From Wikipedia, the free encyclopedia
துரைராஜன் பாலசுப்பிரமணியன் (Dorairajan Balasubramanian) என்பவர் பேராசிரியர் பாலு என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் இந்திய உயிர் இயற்பியல் வேதியியலாளர்[1] மற்றும் கண் உயிர் வேதியியலாளர் ஆவார்.[2][3][4][5] இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.[6] தற்பொழுது ஐதராபாத்திலுள்ள எல்வி பிரசாத் கண் நிறுவனத்தின், பிரையன் ஹோல்டன் கண் ஆராய்ச்சி மைய இயக்குநராக உள்ளார்.[7][8][9] இவர் பிரான்சு அரசின் தேசிய மரியாதையினைப் பெற்றவர் ஆவார். பாலசுப்ரமணியன் இந்திய அரசு 2002-ல் இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மஸ்ரீ[10] வழங்கி கவுரவம் செய்தது.
துரைராஜ் பாலசுப்பிரமணியன் Dorairajan Balasubramanian | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1939 தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் |
பணி | உயிர் இயற்பியல் வேதியியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1965 முதல் |
அறியப்படுவது | கண் (உடல் உறுப்பு) உயிர்வேதியியல் |
வாழ்க்கைத் துணை | சக்தி |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பத்மசிறீ பிரான்சு-செவாலிய விருது |
வலைத்தளம் | |
{{URL|example.com|optional display text}} |
துரைராஜன் பாலசுப்பிரமணியன் 28 ஆகத்து 1939 அன்று[8] தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்தார்.[3][4] இவர் 1957-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1959-ல் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், பிலானியில் வேதியியலில் முதல் தரத்துடன்[11] முதுகலைப் பட்டம் பெற்றார்.[2][3][4][5] பாலசுப்பிரமணியன் 1960-ல் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியல் வேதியியலில் முனைவர் பட்டத்தினை[5] 1965-ல் பெற்றார்.[2][3][4][8] 1966ஆம் ஆண்டு வரை மினசோட்டா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் ஜேன் காபின் குழந்தைகள் ஆய்வாளராக முனைவர் பட்ட மேல் ஆராய்ச்சியாளராக ஆய்வினை அமெரிக்காவில் தொடர்ந்தார்.[2][3][4][5][8]
பாலசுப்பிரமணியன் 1966-ல் இந்தியாவுக்குத் திரும்பி , கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்[3][5] விரிவுரையாளராகச் சேர்ந்தார். இங்கு இவர் பல ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராகவும் பின்னர் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.[2][4][8] 1977ஆம் ஆண்டில், ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பள்ளியின் பேராசிரியராகவும் புலத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[5][9] இங்கு இவர் 1982 வரை பணியாற்றினார்.[8] பின்னர் இவர் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் துணை இயக்குநராகப் பதவி ஏற்றார்.[2][3][8] இவர் 1998-ல் இந்நிறுவனத்திலிருந்து இதன் இயக்குநராக ஓய்வு பெற்றார்.[5] பின்னர் தனது ஆய்வுப் பணியினை எல். வி. பிரசாத் கண் நிறுவனத்தில் தொடர்ந்தார். இங்கு இவர் பிரையன் ஹோல்டன் கண் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி இயக்குநராக உள்ளார்.[2][3][4][5][8][9] சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும், இந்தியாவின் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகத்தின் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.[2][3][4]
பாலசுப்பிரமணியன் ஈ தொலைக்காட்சியின் உடன் தயாரிப்பாளராகத் தொடர்புடைய சக்தியை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3][4] மூத்த மகள் காத்யாயனி ஆராய்ச்சியாளர். இளையவர், அகிலா பொதுச் சுகாதார நிபுணராக பணிபுரிகிறார்.[3][4] இவர் குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசிக்கிறார்.[3][5]
பாலசுப்பிரமணியன் பெதஸ்தாவில் உள்ள தேசிய கண் நிறுவனத்தின் வருகை தரும் அறிவியலாளர் மற்றும் மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவத்தில் மூத்த ஆய்வாளர் ஆவார்.[2] இவர் இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் அமைக்கப்பட்ட தண்டு உயிரணு ஆராய்ச்சிக்கான பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார்.[5] இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் தலைவர் (2007-2010) ஆவார்.[4][8] மேலும் ஆந்திரப் பிரதேச அரசின் உயிரி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[3] உலக அறிவியல் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.[3][4] இவர் சம்பலிமாட் அறக்கட்டளையின் கண் நோய்களுக்கான மருத்துவ மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் தீர்வுகளைக் கண்டறிவதற்காக வெல்கம் அறக்கட்டளையின் கட்டுப்படியாகக்கூடிய சுகாதார திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். தண்டு உயிரணுக்களை வளர்ப்பதற்குச் சாரக்கட்டுகளைப் பயன்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டார்.[8] பாலசுப்பிரமணியன் பன்னாட்டு மனித உரிமைகள் அகதமியின் வலையமைப்பு மற்றும் ஆய்வாளர்களின் சமூகத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன பன்னாட்டு அடிப்படை அறிவியல் குழு[12] மற்றும் பார்வை மற்றும் கண் மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கான சங்கத்தின்,[13] அமெரிக்கப் பிரிவின் மேனாள் உறுப்பினராக இருந்தார்.[8] பல பன்னாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[4][5] மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளி 2019 (ஐசிஜிபி'19) மரபணு உயிரியல் தொடர்பான பன்னாட்டு மாநாட்டிற்கான கவுரவ ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.[14]
பாலசுப்பிரமணியன் 1965ஆம் ஆண்டு புரதங்கள் மற்றும் புரதக்கூறுகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தனது ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்கினார். இவற்றின் நிலைத்தன்மையின் வெப்ப இயக்கவியல் பகுப்பாய்வில் பணியாற்றினார்.[1][5][8] 1984/85-ல் இவர் கண் அறிவியலில் பணிபுரியத் தொடங்கியபோது இவரது ஆராய்ச்சியின் கவனம் மாறியது. கண் வில்லையின் படிகங்கள் மற்றும் வில்லையினை வெளிப்படையானதாக வைத்திருப்பதில் ஒரு முகவராக இவற்றின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினார்.[15] ஒளி வேதியியல் ரீதியாகப் படிகங்கள் சேதமடையும் போது கண்புரை எவ்வாறு ஏற்படுகிறது என்பதை இவரது ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. இதனால் விழிவில்லை வெளிப்படைத்தன்மை குறைகிறது.[1] வில்லையில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தம் , மூலக்கூறுகளில் சக இரசாயன மாற்றங்களைத் தூண்டுகிறது.[3] இந்த மாற்றங்கள் கண்புரைக்கு வழிவகுக்கும் என்று இவர் வாதிட்டார்.[1][4][5][8] உயிர் வளியேற்ற எதிர்பொருள்கள் மற்றும் சைட்டோபாதுகாப்பு பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், கண்புரையின் வளர்ச்சியை மெதுவாக்கலாம் என்பதைக் கண்டறிய இவர் இந்த விடயத்தில் மேலும் ஆராய்ச்சி செய்தார்.[4] இந்த கண்டுபிடிப்புகள் கண்புரை பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரு முற்காப்பு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. இது உலகில் 47.9 சதவிகிதம்[16] குருட்டுத்தன்மைக்கான காரணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[1] மேலும், இவர் கண்புரை காரணிகளை அடையாளம் காண முயன்றார். தேநீரில் உள்ள பாலிபினால்கள்,[17] ஜின்கோ பிலோபா[18] மற்றும் விதானியா சோம்னிபெரா சாறுகளின் நன்மைகளை முன்மொழிந்தார்.[19] இந்த பொருட்களில் ஆக்சினேற்றிகள் மற்றும் சைட்டோபாதுகாப்புச் சேர்மங்கள் உள்ளன. இவை ஆக்சிஜனேற்ற கண்புரையின் தீவிரத்தினை மெதுவாக்குகின்றன, மேலும் இது விலங்குகளில் சோதனைகளின் போது உறுதி செய்யப்பட்டது.[1]
நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிறகு, பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது சகாக்கள் பரம்பரை கண் நோய்கள்[8] மற்றும் அவற்றின் மூலக்கூறு மரபியல் ஆகியவற்றில் பணியாற்றத் தொடங்கினர்.[4] 400க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மாதிரித் தொகுப்பைக் கொண்டு பிறவி கணழுத்த நோய்[5] [20] போன்ற நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியை இந்தக் குழு மேற்கொண்டது. மேலும் இது சி. யொ. பி.1பி1 மரபணுவில் 15 பிறழ்வுகளை வெளிப்படுத்த உதவியது. மரபணு பிறழ்வு ஆர்368எச் மிகவும் பொதுவான ஒன்றாகும்.[4] [20] மரபணு வகை - தோற்றவமைப்பு தொடர்புகள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் பிறழ்ந்த புரதத்தில் நிகழ்கின்றன.[4][20] மேலும் இந்த கண்டுபிடிப்புகள் நோயின் மருத்துவ கணிப்பு மற்றும் குருட்டுத்தன்மையைத் தடுக்க ஆரம்பக்கால சிகிச்சை தலையீட்டிற்கு உதவியது.[1]
பாலசுப்பிரமணியன் இப்போது குருத்தணு உயிரியல் மற்றும் இழந்த பார்வையை மீட்டெடுப்பதில் இதன் பயன்பாட்டில் பணியாற்றி வருகிறார். இவரும் இவரது குழுவும் மூட்டுப் பகுதியில், கருவிழிப்படலம் சுற்றிக் காணப்படும் முதிர்ந்த குருத்தணுக்களைத் தனிமைப்படுத்தி, அவற்றை மனித பனிக்குடச் சவ்வில் வளர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.[8] இந்த வளர்ப்பு குருத்தணு, பின்னர், மனிதக் கண்ணில் தைக்கக்கூடிய கருவிழிப் படலத்தினை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. இரசாயன அல்லது தீ தீக்காயங்களால் கண்பார்வை இழந்த 200 நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் 20/20 அளவுகளுக்குப் பார்வை மீட்டமைப்புடன்[4] அடுத்தடுத்த கருவிழி மாற்றுச் சிகிச்சை அல்லது மாற்று அறுவை சிகிச்சையுடன் இல்லாமல் குறிப்பிடத்தக்க நல்ல முடிவுகளைத் தந்தன.[1] இந்தச் சோதனைகள் உலகில் வயது வந்தோருக்கான குருத்தணு சிகிச்சையின் மிகப்பெரிய வெற்றிகரமான மனித சோதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[1][4]
பாலசுப்பிரமணியன் 6 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[3] இதில் இரண்டு புபாடப்புத்தகங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.[3] இவற்றுள் ஒன்று வேதியியல் மற்றும் மற்றொன்று உயிரி தொழில்நுட்பம், கல்விப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள்.[1][4][21] இவர் 450க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3][4] இவை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டது.[2][22] மைக்ரோசாப்ட் கல்வித் தேடல், அறிவியல் கட்டுரைகளின் இணையக் களஞ்சியத்தில் 52 பட்டியலிடப்பட்டுள்ளது.[23] இவர் 170க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.[1][3][4][5] மேலும் 1980 முதல் தி இந்து மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி செய்தித்தாள்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து பொதுவான கட்டுரைகளை வெளியிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பிரபலப்படுத்துவதில் பங்களித்து வருகின்றார்.[3][4][21][24] ஆய்வுத்துறையில், 16 முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக உதவியுள்ளார்.[5] உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் தடுப்பூசிப் பிரிவை நிறுவுவதற்கும், மாநில அரசின் பட்டு வளர்ப்பு ஆய்வகத்திற்கான தர மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைப்பதற்கும் இவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன.[4]
ஜவகர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கெளரவப் பேராசிரியரான துரைராஜன் பாலசுப்பிரமணியன், இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம், இந்தியா, மூன்றாம் உலக அகாதமி மற்றும் அறிவியல் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கம் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[2][3][5][8][11] இவர் லியோபோல்டினா அறிவியல் அகாதமி,[8] ஜெர்மனி, மொரிசியசு அறிவியல் அகாதமி[8] மற்றும் பன்னாட்டு மூலக்கூறு உயிரியல் வலையமைப்பு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.[11]
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல விருது சொற்பொழிவுகளை பாலசுப்பிரமணியன் நிகழ்த்தியுள்ளார். 1985-ல், இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய விரிவுரையை வழங்கினார். அடுத்த ஆண்டு, பேராசிரியர் கே. வெங்கட்ராமன் நன்கொடை விரிவுரையினை நிகழ்த்தினார்.[11] கே. எசு. ஜி. தாசு நினைவு விரிவுரை மற்றும் எசு. ஈ. ஆர். சி. தேசிய விரிவுரையினை 1991-ல் நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து பாஸ்டர் நூற்றாண்டு விரிவுரை, ஆர்.பி. மித்ரா நினைவு விரிவுரை மற்றும் 1995-ல் இந்திய அறிவியல் பேராய சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு விரிவுரை விருதுகள் வழங்கப்பட்டன. பாலசுப்ரமணியன் வழங்கிய மற்ற விருது விரிவுரைகளில் சில:[11]
பாலசுப்பிரமணியன் தனது முதல் விருதான அருட்தந்தை எல். எம். யாதானபாலி நினைவு விருதினை 1977-ல் இந்திய வேதியியல் சங்கம் வழங்கப் பெற்றார்.[11] 1981ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் இரசாயன அறிவியலுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை பெற்றார்.[11] 1983ஆம் ஆண்டு அவருக்கு எஸ். பி. சி. ஐ. சர்மா நினைவு விருதும், எப். ஐ. சி. சி. ஐ. விருதும் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் எம். ஓ. டி. ஐயங்கார் விருதும் வழங்கப்பட்டது.[11] இவர் 1990-ல் ரன்பாக்சி விருதையும்[2] 1991-ல் அமெரிக்காவின் கண் ஆராய்ச்சிக்கான தேசிய அறக்கட்டளையின் புகீ விருதையும்,[11] 1994-ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்தியச் சங்கத்தின் மகேந்திர லால் சிர்கார் பரிசையும் பெற்றார்.
மூன்றாம் உலக அறிவியல் அகாதமி 1995-ல் பாலசுப்பிரமணியனுக்கு அகாதமியின் விருதினை வழங்கி கௌரவித்தது.[4] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஈரானின் ஆராய்ச்சி அமைப்பு 1996-ல் இவருக்கு ஈரானின் குவாரிசுமி விருதை வழங்கியது.[2][5][11] இவர் 1997ஆம் ஆண்டு ஓம் பிரகாசு பாசின் விருதையும் கலிங்கா பரிசையும் பெற்றார்.[2][4][5][25] 1998ஆம் ஆண்டு, கோயல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கோயல் பரிசினையும்[2] மற்றும் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் ஜே. சி. போசு பதக்கத்தினையும் பெற்றார்.[5][11] இந்திய அரசாங்கம் 2002-ல் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[2][4][5] பிரான்சு அரசாங்கம் 2002-ல் செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டி மெரைட் விருதினை வழங்கியது.[2][4][5] 2002ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூன்றாவது விருதைப் பெற்றார். இது அறிவியல் பிரபலப்படுத்தலுக்கான தேசிய பரிசு ஆகும்.[5][11] இவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இந்திரா காந்தி பரிசு[5][11] மற்றும் இந்திய அறிவியல் பேராய சங்கத்தின் அறிவியலில் சாதனை படைத்ததற்காக ஜவகர்லால் நேரு நூற்றாண்டு விருதும் பெற்றவர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.