உரோம்
இத்தாலியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் / From Wikipedia, the free encyclopedia
உரோம் (Rome, இத்தாலியம்: Roma, இலத்தீன்: Rōma) இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். 1,285.3 km2 (496.3 sq mi) பரப்பளவுள்ள இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனால் இந்நகரமே நாட்டின் மிகவும் மக்களடர்த்தி மிக்க நகரமாக விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப்பகுதியாக விளங்குகின்றது. பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 3.8 மில்லியனாக உள்ளது.[2][3][4][5][6][7]
உரோம் | |
---|---|
கம்யூன் | |
உரோமைத் தலைநகரம் | |
அடைபெயர்(கள்): முடிவற்ற நகரம் | |
உரோமை மாகாணத்திலுள்ள உரோம் (உரோமா காபிதால்) ஆட்பகுதி | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | இலாசியோ |
அரசு | |
• வகை | பெருநகரப் பகுதி |
• நிர்வாகம் | உரோம் நகர மன்றம் |
• நகரத் தந்தை | இக்னாசியோ மாரினோ (சனநாயகக் கட்சி) |
பரப்பளவு | |
• Total | 1,285 km2 (496.3 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2014) | |
• Total | 28,69,461[1] |
• தரவரிசை | இத்தாலியில் முதலாவது |
• அடர்த்தி | 860.92/km2 (2,229.78/sq mi) |
• நகர்ப்புறம் | 38,00,000[2] |
• மெட்ரோ | 42,00,000[2] |
இனம் | உரோமனோ |
நேர வலயம் | ஒசநே+1 (சிஈடி) |
அஞ்சல் குறியீடு | 00100; 00121 முதல் 00199 வரை |
இடக் குறியீடு | 06 |
புனிதர்கள் | புனித பேதுரு, புனித பவுல் |
இணையதளம் | Comune di Roma |
இத்தாலிய மூவலந்தீவில் நடு-மேற்குப் பகுதியில் லாசியோ மாகாணத்தில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில், டைபர் ஆற்றங்கரையில் உரோம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் எல்லைகளுக்குள் தன்னாட்சியுள்ள நாடான வத்திக்கான் நகர் அமைந்துள்ளது; இவ்வாறு ஓர் நகரத்தினுள்ளே நாடொன்று அமைந்திருப்பது தனித்துவமானதாகும். சில நேரங்களில் உரோம், இக்காரணங்களால், இரு நாடுகளின் தலைநகரமாகவும் வரையறுக்கப்படுகின்றது.[8][9]
இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது இத்தாலிய மொழியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
உரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது; பழங்கதைகளின்படி கிமு 753இல் உரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் உரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் "முடிவுறா நகரம்" (இலத்தீன்: Roma Aeterna) [10] என்றும் உலகத்தின் தலைநகர் "(இலத்தீன்: Caput Mundi)" என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் உரோம் அடுத்தடுத்த உரோமை இராச்சியம், உரோமைக் குடியரசு உரோமைப் பேரரசுகளின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில் எனவும் உரோம் விவரிக்கப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து திருத்தந்தையின் இருப்பிடமாக விளங்குகின்றது. 8ஆவது நூற்றாண்டில் திருத்தந்தை நாடுகளின் தலைநகராக ஏற்றம் பெற்று 1870 வரையில் இத்தகுதியைப் பெற்றிருந்தது. 1871இல் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகரமாகவும் 1946 முதல் இத்தாலியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
நடுக்காலத்திற்குப் பின்னர் அனைத்து திருத்தந்தைகளும் உரோம் நகரத்தை உலகின் சிறந்த கலைநயம் மிக்க பாண்பாட்டு மையமான நகரமாக்கத் திட்டங்கள் வகுத்துள்ளனர்.[11] இதனால் இத்தாலிய மறுமலர்ச்சியின் முதன்மை மையமாக உரோம் விளங்கியது.[12] இங்குதான் பரோக்கு கலைவடிவம் பிறந்தது. பிரமாண்டே, மைக்கலாஞ்சலோ, ராபியேல் சான்சியோ, பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், இராபியேல் ரூம்சு, புனித பேதுரு சதுக்கம் போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர்.
உரோமிற்கு உலகளாவிய நகரம் என்ற தகுதி உள்ளது.[13][14][15] 2011ஆம் ஆண்டில் மிகவும் வருகை புரிந்த நகரமாக உலகில் 18ஆவதாகவும் ஐரோப்பாவில் மூன்றாவதாகவும் விளங்கியது; இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாவிடமாகத் திகழ்ந்தது.[16] இதன் வரலாற்று மையங்கள் யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.[17] வத்திக்கான் அருங்காட்சியகங்கள், கொலோசியம் போன்ற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் உலகின் மிகவும் பார்க்கப்பட்ட சுற்றுலா இடங்களாக உள்ளன; ஓராண்டில் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களையும் காண்கின்றனர். 1960 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகம் இங்குள்ளது.