இறைமறுப்பு அல்லது நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்காத கொள்கையாகும். சமய நம்பிக்கை போன்றே இந்தக் கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. எனினும் சமயம் போன்று கட்டமைப்பு, சடங்குகள், புனித நூல்கள் என்று எதுவும் இதற்கு இல்லை.

தமிழ்ச் சூழலில் கடவுள் நம்பிக்கையின்மை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் கடவுள் நம்பிக்கையின்மை கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் பெரியார் (ஈ. வெ. இராமசாமி) தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இந்தக் கொள்கையை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இந்தக் கொள்கை உடையவர்கள்.

வரையறைகளும், வேறுபாடுகளும்

இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இறைமறுப்பு என்றால் மீவியற்கை கூறுகளை கேள்விக்குட்படுத்தலைக் குறிக்குமா? அல்லது இல்லாத ஒன்றைப் பற்றி நிலைப்பாடு எடுக்கமுடியாது என்பதைப் பற்றிய நிலைப்பாடா, அல்லது தெளிவாக இறை என்பதை நேரடியாக மறுக்கும் கொள்கையா என்று வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.

இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன. இதில் இறைமறுப்பு என்பது தொன்ம, மெய்யியல், மீவியற்கை என எல்லா கடவுள் நிலைப்பாடுகளை மறுதலிக்கக்கூடியது.

வரலாறு

இறை நம்பிக்கைகள் தோன்றிய காலம் தொட்டே, அத்தகைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய, ஐயப்பட்ட, மறுத்த நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. இந்திய மெய்யியலில் பொருளியவாத, இறைமறுப்புக் கொள்கையை உலகாயதம் முன்னிறுத்தியது.[1] பௌத்தம், சமணம் ஆகியவையும் உலகை படைக்கும், பாதுகாக்கும், அழிக்கும் பண்புகளைக் கொண்ட கடவுளை அல்லது கடவுள்களை நிராகரித்தன. மேற்குலக, கிரேக்க மெய்யியலில் Epicureanism, Sophism போன்று மெய்யியல்கள் இறைமறுப்பு கொள்கைகளைக் கொண்டிருந்தன. அறிவொளிக் காலத்தைத் தொடந்த அறிவியலின் வளர்ச்சி பல்வேறு வகைகளில் பொருளியவாத, இறைமறுப்புக் கோட்படுகளுக்கு கூடிய ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கி உள்ளது. 2000 களில் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அப்போது விரிபு பெற்று வந்த சமய தீவரவாதத்தை எதிர்த்து புதிய இறைமறுப்பு எழுந்தது.

மக்கள் தொகையியல்

Thumb
உலகில் இறைமறுப்புக் மற்றும் அறியவியலாமைக் கொள்கைகள் உடையோர்

உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைகள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது. எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது.[2] எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3]

சில குறிப்பிட்ட இறைமறுப்பாளர்கள் சமூகம் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்காலத்தில் மேற்குலகில் சாம் ஃகாரிசு, டானியல் டெனற், ரிச்சார்ட் டாக்கின்ஸ், கிறித்தபர் ஃகிச்சின்சு, நோம் சோம்சுக்கி போன்றோர் இறைமறுப்பு பற்றி விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் குருவிக்கரம்பை வேலு, சத்யராசு, சி. கா. செந்திவேல், சுப. வீரபாண்டியன், சு. அறிவுக்கரசு, வே. ஆனைமுத்து, பழ. நெடுமாறன், செய்யாறு சூ. அருண்குமார் போன்றோர் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இறைமறுப்பு வாதங்கள்

சான்றுகள் இன்மை

இறை உள்ளது என்பதற்கோ அல்லது ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றுக்கோ எந்தவித அனுபவ, பொருள்முறை அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை. இறையை எல்லோரும் வழிபட வேண்டும் என்று கட்டளை இடும் இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. இறை பண்டைய மனிதர்களோடு பேசியதாக, அவர்களுக்கு வெளிப்படுத்தல்கள் செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் "புனித நூல்களில்" ஏராளமான பிழைகள் உள்ளன. எ.கா ரனாக், விவிலியம், போன்ற புனித நூல்கள் மனித அடிமைத்தனத்தைக் கண்டிக்கவில்லை.[சான்று தேவை]

தன்விருப்பு வாதங்கள்

தன்விருப்பு வாதங்கள் என்பன எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறை என்பது மனிதரின் தன்விருப்போடு அல்லது விடுதலை பெற்ற மனிதர் என்ற நிலைப்பாட்டோடு ஓவ்வாதது என்பதை வலியுறுத்தும் வாதங்கள் ஆகும். இறை எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது என்றால் அது அனைத்தையும் கட்டுப்படுத்தவும், முன் தீர்மானிக்கவும் வல்லது. அப்படியானால் மனிதரின் சுதந்திரம், தன்விருப்பு என்பது சாத்தியம் அற்றது என்பது இந்த வாதத்தின் நிலைப்பாடு ஆகும். இறையை வழிபடுவது இத்தகைய ஓர் அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடக தோன்றுகிறது. இத்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே ஆகியவை இந்த வாதத்தின் நீட்சியாகும்.

தீவினைச் சிக்கல்

கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது. பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பதும் ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள். பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இதை கருணை உள்ளம் கொண்டவராகக் கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.

சமய முரண்பாடுகள்

சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள் என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகின்றன.

சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு: எந்த உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இசுலாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது.காட்டுவாசிகள் சிலர் மனிதனையும் உண்கிறார்கள்.[4] இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.

சமயம் அறிவியல் முரண்பாடுகள்

Thumb
இன்று அறிவியலின் தந்தை என்று அறியப்படும் கலீலியோ கலிலி1633 ம் ஆண்டு உரோமன் கத்தோலிக்க திருச்சபையால், சூரியன் இந்த சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதென்று நிறுவியதற்காகக் குற்றவாளியாக காணப்பட்டார். இந்த கருத்தை வைத்துக் கொள்ள, ஆதரிக்க, கற்பிக்க தடை செய்யப்பட்டார். சிறைதண்டனை வழங்கப்பட்டு, அவரது வயது காரணமாக அவர் இறக்கும் வரைக்கும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

சமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடுகள் உள்ளன. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு கிறித்தவ புனித நூலான விவிலியம் உலகம் அல்லது அண்டம் தோற்றம் பெற்று 5,700-10,000 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்றும், மனிதரை இறை படைத்தது என்றும் கூறுகிறது.[5] அறிவியல் அண்டம் 13.8 பில்லியன் [6] ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்றும், மனிதர் நுண்ணியிர்களில் இருந்து பல மில்லியன் ஆண்டுகளாக படிவளர்ச்சி ஊடாக கூர்ப்புப் பெற்று தோன்றினர் என்றும் கூறுகிறது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை

பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள். பெரும்பான்மைச் சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கொள்கை உடையவை.

கிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மை[7] கிறித்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது.[8]

பல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது.[சான்று தேவை]

இந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது.[9] குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.[10] பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது.[11] பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து புனித நூல் மனு பின்வருமாறு கூறுகின்றது.[12] "In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a women must never be independent". தமிழில், "ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் கூடாது."

சமய வன்முறை

சமயம் அல்லது சமயத் தீவரவாதம் பிற சமயத்தாருக்கு எதிராகவும், சமயம் சாராதோருக்கும் எதிராகவும் வன்முறையையும் போரையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், புனித நூல்கள், சடங்குகள் ஆகியவை இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பலியிடுதல், அடக்குமுறை, தீவரவாதம், போர் என பல வழிகளில் சமய வன்முறை வெளிப்படுகிறது. இசுலாமியப் படையெடுப்புகள், சிலுவைப் போர்கள், Inquisition, சூனியக்காரிகள் வேட்டை, முப்பதாண்டுப் போர், தைப்பிங் கிளர்ச்சி, அயோத்தி வன்முறை, 911 தாக்குதல்கள் ஆகியவை உலக வரலாற்றில் இடம்பெற்ற சமய வன்முறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.

சமூகக் கேடுகள்

சமயம் ஏற்படுத்திக் கொடுக்கும் கேள்வியற்ற நம்பிக்கை சட்டகத்தாலும் (dogma, faith), பல சமயக் கொள்கைகளாலும், அதன் பலம் மிக்க நிறுவனங்களாலும் பல்வேறு சமூகக் கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஆபிரிக்காவில் எயிட்சு நோய் படு கொடுமைப்படுத்துகிறது. ஆனால் அங்கே காப்புறை பயன்படுத்தி பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது.[13] பெருந்தொகை கத்தோலிக்கரை கொண்ட ஆப்பிரிக்காவில் இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லாமல் செய்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கத்தோலிக்க சமய குருமார்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காவல் துறை அதைப் பற்றி விசாரிக்க முயன்ற போது, கத்தோலிக்க சமய நிறுவனம் அதை மூடி மறைக்க முயன்று உள்ளது.

பிறப்பால் மனிதரின் தொழிலையும் மதிப்பையும் சமூக செல்வாக்கையும் நிர்மானுக்குமாறு சாதிக் கட்டமைப்பை இந்து சமயம் தோற்றுவித்து, இறுக்கமாக அமுல்படுத்தி பெரும்பான்மை மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியது.

பல்வேறு நாடுகளில் தற்பால் சேர்க்கையை, தற்பால் திருமணத்தை பல்வேறு சமயங்களைச் சார்ந்தோர் எதிர்க்கின்றனர். தற்பால் சேர்க்கையாளர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், மரண தண்டைனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இது சமய கொள்கைகளினால் சமூகத்துக்கும் விளையும் கேடு ஆகும்.

மக்களின் தேவைகளை, உணர்வுகளைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிப்பதையும் அல்லது சமயத்துக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பல ஏமாத்தல்களில் ஈடுபடுகிறார்கள். கடவுள் பல தரப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று பொய்ப் பரப்புரை செய்கிறார்கள்.[14] சாதகம், சோதிடம் முதற்கொண்டு பல்வேறு மூடநம்பிக்கைகளை சமயங்கள் பரப்புகின்றன. அறிவியலுக்கு ஏற்புடையாத உயிரியல், வானியல் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களின் கல்வியைச் சிதைக்கிறது.

திருவிழாக்களில், கோயில்கள், சமய குருமார்களுக்கு என சமூக வளங்கள் வீணடிக்கப்பட்டு முக்கிய கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய தேவைகளுக்கு அவை பயன்படாமல் போகின்றன.

பாசுகலின் பந்தயம் - விவாதம்

பாசுகலின் பந்தயம் (Pascal's Wager) என்ற இறை ஏற்பு வாதம் பின்வருமாறு. இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை, ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது. இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு. எந்த இறைவனை வழிபடுவது? இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்? இறைவனை நம்பி சமயங்களை பின்பற்றுவதால் வன்முறை உருவாகிறதே? வளங்கள் வீணடிக்கப்படுகின்றனவே. எனவே அவை இழப்பல்லவா? இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்

அமைப்புகளும் ஊடகங்களும்

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பெரியாரிய அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் இறைமறுப்புக் கொள்கை உடையன. எனினும் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தற்போது இறைமறுப்பை முன்னெடுப்பதில்லை. கேரளாவில் இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்தனர். இதில் யுக்திவழி இதழின் பங்களிப்பு கணிசமானது. இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை, இறைமறுப்பாளர் நடுவம் ஆகியவை இந்திய அளவில் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுப்பவை.

மேற்குநாடுகளில் புதிய இறைமறுப்பு என அறியப்படும் நூல்கள், அமைப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன. பிரைட்ஸ் இயக்கம் (Brights movement) இளையோர் மத்தியில் செயற்படுகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.