நீரிழிவு நோய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
நீரழிவு (நீீர்+அழிவு)(diabetes mellitus) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும்[2]. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.[3]
இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்[4]. கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்[5]. உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு "இன்சுலின்" (INSULIN)உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. கணைய மாற்று சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகிவிடுகிறது.
உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.[6] 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.[7] இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.[8] 1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும்.[7] இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது.[9][10] நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படவராக ஆண்கள் காணப்படுகின்றனர்.[11] இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன.[12]
நீரிழிவில் மூன்று வகைகள் உண்டு[5].
முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.
மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
சிறப்பியல்புகள் | முதலாவது வகை | இரண்டாவது வகை |
---|---|---|
தோற்றம் | திடீரென்று | படிப்படியாக |
தோன்றும் வயது | பெரும்பாலும் குழந்தைகளில் | பெரும்பாலும் பெரியவர்களில் |
உடல்வாகு | மெலிந்த அல்லது சாதாரணமான[14] | பருமனான |
கீட்டோ அமிலத்துவம் | சாதாரணம் | அரிது |
தன்னெதிர்ப்பிகள் | வழக்கமாக உண்டு | இல்லை |
அகவழி இன்சுலின் | குறைவு (அ) இல்லை | சாதாரணம், குறைவு (அ) அதிகம் |
இரட்டைக் குழந்தைகளில் இசைவு |
50% | 90% |
நீரிழிவு பரவியுள்ளமை | ~10% | ~90% |
நீரிழிவு நோய் பாதிப்பிற்கு வயது தடையல்ல. இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
பல சமயங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
இரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு முதலான நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும்.
நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.[15]
நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.[16] பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும்.[16] அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.[17] அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.[18] சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும்.[18] புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது.[19] வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.[20]
நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும்.
நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.