மராத்தியப் பேரரசைத் தோற்றுவித்தவர் (ஆட்சி. 1674-1680) From Wikipedia, the free encyclopedia
முதலாம் சிவாஜி போன்சலே[5] என்பவர் ஓர் இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பீஜாப்பூரின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார்.[6] இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாக அமைந்தது. 1674ஆம் ஆண்டு அலுவல்ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்.[7]
முதலாம் சிவாஜி | |
---|---|
சகக்கர்த்தா[1] ஐந்தவ தர்மோத்தரக்[2] | |
பிரித்தானிய அருங்காட்சியகத்தின் திரட்டுகளிலிருந்து சிவாஜியின் உருவப்படம் (1680கள்), | |
மராட்டியப் பேரரசின் முதல் பேரரசர் (சத்திரபதி) | |
ஆட்சிக்காலம் | 1674–1680 |
முடிசூட்டுதல் | 6 சூன் 1674 (முதலாம்) 24 செப்டம்பர் 1674 (இரண்டாம்) |
முன்னையவர் | புதிய பதவி உருவாக்கம் |
பின்னையவர் | சம்பாஜி |
பெஷ்வா | மோராபந்த் திரியம்பக் பிங்ளே |
பிறப்பு | 19 பெப்ரவரி 1630 சிவனேரி, அகமதுநகர் சுல்தானகம் (தற்போதைய புனே, மகாராட்டிரம், இந்தியா) |
இறப்பு | 3 ஏப்ரல் 1680 (அகவை 50) ராய்கட் கோட்டை, மகத், மராட்டியப் பேரரசு (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா) |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் | 8[4] (சம்பாஜி மற்றும் முதலாம் இராஜாராம் உட்பட) |
மரபு | போன்சலே |
தந்தை | சாகாஜி போஸ்லே |
தாய் | ஜிஜாபாய் |
மதம் | இந்து சமயம் |
தன் வாழ்நாளில் முகலாயப் பேரரசு, குதுப் ஷாஹி வம்சம், பீஜப்பூர் சுல்தானகம் மற்றும் ஐரோப்பியக் காலனிய சக்திகளுடன் கூட்டணிகளையும் எதிர்ப்புகளையும் சிவாஜி ஏற்படுத்தினார். மராத்தியச் செல்வாக்குப் பகுதிகளைச் சிவாஜியின் இராணுவப்படைகள் விரிவாக்கின. கோட்டைகளைக் கைப்பற்றவும், புதிதாகக் கட்டவும் செய்தன. மராத்தியக் கப்பற்படையை உருவாக்கின. நன் முறையில் கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளையுடைய ஒரு செயல்திறன்மிக்க முற்போக்கு மனப்பான்மையுள்ள ஆட்சிமுறையை சிவாஜி நிறுவினார். பண்டைய இந்து அரசியல் பாரம்பரியங்கள், அரசவை மரபுகள் ஆகியவற்றுக்குப் புத்துயிர் கொடுத்தார். அரசவை மற்றும் நிர்வாகத்தில் பாரசீகத்தை நீக்கிவிட்டு, மராத்தி மற்றும் சமசுகிருதப் பயன்பாட்டை ஊக்குவித்தார்.[7][8]
சிவாஜி ஜுன்னர் நகரத்திற்கு அருகில் சிவனேரி மலைக்கோட்டையில் பிறந்தார். இது தற்போதைய புனே மாவட்டத்தில் உள்ளது. இவர் எந்தத் தேதியில் பிறந்தார் என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. மகாராஷ்டிர அரசு பெப்ரவரி 19ஆம் தேதியைச் சிவாஜியின் பிறந்த நாளாக, சிவாஜி ஜெயந்தியாக விடுமுறை அளித்துக் கொண்டாடுகிறது.[lower-alpha 1][15][16] சிவாஜிக்கு உள்ளூர்ப் பெண் தெய்வமான சிவாயியின் பெயர் வைக்கப்பட்டது.[17][18] சிவாஜியின் தந்தை சாகாஜி போன்சலே தக்காணச் சுல்தானகங்களிடம் பணியாற்றிய ஒரு மராத்தியத் தளபதி ஆவார்.[19] இவரது தாய் ஜிஜாபாய் ஆவார். அவர் சிங்கேத்தின் லாகுஜி ஜாதவ் ராவின் மகள் ஆவார். லாகுஜி ஜாதவ் இராவ் முகலாய ஆதரவு ஒரு சர்தார் ஆவார். அவர் தௌலதாபாத் கோட்டையின் யாதவ அரச குடும்பத்திலிருந்து தோன்றியவராகத் தன்னைக் கோரினார்.[20][21]
சிவாஜி போன்சலே இனத்தின் மராத்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[22] இவரது தந்தை வழி தாத்தா மாலோஜி (1552–1597) அகமது நகர் சுல்தானகத்தின் ஒரு செல்வாக்கு மிகுந்த தளபதி ஆவார். அவருக்கு "இராஜா" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்குப் புனே, சுபே, சகான் மற்றும் இந்தப்பூரின் தேசமுகி உரிமைகள் இராணுவச் செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தன. இவருடைய குடும்பம் தங்குவதற்காக இவருக்குச் சிவனேரி கோட்டையும் (அண். 1590) கொடுக்கப்பட்டிருந்தது.[23][24]
சிவாஜியின் பிறப்பின் போது, தக்காணத்தில் சக்தியானது மூன்று இசுலாமியச் சுல்தான்களால் பகிரப்பட்டு இருந்தது: பீஜப்பூர், அகமது நகர் மற்றும் கோல்கொண்டா. அகமது நகரில் நிசாம் ஷாகி, பீஜப்பூரின் அதில்ஷா மற்றும் முகலாயர்கள் ஆகியோரிடையே சாகாஜி அடிக்கடித் தனது கூட்டணியை மாற்றிக்கொண்டார். ஆனால், புனேவில் இருந்த இவரது சாகிர் (நிலம்) மற்றும் இவரது சிறிய இராணுவத்தை எப்போதுமே தக்க வைத்திருந்தார்.[19]
1636ஆம் ஆண்டு பீஜப்பூரின் அதில்ஷாகி சுல்தானகமானது அதற்குத் தெற்கிலிருந்த இராச்சியங்கள் மீது படையெடுத்தது.[25] இந்தச் சுல்தானகம் அப்போது தான் முகலாயப் பேரரசுக்கு திறை செலுத்திய ஒரு அரசாக மாறி இருந்தது.[25] [26]இதற்கு சாகாஜி உதவி செய்தார். சகாஜி அப்போது மேற்கு இந்தியாவில் மராத்தா உயர் நிலங்களின் தலைவராக இருந்தார். வெல்லப்பட்ட நிலப்பரப்புகளில் சாகிர் நிலப் பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் சாகாஜிக்கு இருந்தது. அவ்வாறு கிடைக்கும் நிலங்களிலிருந்து ஆண்டுத் தொகையாக அவரால் வரியை வசூலிக்க முடியும்.[25]
குறுகிய கால முகலாயச் சேவையில் சாகாஜி ஒரு புரட்சியாளராகத் திகழ்ந்தார். பீஜப்பூர் அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டு, முகலாயர்களுக்கு எதிரான சாகாஜியின் போர்ப் பயணங்கள் பொதுவாக வெற்றிகரமாக அமையவில்லை. அவர் முகலாய இராணுவத்தால் தொடர்ந்து பின்தொடரப்பட்டார். சிவாஜியும், அவரது தாய் ஜிஜாபாயும் ஒரு கோட்டையிலிருந்து மற்றொரு கோட்டைக்கு இடம் மாறிக் கொண்டிருக்க வேண்டிய நிலை இருந்தது.[27]
1636ஆம் ஆண்டு சாகாஜி பீஜப்பூர் சுல்தானகத்தில் சேவையாற்ற இணைந்தார். அதற்குப் பரிசாக புனாவைப் பெற்றார். சிவாஜியும், ஜிஜாபாயும் புனாவில் குடியேறினர். பீஜப்பூரின் ஆட்சியாளரான அதில்ஷாகியால் சாகாஜி பெங்களூரில் பணிக்கு அமர்த்தப்பட்டார். நிர்வாகியாகத் தாதாஜி கொண்டதேவை சாகாஜி நியமித்தார். 1647இல் கொண்டதேவ் இறந்தார். சிவாஜி நிர்வாகத்தைப் பெற்றார். இவரது முதல் செயல்களில் ஒன்று நேரடியாகப் பீஜப்பூர் அரசாங்கத்திற்குச் சவால் விடுத்தது.[28]
1646இல் 16 வயது சிவாஜி தோரணக் கோட்டையைக் கைப்பற்றினார். சுல்தான் மொகம்மது அதில் ஷாவின் உடல்நலக்குறைவு காரணமாக பீஜப்பூர் அவையானது குழப்பத்தில் மூழ்கியது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திய அவர் தோரணக்கோட்டையில் இருந்த பெருமளவு பொக்கிஷங்களைக் பறிமுதல் செய்தார்.[29][30] இதற்குப் பின் வந்த இரண்டு ஆண்டுகளில் புனேவுக்கு அருகில் இருந்த பல முக்கியக் கோட்டைகளைச் சிவாஜி கைப்பற்றினார். இதில் புரந்தர், சின்ஹகட் மற்றும் சகான் ஆகியவையும் அடங்கும். மேலும், புனேவுக்குக் கிழக்கே இருந்த சுபா, பாராமதி மற்றும் இந்தப்பூர் ஆகிய பகுதிகளைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். தோரணக் கோட்டையில் பெற்ற பொக்கிஷங்களைப் பயன்படுத்தி இராஜ்கட் என்ற ஒரு புதிய கோட்டையைக் கட்டினார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இவரது அரசாங்கத்தின் அமைவிடமாக அந்தக் கோட்டை சேவையாற்றியது.[29] இதற்குப் பிறகு கொங்கண் மண்டலத்தை நோக்கி மேற்கே சிவாஜி திரும்பினார். கல்யாண் என்ற முக்கியமான பட்டணத்தினைக் கைப்பற்றினார். இந்நிகழ்வுகளைப் பீஜப்பூர் அரசாங்கமானது கவனித்தது. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. 25 சூலை 1648இல், பீஜப்பூர் அரசாங்கத்தின் ஆணையின் கீழ், சிவாஜியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஒரு தன் இன மராத்தா சர்தார் பாஜி கோர்ப்பதேவால் சாகாஜி சிறைப்படுத்தப்பட்டார்.[31]
1649ஆம் ஆண்டு, செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு கர்நாடகாவில் அதில்ஷான் அமைவிடமானது பாதுகாப்புப் பெற்ற பிறகு சாகாஜி விடுதலை செய்யப்பட்டார். 1649–1655 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி தனது படையெடுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தினார். தான் பெற்றவற்றை அமைதியாக உறுதிப்படுத்தினார்.[32] இவரது தந்தை விடுதலை செய்யப்பட்ட பிறகு சிவாஜி திடீர்த் தாக்குதல்களை மீண்டும் தொடங்கினார். 1656ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளின் கீழ், ஒரு தன் இன மராத்தியரும், பீஜப்பூரின் நிலச்சுவான்தாருமான சந்திர இராவ் மோரேவைக் கொன்றார். தற்போதைய மஹாபலீஸ்வர் மலை வாசஸ்தலத்திற்கு அருகில் உள்ள ஜவாலி பள்ளத்தாக்கை அவரிடமிருந்து கைப்பற்றினார்.[33] போன்சலே மற்றும் மோரே குடும்பங்களையும் சேர்த்து, பல பிற குடும்பங்கள் தேசமுகி உரிமைகளுடன் பீஜப்பூரின் அதில்ஷாகியிடம் சேவையாற்றினார். அவை சாவந்த்வாடியின் சாவந்த், முதோலின் கோர்ப்பதே, பல்தானின் நிம்பல்கர், சிர்க்கே, மானே மற்றும் மோகிதே ஆகியோர் ஆவர். இந்த சக்திவாய்ந்த குடும்பங்களை அடிபணிய வைக்க சிவாஜி, திருமண பந்தம் ஏற்படுத்துதல், தேசமுகிகளைத் தாண்டி அவர்களது கிராம பாட்டில்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துதல் அல்லது அவர்களைப் படையைக் கொண்டு அடிபணிய வைத்தல் ஆகிய வெவ்வேறு உத்திகளைக் கையாண்டார்.[34]சாகாஜி தனது கடைசி ஆண்டுகளில் தன் மகனிடம் இரு வேறுபட்ட மனப்பாங்கைக் காட்டினார்.[35] தன் மகனின் புரட்சிச் செயல்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார். பீஜப்பூரிடம் சிவாஜியை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். 1664-1665இல் ஒரு வேட்டை விபத்தின்போது சாகாஜி இறந்தார்.
தங்களிடம் திறை செலுத்திய சாகாஜி கைவிட்ட சிவாஜியின் படைகளிடம் தாங்களின் இழப்புகளைக் கண்டு பீஜப்பூர் சுல்தானகமானது எரிச்சலடைந்தது. முகலாயர்கள் உடன் ஓர் அமைதி உடன்படிக்கை, இளவயது இரண்டாம் அலி அதில் ஷா சுல்தானாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு, பீஜப்பூர் அரசாங்கமானது நிலைத்தன்மையைப் பெற்றது. அது தனது கவனத்தைச் சிவாஜியை நோக்கித் திருப்பியது.[36] 1657இல் சுல்தான் அல்லது அவரது தாயும், தற்காலிகமாக நாட்டை ஆண்ட ஒருவரும், ஓர் அனுபவசாலி தளபதியான அப்சல் கானை சிவாஜியைக் கைது செய்ய அனுப்பினார். சிவாஜியிடம் மோதுவதற்கு முன்னர், சிவாஜி குடும்பம் புனிதமாகக் கருதிய துல்சா பவானி கோயிலையும், இந்துக்களுக்கு ஒரு முக்கிய புனிதப் பயணத் தலமாக விளங்கிய பண்டரிபுரத்தில் உள்ள விதோபா கோயிலையும் பீஜப்பூர் படைகள் சேதப்படுத்தி அவமதித்தன.[37][38][39]
பீஜப்பூரி படைகளால் பின் தொடரப்பட்ட சிவாஜி பிரதாப்காட் கோட்டைக்குச் சென்றார். அங்கு சிவாஜியுடன் பணியாற்றியவர்கள் அவரைச் சரணடையுமாறு அழுத்தம் கொடுத்தனர்.[40] இரண்டு படைகளும் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தன. சிவாஜியால் கோட்டையின் முற்றுகையை முறியடிக்க இயலவில்லை. அதே நேரத்தில், அப்சல் கானிடம் ஒரு சக்திவாய்ந்த குதிரைப்படை இருந்தது. ஆனால், அவர்களிடம் முற்றுகை எந்திரங்கள் இல்லை. அதனால் அவர்களால் கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பேச்சு வார்த்தைக்காக கோட்டைக்கு வெளியே தனியாக இரண்டு தலைவர்களும் சந்திக்கலாம் என்ற பரிந்துரையுடன் ஒரு தூதுவரை அப்சல் கான் சிவாஜியிடம் அனுப்பினார்.[41][42]
10 நவம்பர் 1659இல் பிரதாப்காட் கோட்டையின் அடிவாரத்தில் இருந்த ஒரு குடிசையில் இருவரும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விதிமுறைகளின்படி, இருவரும் ஒரு வாளுடனும், ஒரு துணையாளுடனும் மட்டுமே வர முடியும். அப்சல் கான் தன்னைக் கைது செய்வார் அல்லது தாக்குவார் என்று சந்தேகித்த சிவாஜி தனது உடைக்குள் கவசத்தை அணிந்திருந்தார்.[43][lower-alpha 2] தன்னுடைய இடது கையில் பாக் நகத்தை (உலோகப் "புலி நகம்") மறைத்து வைத்திருந்தார். தனது வலது கையில் ஒரு கத்தியை வைத்திருந்தார்.[45] வரலாற்று நிலையற்ற தன்மை மற்றும் மராத்தா நூல்களில் புனைவுடன் இக்கதை கூறப்பட்டுள்ளதால், அங்கு என்ன நடந்தது எனத் துல்லியமாகத் தெரியவில்லை. எனினும், இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்தச் சண்டை அப்சல் கானின் மரணத்தில் முடிந்தது.[lower-alpha 3] சிவாஜியின் கவசத்தைக் கானின் கத்தியால் கிழிக்க இயலவில்லை. ஆனால், சிவாஜி அப்சல் கானைக் கொன்றார். பிறகு பீரங்கியைக் கொண்டு சுட்டு பீஜப்பூர் இராணுவத்தைத் தாக்க சமிக்ஞை செய்தார்.[47]
இறுதியாக, 10 நவம்பர் 1659இல், பிரதாப்காட் போர் நடைபெற்றது. பீஜப்பூர் சுல்தானகத்தின் படைகளை சிவாஜியின் படைகள் தீர்க்கமாகத் தோற்கடித்தன. பீஜப்பூர் இராணுவத்தின் 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். உயர் பதவி வகித்த ஒரு சர்தார், அப்சல் கானின் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மராத்தா தலைவர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.[48] இந்த வெற்றிக்குப் பிறகு, பிரதாப்காட்டில் சிவாஜி ஒரு பெரிய அளவிலான மறு சீராய்வை மேற்கொண்டார். அதிகாரிகள் மற்றும் போர் வீரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கைது செய்யப்பட்ட எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தங்களது வீட்டிற்குச் செல்லும் போது, பணம், உணவு மற்றும் பிற பரிசுப் பொருட்களுடன் அனுப்பப்பட்டனர். மராத்தாக்களுக்கும் இது போலப் பரிசுகள் கொடுக்கப்பட்டன.[48]
தம்மை எதிர்த்து வந்த பீஜப்பூர் படைகளைத் தோற்கடித்த சிவாஜியின் இராணுவமானது கொங்கண் மற்றும் கோலாப்பூர் நோக்கி அணிவகுத்தது. பன்காலா கோட்டையைக் கைப்பற்றியது. 1659ஆம் ஆண்டு உருசுதம் சமான் மற்றும் பசல் கான் ஆகியோரின் கீழ் அனுப்பப்பட்ட பீஜப்பூர் படைகளைத் தோற்கடித்தார்.[49] 1660இல் அதில்ஷா தனது தளபதி சித்தி ஜாவுகரைச் சிவாஜியின் தெற்கு எல்லைப் பகுதியைத் தாக்குவதற்காக அனுப்பினார். வடக்கிலிருந்து தாக்க முகலாயர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதில்ஷா திட்டமிட்டார். அதே நேரத்தில், பன்காலா கோட்டையில் தனது படைகளுடன் சிவாஜி முகாமிட்டிருந்தார். 1660ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சித்தி ஜவுகரின் இராணுவமானது பன்காலாவை முற்றுகையிட்டது. கோட்டைக்குப் பொருட்கள் சென்ற வழிகளை வெட்டியது. பன்காலா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் தம் திறனை அதிகரிப்பதற்காக இராஜப்பூரில் இருந்த ஆங்கிலேயர்களிடமிருந்து சித்தி ஜவுகர் எறி குண்டுகளை விலைக்கு வாங்கி இருந்தார். இக்கோட்டையின் மீதான தனது வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உதவுவதற்காக சில ஆங்கிலேயேப் பீரங்கிப் படையினரையும் சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தி இருந்தார். ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு கொடியை அனைவருக்கும் தெரியுமாறு சித்தி ஜவுகர் பறக்கவிட்டார். சிவாஜிக்கு இது நம்பிக்கை துரோகமாகத் தெரிந்தது. இந்நிகழ்வு அவரைச் சினம் கொள்ள வைத்தது. இராஜப்பூரில் இருந்த ஆங்கிலேயேத் தொழிற்சாலையை இதற்காகப் பழிவாங்க, திசம்பரில் சிவாஜி சூறையாடினார். அங்கு பணியாற்றிய நான்கு பேரைப் பிடித்தார். 1663ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அவர்களைக் கைதியாக வைத்திருந்தார்.[50]
மாதங்களுக்கு நடந்த முற்றுகைக்குப் பிறகு, சிவாஜி சித்தி ஜவுகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 22 செப்டெம்பர் 1660இல் கோட்டையின் கட்டுப்பாட்டை அவருக்கு வழங்கினார். விசால்கத்துக்குச் சிவாஜி பின் வாங்கிச் சென்றார்.[51] 1673இல் சிவாஜி பன்காலா கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[52]
இரவின் இருளைப் பயன்படுத்தி பன்காலாவிலிருந்து சிவாஜி தப்பினார். எதிரிகளின் குதிரைப் படையால் அவர் பின் தொடரப்பட்டார். இவரது மராத்தா சர்தாரான பண்டல் தேசுமுக் இனத்தைச் சேர்ந்த பாஜி பிரபு தேஷ்பாண்டே, தன் 300 வீரர்களுடன் சிவாஜியுடன் சென்றார். கோத் கிந்த் ("குதிரை மலையிடுக்கு") என்ற இடத்தில் தாம் மடிந்தாவது எதிரிகளைத் தடுத்து நிறுத்த பாஜி பிரபு தேஷ்பாண்டே தாமாக முன் வந்தார். இதன் மூலம் சிவாஜி மற்றும் எஞ்சிய இராணுவத்தினரும் விசால்கத் கோட்டையின் பாதுகாப்பை அடைவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று எண்ணினார்.[53]
இறுதியாக நடந்த பவன் கிந்த் யுத்தத்தில் சிறிய மராத்தா படையானது பெரிய இராணுவத்தைத் தடுத்து நிறுத்தியது. இது சிவாஜி தப்புவதற்கு நேரத்தைக் கொடுத்தது. பாஜி பிரபு தேஷ்பாண்டே காயமடைந்தார். ஆனால், விசால்கத்தில் இருந்து பீரங்கிக் குண்டு சுடப்படும் சத்தம் கேட்கும் வரை தொடர்ந்து சண்டையிட்டார். சிவாஜி பாதுகாப்பாக விசால்கத்தை அடைந்துவிட்டார் என்பதன் சமிக்ஞை இதுவாகும்.[22] இந்நிகழ்வு 13 சூலை 1660இல் மாலை வேளையில் நடைபெற்றது.[54] பாஜி பிரபு தேஷ்பாண்டே, சிபோசிங் ஜாதவ், புலோஜி மற்றும் அங்கு போரிட்ட அனைத்து பிற வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, கோத் கிந்தானது (கிந்தின் பொருள் "ஒரு குறுகிய மலை வழி") பாவன் கிந்த் ("புனித வழி") என்று பெயரிடப்பட்டது.[54]
1657 வரை முகலாயப் பேரரசுடன் சிவாஜி அமைதியான உறவுமுறையைப் பேணி வந்தார். பீஜப்பூரின் கோட்டைகள் மற்றும் கிராமங்கள் தன் கீழ் இருப்பதற்கான உரிமையை அலுவல் பூர்வமாக அங்கீகரிப்பதற்கு மாற்றாக, பீஜப்பூரை வெல்ல முகலாயப் பேரரசரின் மகனும், தக்காணத்தின் அப்போதைய முகலாய உயரதிகாரியுமான ஔரங்கசீப்பிற்கு சிவாஜி தனது ஆதரவை அளித்தார். முகலாயப் பதில் செயலால் மனநிறைவு அடையாத சிவாஜி பீஜப்பூரிடமிருந்து அதை விட மேம்பட்ட ஒரு வாய்ப்பைப் பெற்றார். முகலாயத் தக்காணப்பகுதி மீது ஒரு திடீர்த் தாக்குதலை சிவாஜி தொடங்கினார்.[55] 1657ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் முகலாயர்களுடனான சிவாஜியின் மோதல் தொடங்கியது. அகமது நகருக்கு அருகில் இருந்த முகலாய நிலப்பகுதி மீது சிவாஜியின் இரண்டு அதிகாரிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர்.[56] இதற்குப் பிறகு ஜுன்னர் மீது திடீர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 3,00,000 குன் பணத்தையும், 200 குதிரைகளையும் சிவாஜி அங்கிருந்து கைப்பற்றிச் சென்றார்.[57] இந்தத் திடீர்த் தாக்குதலுக்குப் பதிலாக ஔரங்கசீப், அகமது நகரில் சிவாஜியின் படைகளைத் தோற்கடித்த நசீர் கானை அனுப்பினார். எனினும், மழைக்காலம் மற்றும் பேரரசர் ஷாஜகானின் உடல் நலக் குறைவைத் தொடர்ந்து முகலாய அரியணைக்கு இவரது சகோதரர்களுடன் ஔரங்கசீப் செய்த யுத்தம் ஆகியவை சிவாஜிக்கு எதிரான ஔரங்கசீப்பின் பதில் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தியது.[58]
பீஜப்பூரின் பாதி பேகமின் வேண்டுகோளின் பேரில் அப்போது முகலாயப் பேரரசராக இருந்த ஔரங்கசீப் தனது தாய்வழி மாமா சயிஸ்தா கானை 1,50,000க்கும் மேற்பட்ட வீரர்களையும், ஒரு சக்தி வாய்ந்த பீரங்கிப் படைப் பிரிவையும் கொண்ட ஓர் இராணுவத்துடன், சனவரி 1660ஆம் ஆண்டு சித்தி ஜவுகரால் தலைமை தாங்கப்பட்ட பீஜப்பூரின் இராணுவத்தினருடன் சேர்ந்து சிவாஜியைத் தாக்க அனுப்பினார். நல்ல ஆயுதங்களைக் கொண்டிருந்த, தயார் செய்யப்பட்டிருந்த 80,000 வீரர்களைக் கொண்ட இராணுவத்தின் மூலம் சயிஸ்தா கான் புனேவைக் கைப்பற்றினார். அருகிலிருந்த சகான் கோட்டையையும் அவர் கைப்பற்றினார். ஒன்றரை மாதங்களுக்கு முற்றுகையிட்டு மதில் சுவர்களைக் கடந்தார்.[59] தான் கொண்டிருந்த ஒரு பெரிய, நன்முறையில் பராமரிக்கப்பட்டு கனரக ஆயுதங்களைக் கொண்ட முகலாய இராணுவத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சயிஸ்தா கான் மேலும் முன்னேறினார். சில மராத்தா நிலப்பகுதிக்குள் முன்னேறினார். புனே நகரைக் கைப்பற்றினார். இலால் மகாலில் சிவாஜியின் அரண்மனையைத் தன்னுடைய இருப்பிடமாக நிறுவினார்.[60]
5 ஏப்ரல் 1663இன் இரவில் சயிஸ்தா கானின் முகாம் மீது சிவாஜி ஒரு துணிச்சலான இரவுத் தாக்குதலை நடத்தினார்.[61] சிவாஜியும் அவருடைய 400 வீரர்களும் சயிஸ்தா கானின் கட்டடத்தைத் தாக்கினர். கானின் படுக்கை அறைக்குள் நுழைந்தனர். அவரைக் காயப்படுத்தினர். கான் தனது மூன்று விரல்களை இழந்தார்.[62] இந்த மோதலில் சயிஸ்தா கானின் மகன், அவரது பல மனைவிகள், பணியாட்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டனர்.[63] புனேவுக்கு வெளியில் இருந்து முகலாயப் படைகளிடம் கான் தஞ்சமடைந்தார். இந்த அவமானத்திற்குத் தண்டனையாகக் கானை ஔரங்கசீப் வங்காளத்திற்குப் பணி மாற்றினார்.[64]
சயிஸ்தா கானின் தாக்குதலுக்குப் பதிலடியாகவும், அப்போது குறைந்திருந்த தனது கருவூலத்தை நிரப்பவும் 1664ஆம் ஆண்டு சிவாஜி துறைமுக நகரமான சூரத்தைச் சூறையாடினர். அது ஒரு செல்வச் செழிப்பு மிக்க முகலாய வணிக மையமாக இருந்தது.[65] 13 பெப்ரவரி 1665இல் தற்போதைய கர்நாடகாவில் போர்த்துக்கீசியரிடம் இருந்த பஸ்ரூர் மீது ஒரு கடல் வழித் தாக்குதலையும் சிவாஜி நடத்தினார். அதில் பெருமளவு பொருட்களைக் கைப்பற்றினார்.[66][67]
சயிஸ்தா கான் மற்றும் சூரத் மீதான தாக்குதல்கள் ஔரங்கசீப்பைக் கோபம் அடைய வைத்தன. பதிலாக அவர் தனது இராசபுத்திரத் தளபதியான மிர்சா இராஜா முதலாம் ஜெய் சிங்கை 15,000 வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்துடன் சிவாஜியைத் தோற்கடிக்க அனுப்பினார்.[68] 1665ஆம் ஆண்டு முழுவதும் ஜெய் சிங்கின் படைகள் சிவாஜிக்கு அழுத்தம் கொடுத்தன. நாட்டுப்புறத்தில் இருந்த கட்டடங்களை அவரது குதிரைப்படை இடித்தது. சிவாஜியின் கோட்டைகள் மீது அவர்களது முற்றுகைப் படைகள் யுத்தம் நடத்தின. சிவாஜியின் முக்கியத் தளபதிகள் மற்றும் அவரது குதிரைப்படையில் பெரும்பாலானவர்களை முகலாயர் பக்கம் சேவையாற்ற வரவழைப்பதில் முகலாயத் தளபதி வெற்றி கண்டார். 1665ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புரந்தர் கோட்டையானது முற்றுகையிடப்பட்டது. அது கைப்பற்றப்படும் சூழ்நிலையை நெருங்கியபோது, சிவாஜி ஜெய் சிங்குடன் உடன்படிக்கை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[68]
புரந்தர் உடன்படிக்கையானது 11 சூன் 1665இல் சிவாஜி மற்றும் ஜெய் சிங்கிற்கு இடையே கையொப்பம் இடப்பட்டது. தன்னுடைய கோட்டைகளில் 23 கோட்டைகளைக் கொடுத்துவிட்டு, 12 கோட்டைகளைத் தனக்காக வைத்துக் கொள்ளவுனம், முகலாயர்களுக்கு 4,00,000 குன் பணத்தை இழப்பீடாகச் செலுத்தவும்,[69] முகலாயப் பேரரசுக்கு திறை செலுத்துபவராக மாறவும், தக்காணத்தில் மான்சப்தாரியாக முகலாயர்களுக்காகப் போரிடத் தனது மகன் சம்பாஜியை 5,000 குதிரைப்படை வீரர்களுடன் அனுப்புவதற்கும் சிவாஜி ஒப்புக்கொண்டார்.[70][71]
1666 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜியை ஆக்ராவிற்கு (சில ஆதாரங்களின் படி தில்லிக்கு) அவரது ஒன்பது வயது மகன் சம்பாஜியுடன் வருமாறு கூறினார். ஔரங்கசீப் சிவாஜியைத் தற்போதைய ஆப்கானித்தானிலுள்ள காந்தாரத்திற்கு முகலாயப் பேரரசின் வடமேற்கு எல்லையை உறுதிப்படுத்த அனுப்பத் திட்டமிட்டார். எனினும், அரசவையில் 12 மே 1666இல் ஒப்பீட்டளவில் தாழ்ந்த உயர் குடியினருடன் சிவாஜி நிற்க வைக்கப்பட்டார். அவர்களில் பெரும்பாலானவர்களை யுத்தத்தில் சிவாஜி ஏற்கனவே தோற்கடித்திருந்தார்.[72] இதை அவமானமாகக் கருதிய சிவாஜி அவையில் இருந்து வேகமாக வெளியேறினார்.[73] சிவாஜி உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜெய் சிங்கின் மகனான இராம் சிங்கிற்கு சிவாஜியையும், இவரது மகனையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.[74]
வீட்டுக்காவலில் சிவாஜியின் நிலைமையானது ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. சிவாஜியின் உயிருக்கு உத்தரவாதமளித்த ஜெய்சிங், ஔரங்கசீப்பின் முடிவை மாற்ற முயற்சித்தார்.[75] அதே நேரத்தில், தன்னை விடுவித்துக்கொள்ள சிவாஜியும் ஒரு திட்டம் தீட்டினார். தன்னுடைய வீரர்களில் பெரும்பாலானவர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தார். தனக்கும், தன் மகனுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பேரரசரிடம் கொடுத்திருந்த இராம் சிங்கை அந்த உத்தரவாதத்தைத் திரும்பப் பெறுமாறு கூறினார். முகலாயப் படையிடம் தானே சரணடைந்தார்.[76][77] பிறகு, சிவாஜி உடல் நலம் குன்றியவராகக் காட்டிக்கொண்டார். தனது தவறுக்குப் பிராயச்சித்தம் எனக் கூறி ஏழைகளுக்கு பெரிய கூடைகளில் இனிப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்.[78][79][80][81] 17 ஆகத்து 1666இல் அதில் ஒரு பெரிய கூடையில் தானே அமர்ந்து கொண்டார். தனது மகன் சம்பாஜியை மற்றொரு கூடையில் அமர வைத்தார். அங்கிருந்து தப்பித்த சிவாஜி ஆக்ராவை விட்டு வெளியேறினார்.[82][83][84][85][lower-alpha 4]
சிவாஜியின் தப்பிப்புக்குப் பிறகு, முகலாயர்களுடனான எதிர்ப்பானது குறைந்தது. புதிய அமைதிப் பரிந்துரைகளுக்குச் சிவாஜி மற்றும் ஔரங்கசீப்புக்கு இடையே முகலாய சர்தாரான ஜஸ்வந்த் சிங் இடையீட்டாளராகச் செயல்பட்டார்.[87] 1666 மற்றும் 1668க்கு இடைப்பட்ட காலத்தில் ஔரங்கசீப் சிவாஜிக்கு இராஜா என்ற பட்டத்தைக் கொடுத்தார். சம்பாஜிக்கு அவருடைய 5,000 குதிரைகளுடன் மீண்டும் ஒரு முகலாய மான்சப்தாராகப் பதவி வழங்கப்பட்டது. ஔரங்காபாத்தில் முகலாய உயரதிகாரியாக இருந்த இளவரசன் முவாசமுடன் சேவையாற்ற தளபதி பிரதாப் இராவ் குஜருடன் சம்பாஜியைச் சேவையாற்ற அந்த நேரத்தில் சிவாஜி அனுப்பி வைத்தார். வரி வசூலிப்பதற்காக பெராரில் நிலப்பகுதியும் சம்பாஜிக்கு வழங்கப்பட்டது.[88] வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதில்ஷாகியைத் தாக்குவதற்குச் சிவாஜிக்கு ஔரங்கசீப் அனுமதி அளித்தார். பலவீனமான சுல்தானான இரண்டாம் அலி அதில் ஷா அமைதி வேண்டினார். சிவாஜிக்கு சர்தேசமுகி மற்றும் சௌதை உரிமைகளை இரண்டாம் அலி அதில் ஷா கொடுத்தார்.[89]
சிவாஜி மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான அமைதியானது 1670 வரை நீடித்தது. அந்நேரத்தில், சிவாஜிக்கும் முவாசத்துக்கும் இடையிலான நெருங்கிய உறவால் ஔரங்கசீப் சந்தேகமடைந்தார். முவாசம் தன் அரியணையைத் தவறான வழியில் கைப்பற்றலாம் எனவும், சிவாஜியிடம் இருந்து இலஞ்சம் கூடப் பெற்றுக் கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் கொண்டார்.[90][91] மேலும், நேரத்தில் ஆப்கானியருடனான சண்டையில் ஔரங்கசீப் மூழ்கியிருந்தார். தக்காணத்தில் இருந்து தனது இராணுவத்தைப் பெருமளவில் குறைத்திருந்தார். பிரிந்திருந்த இவரது பல வீரர்கள் உடனடியாக மராத்தியர்களிடம் சேவையாற்ற இணைந்தனர்.[92] பெராரின் சாகிரிடம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் கடனாகக் கொடுத்த பணத்தை மீட்பதற்காகச் சிவாஜியிடமிருந்து பெராரின் சாகிரை முகலாயர்கள் கைப்பற்றினர்.[93] இதற்குப் பதிலடியாக முகலாயர்களுக்கு எதிராகத் தாக்குதலை சிவாஜி தொடங்கினார். நான்கு மாத இடைவெளியில் முகலாயர்களிடம் சரணடைய வைத்த நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளை மீட்டார்.[94]
சிவாஜி சூரத்தை 1670ஆம் ஆண்டு இரண்டாம் முறையாகச் சூறையாடினர். ஆங்கிலேய மற்றும் டச்சுத் தொழிற்சாலைகளால் இந்தத் தாக்குதலை முறியடிக்க முடிந்தது. ஆனால், சிவாஜி நகரத்தையே சூறையாடினார். மீண்டும் தொடங்கப்பட்ட தாக்குதல்களால் கோபமடைந்த முகலாயர்கள் மராத்தியர்களுடனான தங்களது எதிர்ப்பை மீண்டும் புதுப்பித்தனர். சூரத்தில் இருந்து தனது தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த சிவாஜியை வழிமறிக்கத் தாவூத் கான் தலைமையில் ஒரு படையை அனுப்பினர். ஆனால், தற்கால நாசிக்கிற்கு அருகில் நடந்த வானி-திந்தோரி யுத்தத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.[95]
அக்டோபர் 1670இல் பாம்பேயில் இருந்த ஆங்கிலேயர்களைத் தாக்கத் தனது படைகளை சிவாஜி அனுப்பினார். ஆங்கிலேயர்கள் சிவாஜிக்கு போர் உபகரணங்களை விற்க மறுத்து வந்தனர். பாம்பேயில் இருந்து செல்ல முயன்ற ஆங்கிலேய மரம் வெட்டும் குழுக்களை சிவாஜியின் படைகள் தடுத்தன. செப்டம்பர் 1671இல் பாம்பேவுக்கு ஒரு தூதுவரை சிவாஜி அனுப்பினார். மீண்டும் போர் உபகரணங்களைக் கேட்டார். இந்த முறை தந்தா-இராஜபுரிக்கு எதிராகச் சண்டையிட அவர் உபகரணங்களைக் கேட்டார். இந்த வெற்றி மூலம் சிவாஜி பெரும் அனுகூலங்கள் ஆங்கிலேயர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இராஜபூரில் ஆங்கிலேயத் தொழிற்சாலைகளைச் சிவாஜி சூறையாடியதற்கு இழப்பீடு பெறும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை. சிவாஜியுடன் சண்டையிட ஆங்கிலேயர்கள் இடைநிலை அதிகாரி இசுடீபன் உஷ்டிக்கை அனுப்பினர். ஆனால், பேச்சுவார்த்தைகளானவை இராஜபூர் இழப்பீடு விவகாரம் தொடர்பாகத் தோல்வியடைந்தன. பின்வந்த ஆண்டுகளில் பல தூதர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனர். 1674இல் ஆயுத விவகாரங்களில் சில உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், தனது இறப்பிற்கு முன்னர் சிவாஜி என்றுமே இராஜபூர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. 1682ஆம் ஆண்டின் இறுதியில் இராஜபூரிலிருந்த தொழிற்சாலை மூடப்பட்டது.[96]
1674இல் மராத்தியப் படைகளின் தலைமைத் தளபதியான பிரதாப் இராவ் குஜர், பீஜப்பூர் தளபதி பகலோல் கானின் தலைமையிலான படையெடுத்து வந்த இராணுவத்தை முறியடிக்க அனுப்பப்பட்டார். பிரதாப் ராவின் படைகள் எதிரித் தளபதியை யுத்தத்தில் தோற்கடித்து அவரைக் கைது செய்தன. ஒரு முக்கியமான ஏரியைச் சுற்றி வளைத்து அதன் மூலம் எதிரிகளுக்குச் செல்லும் நீரை மராத்தியர்கள் தடுத்தனர். இதன் காரணமாகப் பகலோல் கான் அமைதி வேண்டினார். இவ்வாறு செய்யக்கூடாது என்று சிவாஜி குறிப்பிட்டு எச்சரித்திருந்த போதும், பிரதாப் இராவ் பகலோல் கானை விடுதலை செய்தார். பகலோல் கான் ஒரு புதிய படையெடுப்புக்காக மீண்டும் தயாரானார்.[97]
பிரதாப் ராவிற்கு தன் அதிருப்தியை வெளிப்படுத்தி ஒரு கடிதத்தை சிவாஜி அனுப்பினார். பகலோல் கான் மீண்டும் பிடிக்கப்படும் வரை தன்னைக் காணக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். தனது தலைவர் கண்டித்ததால் மனம் வருந்திய பிரதாப் இராவ் பகலோல் கானைக் கண்டுபிடித்தார். வெறும் ஆறு குதிரைப்படை வீரர்களைக் கொண்டு, பெரும்பாலான இராணுவத்தை விட்டுச்சென்றார். இந்தச் சண்டையில் பிரதாப் இராவ் கொல்லப்பட்டார். பிரதாப் ராவின் இறப்பைக் கேட்டு சிவாஜி ஆழ்ந்த துயரம் கொண்டார். தனது இரண்டாவது மகன் இராஜாராமுக்குப் பிரதாப் ராவின் மகளை நிச்சயத் திருமணம் செய்து வைத்தார். புதிய சர்னௌபத்தாக (மராத்தியப் படைகளின் தலைமைத் தளபதி) அம்பீர் இராவ் மோகித்தே பதவிக்கு வந்தார். புதிதாக உருவாகிக் கொண்டிருந்த மராத்திய இராச்சியத்தின் தலைநகரமாக கிரோசி இந்துல்கரால் புதிதாகக் கட்டப்பட்ட இராய்கட் கோட்டை உருவானது.[98]
சிவாஜி தனது படையெடுப்புகளின் மூலம் பரந்த நிலப்பரப்பையும், பொருட் செல்வத்தையும் பெற்றார். ஆனால், அவர் ஒரு அதிகாரப்பூர்வமான பட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. நுட்பமாகக் காண்கையில் அவர் இன்னும் ஒரு முகலாய ஜமீந்தார் அல்லது ஒரு பீஜப்பூரி சாகிரின் மகனாகவே இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை ஆளும் சட்டப்பூர்வமான அடிப்படை அவரிடம் இல்லை. இதையும், மேலும் நுட்பமாகக் காண்கையில், இவருக்குச் சமமானவர்களாக இருந்த பிற மராத்தியத் தலைவர்களின் சவால்களை எதிர்கொண்டு தடுப்பதற்கும் ஒரு மன்னர் பட்டம் சரியானதாக இருந்தது.[lower-alpha 5]
6 சூன் 1674இல் இராய்கட் கோட்டையில் நடந்த ஒரு பெரிய விழாவில் மராத்தியப் பேரரசின் (இந்தவி சுவராஜ்) மன்னனாக சிவாஜி முடிசூட்டிக் கொண்டார்.[100][101] இந்து நாட்காட்டியின் படி, 1596ஆம் ஆண்டின் ஆனி மாதத்தின் முதல் 14 நாள்களின் 13ஆம் நாளில் (திரயோதசி) முடிசூட்டிக் கொண்டார்.[102] காக பத்தர் இந்த விழாவை நடத்தினார். யமுனை, சிந்து, கங்கை, கோதாவரி, நருமதை, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆகிய ஏழு புனித ஆறுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரானது ஒரு தங்கக் குடத்தில் நிரப்பப்பட்டிருந்தது. அந்நீரைச் சிவாஜியின் தலையில் ஊற்றி, வேத முடி சூட்டு மந்திரங்களை ஓதி காக பத்தர் நடத்தினார். நீர் ஊற்றிய பிறகு சிவாஜி தனது தாய் ஜீஜாபாய்க்கு பாதத்தைத் தொட்டு வணங்கினார். இராய்கட்டில் விழாவுக்காக கிட்டத்தட்ட 50,000 பேர் கூடியிருந்தனர்.[103][104] சிவாஜிக்கு சகக்கர்த்தா ("சகாப்தத்தைத் தோற்றுவித்தவர்")[1] மற்றும் சத்திரபதி ("மன்னன்") ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
1674இல் மராத்தியர்கள் ஒரு ஆக்ரோஷமான படையெடுப்பைத் தொடங்கினர். காந்தேஷ் (அக்டோபர்) மீது திடீர்த் தாக்குதல், பிஜப்பூரி போந்தாவைக் கைப்பற்றுதல் (ஏப்ரல் 1675), கார்வார் (ஆண்டின் நடுப்பகுதி) மற்றும் கோலாப்பூர் (சூலை) ஆகியவற்றைத் தாக்கினர்.[105] நவம்பரில் மராத்தா கடற்படையானது ஜஞ்சிராவின் சித்திக்களுடன் சிறு சண்டையில் ஈடுபட்டது. ஆனால், அவர்களை இடம்பெயரச் செய்வதில் தோல்வியடைந்தது.[106] உடல்நலக்குறைவிலிருந்து மீண்ட சிவாஜி, தக்காணத்தவர்கள் மற்றும் ஆப்கானியர்களுக்கு இடையில் பீஜப்பூரில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுச் சண்டையின் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏப்ரல் 1676இல் அதானி மீது திடீர்த் தாக்குதல் நடத்தினார்.[107]
தனது படையெடுப்புக்கு முன்னர் தக்காணத்தில் இருந்தவர்களிடம் தக்காண தேசபக்தி குறித்த உணர்வுக்கு சிவாஜி வேண்டுகோள் விடுத்தார். தென்னிந்தியாவானது தாயகம் என்றும் அயலவர்களிடமிருந்து அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.[108][109] இவரது வேண்டுகோள் ஓரளவுக்கு வெற்றிகரமாக இருந்தது. 1677இல் ஐதராபாத்துக்கு ஒரு மாதம் சிவாஜி வருகை புரிந்தார். கோல்கொண்டா சுல்தானகத்தின் குதுப் ஷாவுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டார்.[110] பீஜப்பூருடனான தன்னுடைய கூட்டணியைத் தவிர்க்கவும், ஒன்றிணைந்து முகலாயர்களை எதிர்க்கவும் ஒப்புக்கொண்டார். 1677இல் 30,000 குதிரைப்படையினர் மற்றும் 40,000 காலாட் படையினர், கோல்கொண்டாவின் சேணேவி மற்றும் நிதியுதவி ஆதரவுடன் கர்நாடகா மீது சிவாஜி படையெடுத்தார். தெற்கு முன்னேறிய இவர் வேலூர் மற்றும் செஞ்சிக் கோட்டைக்களைக் கைப்பற்றினார்.[111] இவரது மகன் முதலாம் இராஜாராமின் ஆட்சியின்போது மராத்தியர்களின் தலைநகரமாகச் செஞ்சி திகழ்ந்தது.[112]
தனது தந்தை சாகாஜியின் இரண்டாவது மனைவி துகா பாய் (மொகித்தே இனம்) மூலம் பிறந்த தனது ஒன்றுவிட்ட சகோதரனாகிய வெங்கோஜியுடன் (முதலாம் ஏகோஜி) சமரசம் செய்துகொள்ள சிவாஜி விரும்பினார். சாகாஜிக்குப் பிறகு தஞ்சாவூரை வெங்கோஜி ஆண்டார். ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, இராய்கட்டுக்குத் திரும்பும் வழியில் 26 நவம்பர் 1677இல் தனது ஒன்றுவிட்ட சகோதரனின் இராணுவத்தைச் சிவாஜி தோற்கடித்தார். மைசூர் மேட்டு நிலத்திலிருந்த அவரது பெரும்பாலான உடைமைகளைப் பறிமுதல் செய்தார். வெங்கோஜியின் மனைவியான தீபா பாய் மீது சிவாஜி மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தீபா பாய் சிவாஜியுடன் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இறுதியில், தான் கைப்பற்றிய பெரும்பாலான உடமைகளைத் தீபா பாய் மற்றும் அவரது பெண் வழித்தோன்றல்களிடம் திருப்பிக் கொடுக்க சிவாஜி ஒப்புக்கொண்டார். நிலப்பகுதிகளின் சரியான நிர்வாகத்திற்கான ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சாகாஜியின் சமாதியின் பராமரிப்பு ஆகியவற்றுக்கு வெங்கோஜி ஒப்புக்கொண்டார்.[113][114]
சிவாஜி 3 – 5 ஏப்ரல் 1680இல் தனது 50ஆம் வயதில்[115] அனுமன் ஜெயந்திக்கு முந்தைய நாள் மாலையில் இறந்தார். சிவாஜியின் உயிருடன் இருந்த மனைவிகளில் மூத்தவரும் குழந்தையற்றவருமான புத்தல பாய் சிவாஜியின் ஈம நெருப்பில் உடன்கட்டை ஏறி இறந்தார். உயிருடன் இருந்த மற்றொரு மனைவியான சக்வர் பாய்க்குக்கு ஓர் இளம் மகள் இருந்ததால் அவருக்கு உடன்கட்டை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.[116]
சிவாஜியின் இறப்பிற்குப் பிறகு, சோயரா பாய் நிர்வாகத்தின் பல்வேறு அமைச்சர்களுடன், சம்பாஜியைத் தவிர்த்து தன் மகன் இராஜாராமுக்கு முடிசூட்டத் திட்டமிட்டார். 21 ஏப்ரல் 1680இல் 10 வயது இராஜாராம் அரியணையில் அமர வைக்கப்பட்டார். எனினும், இராய்காட் கோட்டையிலிருந்த தளபதியைக் கொன்று கோட்டையை சம்பாஜி கைப்பற்றினார். இராய்கட்டின் கட்டுப்பாட்டை 18 சூன் அன்று பெற்றார். 20 சூலை என்று அதிகாரப்பூர்வமாக அரியணையில் அமர்ந்தார்.[117] இராஜாராமும், அவரது மனைவி ஜானகி பாய் மற்றும் தாய் சோயரா பாய் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். கூட்டுச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அக்டோபரில் சோயரா பாய் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[118]
அஷ்ட பிரதான் மண்டல் அல்லது எட்டு அமைச்சர்களின் அவை என்பது சிவாஜியால் உருவாக்கப்பட்ட நிர்வாக மற்றும் ஆலோசனை அவை ஆகும்.[119] இதில் எட்டு அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்களில் சிவாஜிக்குத் தொடர்ந்து ஆலோசனைகளைக் கூறி வந்தனர். எட்டு அமைச்சர்கள் பின்வருமாறு:[120]
அமைச்சர் | பணி |
---|---|
பேஷ்வா அல்லது பிரதம மந்திரி | பொது நிர்வாகம் |
அமத்யா அல்லது நிதி அமைச்சர் | பொதுப்பணிக் கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது |
மந்திரி அல்லது வரலாற்றாளர் | நீதிமன்றப் பதிவுகளைப் பராமரிப்பது |
சும்மந்த் அல்லது தபீர் அல்லது வெளியுறவுச் செயலர் | மற்ற அரசுகளுடனான உறவுமுறைகள் தொடர்பான அனைத்து விவகாரங்கள் |
சச்சிவ் அல்லது சர்ன் நவீசு அல்லது உள்துறைச் செயலர் | மன்னரின் கடித விவகாரங்களைப் பராமரிப்பது |
பண்டித இராவ் அல்லது சமய விவகாரத் தலைவர் | சமய விவகாரங்கள் |
நியாயதீசு அல்லது தலைமை நீதிபதி | பொது மற்றும் இராணுவ நீதி |
சேனாதிபதி/சாரி நௌபத் அல்லது தலைமைத் தளபதி | மன்னரின் இராணுவம் தொடர்பான அனைத்து விவகாரங்கள் |
பண்டித இராவ் மற்றும் நியாயதீசு ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் இராணுவத் தலைமையை ஏற்றிருந்தனர். அவர்களது பொதுப் பணிகள் துணை அமைச்சர்களால் செய்யப்பட்டன.[119][120]
தன் அவையில் சிவாஜி, அப்பகுதியின் பொதுவான அரசவை மொழியான பாரசீகத்தை நீக்கிவிட்டு மராத்தியைப் பயன்படுத்தினார். இந்து அரசியல் மற்றும் அரசவைப் பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அமைப்பு ரீதியிலான விளக்கம் மற்றும் புரிந்துகொள்ளும் கருவியாக மராத்தியைப் பயன்படுத்த சிவாஜியின் ஆட்சியானது தூண்டியது.[121] சிவாஜியின் அரச முத்திரையானது சமசுகிருதத்தில் இருந்தது. பாரசீக மற்றும் அரபிச் சொற்றொடர்களை நீக்கிவிட்டு அவற்றுக்குச் சமமான சமசுகிருதச் சொற்றொடர்களைக் கொண்ட ஒரு முழுமையான சொற்களஞ்சியத்தை உருவாக்க சிவாஜி தனது அதிகாரிகளில் ஒருவரை நியமித்தார். இது 1677இல் அரசாங்கப் பயன்பாட்டுக்கான அருஞ்சொற்பொருள் சொற்களஞ்சியமான 'இராசவிவகாரகோசா'வின் தயாரிப்புக்கு இட்டுச் சென்றது.[8]
அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கு உண்மைத் தன்மையை வழங்குவதற்காக முத்திரைகள் பயன்படுத்தப்பட்டன. சாகாஜியும், ஜிஜாபாயும் பாரசீக முத்திரைகளைக் கொண்டிருந்தனர். ஆனால், சிவாஜி தொடக்கத்திலிருந்தே தனது முத்திரைக்காகச் சமசுகிருதத்தைப் பயன்படுத்தினார்.[8]
சிவாஜி ஒரு சிறிய, ஆனால், சக்தி வாய்ந்த இராணுவத்தைப் பராமரித்து வந்தார்.[122] தன்னுடைய இராணுவத்தின் இயலும் தன்மை குறித்து சிவாஜிக்குத் தெரியும். கள சேணேவியுடன், பெரிய, நன்றாகப் பயிற்சியளிக்கப்பட்ட முகலாயர்களின் குதிரைப் படையை எதிர்க்கப் பொதுவான போர் முறையானது போதாது என சிவாஜி உணர்ந்தார். இதன் விளைவாக, சிவாஜி கரந்தடிப் போர் முறையைப் பின்பற்றினார். இதுவே 'கனிமி கவா' என்று அறியப்படுகிறது.[123] சிவாஜிக்குக் கரந்தடிப் போர் முறை கை வந்த கலையாக இருந்தது.[124] இவருக்கு எதிராக அனுப்பப்பட்ட இராணுவங்களை இவரது உத்திகள் தொடர்ந்து குழப்பமடைய வைத்துத் தோற்கடித்தன. பெரிய, மெதுவாக நகரும் அந்நேர இராணுவங்களின் மிகுந்த பலவீனமான பகுதி இராணுவங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் என சிவாஜி உணர்ந்தார். உள்ளூர் நிலப்பரப்பு பற்றிய அறிவு மற்றும் இவரது இலகுரக குதிரைப் படையின் உயர்தர நகரும் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிரிகளுக்குப் பொருட்கள் கிடைப்பதை வெட்டி விட்டார்.[125] களத்தில் நடைபெறும் யுத்தங்களில் எதிர்கொள்ள சிவாஜி மறுத்தார். மாறாக, தான் தேர்ந்தெடுத்த கடினமான மலைகள் மற்றும் காட்டுப் பகுதிகளுக்கு எதிரிகளை இழுத்தார். அவர்களுக்குச் சாதகமற்ற பகுதியில் அவர்களைச் சுற்றிவளைத்து தோற்றோடச் செய்தார்.[126] சிவாஜி ஒரே உத்தியைத் தொடர்ந்து பயன்படுத்தவில்லை. சூழ்நிலைகளின் தேவைகளுக்கு ஏற்பத் தனது எதிரிகளைப் பலவீனமாக்கப் பலவித உத்திகளைக் கையாண்டார். அவற்றில் திடீர்த் தாக்குதல்கள், பதுங்கியிருந்து தாக்குதல் மற்றும் உளவியல் அழுத்தத்தை பயன்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.[126]
தனது இராணுவ அமைப்பை உருவாக்குவதில் சிவாஜி தலை சிறந்த திறமையை வெளிக்காட்டினார். இவரது இராணுவ அமைப்பானது மராத்தியப் பேரரசின் வீழ்ச்சி வரை நீடித்திருந்தது. இவரது உத்தியானது இவரது தரைப்படைகள், கடற்படைகள் மற்றும் இவரது நிலப்பரப்பு முழுவதும் இருந்த தொடர்ச்சியான கோட்டைகளைக் கொண்டிருந்தது. இவரது தரைப் படைகளின் பெரும்பாலானவர்கள் மவல் காலாட்படையினராக இருந்தனர். இவர்களுக்குக் கர்நாடகாவில் இருந்து வந்த தெலங்கி துப்பாக்கி சுடுபவர்கள் வலுவூட்டினர். தரைப்படைக்கு ஆதரவாக மராத்தியக் குதிரைப்படை இருந்தது.[127]
சிவாஜியின் உத்தியில் குன்றுக் கோட்டைகள் ஒரு முக்கியப் பங்கு வகித்தன. முரம்பதேவ் (இராஜ்காட்), தோர்ணா, கொந்தனா (சின்ஹகட்), மற்றும் புரந்தர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகளை இவர் கைப்பற்றினார். சாதகமான அமைவிடங்களில் இருந்த பல கோட்டைகளை மீண்டும் உருவாக்குதல் அல்லது சீரமைத்தல் ஆகிய பணிகளையும் செய்தார்.[128] மேலும், சிவாஜி ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான கோட்டைகளைக் கட்டினார்.
கொங்கண் கடற்கரைப் பகுதியில் கட்டுப்பாட்டைப் பேணக் கடற்படையின் தேவையை சிவாஜி உணர்ந்திருந்தார். 1657 அல்லது 1659இல் தனது கடற்படையை சிவாஜி உருவாக்க ஆரம்பித்தார். வசையில் போர்த்துகீசியக் கப்பல் கட்டும் தளத்திலிருந்து 20 கலிவத் வகைப் படகுகளை வாங்கினார்.[129] மராத்தியக் கடற்படையின் தலைவராக கனோஜி ஆங்கரே இருந்தார்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராணுவத்தைப் பயன்படுத்தும் பழக்கமே மராத்தியர்களுக்கு இருந்ததால், தன் கப்பல்களுக்குத் தகுதி வாய்ந்த மாலுமிகளைத் தேடும் படலத்தைச் சிவாஜி விரிவுபடுத்தினார்.[130] போர்த்துக்கீசியக் கடற்படையின் சக்தியை அறிந்த சிவாஜி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான போர்த்துக்கீசிய மாலுமிகள் மற்றும் கோவாவில் இருந்த கிறித்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் ஆகியோரைப் பணிக்கு அமர்த்தினார்.[131]
கடற்கரைக் கோட்டைகளைக் கைப்பற்றுதல் மற்றும் சீரமைப்பதன் மூலம் தனது கடலோர எல்லையை சிவாஜி கோட்டைகளை உடையதாக மாற்றினார். சிந்துதுர்க்கில் தனது முதல் கடற்படைக் கோட்டையைச் சிவாஜி கட்டினார். இது மராத்தியக் கடற்படையின் தலைமையகமாக உருவானது.[132]
முகலாயர்களுடன் எப்போதும் மோதலில் இருந்த ஒரு அரசை சிவாஜி விட்டுச் சென்றார். இவரது இறப்புக்கு பிறகு மராத்தியர்கள், பீஜப்பூரை அடிப்படையாகக் கொண்ட அதில்ஷாகி மற்றும் கோல்கொண்டாவின் குதுப் ஷாகி ஆகியோர் முறையே கொண்டிருந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றத் தெற்கே ஒரு தாக்குதலை 1681ஆம் ஆண்டு [அவுரங்கசீப்]] தொடங்கினார். சுல்தானகங்களைத் தடையமின்றி அழிப்பதில் ஔரங்கசீப் வெற்றி கண்டார். ஆனால், தக்காணத்தில் 27 ஆண்டுகளைக் கழித்த பிறகும் அவரால் மராத்தியர்களை அடிபணிய வைக்க இயலவில்லை. இக்காலகட்டத்தில், 1689இல் சம்பாஜி கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பாஜிக்குப் பின் வந்த இராஜாராம் மற்றும் இராஜாராமின் விதவை தாராபாய் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் மராத்தியர்கள் வலிமையான எதிர்ப்பைக் கொடுத்தனர். முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் இடையே நிலப்பரப்புகள் அடிக்கடி கைமாறின. 1707இல் முகலாயர்கள் தோற்கடிக்கப்பட்டதுடன் இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது.[133]
சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனுமாகிய சாகுவை இந்த 27 ஆண்டு கால மோதலின் போது ஔரங்கசீப் கைதியாகப் பிடித்து வைத்திருந்தார். ஔரங்கசீப்பின் இறப்பிற்குப் பிறகு அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர் சாகுவை விடுதலை செய்தார். தனது உறவினர் தாராபாயுடனான அடுத்த மன்னர் யார் என்பதற்கான ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு 1707 முதல் 1749 வரை மராத்தியப் பேரரசைச் சாகு ஆட்சி செய்தார். இவரது ஆட்சியின் ஆரம்பத்தில் பாலாஜி விஸ்வநாத்தையும், பிறகு அவரது வழித்தோன்றல்களையும் மராத்தியப் பேரரசின் பேஷ்வாக்களாக (பிரதம மந்திரி) நியமித்தார். பாலாஜியின் மகன் பேஷ்வா பாஜி இராவ் மற்றும் பேரன் பேஷ்வா பாலாஜி பாஜி இராவ் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பேரரசானது பெருமளவில் வளர்ச்சி அடைந்தது. அதன் உச்சநிலையின் போது மராத்தியப் பேரரசானது தெற்கே தமிழ்நாடு[134] முதல், வடக்கே பெஷாவர் (தற்போதைய கைபர் பக்துன்வா மாகாணம்), கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது. 1761இல் ஆப்கானியத் துராணிப் பேரரசின் அகமது ஷா துரானியிடம் மூன்றாவது பானிபட் போரில் மராத்திய இராணுவமானது தோல்வியடைந்தது. வடமேற்கு இந்தியாவில் இவர்களது ஏகாதிபத்திய விரிவாக்கத்தை இது தடுத்து நிறுத்தியது. பானிபட் போருக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவில் மாதவராவின் ஆட்சியின்போது மராத்தியர்கள் மீண்டும் செல்வாக்குப் பெற்றனர்.[135]
இந்தப் பெரிய பேரரசைத் திறமையாக ஆட்சி செய்வதற்காகச் சாகு மற்றும் பேஷ்வாக்கள் தம் வீரர்களில் வலிமையானவர்களுக்குப் பகுதியளவு தன்னாட்சியைக் கொடுத்தனர். இவ்வாறாக மராத்தியப் பேரரசு உருவாக்கப்பட்டது.[136] இவர்கள் பரோடாவின் கெய்க்வாட்டுகள், இந்தோர் மற்றும் மால்வாவின் கோல்கர்கள், குவாலியரின் சிந்தியாக்கள் மற்றும் நாக்பூரின் போன்சலேக்கள் என்று அறியப்பட்டனர். 1775ஆம் ஆண்டு புனேவில் ஒரு அரியணைப் போட்டியில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் தலையிட்டது. இது முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் என்று ஆனது. இரண்டாம் மற்றும் மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர்களில் (1805–1818) பிரித்தானியர்களால் தோற்கடிக்கப்படும் வரை இந்தியாவில் முதன்மையான சக்தியாக மராத்தியர்கள் தொடர்ந்தனர். இப்போர்களுக்குப் பிறகு நிறுவனமானது பெரும்பாலான இந்தியாவில் முக்கிய சக்தியாக உருவானது.[137][138]
சிவாஜி தனது ஆழ்ந்த சமய மற்றும் போர் வீர நன்னெறிக்காகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த குணத்திற்காகவும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.[139]
சிவாஜி தனது வீரச் செயல்களுக்காகவும், விவேகமான திட்டங்களுக்காகவும் அவர் கால ஆங்கிலேய, பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கீசிய மற்றும் இத்தாலிய எழுத்தாளர்களால் போற்றப்பட்டார்.[140] அக்கால ஆங்கிலேய எழுத்தாளர்கள் சிவாஜியை அலெக்சாந்தர், ஹன்னிபால் மற்றும் யூலியசு சீசருடன் ஒப்பிட்டனர்.[141]
இந்தியா முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிராவில் சிவாஜிக்கு நினைவுச்சின்னங்கள் உள்ளன. மகாராஷ்டிராவிலுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு பட்டணத்திலும், நகரத்திலும், இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு இடங்களிலும் சிவாஜிக்குச் சிலைகளும், நினைவுச்சின்னங்களும் உள்ளன.[142][143][144] இந்தியக் கடற்படைத் தளமான ஐ. என். எஸ். சிவாஜி,[145] ஏராளமான அஞ்சல் தலைகள்,[146] மும்பையிலுள்ள முதன்மையான வானூர்தி நிலையம் மற்றும் தொடர்வண்டித் தலைமையகம் ஆகியவை சிவாஜியின் பெயரைக் கொண்டுள்ள மற்ற நினைவுச் சின்னங்கள் ஆகும்.[147][148] தீபாவளி விழாவின் போது சிவாஜியை நினைவுகூரும் விதமாக மகாராஷ்டிராவில் குழந்தைகள் கோட்டையின் மாதிரிகளை பொம்மை வீரர்கள் மற்றும் பிற கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கும் நீண்ட பாரம்பரியமானது தொடரப்பட்டு வருகிறது.[149][150]
2016ஆம் ஆண்டு சிவ சுமாரக் என அழைக்கப்படும் ஒரு இராட்சத நினைவுச்சின்னத்தைக் கட்டும் முன்மொழிவானது ஒப்புக்கொள்ளப்பட்டது. இது அரபிக் கடலில் உள்ள ஒரு சிறு தீவில் மும்பைக்கு அருகில் அமையவுள்ளது. இதன் உயரம் 210 மீட்டர்கள் இருக்கும். 2021இல் இது முடிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு முடிக்கப்படும்போது இது உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும்.[151]
மார்ச் 2022இல் புனேவில் துப்பாக்கி உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு சிவாஜி சிலை புதிதாக வைக்கப்பட்டது.[152]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.