, அவற்றில் ஒரு சில, பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன.[8] கி.பி. 1450-இல் யோகான்னசு கூட்டன்பர்கு(Johannes Gutenberg) என்பவரால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கல்வி விரைவாகப் பரவலாயிற்று.
இன்று பல நாடுகளில் இளைய சமுதாயத்தினருக்குக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தொழில்முறையில் உள்ள ஆசிரியர்கள்[15] கற்பித்தலிலும், பயிற்சி அளிப்பதிலும் ஈடுபடுவர். இதில் கற்பித்தல் நுணுக்கங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவை உள்ளடக்கியிருக்கும். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல்துறை சார்ந்த அறிவையும், தகவல்களையும் பயன்படுத்துவர். உளவியல், மெய்யியல், தகவல் தொழில்நுட்பம், மொழியியல், உயிரியல், சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும். வானியற்பியல், சட்டம் மற்றும் விலங்கியல் போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காக சிறப்புக் கல்வி நெறிகளும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்வி நெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
முறைசார்ந்த கல்விக்கு[16] முற்றிலும் மாறுபட்டது முறைசாரா கல்வி. இக்கல்வியும் ஒரு வடிவமைப்பு கொண்டுள்ளது. சில பயிற்சிகளையும், மதிப்புகளையும், அறிவை வளர்க்க உதவும் முறைகளையும் இந்தக் கல்வி முறையில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குடும்பமும் குழந்தைகளுக்கு கலாச்சாரம், மொழி ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றன. மேலும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதது எவை என அறிவுறுத்தியும், பழக்க வழக்கங்கள் மூலம் தங்கள் பண்பாட்டையும் சொல்லிக் கொடுப்பதும் முறைசாரா கல்வி ஆகும்.
முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும். இதில் பெரியவராகி பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அனைவருக்குமான வாய்ப்புகளை முறைசாரா கல்வி அளிக்கின்றது.
முறைசாரா கல்வி வாய்ப்புகளும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள், நூல்நிலையங்கள் போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடங்கும்.
கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஒரு நபரின் கற்றல் அனுபவமானது, அவரின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி,உணர்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.
கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயல் திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேலை போன்றவற்றில் இருக்கிறது.
மாற்றுக்கல்வி முறையில் (Alternative Education) கல்வி வேறு முறையில் கற்பிக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, மாற்றுப் பள்ளிகள் (Alternative Schools), தானே கற்றல் (Self Learning), இல்லப் பள்ளி (Home Schooling), பட்டறிவுக் கல்வி (Unschooling) ஆகியன மாற்றுக்கல்வி முறையில் அறிவைக் கற்பிக்கின்றன. மாற்றுக்கல்வி முறையில் தோன்றும் பயனுள்ள கருத்துக்கள் பொதுக் கல்வியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தொல்குடி சார்ந்த கல்வி (Indigenous Education) என்பது அந்தந்த நாட்டில் பரம்பரையாக வந்த அறிவு, பண்பாடு ஆகியவற்றை கல்வி முறையில் இனணத்து வழங்குவதாகும். பல்வேறுப் படையெடுப்புக்களினால் அழிந்து வரும் ஓர் இனத்தின் அடையாளம் இவ்வகைக் கல்வி முறையினால் பாதுகாக்க வாய்ப்புகள் உண்டாகும்.[17]
ஆரம்ப காலகட்டத்தில் குழந்தைகள் குறைவாகவே கற்றன. மனிதன் நாகரீக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் சேர்த்து வைத்த அனுபவம், அறிவு ஆகியவற்றால் கல்வியின் வளர்ச்சியும் அதிகமாக தேவைப்பட்டன.
சமூகத்தில் ஓர் ஆற்றல் மிக்க உறுப்பினராக விளங்கவேண்டுமானால் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகள், விருப்பங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றை விதைக்க வேண்டும். அதாவது மனிதன் ஒரு கவிஞனாகவோ, தத்துவ மேதையாகவோ, ஒரு நல்ல ஆசிரியராகவோ, ஒரு திறமை வாய்ந்த மனிதனாகவோ வளரக் கல்வி மிகவும் அவசியமாகும். எனவே ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகியவை வளர கல்வி அவசியம். ஒரு தனி மனிதனின் திறமைகள், அவன் சமுதாயப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகில் பங்களிப்பை செய்ய கல்வி துணைபுரியுகிறது.
உடல்,[18]. உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை மற்றும் ஆன்மிக சிந்தனைகளை வளர்ப்பதில் கல்வி முதன்மையாக உள்ளது. ஒரு தனிமனிதனின் அறிவு, படைப்பாற்றல், மனவெழுச்சி, எதிர் உருவப்படம் பேச்சுவார்த்தை ஆகிய குணங்களை வழிகாட்டியாக இருந்து வளர்ப்பது தேவையாகிறது. வழிகாட்டியாக இருப்பதால்தான் தனிமனிதனின் வாழ்க்கைக்கு குறிக்கோள்களை அமைக்கவும், பெற்றுக்கொள்ளவும் உதவிகள் புரிகின்றது. வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைய, அவர்களின் சக்தியையும், செயலையும் வழிப்படுத்தும் மனிதனின் அறிவு, படைப்பாற்றல் பிரதிபலிப்பு சக்தி போன்றவற்றைப் பெற கல்வி வழிகாட்டியாக உள்ளது.
கல்வி பெற்ற கிராம மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறுவதால் கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகிறது. இதனால் பெண்களின் தனித்தன்மையின் நிலை உயர்ந்துள்ளது. அதாவது பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலை நகரத்தில் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் கல்வி நிலை மேம்பாடு அடைந்துள்ளது. மேலும் குடும்ப சூழ்நிலையில் ஒருவிதமான மேம்பட்ட நிலை, அவர்களின் கலாச்சாரம், பொருளாதாரம் போன்றவற்றைக் கல்வி நிர்ணயம் செய்கிறது. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு மிகவும் எதிரான ஆயுதம் கல்வியாகும்.[19][19][20][20]
பள்ளி[21] என்பது முறையாக அமைக்கப்பட்ட அமைப்பாகும். இதன் வடிவமைப்பில் பள்ளியில் தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றவர்கள் கூடி பல்வேறுபட்ட பள்ளி செயல்முறைகளில் ஈடுபட்டு குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், அமைப்பின் குறிக்கோள்களை அடையவும் பாடுபடுகின்றனர்.
பள்ளிக் கல்வி என்பது ஒரு முறையான கல்வித்திட்டம் மூலம் அறிவு, திறமைகள், உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றை கல்வி மூலம் அளிக்கும் இடம் பள்ளிக்கூடம் ஆகும். பள்ளிகள் ஒரு திட்ட வரைவின் படி சிறப்பான பாடப்பிரிவுகள் மூலம் அனுபங்கள் மற்றும் தெரிந்துகொள்ள முடியாதவற்றை ஒரு அறையில் சொல்லி கொடுக்கும் இடம்தான் பள்ளி. "பள்ளிப்படிப்பு என்பது நீண்ட வாழ்வின் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் இடமாகும். இது குழந்தைப் பருவத்திலிருந்து பள்ளியின் இறுதி வரை செயல்படும்".
இந்தக் கல்வி முறையில் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. இது குழந்தையின் உடல், உணர்வு மற்றும் அறிவு வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆகும். இது குழந்தையின் எதிர்காலத்திற்கு ஒரு ஆரோக்கியமான அடிப்படையாக விளங்குகின்றன.
தொடக்கக் கல்வி என்பது குழந்தையின் 5 வயதில் தொடங்கி 10 வயது வரை கல்வி கற்கும் நிலையாகும். இதுதான் குழந்தைக்கு சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கைகள், விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்கும் இடமாகும். குழந்தைகளுக்கு முதன்மையான கல்வியை வழங்குவதன் மூலம் முதல் தலைமுறை கற்போருக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும். மேலும் நாட்டின் பொறுப்பேற்க, வழிநடத்த, ஒரு குழந்தையைத் தயார் செய்வது இதன் நோக்கம் ஆகும்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இடைநிலைக்கல்வி முறையானது இளம் பருவத்தில் ஏற்படுகின்ற கல்வி முறை ஆகும். இது வயது வந்தோருக்கான வளரிளம் விருப்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அல்லது உயர்நிலைக் கல்வி ஆகும். எ.கா. பல்கலைக்கழகம், தொழிற் கல்வி பள்ளி என அழைக்கப்படுகிறது. இந்தக் கல்விக்கு ஏற்ப விரிவான கல்வியாக மாற்றம் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்திற்கான பாடசாலைகள் அல்லது அதன் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை அல்லது உயர்நிலைப்பள்ளிகள், நடுத்தரப் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது தொழில்சார் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கும் ஓர் நாட்டிலிருந்து மற்றோர் நாட்டிற்கு வேறுபடுகின்றன. ஆனால் முக்கியமாக இளம் வயதிலேயே (5-10) இந்தக் கல்வி ஏற்படுகிறது. அமெரிக்காவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியானது சில நேரங்களில் K-12 கல்வி என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் இரண்டாம்நிலை கல்விக்கான நோக்கம் பொதுவான அறிவை வழங்குவது, உயர்கல்விக்கு தயாராக்குவது அல்லது உயர்நிலைப் பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ஒரு தொழில் கல்விக்கு நேரடியாக பயிற்சியளிப்பது ஆகும்.
இது இரண்டு ஆண்டு கல்வி முறை ஆகும். ஒரு மாணவனின் உயர் கல்விக்கு பிறகு அவனுடைய திறன்களை கண்டுடறிந்து, அவனது திறனுக்கு ஏற்ப திசையில் மாற்றிவிட வேண்டும். இது பெரிய அளவில் அவனுடைய வாழ்க்கை முனேற்றத்திற்கு வழிவகுக்கும். மொழி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், உளவியல், மனவியல், சமுதாயவியல், கலை, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், மண்ணியல், உடற்கல்வி,[22] கலையும் கைத்தொழிலும் போன்ற பாடப் பிரிவுகளை உள்ளடக்கியது ஆகும்.
கடந்த காலத்தில் உடல் ஊனமுற்றோர்கள் பெரும்பாலும் படிப்பது இல்லை. குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர்களால் அல்லது சிறப்பு ஆசிரியரால் சிறப்பு கல்வி அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்ட ஆரம்ப கால மருத்துவர்கள் (இடிர்ட், சேய்கின், ஹோவ், கல்லுடெட் போன்றவர்கள்) இன்று இருக்கும் சிறப்பு கல்விக்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். அவர்கள் தனிப்பட்ட அக்கறை, அறிவுறுத்தல்கள் மற்றும் செயல்பாட்டுத் திறமைகளில் கவனம் செலுத்தினார்கள். ஆரம்பகாலங்களில் கடுமையான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பு கல்வி வழங்கப்பட்டது, ஆனால் சமீபத்தில் இந்த கடினமான கற்றல் அனுபவம் அனைவருக்கும் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலை மாணவர்கள் மேற்படிப்பு அல்லது தொழிற்கல்வியாக அமையலாம். இக்கல்வி அவர்களுக்கு உண்மையான மற்றும் பழமையான அறிவு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துதல் போன்ற ஊக்குவிக்கும் கல்வியாக அமைகின்றது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை சமுதாயத்தில் சிறந்த முறையில் சேவைகள் செய்திட வழிவகுக்கின்றன. அதாவது அவர்களின் கண்டுபிடிப்புகள்வேளாண்மை, மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட வழிவகை செய்யப்படுகின்றது..
கல்வித்துறை (Education sector) என்பது கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் குறிக்கிறது. அதாவது, இதில் அரசாங்கத்தின் கல்வித்துறை, கல்வி அதிகாரிகள், பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன அடங்கும். இதன் முதல் நோக்கம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி அறிவைக் கொடுப்பது ஆகும். பாடத் திட்டங்களை உருவாக்குவோர், கல்விக்கூடங்களை நடத்த தலைமை ஆசிரியர்கள், துணை வேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் பலரின் துணை கொண்டு கல்வி அறிவை சமுதாயத்திற்கு கொடுக்கும் பணி நடைபெறுகின்றன.[23]
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, அரசாங்கம், கல்வி நிறுவனங்களில் தலையிடாமல், பொறுப்பு முழுவதும் அந்நிறுவனங்களின் முதல்வர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தால், கல்வியின் தரம் உயர்ந்திருக்கும் என அறியப்பட்டு உள்ளது.[24] பாடத் திட்டங்களில், பாலுறவைப் பற்றி சரியான புரிதல் மாணவர்களுக்கு வரத் தேவையான கருத்துக்களைச் சேர்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்கள் பல பரிந்துரை செய்துள்ளன.[25]
முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals) என்பது கல்வியின் இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது என்பதைப் பற்றியதாகும். கல்வி சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்; பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் இலக்குகளை தாங்கள் விரும்பியபடி நாடிச் செல்ல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.[26] ஐக்கிய நாடுகள் சபை, 17 வகையான குறிக்கோள்களைப் (வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்) பரிந்துரை செய்துள்ளன.[27][28]
சரியான கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தி மேற்பார்வையிட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்றடையும் என UNESCO நிறுவனம் ( UNESCO International Institute for Educational Planning) கூறியுள்ளது.[29] ஆனால், இப்பயன் நீடித்து இருக்க வேண்டுமெனில் அதிகாரிகள் அவ்வப்போது சரியான முறையில் தலையிட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.[29] தலையீட்டின் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்:[29]
கல்விக் கோட்பாடுகள் (Educational theory) என்பது பல்வேறு கருத்துக்களைக் கொண்டது. அதில் ஒரு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வி உளவியல் (Educational psychology) என்பது கற்பவர்கள், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு கற்கின்றனர்; கற்பிப்பதில் உள்ள உளவியல் சிக்கல்கள்; கற்கும்போது குறுக்கிட்டுச் சரி செய்தல்; கல்விக்கூடங்களில் சமுதாய உளவியல் சிக்கல்கள் ஆகியன பற்றி ஆராயும் துறையாகும். எடுத்துக்காட்டாக, உயர்திறன் வாய்ந்த குழந்தைகள், பிறவிக் குறைகள் உள்ள குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயலாற்றுவது எப்படி என்பன போன்றவற்றை ஆராய்ந்து பார்ப்பது கல்வி உளவியலில் நோக்கமாகும். கல்வி உளவியலில் கண்டறியப்படும் உண்மைகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாடத்திட்டங்களைச் சரியான முறையில் அமைப்பது, தொழில்நுட்பங்களை எவ்வாறு புகுத்துவது, வகுப்பறையை எவ்வாறு ஆளுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு கல்வி கொடுப்பது போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்க இயலும் (Lucas, Blazek, & Raley, 2006).
ஒரு மாணவர் அறிவு நுட்பத்திற்கு (intelligence) ஏற்றார் போல, கல்வி முறையில் அவர் கற்கும் அளவு வேறுபடுகின்றது. அறிவு நுட்பம் மிக்கவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் மேல் படிப்பு படிக்கச் செல்கின்றனர்.[31] கல்வி அறிவு நுட்பத்தைக் கூட்டுகிறது.[32] கல்வியினால் ஒருவரது அறிவுக் கூர்மை அதிகரிக்கின்றது என்றாலும், 53-ஆம் அகவையில் அவர்தம் அறிவுக் கூர்மை, அவர் படித்த படிப்பைச் சார்ந்திருப்பதை விட, 8-ஆம் அகவையில் இருந்ததைச் சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம்.[33]
கடந்த 20 ஆண்டுகளாக கல்வியை ஒருவருக்கு எவ்வாறு வழங்குவது (Learning modalities) என்பதில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. கீழ்க்கண்ட வழிமுறைகள் பெரிதும் வழக்கில் உள்ளன:
இத்துடன், இசைவழிக் (musical) கல்வி, மாந்தர்வழிக் (interpersonal) கல்வி, சொல்வழிக் (verbal) கல்வி, ஏரணவழிக் (logical) கல்வி மற்றும் தனக்குள் நிகழும் (intrapersonal) கல்வி ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளன. ரீட்டா டன் (Rita Dunn), கென்னத் டன் (Kenneth Dunn) எனும் இரு ஆய்வாளர்கள், ஒரு மாணவன் கல்வி கற்பதற்குத் தூண்டுகோலாக உள்ளவை யாவை? என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்:[34][35]
அதே கால கட்டத்தில், ஜோசப் ரென்சுல்லி (Joseph Renzulli) என்பாரும் ஒரு புதிய வகையான கல்வி கற்கும் முறையை முன்மொழிந்தார்.[36] ஓவார்டு கார்ட்னர் (Howard Gardner) என்பவர் பன்முக அறிவு நுட்பக் கோட்பாடு (Multiple Intelligences theory) என்னும் கருத்தை முன்மொழிந்து, அறிவு நுட்பம் என்பது பல கூறுகளைக் கொண்டது என வாதிட்டார். இவர் கூற்றுப்படி, அறிவு நுட்ப நிலை என்பது எட்டு விதிகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.[37]
ஒவ்வொரு கல்வி கற்கும் வழிமுறையிலும் ஒருவருக்கு கற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். சிலர் கற்பவர் தம் நிலையைப் பொறுத்து, தமக்கென ஒத்து வரும் வழிமுறையில்தான் சரியாகக் கற்க முடியும் என்று கூறுகின்றனர்.[38][39] கிளாக்ஸ்டன் (Guy Claxton) போன்றோர் கல்வியை காட்சிவழிக் கல்வி, செவிவழிக் கல்வி, செயல்வழிக் கல்வி என்றெல்லாம் பிரிக்கக் கூடாது; ஏனெனில், இது அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதாகிவிடும் என்று கூறுகின்றனர்.[40][41]
மனமும், மூளையும் கல்வியில் எவ்வாறு செயல்படுகின்றன என்று ஆராயும் துறை கல்விசார் நரம்பு அறிவியல் (Educational neuroscience) ஆகும். இதில் அறிவு-உணர்வு சார்ந்த நரம்பு அறிவியல் (cognitive neuroscience), வளர்ச்சி சார்ந்த அறிவு-உணர்வு நரம்பு அறிவியல் (developmental cognitive neuroscience), கல்வி சார்ந்த உளவியல் (educational psychology), கல்விசார்ந்த தொழில்நுட்பம் (educational technology), கல்விக் கோட்பாடுகள் (education theory) ஆகிய துறைகளில் இருந்து கல்வித் துறைக்கு என்னென்ன கருத்துக்களைக் பெற்று, கல்வியை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. [42][43][44][45]
மேலும், கல்விசார் நரம்பு அறிவியலில், ஒருவர் படிக்கும் போதும்,[44], கணிதத்தைப் பற்றிய சிந்தனைகள் தோன்றும் போதும்,[46] ஒன்றைக் கூர்ந்து கவனிக்கும் போதும் மூளையில் என்னென்ன நடக்கின்றன என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இத்துடன், வாசிப்புக் குறைபாடு (Dyslexia),[47][48] கணிதம்-கற்றல் குறைபாடு (dyscalculia),[49] கவனக்குறைவு மிகைஇயக்க குறைபாடு (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) போன்ற சிக்கல்களையும் ஆராய்கின்றனர்.
கற்றுக் கொடுக்கப்படுகின்ற கல்வி எதற்காக? கல்வியின் நோக்கம் என்ன? என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடுபட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர்.[50]
கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி அளித்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகின்றன.[51] ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்; எவ்வாறு எனில், முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் கல்வி அறிவு, தொழில் நுட்பங்கள் ஆகியனவற்றை இறக்குமதி செய்து, முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்பது பிறகு தெரிய வந்தது. நல்ல கல்விக்கும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கும் நல்ல திறமையுள்ள மனித வளமும், அதை ஊக்குவிக்கும் பொருளாதார நிறுவனங்களும் தேவைப்படுகின்றன.[52][53]
மின்சர் (Jacob Mincer) என்ற ஆய்வாளர், ஒருவரின் சம்பாதிக்கும் திறமை அவர் பெற்ற கல்வி, அவருக்குள்ள அறிவாற்றல், செயல்திறன் ஆகியனவற்றைப் பொறுத்து அமைகிறது என்று வாதிட்டுள்ளார்.[54] ஆனால், இந்தக் கருத்துக்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்கள் வைத்துள்ளனர். அதாவது, ஒருவர் கற்ற கல்வியின் பயன் இது என்று எவ்வாறு வரையறுப்பது என்பது ஒரு எதிர் கருத்து.[55][56] பொருளாதார ஏந்துகள் இல்லாத இளைஞர்கள், அறிவாற்றல், திறமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று வாதிடப்படுகின்றது.[57]
அமெரிக்க கல்விமுறையில் அடிப்படையிலேயே ஒரு முரண்பாடு உள்ளது என பவுலசு (Samuel Bowles), சிண்டிசு (Herbert Gintis) ஆகிய பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, அனைவருக்கும் சமமான கல்வி என்று ஒரு புறம் கூறிவிட்டு, மற்றொரு புறம் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும் முதலாளித்துவத்தை நடைமுறைபடுத்தப்படுகின்றது என கூறுகின்றனர்.[58]
உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகி விடுகின்றது. பல்வேறு நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதிய கல்விக்கொள்கைகளை வகுத்து கொள்கின்றன. பின்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமான பாடத் திட்டங்களில் இருந்து விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகள் அடிப்படையில் குழந்தைகளுக்கான அறிவு புகட்டபடுகின்றன. எடுத்துக்காட்டாக, தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி சிறுவர்கள் கற்கின்றனர்.[59]
மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அது பெரியவர்களுக்கும் ஆனது என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது.[60] பின்லாந்து நாட்டில், கல்வி வாழ்நாள் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.[61]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.