Remove ads
இந்துக்களின் புனித நாள் From Wikipedia, the free encyclopedia
வைகுண்ட சதுர்த்தி (Vaikuntha Chaturdashi) என்பது, இந்துக்களின் புனித நாளாகும். இது இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகையின் (நவம்பர்-டிசம்பர்) வளர்பிறை நிலவு அரைத் திங்களில் (சுக்ல பட்சம்) 14வது சந்திர நாளான சதுர்த்தி அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கு புனிதமானது. வாரணாசி, ரிசிகேசு, கயை, மகாராட்டிராவில் உள்ள வெவ்வேறு கோவில்களில் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ வழிபடுகிறார்கள்.
வைகுண்ட சதுர்த்தி | |
---|---|
சிவன் விழ்ணுவிடம் சக்ராயுதத்தை வழங்கும் ஓவியம் | |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
அனுசரிப்புகள் | தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்களுக்கு பிரார்த்தனைகளும், மதச் சடங்குகளும் நடைபெறுகிறது. |
நாள் | சந்திர நாட்காட்டியில் அனுசரிக்கப்படுகிறது |
தொடர்புடையன | கார்த்திகை பூர்ணிமா |
சிவாஜி அவரது தாயார் ஜிஜாபாய் ஆகியோரால் அமைத்த வழக்கப்படி, இந்த புனித நாள் மராத்தியர்களால் மகாராட்டிராவில் அனுசரிக்கப்படுகிறது. கவுட சாரஸ்வத் பிராமணர்களால் சற்று வித்தியாசமான வடிவத்தில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இது உள்ளது.[1]
சிவமகாபுராணத்தின் படி, ஒருமுறை, விஷ்ணு கடவுள் தனது இருப்பிடமான வைகுண்டத்தை விட்டு வாரணாசிக்குச் சென்று ஆயிரம் தாமரைகளால் சிவனை சிவனை வழிபட்டார். சிவனைப் போற்றிப் பாடும் போது, ஆயிரமாவது தாமரை காணவில்லை. விஷ்ணுவின் கண்கள் பெரும்பாலும் தாமரைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. எனவே அவற்றில் ஒன்றைப் பறித்து சிவபெருமானுக்கு வழங்குகிறார். மகிழ்ச்சியடைந்த சிவன், விஷ்ணுவின் கண்ணை மீட்டு, அவருக்கு புனித ஆயுதமான சுதர்சன சக்கரத்தை பரிசாக வழங்கினார்.[2][3]
வாரணாசி விழாக்களுடன் தொடர்புடைய வைகுண்ட சதுர்த்தி புராணத்தின் படி, தனது வாழ்நாளில் பல பாவங்களைச் செய்த பிராமணரான தனேசுவர் என்பவர், வைகுண்ட சதுர்த்தியை அனுசரித்து கோதாவரி ஆற்றங்கரையில் குளித்து தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டார். அப்போது அங்கே கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் புனித நதியில் மண்ணாலான விளக்குகளை சமர்ப்பித்தனர். தனேசுவர் கூட்டத்தில் சிக்கி இறந்து போனார். அவரது ஆன்மா மரணத்தின் கடவுளான யமனால் தண்டனைக்காக நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், சிவன் தலையிட்டு, வைகுண்ட சதுர்த்தி அன்று பக்தர்களின் கூட்டத்தால் தனேசுவரனின் பாவங்கள் நீங்கியதாக யமனிடம் கூறினார். பிறகு தனேசுவரன் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டத்தில் இடம் பெற்றார்.[4]
மராட்டியப் பேரரசின் நிறுவனர் சிவாஜி, அவரது தாயார் ஜிஜாபாய் ஆகியோரால் இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தில் இந்த வாடிக்கை ஏற்படுத்தப்பட்டதாக ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. சிவாஜி முடிசூட்டப்பட்ட பிறகு, ராய்கரில் தலைநகர் கட்டப்பட்டது. அதில் குசவர்தா என்ற பெரிய தாமரைக் குளமும் உருவாக்கப்பட்டது. தொட்டியிலுள்ள தாமரை மலர்கள் கார்த்திகை மாதத்தில் வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களில் பிரகாசமாக மலர்ந்தன. இதைக் கண்ட சிவாஜியின் தாயார் சிவாஜியிடம் வைகுண்ட சதுர்த்தி வரவிருப்பதாகக் கூறினார். விஷ்ணுவைப் போலவே, ஜீஜாபாயும் தனது ஜெகதீசுவர கோவிலில் சிவனுக்கு ஆயிரம் வெள்ளை தாமரை மலர்களை அர்ப்பணிக்க விரும்பினார். அந்தப் பூக்கள் கறை படியாத வெள்ளைத் தாமரை மலர்களாகவும், புதியதாகவும், வேறு யாராலும் பறிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார் (அத்தகைய செயலால் அதன் தெய்வீக குணம் இழக்கப்படக்கூடும் என்பதால்). சிவாஜி தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற தனது தனிப்பட்ட பாதுகாவலரான விக்ரம் தல்வியிடம் இப்பணியை ஒப்படைத்தார். ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். வைகுண்ட சதுர்தசி அன்று அதிகாலையில், குளத்திற்குச் சென்று, தரையில் படுத்துக் கொண்டு, தாமரை தண்டுகளை வெட்டுவதற்காக அடுத்தடுத்து அம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக எய்தினார். பின்னர் அவர் ஒரு படகில் தொட்டியில் ஏறி, வாக்குறுதியளித்தபடி பூக்களை தொடாமல் பறிக்க ஒரு இடுக்கியைப் பயன்படுத்தினார். தல்வியின் வில்வித்தையின் ஒப்பற்ற திறமையால் சிவாஜியும் ஜிஜாபாயும் மகிழ்ந்தனர். மேலும், கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அவருக்கு தங்கம் மற்றும் மரகத மாலையை வழங்கினார்.[1]
விஷ்ணுவின் பக்தர்கள் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் உச்சரிக்கும் போது அவருக்கு ஆயிரம் தாமரைகளை வழங்குவதாக நம்புகிறார்கள். விஷ்ணுவின் கால்தடங்கள் இருப்பதாக நம்பப்படும் விஷ்ணுபாதம் கோயிலில், இந்த சமயத்தில் அதன் முக்கியத் திருவிழாவைக் கொண்டாடுகிறது. இந்த விழா விஷ்ணு பக்தர்களால் கார்த்திகை நீராட்டம் என்றும் கொண்டாடப்படுகிறது. ரிசிகேசத்தில், விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்ததைக் குறிக்கும் வகையில் இந்த நாள் 'தீப்தான் மகோத்சவம்' என்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அடையாளமாக, எரிக்கப்பட்ட மண் விளக்குகளுக்குப் பதிலாக ஆழமான அல்லது நீரில் கரைந்துவிடும் மாவுகளாலான விளக்குகள் செய்யப்படுகின்றன. மாலையில் கங்கை ஆற்றில் ஏற்றப்பட்ட விளக்குகள் மிதக்க வைக்கப்படுகின்றன. இது பல கலாச்சார விழாக்களுடன் சேர்ந்துள்ளது.[5]
இந்த சந்தர்ப்பத்தில், வாரணாசியில் உள்ள முக்கிய சிவன் கோவிலான காசி விசுவநாதர் கோவிலின் கருவறையில் விஷ்ணுவுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்படுகிறது. இந்நாளில் கோயில் 'வைகுண்டம்' என்று வர்ணிக்கப்படுகிறது. இரண்டு தெய்வங்களும் ஒருவரையொருவர் வழிபடுவது போல் முறையாக வழிபடப்படுகின்றன. விஷ்ணு, சிவனுக்கு துளசி இலைகளை (பாரம்பரியமாக விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது) வழங்குகிறார். மேலும் சிவன் விஷ்ணுவுக்கு வில்வ இலைகளை (பாரம்பரியமாக சிவனுக்கு பிரசாதமாக வைக்கப்படும்) வழங்குகிறார். பக்தர்கள் நீராடி, நாள் முழுவதும் விரதம் இருந்து, இரு தெய்வங்களுக்கும் அச்சதை (மஞ்சள் கலந்த அர்சி), சந்தனம், கங்கையின் புனித நீர், மலர்கள், தூபம், கற்பூரம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூசைகளைத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்கள் அன்றைய நாளின் சிறப்பு நிகழ்வாக பருத்தியிலான திரியுடன் எண்ணெய் விளக்குகளை ஏற்றுகிறார்கள்.[4] வாரணாசியில், பெண்கள், குறிப்பாக வயதான பெண்கள், இந்த நேரத்தில் பிரார்த்தனையில் மற்றவர்களை விட அதிகமாக ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள கிரிசுனேசுவரர் கோவிலில், விஷ்ணுவுக்கு வில்வ இலைகளும், சிவனுக்கு துளசி இலைகளும் சமர்பிக்கப்படுகின்றன. இது விஷ்ணு, சிவன் ஐக்கியத்தை சித்தரிப்பதாக கருதப்படுகிறது.[6] நாசிக்கில் உள்ள தில்பந்தேசுவர் கோவிலில், இரண்டு அடியேயான இலிங்கத்திற்கு நேர்த்தியான வெள்ளி முகமூடியில் அலங்கரிக்கப்படுகிறது. இக் கோவில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். இக்கோயில்களின் மூன்று முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.[6][7]
நெல்லி மரத்தடியில் இரவு உணவு உண்ணுவதும் ஒருசில இடங்களில் அனுசரிக்கப்படுகிறது.[8]
திருவரங்கம் (தமிழ்நாடு), திருப்பதி வெங்கடாசலபதி கோயில் (ஆந்திரப் பிரதேசம்), உடுப்பி கிருஷ்ணர் கோயில் (கருநாடகம்), போன்ற பல விஷ்ணு கோயில்களிலும் இது முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. பூசணிகாயை இரண்டாக வெட்டி அதை சுத்தப்படுத்தி 360 திரிகளைப் பயன்படுத்தி விளக்குகளை ஏற்றுகிறார்கள். (சிலர் மண் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.