இந்து மதத்தில் மகாவிஷ்ணு பயன்படுத்தும் ஒரு ஆயுதம் From Wikipedia, the free encyclopedia
இந்து தொன்மவியலின் அடிப்படியில் சக்ராயுதம் என்பது திருமாலின் ஆயுதங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். விஷ்ணுவின் கரங்களில் ஒன்றில் காணப்படும் சுதர்சன சக்ராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சன் எனப்படுகிறார். இந்த சக்கரம் சுதர்சன சக்கரம் என்று வழங்கப்படுகிறது. காத்தல் தொழிலைக் கொண்ட விஷ்ணுவிற்கு துஷ்டநிக்ரஹம் செய்ய இந்த ஆயுதம் உறுதுணைபுரிகிறது. ஆயுதங்களில் இராஜனாக இருப்பதால் இவரை ஹேதிராஜன் என்றும் கூறுவர். இவர் உக்கிர வடிவினர். சக்கரராயர் என்ற பெயருமுண்டு. வைணவர்கள் விஷ்ணுவின் இந்தச் சக்கர சக்தியை சக்கரத்தாழ்வார் என்று அழைப்பதுண்டு. ஆனிச் சித்திரையில் சுதர்சன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. திருவாழி ஆழ்வான், திகிரி, ஹேதிராஜன், சக்கரத்தண்ணல் நேமிதரங்கம் என்ற பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
சக்ராயுதம் (எ) சுதர்சன சக்கரம் | |
---|---|
சக்கராயுதம் | |
அதிபதி | காவல் தெய்வம் |
தேவநாகரி | सुदर्शनचक्र |
தமிழ் எழுத்து முறை | சுதர்சன சக்கரம் |
இடம் | வைகுண்டம் |
சுதரிசனம், சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.
திருவாழி ஆழ்வானான இந்தச் சக்கரத்தண்ணலின் பெருமை சொல்லுதற்கரியது. இவர் ஞானம் வழங்குபவர்; ஆரோக்கியம், அளிப்பவர்; செல்வம் தருபவர்; பகைவர்களை நீக்குபவர்; மோட்சத்திற்கு வழி செய்பவர். தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியைத் தேடித்தரும். சுருங்கக்கூறின், எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்கவல்லது. சக்கரத்தாழ்வாரை முறையோடும் நெறியோடும் வழிபடுபவர்கள் உடல் நலமும், நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் பெறுவதுடன் தாங்கள் வேண்டும் வரங்களும் குறைவின்றி பெறக்கடவர் என்று சுதர்சன சதகம் என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. நூறு பாசுரங்கள் கொண்ட இந்நூலினைப் பாராயணம் செய்வதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் விடுபெறலாம் என்பது நம்பிக்கை. சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய ஸ்வாமிதேசிகர் ஸ்ரீசுதர்ன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.[2]
சக்ராயுதமானது ஒரு முறை ஏவினால் எவரைக் கொல்ல வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறோமோ அவரைக் கொல்லும் என்று நம்பப்படுகிறது. ஒரு முறை ஏவினால் கொன்றுவிட்டு மீண்டும் ஏவியவரிடமே வந்து சேரும் என்பதும் அதன் குணங்களாகும். இந்த ஆயுதத்தினை வளரியோடு ஒப்பிட்டு நோக்கலாம்.
விஷ்ணு புராணம் சக்ராயுதம் சூன்யப்பாதையில் செல்கிறது என்றும், திருமாலின் விரலிலிருந்து செல்லும் சக்ராயுதம், எதிரைகளை அழித்து மீண்டும் திருமாலின் கரங்களை வந்தடையும் என்றும், இவ்வாறு எதிரிகளை அழிக்கச் செல்லும் போது அதன் வேகம் ரன்ஸகதி என்று அழைக்கின்றனர்.[3]
இறைவனின் அவதாரங்களில் திருவாழி ஆழ்வான் அவனை விட்டுப் பிரியாது இறைவனோடு அவதரிக்கிறான். நரசிம்மாவதாரத்தில் விரல் நகங்களில் பல்லுருக்கொண்டு ஆவிர்ப்பவித்து இரணியகசிபுவை கிழித்தெறிய உதவினான்.
வாமனாவதாரத்தில் பவித்ர தர்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரன் கண்ணைக் கிளறியழித்தான். இராவணனுடைய முன்னோரான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களைத் தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான் சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தான்.
தேவலர் என்ற முனிவர் நீரில் நின்று கொண்டு தவம் புரிகையில் அதில் மறைந்து நின்ற கந்தர்வன் ஒருவன் அவரது காலைப் பற்றி இழுத்தான். உடனே முனிவர் அவனை முதலையாகும்படி சபித்தார். ஒருநாள் பூஜைக்கு பூப்பறிக்க வந்த யானையினை அந்தக் குளத்தின் ஆழ்மடுவில் இருந்த முதலை காலைப் பற்றியதும் ஆயிரமாண்டுகள் முதலையுடன் கஜமுகன் போராடினான். இறுதியில் ‘நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய் வாராய்! என் ஆரிடரை நீக்காய்’ என அழைத்ததும் ஆதிமூலமான நாராயணன் கருடன் மீதேறி பொய்கைக்கரை வந்து ஆழியால் முதலையைக் கொன்று கஜேந்திர யானைக்கு மோட்சம் கொடுத்தான். இந்த யானை இந்திரத்யும்னன் என்ற அரசன், திருமால் பூஜையில் ஈடுபட்டிருக்கையில் அங்குள்ள அகத்தியரை உபசரிக்கவில்லை. இதனால் வெகுண்ட முனிவர் யானையைப் போல் செருக்குற்றிருக்கும் நீ யானையாகக் கடவாய் என சபித்தார். அதனால் யானையான அரசன் பூர்வஜன்ம வாசனையினால் தாமரைப் பூக்களை பறித்து திருமாலை வணங்கி வந்தான்.
காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து தானே உண்மையான வாசுதேவன் என பௌண்டரீக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்ததும் கருடன் மேல் ஏறிச் சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் கொன்றான். இவ்வாறு கிருஷ்ணாவதாரக் காலத்திலும் திருவாழி ஆழ்வானின் தொண்டு சிறப்பாக அமைந்திருந்தது.
திருமால் அடியாரான அம்பரீஷன் என்ற அரசர் இறைவனிடம் தான் பெற்ற சக்கரத்தாழ்வானை அனுதினமும் ஆராதித்து வந்தார். ஏகாதசி விரதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவரைச் சோதிக்க எண்ணிய துர்வாசமுனிவர் ஒரு துவாதசியன்று மன்னனிடம் வந்து தான் காலைக் கடன்களை முடித்துவிட்டு பாரணைக்கு வந்துவிடுவதாகக் கூறிச் சென்று காலம் தாழ்த்தினார். அன்று சிலநேரமே இருந்து துவாதசி கடந்து கொண்டிருப்பதைக் கண்ட மன்னன் தான் மட்டும் பாரணை செய்தால் முனிவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் எனத் தவித்தான். இதனையறிந்த அரச புரோகிதர் திருமாலை ஆராதித்து ஜலப்பாரணை செய்தால் பாரணை செய்த பலனும் உண்டு, உண்ணா நோன்பும் காப்பாற்றப்படும் என்று கூறினார். யோக திருஷ்டியால் மன்னனின் ஜலப் பாரணையை அறிந்த முனிவர் சினம் கொண்டு தம் தலையிலிருந்து உரோமம் ஒன்றை எடுத்து கீழே போட்டார். அதிலிருந்து தோன்றிய பூதம் மன்னனை நோக்கி விரைந்தது. இந்நிலையில் அவருடைய திருவாராதன மூர்த்தியான சுதர்சன ஆழ்வான் சீறிப்பாய்ந்து பூதத்தை துரத்த அதுவும் துர்வாசரை துரத்திச் சென்றது. நாள்கணக்கில் அன்ன ஆகாரமின்றி ஓடிய முனிவர் திருமாலை வந்தடைந்ததும் அவர் அம்பரீஷனிடம் சரணடையுமாறு கூறினார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த முனிவரைக் காப்பாற்ற அம்பரீஷன் பதினொன்று ஸ்லோகங்களால் சுதர்சனத்தைத் துதித்து முனிவரிடம் பிரீதனாக வேண்டும் என வேண்டினார். விடுபட்ட முனிவர் தம் ஆறாத கோபத்தினால் தம்மை இப்பாடுபடுத்திய சுதர்சனம் ஒளியிழந்து இருள்நிலை அடைவதாக எனச் சாபம் கொடுத்தார். திருமால் சீறி எழுந்த சுதர்சனத்தை அடக்கி மற்றொரு முக்கியமான காரியம் செய்வதற்கே இந்தச் சாபம் என்று எடுத்துரைத்தார். பின்னர் முனிவரும் மன்னரும் அரண்மனைக்குச் சென்று உணவு உட்கொண்டனர்.
பாரதப்போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனின் தலையினை மறுநாள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு அறுத்து தள்ளுவேன். இல்லாவிடில் தீக்குளிப்பேன் என அர்ச்சுனன் சபதம் செய்தான். ஆனால் துரியோதனனோ ஜயத்ரதனை மறைந்து வைத்துக் காப்பாற்றினான். மாலை நெருங்கியது. அர்ச்சுனன் கவலையடைந்தான். ஜயத்ரதனை கண்ணன் “துர்வாசரின் சாபம் பலிக்கிறது” என்று கூறியவண்ணம் சூரியனை அதுகாறும் மறைத்திருந்த அர்ச்சுனன் தீக்குளிப்பதைக் கண்டுகளிக்க கௌரவர்களுடன் வந்து நின்ற ஆழ்வானைத் திரும்பப் பெற்றதால் சூரியன் பிரகாசித்தான்.
இதற்கிடையில்அர்ச்சுனன் அம்பை பிரயோகித்து ஜயத்ரன் தலையை அறுத்து மாலைக்கடன் செய்து கொண்டிருந்த அவன் தகப்பனின் கைகளில் விழவும் செய்ததால் தன் மகனின் தலை பூமியில் விழ செய்பவனின் தலை வெடி எனக் கூறியதும் அவனது தலை வெடித்தது. நேரே தலை கீழே விழுந்திருந்தால் அர்ச்சுனனின் தலை சிதறியிருக்கும். ஒரே சமயத்தில் கெட்ட எண்ணத்தால் தந்தையும் மகனும் அழிந்தனர்.
கண்ணனின் நெருங்கிய நண்பனான சீமாலி, எல்லா ஆயுதஙகளையும் கற்பித்த கண்ணன் தனக்குச் சக்கராயுதத்தைப் பயில்விக்கவில்லை எனக் குறை கூறினான். தனக்கேயுரிய அதனை வேறு எவராலும் ஆளமுடியாது எனக் கண்ணன் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஆணவம் கொண்ட சீமாலி தன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று கூறினான். வற்புறுத்தலின் பெயரில் கண்ணன் சக்கராயுதத்தை ஆகாயத்தில் வீசி எறிந்து கையில் ஏந்தியதைப்போல் தானும் ஏந்த முயன்ற சீமாலியின் தலை அறுபட்டது.[4]
ஒரு சமயம் பிரம்ம தேவனுடைய தலையை பரமசிவன் கொய்ததனால் ஏற்பட்ட துயரினை நிவர்த்திக்க பரமசிவன் திருமாலை வேண்டினார். திருமால் பரமசிவனுக்கு பத்திரிகாசிரமத்தில் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார். அதன்படி பரமசிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததனால் ஏற்பட்ட பாதகங்கள் நிவர்த்தியாயின. தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.