இந்தி மொழித் திரைப்படத் துறை From Wikipedia, the free encyclopedia
இந்தித் திரைப்படத்துறை அல்லது பாலிவுட் என்பது இந்தியாவில் மும்பை மாநகரில் மூலதனமாக கொண்டுள்ள இந்தி மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். இத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிப்பு மற்றும் உலக அளவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இதை பாலிவுட் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டும். இந்தப் பெயர் மும்பைக்கு முன்னர் வழங்கப்பட்ட பாம்பே என்ற சொல் மற்றும் 'அமெரிக்க திரைப்படத் துறையை' மையமான ஹாலிவுட் என்ற சொல் ஆகிய இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருளும் கலந்துருவான ஒரு கற்பனைச் சொல் ஆகும்.
இந்தித் திரைப்படத்துறை | |
---|---|
முதன்மை வழங்குநர்கள் | ஏஏ பிலிம்ஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஈரோஸ் இன்டர்நேஷனல் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் யஷ் ராஜ் பிலிம்ஸ் தர்மா புரொடக்சன்ஸ் ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஜீ ஸ்டுடியோஸ்[1][2] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017) | |
மொத்தம் | 364 |
நிகர நுழைவு வருமானம் (2016)[3] | |
மொத்தம் | ₹15,500 கோடி |
தேசியத் திரைப்படங்கள் | இந்தியா: ₹3,500 கோடி (ஐஅ$565 மில்லியன்) (2014)[4] |
2017 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்படத்துறை 1,986 திரைப்படங்களைத் தயாரித்தது. அதில் 'இந்தி திரைப்படத்துறை' 364 திரைப்படங்களை தயாரித்து மிகப்பெரிய திரைப்படத்துறையாக இந்தியாவில் விளங்குகின்றது. இந்தியத் திரைப்பட வசூல் வருவாயில் 43 சதவீதத்தை இந்தி திரைப்படத்துறை பிடித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படத்துறை 36 சதவீதத்தை பெற்றுள்ளது. 2001 திரைப்படசீட்டு விற்பனையில் இந்திய சினிமா (பாலிவுட் உட்பட) உலகளவில் 3.6 பில்லியன் சீட்டுகளை விற்றதாகக் கூறப்படுகிறது, இது ஹாலிவுட்டின் 2.6 பில்லியன் டிக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.
1970 களில் இருந்து இந்தித் திரைப்படத்துறை காதல், நாடகம், பாட்டு, நடனம், நகைச்சுவை , சண்டைக்காட்சிகள் போன்ற வகைகளை கொண்டு மசாலா திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. இந்தியில் வெளியான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டு வெளியானது.
பாலிவுட் என்னும் பெயர் மும்பைக்கு முன்னர் வழங்கப்பட்ட பாம்பே என்ற சொல் மற்றும் அமெரிக்க திரைப்படத் தொழில் மையமான ஹாலிவுட் என்ற சொல் ஆகிய இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான ஒரு கற்பனைச் சொல் ஆகும். இருப்பினும் ஹாலிவுட்டைப் போல் அல்லாது பாலிவுட் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளதல்ல.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் முழு நீள ஊமைத் திரைப்படம் 1913 ஆம் ஆண்டு தாதாசாஹேப் ஃபால்கே என்பவர் இயக்கிய ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படம் ஆகும். 1930ஆம் ஆண்டுகளில் திரைப்படத் தொழில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கும் மேலாக உருவாக்கத் துவங்கியது. முதன் முதலாக இந்தியாவில் உருவான பேசும்படம் ஆர்தேஷிர் இரானியின் ஆலம் ஆரா என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றி அடைந்தது. பேசும் படங்களுக்கும், இசைப் படங்களுக்கும் ஒரு பெரிய சந்தை இருப்பது தெளிவாகியது. அதிலிருந்து பாலிவுட் மற்றும் அனைத்துப் பிராந்திய திரைப்படத் தொழில்களும் விரைவில் பேசும் பட முறைமைக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
1930ஆம் ஆண்டுகளும் மற்றும் 1940ஆம் ஆண்டுகளும் பெரும் கலவரமான கால கட்டங்களாக இருந்தன. இரண்டாவது உலகப் போர், இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் பிரிவினை காரணமான வன்முறை ஆகியவற்றால் இந்தியா தொடர்ச்சியாக அடிபட்டிருந்தது. பெரும்பான்மையான பாலிவுட் திரைப்படங்கள் வெட்கமில்லாமல் தப்பித்துச் செல்லும் மனப்பாங்கு கொண்டவையாகவே இருந்தன. இருப்பினும், சிக்கலான சமூககையாண்ட மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை தமது திரைப்படக் கதைகளின் பின்புலமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களும் பலர் இருந்தனர்.
1937ஆம் ஆண்டு ஆலம் ஆரா புகழ் ஆர்தேஷிர் இரானி இந்தியின் முதல் வண்ணப்படமான கிஷன் கன்யா என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்கு அடுத்த வருடம் மதர் இந்தியா என்னும் மற்றொரு வண்ணப்படத்தையும் தயாரித்தார். இருப்பினும், 1950கள் வரையில் வண்ணம் என்பது திரைப்படங்களில் பிரபலமான ஒரு அம்சமாக இருக்கவில்லை இந்தக் கால கட்டத்தில், ஆடம்பரமான காதல் அம்சங்கள் கொண்ட இசைப் படங்களும், உணர்ச்சி மிகுந்த நாடக பாணித் திரைப்படங்களுமே இந்தியத் திரைப்பட உலகின் பொதுவான மூலப் பொருளாக இருந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்த 1940ஆம் ஆண்டுகளின் இறுதி ஆண்டுகளிலிருந்து 1960ஆம் ஆண்டுகள் வரையிலான கால கட்டம் திரைச் சரித்திர ஆய்வாளர்களால், இந்தி திரைப்படத்தின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. எல்லாக் காலத்திற்குமான மிக அதிக அளவில் விமர்சனப் பாராட்டுக்களைப் பெற்ற இந்தித் திரைப்படங்களில் சில இந்தக் காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டன. இதற்கான உதாரணங்களில் குரு தத் படங்களான ஆவாரா (1951) மற்றும் ஸ்ரீ 420 (1955) மற்றும் ராஜ் கபூர் படங்களான ஆன் (1952) ஆகியவை அடங்கும். இந்தத் திரைப்படங்கள் சமூகக் கருத்தாக்கங்களை குறிப்பாக நகரத்தில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றியவையாக அமைந்திருந்தன. நகரம் என்பதை சொர்க்க பூமி மற்றும் அச்சப்படத் தக்க நரகம் என்று இரண்டு வகையாகவும் ஆவாரா சித்தரித்தது. நகர வாழ்க்கையின் உண்மையில்லாத் தன்மையை ப்யாசா விமர்சித்தது.
இந்தக் கால கட்டத்தில்தான் இந்தித் திரையுலகின் மிகவும் பிரபலமான காவியத் திரைப்படங்கள் சிலவும் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மெஹபூப் கான் தயாரித்ததும் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதுமான மதர் இந்தியா (1957) மற்றும் கே.ஆசிஃப் பின் முகல்-இ-அசாம் (1960) ஆகியவை அடங்கும். வி சாந்தாராம் தயாரித்த தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957) திரைப்படம்தான் ஹாலிவுட் படமான தி டர்ட்டி டஜன் (1967) படத்திற்கான ஆதாரவூக்கம் என்று நம்பப்படுகிறது. ரித்விக் கடக் எழுதி பிமல் ராய் இயக்கிய மதுமதி (1958), பிரபல மேற்கத்திய நாகரிகத்தில் மறு பிறவி என்னும் கருத்தாக்கத்தை பிரபலமாக்கியது. இந்தக் கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் அமிதாப் பச்சன், நசிருதீன் ஷா, தேவ் ஆனந்த், திலிப் குமார், ராஜ் கபூர், குரு தத், ராஜேஷ் கன்னா ஆகியோர். வெற்றிகரமாகத் திகழ்ந்த நடிகைகளில் வைஜெயந்திமாலா, நர்கிஸ், மீனா குமாரி, நூதன், மதுபாலா, வஹிதா ரஹ்மான் மற்றும் மாலா சின்ஹா ஆகியோர் அடங்குவர்.
வணிக ரீதியான இந்தித் திரைப்படம் 1950 ஆம் ஆண்டுகளில் செல்வாக்குடன் இருந்தது. இந்தித் திரைப்பட இயக்குனர்களில் சிலர் உலகளவில் பாராட்டப்பெற்ற மனி கௌல், குமார் ஷஹானி, கேதன் மேத்தா, கோவிந்த் நிஹலானி, ஷியாம் பெனகல் மற்றும் விஜய் மேத்தா ஆகியோர் ஆவர். 1950ஆம் ஆண்டுகளிலும் 1960ஆம் ஆண்டுகளிலும் பால்மெ டியோர் பரிசுக்காக கேன்ஸ் திரைப்படத் திருவிழாக்களில் ஹிந்தித் திரைப்படங்கள் போட்டியிடத் துவங்கின. இவற்றில் சில திரைப்படங்கள் பெரும் பரிசுகளை வெல்லவும் செய்தன. தற்போது, பிரபல இந்திய வங்காள இயக்குனரான சத்யஜித் ரேயுடன் இணைந்து எல்லாக் காலங்களிலும் போற்றத்தக்க ஆசிய திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக குரு தத் மதிக்கப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு சைட் அண்ட் சௌண்ட் என்ற இதழில் விமர்சகர்களிடம் சிறந்த இயக்குனர்களின் மிகச் சிறந்த திரைப்பட உருவாக்குனர்களுக்கான வாக்கெடுப்பு பட்டியலில் குரு தத்திற்கு 73வது இடம் அளித்தது.
1970ஆம் ஆண்டுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் ராஜேஷ் கன்னா மற்றும் தர்மேந்திரா போன்ற நடிகர்கள் மற்றும் ஷர்மிலா தாகூர், மும்தாஜ், லீனா சந்த்ரவார்க்கர் மற்றும் ஹெலன் போன்ற நடிகைகள் ஆகியோர் நடித்த காதல் திரைப்படங்களும் மற்றும் அதிரடித் திரைப்படங்களும் வெளியாயின. 1970ஆம் ஆண்டுகளின் இடைக் காலத்தில் காதல் மற்றும் சண்டை காட்சிகள் பற்றிய சத்தம் மிகுந்த வன்முறைப் திரைப்படங்கள் வெளியாகின. இந்த வகைத் திரைப்படங்களில் அமிதாப் பச்சன் , மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அனில் கபூர் போன்ற நடிகர்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும் வெற்றி நடிகர்களாகவும் நீடித்தன. இந்தப் போக்கிலான திரைப்படங்கள் 1990ஆம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தன. இந்தக் கால கட்டத்து நடிகைகளில் ஹேம மாலினி, செய பாதுரி பச்சன், பர்வீன் பாபி, சீனத் அமான், டிம்பிள் கபாடியா, சுமிதா பட்டீல், பத்மினி கோலாபுரே, ஜெயபிரதா மற்றும் ரேகா ஆகியோர் அடங்குவர்.
1980ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் இந்தித் திரைப்படம் மீண்டும் குடும்ப மையமான காதல் இசைப் படங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கின. இதன் காரணமாக கயாமத் ஸே கயாமத் தக் (1988), மைனே ப்யார் கியா (1989)) போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் கண்டது.
1990 ஆம் ஆண்டுகளில் ஆமிர் கான், சல்மான் கான், ஷாருக் கான் போன்ற நடிகர்கள் மற்றும் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித், ஜூஹி சாவ்லா மற்றும் காஜோல் போன்ற நடிகைகள் ஆகியோர் கொண்ட ஒரு புதிய தலை முறை நட்சத்திரங்களை உருவாக்கின. இந்தக் கால கட்டத்தில் அதிரடி மற்றும் நகைச்சுவைப் படங்களும் வெற்றி அடைந்தன. கோவிந்தா, அக்ஷய் குமார் போன்ற நடிகர்களும், ரவீனா டாண்டன் மற்றும் கரிஷ்மா கபூர் போன்ற நடிகைகளும் இத்தகைய படங்களில் தோன்றி நடித்தனர். மேலும், இந்தக் காலகட்டத்தில் கலைத் திரைப்படம் மற்றும் தனிப்படங்கள் ஆகியவற்றில் புதிய செயற்பாளர்கள் தோன்றி அவர்களில் சிலர் வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தனர். இதற்கு மிகவும் பொருத்தமான ஒரு உதாரணமாக அனுராக் காஷ்யப் எழுதி ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான சத்யா என்ற திரைப்படத்தைக் கூறலாம். சத்யா வின் விமர்சக மற்றும் வணிக ரீதியான வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் மும்பய் நோய்ர் என்னும் புதுப்பாணி கொண்ட திரைப்படங்கள் உருவாக வழி வகுத்தது. இத்தகைய திரைப்படங்கள் மும்பய் நகரின் சமூக ரீதியான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் நகர்ப்புற படங்களாக விளங்கின. இதன் காரணமாக இந்தப் பத்தாண்டுக் காலத்தின் இறுதியில் இணைத் திரைப்படம் மீண்டும் உயிர்த்தெழுந்தது. இந்தத் திரைப்படங்கள் பெரும்பாலும், நானா படேகர், மனோஜ் பாஜ்பாய், மனிஷா கொய்ராலா, தபு மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் போன்று விமர்சகர்களால் தமது நடிப்பிற்குப் பாராட்டுப் பெறும் நட்சத்திரங்களைக் கொண்டிருந்தன.
2000வது ஆண்டுகளின் துவக்கம் பாலிவுட் உலகெங்கும் பிரசித்தி அடைவதைக் கண்ணுற்றது. இதன் காரணமாக தரம், ஒளிப்பதிவு, புதுமையான கதை அமைப்பு, மற்றும் சிறப்பு அமைப்புகள், அசைவூட்டங்கள் போன்ற தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றங்கள் ஆகியவற்றில் நாட்டின் திரைப்படத் தொழில் புதிய உச்சங்களை அடைந்தது. யஷ்ராஜ் ஃபிலிம்ஸ், தர்மா ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் சில புதிய நவீன திரைப்படங்களைத் தயாரித்தன. வெளிநாட்டுச் சந்தை இந்தியத் திரைப்படங்களுக்குத் தன் வாசலைத் திறந்து வைத்ததும், அதிக அளவிலான பாலிவுட் திரைப்படங்கள் வெளி நாடுகளில் வெளியாயின. மேலும் பெரும் நகரங்களில் பல திரையரங்குகள் லகான் (2001), தேவ்தாஸ் (2002), கோயி... மில் கயா (2003), கல் ஹோ நா ஹோ (2003), வீர்-சாரா (2004), ரங் தே பசந்தி (2006), லகே ரஹோ முன்னா பாய் (2006), கிரிசு (2006), தூம்2 (2006), ஓம் ஷாந்தி ஓம் (2007), சக் தே இந்தியா (2007), ரப் னே பனாதி ஜோடி (2008), மற்றும் கஜினி (2008) போன்ற திரைப்படங்கள் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் மாபெரும் வெற்றியடைய வழி வகுத்தன. இவை மூலமாக ஹிரிதிக் ரோஷன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் ஐஸ்வர்யா ராய், ப்ரீத்தி ஜிந்தா, ரானி முகர்ஜி மற்றும் கரினா கபூர் போன்ற நடிகைகள் அடங்கிய புதிய தலைமுறைக்கான பிரபல நட்சத்திரங்களை உருவாகி முந்தைய பத்தாண்டுகளில் திரைப்பட நட்சத்திரங்கள் பெற்றிருந்த செல்வாக்கினை தக்க வைத்துக் கொண்டனர். வணிக ரீதியிலான படங்களில் லகான் லோகார்னோ சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பார்வையாளர் விருது வென்றது. மேலும் 74வது அகாடமி விருதுகளுக்காக சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது; மறுபுறம், தேவதாஸ் மற்றும் ரங் தே பசந்தி ஆகிய இரண்டும் சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படத்திற்கான பாஃப்தா விருதுக்கு நியமிக்கப்பட்டன. எல்லாத் தரப்பிலும் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திரைப்படங்களைத் தயாரிக்கவே இந்தித் திரையுலகம் விரும்பி வந்துள்ளது.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலரையும் பாலிவுட் திரைப்பட வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் தொழிலில் முன்னேறும் ஆசை கொண்ட பல்லாயிரக்கணக்கான வருங்கால நடிகர் நடிகைகளை இது கவர்ந்திழுக்கிறது. அழகுக் காட்சியாளர்கள், அழகிப் போட்டியாளர்கள், தொலைக் காட்சி நடிகர்கள், நாடக நடிகர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் கூட நட்சத்திரமாகும் நம்பிக்கையில் மும்பய் வந்தடைகிறார்கள். ஹாலிவுட்டைப் போலவே, இங்கும் ஒரு சிலரே வெற்றி அடைகிறார்கள். பல பாலிவுட் படங்கள் வெளி நாட்டில் படமாக்கப்படுவதால், வெளி நாட்டு துணை நடிகர்களும் பலரும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
திரைப்பட தொழிலில் நட்சத்திர அந்தஸ்து என்பது நிலையற்றது, இதற்கு பாலிவுட்டும் விதி விலக்கு அல்ல. நட்சத்திரங்களின் பிரபலம் கூடலாம், அல்லது விரைவில் இறங்கி விடலாம். அப்போதைய பிரபல நட்சத்திரத்தை தமது படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென இயக்குனர்கள் போட்டியிடுகின்றனர்; காரணம் இந்த நட்சத்திரங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதியளிப்பதாக நம்பப்படுகிறது இதனால் பெரும்பான்மையான நட்சத்திரங்கள் தாங்கள் பிரபலமானதும் தங்கள் புகழைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்கிறார்கள். இந்தியரல்லாத நடிகர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் முயன்றிருப்பினும், அவர்களில் வெகு சிலரே பாலிவுட்டில் முத்திரை பதித்துள்ளனர். இதற்குச் சில விதி விலக்குகள் உள்ளன. கிஷ்னா, லகான் மற்றும் தி ரைசிங்: பேலட் ஆஃப் மங்கள் பாண்டே ஆகிய படங்களும் வெளிநாட்டு நடிகர்களைக் கொண்டிருந்தன.
இந்தித் திரைப்படத்துறையில் குடும்ப ஆதிக்கம் மிகுந்தது. படவுலகில் உள்ளவர்களின் உறவினர்கள் திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களைப் பெறுவதிலோ அல்லது திரைப்படக் குழுவில் இடம் பெறுவதிலோ ஏனையவர்களை விட அதிக வாய்ப்பு உடையவர்களாக உள்ளனர். இருப்பினும் தொழிலில் ஒருவருக்கு உள்ள தொடர்புகள் அவரது நீண்ட காலத் தொழில் பயணத்திற்கான உத்திரவாதமாகாது. இங்கு போட்டி என்பது மிகவும் கடுமையானது. வாரிசுகள் வசூலைக் காட்டாவிட்டால், அவர்கள் தொழில் வாழ்க்கை முற்றுப் பெற்று விடும். இத்தகைய தொழில் முறைத் தொடர்புகள் ஏதும் இல்லாவிடினும் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் ஆகிய நட்சத்திரங்கள் மிகப் பெரும் வெற்றி ஈட்டியுள்ளனர்.
பாலிவுட் திரைப்படங்கள் பங்களாதேஷ், நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற தெற்காசியா நாடுகளில் பரவலான அளவில் பார்வையளர்களைப் பெற்றுளளன. பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் இந்தி மொழி யைப் புரிந்து கொண்டு பாலிவுட் படங்களைப் பார்க்கிறார்கள்.
இந்தித் திரைப்படங்கள் திரைப்படங்கள் ஆப்கானித்தான் நாட்டிலும் பிரபலமாக உள்ளன. இது அந்நாடு இந்திய துணைக் கண்டத்திற்கு அருகில் இருப்பதாலும், மற்றும் பொதுவான சில கலாசார அணுக்கங்கள் திரைப்படங்களில் இருப்பதாலும் இவ்வாறு உள்ளது. இந்தியாவும் அதை விட பாகிஸ்தானும், ஆப்கானித்தானுடன் ஒத்த இசைப் பாணி மற்றும் இசைக் கருவிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இறக்குமதி செய்யப்படும் இந்தியப் படங்கள் பொதுவாக அவற்றின் வெளியீட்டின்போது அராபிய மொழியில் துணைத் தலைப்புகள் கொண்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கம் தொடங்கி, பாலிவுட் இஸ்ரேல் நாட்டிலும் முன்னேறி வருகிறது.
1940கள் மற்றும் 1950களில் சில இந்தித் திரைப்படங்கள் சீனக் குடியரசு நாட்டிலும் மிகப் பெறும் வெற்றியை ஈட்டின. சீனாவில் மிகப் பிரபலம் அடைந்த படங்கள் டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (1946), ஆவாரா (1951), தோ பிகா ஜமீன் (1953) ஆகியவையாகும். சீனாவில் ராஜ் கபூர் பிரபலமான திரை நட்சத்திரமாக இருந்தார். "ஆவார ஹூம்" ("நானொரு நாடோடி) என்ற பாடல் அந்த நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.