From Wikipedia, the free encyclopedia
கரந்தடிப் போர்முறை அல்லது கொரில்லாப் போர்முறை (Guerrilla warfare) என்பது ஒருவகை ஒழுங்கில்லாப் போர்முறை ஆகும். இந்தப் போர்முறை ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு பெரிய விரைவாக இயங்க இயலாத வழமையானப் படைகளை எதிர்கொள்வதாகும். இதற்கு பதுங்கித் தாக்குதல், நாசமாக்கல், திடீர்த் தாக்குதல், எதிர்பாராத தன்மை, மிக விரைவான இயக்கம் போன்ற படைத்துறை செய்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதும் தாக்கப்படக்கூடிய இலக்குகளை தாக்கி விரைவாகத் திரும்பிவிடுதலும் ஆகும்.
இது உலகின் பல மொழிகளிலும் கொரில்லாப் போர் என்று வழங்கப்படுகிறது. எசுப்பானிய மொழியில் இந்தச் சொல்லிற்கு சிறிய போர் என்ற பொருளாகும். 18ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இந்தச் சொல் இத்தகைய போர்வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரில்லா என்ற சொல் ஆங்கிலத்தில் 1809 முதல் புழக்கத்தில் உள்ளது.
ஸ்பானிய மொழியில் குடிப்போர் என்பதே கொரில்லா போரின் அர்த்தமாகும். இம்முறை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் உள்ளது. ஆண் என்பதற்கு கொரில்லா எனவும்,பெண் என்றால் கொரில்லிரா எனவும் இப்போர் முறையில் அழைப்பர். பெனின்சுலர் போரில் நெப்போலியன் துருப்புகளுக்கு எதிராக ஸ்பானிய மக்கள் கொரில்லா போரில் ஈடுபட்டனர். ஆங்கிலத்தில் கொரில்லா என்பது அப்போர் புரிபவர்களைக் குறிக்கும்.
கொரில்லா தந்திரங்களை எகிப்து மற்றும் மெசபடோமியாவில் பொ.ஊ.மு. 3100 முன்னரே பழங்குடி மக்களுக்கு மத்தியில் நடைபெற்று உள்ளது. தேசியவாதம், தாராளவாதம், சோசலிசம், மற்றும் மத அடிப்படைவாதம் போன்ற கொள்கைகள் கிளர்ச்சிகள் மற்றும் கரந்தடிப் போர்கள் வடிவம்பெற்றன.[1]
கரந்தடிப் போர் ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நடைபெறாததால் அதைத் தோற்கடிக்கக் கடினமாக இருக்கக்கூடும், ஆனால் 1950 கள் மற்றும் 1960 களில் நடந்த சில எதிர்ப்புரட்சிகர கரந்தடிப் போர்களில் சில கோட்பாடுகள் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்டன.
கரந்தடிப் போர்முறையில் உத்திகளும் செய்முறைகளும் சிறிய விரைந்தியங்கும் போராளிக்குழு பெரிய படையை எதிர்ப்பதைக் குவியப்படுத்துகின்றன.[2] உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சிறியக் குழுக்களை ஒழுங்குபடுத்துவதும் அவர்கள் இயங்கக்கூடிய நிலப்பரப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் கொரில்லாக்களின் நோக்கமாகும்.
எதிரிப் படைகளை பெரும் எண்ணிக்கையில் கரந்தடிப் படை எதிர்கொள்வதில்லை; சிறிய குழாமாக இருக்கும் எதிரி வீரர்களை தேடி ஒழிப்பதன் மூலம் தங்கள் இழப்புகளைக் குறைப்பதுடன் எதிரிக்கு எரிச்சல் மூட்டவும் முடிகிறது. எதிரி ஆட்களை மட்டுமல்லாது ஆயுதக் கிடங்கு போன்ற எதிரியின் வளங்களையும் தங்களது இலக்காக கொள்கிறார்கள். இதனால் எதிரியின் பலம் குறைகிறது; இந்தப் போர்முறையில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க இயலாது எதிரிப்படை பின்வாங்குகிறது.
பொதுவாக கொரில்லாப் போர்முறையில் குடிமக்கள் போல நடித்து எதிரிப்படையால் இனம் காண முடியாத போர்முறை இது என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது இந்தப் போர்முறையின் முதன்மை சிறப்புக் கூறு இல்லை. எங்கெல்லாம் போராளிகள் மறைந்திருந்து தாக்க முடியுமோ தவிர அந்த வாய்ப்பு பெரிய வழமையான எதிரிப்படைக்கு இல்லாதிருக்கிறதோ அங்கு இந்தப் போர்முறையை கையாள முடியும்.
மா சே துங் மற்றும் வடக்கு வியத்நாமிய ஹோ சி மின் போன்ற பொதுவுடமைத் தலைவர்கள் கரந்தடிப் போர்முறைக்கு அறிமுறை அடிப்படை வழங்கி செயலாக்கினர். இந்த உத்திமுறைகளே கூபாவின் ஃபோகோ கோட்பாட்டுக்கும் ஆப்கானித்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான முஜாஹிதீன் படைகளுக்கும் முன்மாதிரியாக விளங்கின.[3]
சங் கை செக்குடனான சீன உள்நாட்டுப் போரின்போது மா சே துங் கரந்தடிப் போரின் அடிப்படை உத்திகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: "எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம்."[4]
இந்தப் போர்முறை உத்திகள் இருபதாம் நூற்றாண்டில் தான் துவங்கின என்றபோதும் தற்கால கரந்தடிப் போரை ஒத்த சண்டைகள் பழங்காலங்களிலும் சிறிய அளவுகளில் நடைபெற்றுள்ளன. தற்கால வளர்ச்சிக்குத் தூண்டலாக 19ஆம் நூற்றாண்டில் மத்தியாசு ரமன் மெல்லாவின் மானுவல் டெ கொர்ரா டெ கொரில்லாசு என்ற நூல் வகுத்த அறிமுறை வடிவமும் தங்களின் புரட்சிகள் வெற்றி பெற்ற பின்னர் எழுதப்பட்ட மா சே துங்கின் புத்தகமும், செ குவாரவின் நூலும் பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம் லெனினின் நூலும் அமைந்தன. செ குவாராவின் வார்த்தைகளில் கரந்தடிப் போர் "பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படும் ஆனால் சிறிதளவே ஆயுதபலம் கொண்ட தரப்பினர் தங்கள் பாதுகாப்பிற்காக அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் போராகும்".
இந்தியாவில் மராட்டிய இந்துப் பேரரசர் சிவாஜியின் தலைமையில் கரந்தடிப்போர்கள் 17-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்டுள்ளன.
புகழ் பெற்ற க்யூப போராளி எர்னெஸ்ரோ சேகுவேரா கரந்தடிப்போரில் ஈடுபட்ட வீரர் ஆவார்.இவர் கரந்தடிப் போரின் நுணுக்கங்கள் பற்றி எழுதிய புத்தகமே யுத்த நெறியாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.