Remove ads
தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு (ஆட்சி. 1320-1413) From Wikipedia, the free encyclopedia
துக்ளக் அரசமரபு (ஆங்கிலம்: Tughlaq dynasty; பாரசீக மொழி: تغلق شاهیان) என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும்.[9] தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.[1][10]
துக்ளக் அரசமரபு (தில்லி சுல்தானகம்) | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1320–1413[1] | |||||||||||||||||||||||
தலைநகரம் | தில்லி | ||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அதிகாரப்பூர்வ மொழி)[8] | ||||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||||||||||||
அரசாங்கம் | சுல்தான் | ||||||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||||||
• 1320–1325 | கியாதல்தீன் துக்ளக் | ||||||||||||||||||||||
• 1325–1351 | முகம்மது பின் துக்ளக் | ||||||||||||||||||||||
• 1351–1388 | பிரூசு ஷா துக்ளக் | ||||||||||||||||||||||
• 1388–1413 | கியாதுத்தீன் துக்ளக் ஷா / அபு பக்கர் ஷா / முகம்மது ஷா / மகுமூது துக்ளக் / நுசுரத் ஷா | ||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||||||||||||||||
• தொடக்கம் | 1320 | ||||||||||||||||||||||
• முடிவு | 1413[1] | ||||||||||||||||||||||
நாணயம் | தாகா | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா நேபாளம் பாக்கித்தான் வங்காளதேசம் |
முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330 மற்றும் 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்த குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது.[5][11]
துக்ளக் அரசமரபானது துருக்கிய-மங்கோலிய[12] அல்லது துருக்கிய[13] பூர்வீகத்தை கொண்டிருந்தது. துக்ளக் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்பது தெளிவாக தெரியவில்லை. குத்லுக் என்ற துருக்கிய சொல்லின் இந்திய வடிவம் துக்ளக் என 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான பெரிஷ்தா குறிப்பிடுகிறார். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.[14][15] இலக்கிய, நாணய மற்றும் கல்வெட்டு சான்றுகள் துக்ளக் என்பது மூதாதையர் கொண்டிருந்த பட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த அரசமரபைத் தோற்றுவித்த காசி மாலிக்கின் தனிப்பட்ட பெயராக துக்ளக் இருந்தது. இணக்கமானதாக இருப்பதற்காக துக்ளக் என்ற சொல்லை ஒட்டு மொத்த அரசமரபையும் குறிக்க வரலாற்றாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த அரசமரபை துக்ளக் அரசமரபு என்று அழைப்பது துல்லியமற்றதாக உள்ளது. ஏனெனில் இந்த அரசமரபின் மன்னர்களில் ஒருவர் கூட துக்ளக் என்ற பெயரை தங்களது பெயருடன் பயன்படுத்தவில்லை. கியாதல்தீனின் மகனான முகம்மது பின் துக்ளக் மட்டும் தன்னை துக்ளக் ஷாவின் மகன் ("பின் துக்ளக்") என்று அழைத்துக் கொண்டார்.[14][16]
இந்த அரசமரபின் பூர்வீகமானத்து நவீன வரலாற்றாளர்கள் மத்தியில் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஏனெனில் ஆரம்ப கால நூல்கள் இந்த அரசமரபு குறித்து வேறுபட்ட தகவல்களை கொடுக்கின்றன. துக்ளக்கின் அரசவை கவிஞரான பத்திரி சச், பக்ரம் குர் என்ற மன்னரின் வழித்தோன்றல் வழியாக இந்த அரசமரபுக்கு ஒரு சாசானிய மரபை கொடுப்பதற்காக முயற்சித்துள்ளார். மரபின் மீதான சுல்தானின் அதிகாரப்பூர்வ நிலையாகவும் இது தோன்றுகிறது.[17] எனினும் இது புகழ்வதற்காக கூறப்பட்டது என்று நிராகரிக்கவும் படலாம்.[18]
வரலாற்றாளர் பேதுரு சாக்சன் துக்ளக் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர் என்றும், அலகு என்ற மங்கோலிய தலைவனின் ஓர் ஆதரவாளராக இவர் இருந்தார் என்று பரிந்துரைக்கிறார்.[19] சூபி துறவி ருக்னே ஆலம் துருக்கியர்களின் "கரவுனா" (நெகுதரி) பழங்குடியினத்தை சேர்ந்தவராக துக்ளக் இருந்தார் என்று கோரியதாக மொராக்கோ நாட்டு பயணியான இப்னு பதூதா குறிப்பிடுகிறார். துருக்கிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்துக்கு இடைப்பட்ட மலைப் பாங்கான பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர். இவர்கள் உண்மையில் மங்கோலியர்கள் ஆவர்.[20]
1320ஆம் ஆண்டுக்கு முன்னர் தில்லி சுல்தானகத்தை கல்சி அரசமரபானது ஆண்டது.[24] அதன் கடைசி ஆட்சியாளரான குஸ்ரோ கான் இந்து மதத்தைச் சேர்ந்த ஓர் அடிமையாவார். அவர் கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டிருந்தார். பிறகு சில காலத்திற்கு தில்லி சுல்தானகத்தின் இராணுவத்திற்கு தளபதியாக சேவையாற்றினார்.[25] சுல்தானகத்தை விரிவாக்குவதற்கும், இந்தியாவின் முஸ்லிம் அல்லாத இராச்சியங்களை சூறையாடுவதற்கும் அலாவுதீன் கல்சிக்காக குஸ்ரோ கானும், மாலிக் கபூரும் ஏராளமான இராணுவப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கினர்.[26][27]
1316இல் உடல் நலக்குறைவால் அலாவுதீன் கல்சி இறந்ததற்குப் பிறகு ஒரு தொடர்ச்சியான அரண்மனை கைதுகள் மற்றும் அரசியல் கொலைகள் தொடர்ந்தன.[28] அலாவுதீன் கல்சியின் மகனான முபாரக் கல்சியை கொன்று, கல்சி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கொலை செய்த ஒரு படுகொலையை தொடங்கி மற்றும் இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மதம் மாறியதற்குப் பிறகு சூன் 1320இல் குஸ்ரோ கான் ஆட்சிக்கு வந்தார்.[24] எனினும் தில்லி சுல்தானகத்தின் முஸ்லிம் உயர்குடியினரின் ஆதரவை இவர் பெற்றிருக்கவில்லை. தில்லி உயர் குடியினர் கல்சிக்களின் கீழ் பஞ்சாபின் ஆளுநராக இருந்த காசி மாலிக்கை தில்லியில் ஒரு ஆட்சி கவிழ்ப்புக்கு தலைமை தாங்குமாறும், குஸ்ரோ கானை பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்காகவும் அழைத்தனர். 1320இல் கோகர் பழங்குடியினத்தவரின் ஓர் இராணுவத்தை பயன்படுத்தி காசி மாலிக் ஒரு தாக்குதலைத் தொடங்கினார். குஸ்ரோ கானை கொன்று ஆட்சிக்கு வந்தார்.[11][29]
ஆட்சியை பெற்றதற்கு பிறகு காசி மாலிக் தன்னுடைய பெயரை கியாசுதீன் துக்ளக் என்று மாற்றிக் கொண்டார். இவ்வாறாக துக்ளக் அரசமரபை பெயரிட்டு தொடங்கினார்[30]. தனக்கு சேவையாற்றிய மற்றும் தான் ஆட்சிக்கு வருவதற்கு உதவி புரிந்த கல்சி அரசமரபின் அனைத்து மாலிக்குகள், அமீர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இவர் சன்மானம் வழங்கினார். தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த குஸ்ரோ கானுக்கு சேவையாற்றியவர்களுக்கு தண்டனை கொடுத்தார்.[30] தில்லிக்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் இவர் ஒரு நகரத்தை கட்டினார். மங்கோலிய தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக தான் கருதிய ஒரு கோட்டையை இவர் கட்டினார். இக்கோட்டையை இவர் துக்ளக்காபாத் என்று அழைத்தார்.[26]
1321இல் பிற்காலத்தில் முகம்மது பின் துக்ளக் என்று அறியப்பட்ட இவரது மூத்த மகன் செளனா கானை தற்போதைய தெலங்காணாவின் பகுதிகளாக இருந்த இந்திய இராச்சியங்களான வாரங்கல் மற்றும் திலங்கை சூறையாடுவதற்காக தியோகிருக்கு அனுப்பினார். இவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.[31] நான்கு மாதங்கள் கழித்து வாரங்கல் மற்றும் திலங் ஆகிய பகுதிகளை சூறையாடுவதற்கு மீண்டும் முயலுமாறு தனது மகனிடம் கேட்பதற்காக பெரிய வலுவூட்டல் இராணுவத்தை கியாசுதீன் துக்ளக் அனுப்பினார்.[32] இந்த முறை செளனா கான் வெற்றியடைந்தார். வாரங்கல் வீழ்ந்தது. அதன் பெயர் சுல்தான்பூர் என்றும் மாற்றப்பட்டது. அனைத்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வம், அரச கருவூலம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பிடிக்கப்பட்ட இராச்சியத்திலிருந்து தில்லி சுல்தானகத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.
வங்காளத்தின் லக்னௌதியில் இருந்த இஸ்லாமிய உயர் குடியினர் இவரது ஆட்சிக் கவிழ்ப்பை தங்களது பகுதிக்கும் நீட்டிக்குமாறு கியாசுதீன் துக்ளக்கிடம் அழைப்பு விடுத்தனர். சம்சுத்தீன் பிரோசு ஷாவை தாக்கியதன் மூலம் கிழக்கே வங்காளத்திற்குள் விரிவாக்குமாறு அழைத்தனர். இதை இவர் பொ. ஊ. 1324-1325இல் நடத்தினார்.[31] தன்னுடைய மகன் உலுக் கானுக்கு கீழ் தில்லியின் கட்டுப்பாட்டை கொடுத்ததற்குப் பிறகு, லக்னௌதிக்கு ஓர் இராணுவத்திற்கு தலைமை தாங்கி இவர் சென்றார். இப்படையெடுப்பில் கியாசுதீன் துக்ளக் வெற்றி அடைந்தார். இவரும், இவரது விருப்பத்திற்குரிய மகனுமான மகுமூது கானும் லக்னௌதியிலிருந்து தில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அடித் தளமின்றி, சரியக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஒரு மர கட்டடத்திற்குள் இவர்களை கொல்வதற்காக கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகனான செளனா கான் திட்டமிட்டார். இதன் மூலம் அதை ஒரு விபத்தாக காட்ட அவர் முயற்சித்தார். தான் திரும்பி வந்ததற்கு பிறகு தில்லியிலிருந்து சூபி போதனையாளர் மற்றும் சௌனா கான் ஆகியோரை கியாசுதீன் துக்ளக் நீக்குவதற்கு முடிவு செய்துள்ளார் என தூதர்கள் மூலம் அவர்கள் அறிந்தனர் என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.[34] கியாசுதீன் துக்ளக்கும், மகுமூது கானும் பொ. ஊ. 1325இல் அந்த மர கட்டடம் வீழ்ந்த போது உள்ளேயே இருந்தனர். அதை இவரது மூத்த மகன் செளனா கண்டு கொண்டிருந்தார்.[35] துக்ளக் அரசமரபின் ஒரு அதிகாரப்பூர்வ வரலாற்றாளர் இவரது இறப்பு குறித்து மற்றொரு கதையை கூறுகிறார். அந்த மரக் கட்டடத்தின் மீது இடி மின்னல் தாக்கியதால் அது சரிந்தது என்று குறிப்பிடுகிறார்.[36] மற்றொரு அதிகாரப்பூர்வ வரலாற்றாளரான அல் பதவுனி அப்தல் காதிர் இப்னு முலுக் ஷா இடி மின்னல் அல்லது கால நிலை குறித்து எந்த வித குறிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் கட்டடம் சரிந்ததற்கு யானைகள் ஓடியதை காரணமாக குறிப்பிடுகிறார். இந்த விபத்தானது முன்னரே திட்டமிடப்பட்டது என்ற வதந்தி குறித்து ஒரு குறிப்பையும் அல் பதவுனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[31]
இப்னு பதூதா, அல் சபாதி, இசாமி[5] மற்றும் வின்சென்ட் இசுமித்[37] போன்ற பல வரலாற்றாளர்களின் கூற்றுப்படி கியாசுதீன் தன் மகன் உள்ள சுனா கானால் பொ. ஊ. 1325இல் கொல்லப்பட்டார். சுனா கான் அரியணைக்கு முகம்மது பின் துக்ளக் என்ற பெயருடன் வந்தார். 26 ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்தார்.[38]
முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின்போது தில்லி சுல்தானகமானது பெரும்பாலான இந்திய துணைக்கண்டம் முழுவதும் தற்காலிகமாக விரிவடைந்தது. புவியியல் ரீதியாக அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது.[39] மால்வா, குசராத்து, மகரத்தா, திலங், கம்பிலா, துர் சமுந்தர், மாபார் (மதுரை), லக்னௌதி, சித்தாகோங், சுனர்கன்வா மற்றும் திர்குத் ஆகிய இடங்களை இவர் தாக்கி சூறையாடினார்.[40] இராச்சியங்கள் மீதான ஒவ்வொரு ஊடுருவலும், தாக்குதலும் புதிதாக சூறையாடப்பட்ட செல்வம் மற்றும் கைது செய்யப்பட்ட மக்களிடமிருந்து பிணையத் தொகையை பெற்றுத் தந்த போதிலும், இவரது தொலைதூரப் படையெடுப்புகள் மிகுந்த செலவை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன. விரிவடைந்திருந்த பேரரசானது கைவசம் வைத்துக் கொள்வதற்கு கடினமானதாக இருந்தது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் கிளர்ச்சிகள் வாடிக்கையாகி போயின.[41]
மக்கள் எந்தவித வரியையும் செலுத்த மறுத்த இடங்களில் இவர் வரியை அதிகப்படுத்தினார். கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடைப்பட்ட இந்தியாவின் செழிப்பான நிலங்களில் நில வரியை சில மாவட்டங்களில் 10 மடங்காகவும், மற்ற மாவட்டங்களில் 20 மடங்காகவும் சுல்தான் அதிகரித்தார்.[42] நில வரிகளுடன் மக்கள் தாங்கள் விளைவித்த பயிர்களில் பாதியையோ அல்லது அதற்கு மேலான அளவையோ பயிர் வரியாக செலுத்த வேண்டி இருந்தது. இந்த கூர்மையான அதிகரிக்கப்பட்ட பயிர் மற்றும் நில வரிகள விவசாயிகளைக் கொண்டிருந்த ஒட்டுமொத்த கிராமங்களும் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு இட்டுச்சென்றது. அவர்கள் வனங்களுக்கு தப்பி ஓடினர். எதையும் பயிரிடவோ அல்லது வேலையே செய்ய இயலாது என்று மறுத்தனர். பெரும்பாலானவர்கள் கொள்ளைக்கார இனங்களாக மாறினர்.[42] பஞ்சங்கள் தொடர்ந்தன. இதற்கு சுல்தான் கசப்புணர்வையே எதிர்வினையாக ஆற்றினார். கைதுகள், சித்திரவதைகள் மற்றும் ஒட்டுமொத்த தண்டனைகளை விரிவாக்கினார். "களைகளை வெட்டுவது" போல் மக்களை கொன்றார்.[41]
தில்லி சுல்தானகத்தின் இரண்டாவது நிர்வாக தலைநகரமாக தற்கால மகாராட்டிரத்தின் தேவகிரி நகரத்தை முகம்மது பின் துக்ளக் தேர்ந்தெடுத்தார். இந்நகரத்தின் பெயரை தௌலதாபாத் என்று மாற்றினார்.[43] தன்னுடைய அரச குடும்பத்தினர் மற்றும் உயர் குடியினர் உள்ளிட்ட தில்லியின் மக்கள் தொகையை தௌலதாபாத்தில் குடியமர வைக்க ஒரு கட்டாய இடம் பெயர்தலுக்கு இவர் ஆணையிட்டார். ஒட்டு மொத்த உயர்குடியினரையும் தௌலதாபாத்திற்கு இடம் மாற்றிய முதல் காரணமானது தன்னுடைய உலகை வெல்லும் குறிக்கோளில் அவர்களை ஈடுபடுத்துவதாகும். பேரரசின் பகட்டாரவார நடைக்கு சமய குறியீடுகளை இவர்கள் பின்பற்றுவார்கள் என இவர்களின் பங்கை பரப்புரையாளர்களாக இவர் கண்டார்.[44] தௌலதாபாத்திற்கு இடம் பெயர மறுத்த உயர்குடியினரை துக்ளக் குரூரமாக தண்டித்தார். தன்னுடைய ஆணையை பின்பற்றி நடக்காததை கிளர்ச்சிக்கு சமமானதாக கருதினார். பெரிஷ்தாவின் கூற்றுப்படி மங்கோலியர்கள் பஞ்சாபுக்கு வந்தபோது தில்லிக்கு உயர் குடியினரை சுல்தான் மீண்டும் திரும்ப அனுப்பினார். எனினும் தௌலதாபாத் ஒரு நிர்வாக மையமாக தொடர்ந்தது.[45] தௌலதாபாத்திற்கு உயர்குடியினரை இடம் மாற்றியதன் ஒரு விளைவானது சுல்தானுக்கு எதிராக உயர்குடியினர் கொண்ட வெறுப்பு ஆகும். இது அவர்களின் மனதில் நீண்ட காலத்திற்கு இருந்தது.[46] ஒரு நிலையான உயர்குடியினரை இவர் உருவாக்க முடிந்தது மற்றொரு விளைவாகும். தில்லிக்கு திரும்பி வராத தௌலதாபாத்தின் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதன் விளைவாக நடந்தது.[39] விஜயநகரத்திற்கு சவால் விடுத்த பாமினி இராச்சியத்தின் வளர்ச்சி இந்நிகழ்வுகளின்றி சாத்தியமாயிருக்காது.[47] இவர்கள் உருது மொழியை பேசிய ஒரு வட இந்திய சமூகம் ஆவர்.[48] தக்காணப் பகுதியில் முகம்மது பின் துக்ளக்கின் செயல்கள் இந்து மற்றும் சைன கோயில்கள் சேதப்படுத்தி அமைக்கப்பட்டதையும் குறித்தது. எடுத்துக்காட்டாக சுயம்பு சிவன் கோயில் மற்றும் ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[49]
முகம்மது பின் துக்ளக்கிற்கு எதிரான கிளர்ச்சிகள் 1327இல் தொடங்கின. இவரது ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்ந்தன. குறிப்பாக 1335க்கு பிறகு சுல்தானகத்தின் புவியியல் விரிவானது காலப்போக்கில் சுருங்கியது. வட இந்தியாவின் கைத்தலைச் சேர்ந்த ஒரு வீரரான சலாலுதீன் அசன் கான் தென்னிந்தியாவில் மதுரை சுல்தானகத்தை நிறுவினார்.[50][51][52] தில்லி சுல்தானகத்திலிருந்து வந்த தாக்குதல்களுக்கு ஒரு நேரடி பதிலாக தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு உருவானது.[53] தில்லி சுல்தானகத்திடம் இருந்து தென் இந்தியாவை விஜயநகரப் பேரரசு விடுதலை செய்தது.[54] 1336இல் முசுனூரி நாயக்கர்களின் கபய நாயக்கர் துக்ளக் இராணுவத்தை தோற்கடித்தார். தில்லி சுல்தானாகத்திடம் இருந்து வாரங்கலை மீண்டும் வென்றார்.[55] 1338இல் இவரது சொந்த உடன்பிறப்பின் மகன் மால்வாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவரை இவர் தாக்கி, பிடித்துக் கொன்றார்.[42] 1339 வாக்கில் உள்ளூர் ஆளுநர்களுக்கு கீழான கிழக்குப் பகுதிகள் மற்றும மன்னர்களால் தலைமை தாங்கப்பட்ட தெற்குப் பகுதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. தில்லி சுல்தானகத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தன. சுருங்கி கொண்டிருந்த தனது இராச்சியத்திற்கு எதிர்வினை ஆற்றி ஆதரவு அளிக்க போதிய வளங்களை முகம்மது பின் துக்ளக் கொண்டிருக்கவில்லை.[56] 1347 வாக்கில் ஓர் ஆப்கானியரான இசுமாயில் முக்கின் கீழ் தக்காணமானது கிளர்ச்சியில் ஈடுபட்டது.[57] இருந்த போதிலும் இவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஆட்சி செய்வதில் இவருக்கு ஆர்வமில்லை. இதன் விளைவாக மற்றொரு ஆப்கானியரான சாபர் கானுக்கு இடம் அளிப்பதற்காக இவர் பதவியில் இருந்து விலகினார். சாபர் கான் பாமினி சுல்தானகத்தின் நிறுவனர் ஆவார்.[58][59][60] இதன் விளைவாக தக்காணப்பகுதியானது ஒரு சுதந்திரமான மற்றும் போட்டியிட்ட இராச்சியமாக உருவானது.[61][62][63][64][65]
முகம்மது பின் துக்ளக் சிந்தனை இன்பத்தில் நாட்டமுடைய ஒருவராவார்.[41] இவர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் மந்திரிகள் மீது ஆழ்ந்த சந்தேகத்தை கொண்டிருந்தார். தன்னுடைய எதிரிகளுக்கு எதிராக மட்டுமீறிய கடுமைத்தன்மையுடன் நடந்து கொண்டார். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான முடிவுகளை இவர் எடுத்தார். எடுத்துக்காட்டாக பேரரசை விரிவாக்குவதற்கான இவரது மிகுந்த செலவினத்தை ஏற்படுத்திய படையெடுப்புகளுக்கு பிறகு மதிப்பு மிக்க உலோக நாணயங்கள் இன்றி இவரது அரச கருவூலமானது காலியானது. வெள்ளி நாணயங்களின் மதிப்புடைய நாணயங்களை அடிப்படை உலோகங்களில் இருந்து அச்சிட இவர் ஆணையிட்டார். தங்களது வீடுகளில் இருந்த அடிப்படை உலோகங்களில் இருந்து போலி நாணயங்களை பொது மக்கள் அச்சிட ஆரம்பித்ததால் இவரது இந்த முடிவு தோல்வியில் முடிந்தது.[37][39]
முகம்மது பின் துக்ளக்கின் அரசவையைச் சேர்ந்த ஒரு வரலாற்றாளரான சியாவுதீன் பரணி மக்களின் வீடுகள் நாணயம் அச்சிடும் இடங்களாக மாறின என்றும், மாகாணங்களின் மக்கள் கோடிகள் மதிப்புடைய போலி தாமிர நாணயங்களை திறை மற்றும் தங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை செலுத்துவதற்கு தயாரித்தனர் என்று எழுதியுள்ளார்.[66] முகம்மது பின் துக்ளக்கின் பொருளாதார சோதனைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு நீடித்த நீண்ட கால பஞ்சமானது இதைத் தொடர்ந்து வந்தது. கிராமப்புற பகுதிகளில் இருந்த ஏராளமான மக்களை கொன்றது.[37] அடிப்படை உலோக நாணய சோதனைக்கு பின் வந்த ஆண்டுகளில் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது கடுமையான பஞ்சங்கள் தில்லி மற்றும் பெரும்பாலான இந்தியா முழுவதும் ஏற்பட்டன என்று வரலாற்றாளர் வால்போர்டு குறிப்பிட்டுள்ளார்.[67][68] வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக பித்தளை மற்றும் தாமிர நாணயங்களை பயன்படுத்த துக்ளக் அறிமுகப்படுத்தினார். போலி நாணயங்கள் அச்சிடுவதை இது எளிதாக்கியது. கருவூலத்திற்கு சேதத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்தது. மேலும் மக்கள் தங்களுடைய தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை புதிய பித்தளை மற்றும் தாமிர நாணயங்களுக்கு பதிலாக வாங்கிக் கொள்ள மறுத்தனர்.[69] இறுதியாக இத்தகைய அடிப்படை உலோக நாணயங்களில் பெரும்பாலானவற்றை சுல்தான் திரும்பப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது, "துக்ளகாபாத்தின் சுவர்களுக்குள் நாணய மலைகள் சேரும் வரை பெரும் செலவீனத்துடன் உண்மையான மற்றும் போலி நாணயங்கள் ஆகிய இரண்டையுமே இவர் திரும்ப பெற வேண்டியிருந்தது".[70]
குராசான், ஈராக் (பாபிலோன் மற்றும் பாரசீகம்) மற்றும் சீனா ஆகிய பகுதிகளை தாக்குவதற்கு முகம்மது பின் துக்ளக் திட்டமிட்டார்.[71] குராசான் தாக்குதலுக்காக தில்லிக்கு அருகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குதிரைப்படையினர் சேர்க்கப்பட்டனர். ஓர் ஆண்டுக்கு அரச கருவூலத்தில் இருந்து அவர்களுக்கான செலவினங்கள் செலுத்தப்பட்டன. குராசானை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஒற்றர்கள் அந்த நிலங்களை எவ்வாறு தாக்குவது மற்றும் அடிபணிய வைப்பது என்ற தகவலுக்காக சன்மானங்களைப் பெற்றனர். எனினும் இரண்டாமாண்டு ஆயத்தங்களின் போது பாரசீக நிலங்கள் மீது தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய துணைக் கண்டத்தில் இவர் சூறையாடிய பொருட்கள் காலியாகின. பெரிய ராணுவத்திற்கு ஆதரவளிக்க இயலாதவையாக மாகாணங்கள் ஏழ்மை நிலையில் இருந்தன. சம்பளமின்றி இவருக்கு சேவையாற்ற வீரர்கள் மறுத்தனர். சீனா மீதான தாக்குதலுக்கு முகம்மது பின் துக்ளக் 1,00,000 வீரர்களை இமயமலையை தாண்டி இவளது ராணுவத்தின் ஒரு பகுதியாக அனுப்பினார்.[42] எனினும் இமயமலை வழியான கணவாய்களை இவரது எதிரிகள் மூடினர். பின்வாங்கும் வழியையும் அடைத்தனர். கங்கிராவின் இரண்டாம் பிருத்வி சந்த் முகம்மது பின் துக்ளக்கின் ராணுவத்தை தோற்கடித்தார். மலைப்பாங்கான பகுதியில் இவரது ராணுவத்தால் சண்டையிட இயலவில்லை. 1333ஆம் ஆண்டு இவரது கிட்டத்தட்ட 1,00,000 போர் வீரர்களும் இறந்தனர். பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.[72] உயர்ந்த மலை காலநிலை மற்றும் பின்வாங்கும் வழி இல்லாதது ஆகியவற்றால் இமயமலையில் இவரது ராணுவமானது அழிக்கப்பட்டது.[71] கெட்ட செய்திகளுடன் திரும்பி வந்த சில வீரர்களும் சுல்தானின் ஆணையின் படி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[73]
இவரது ஆட்சியின் போது இவரது கொள்கைகளால் அரசின் வருவாய் வீழ்ச்சி அடைந்தது. அரசின் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக முகம்மது பின் துக்ளக் தன்னுடைய எப்போதும் சுருங்கிக் கொண்டிருந்த பேரரசின் மீது வரிகளை கூர்மையாக அதிகப்படுத்தினார். போர் காலங்களை தவிர்த்து தன்னுடைய ஊழியர்களுக்கு தன்னுடைய கருவூலத்தில் இருந்து இவர் சம்பளம் செலுத்தவில்லை. தன்னுடைய ராணுவம், நீதிபதிகள், அரசவை ஆலோசகர்கள், ஆளுநர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தன்னிடம் சேவையாற்றிய பிறருக்கு இந்த கிராமங்கள் மீது கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுத்ததன் மூலம் முகம்மது பின் துக்ளக் அவர்களுக்கு சம்பளம் வழங்கினார் என இப்னு பதூதா தன்னுடைய நினைவு குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை தனது கருவூலத்தில் சேர்த்தார்.[74][75] வரி செலுத்த தவறியவர்கள் வேட்டையாடி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[42] சிந்து (தற்போது பாக்கித்தானில்) மற்றும் குசராத்தில் (தற்போது இந்தியாவில்) கிளர்ச்சி செய்தோர் மற்றும் வரி செலுத்த மறுத்த மக்களை விரட்டி, தண்டனை கொடுக்க முயற்சித்த போது மார்ச் 1351இல்[5] முகம்மது பின் துக்ளக் இறந்தார்.[56]
முகம்மது பின் துக்ளக்கின் தில்லி சுல்தானகத்தின் புவியியல் ரீதியான கட்டுப்பாட்டு பகுதியானது நருமதை ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி மட்டுமே என சுருங்கி விட்டது.[5]
முகம்மது பின் துக்ளக் இறந்ததற்குப் பிறகு அவரது உறவினரான மகுமூது இப்னு முகம்மது ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ஆட்சி செய்தார். இதற்கு பிறகு முகம்மது பின் துக்ளக்கின் 45 வயது உறவினரான பிரூசு ஷா துக்ளக் அவருக்கு பதிலாக அரியணைக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலம் 37 ஆண்டுகளுக்கு நீடித்தது.[80] நைலா என்றழைக்கப்பட்ட இளவரசி மீது இவரது தந்தை சிபா ரசப் மோகம் கொண்டார். தொடக்கத்தில் இவரை மணந்து கொள்ள அப்பெண் மறுப்பு தெரிவித்தார். அப்பெண்ணின் தந்தையும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு சுல்தான் முகம்மது பின் துக்ளக்கும், சிபா ரசப்பும் ஓர் இராணுவத்தை அனுப்பினர். ஓர் ஆண்டுக்கான வரிகளை முன்னரே செலுத்தாவிட்டால் அப்பெண்ணின் குடும்பம் மற்றும் அபோகர் இன மக்களின் அனைத்து உடைமைகளையும் பறிமுதல் செய்வோம் என்று அச்சுறுத்தினர். அப்பெண்ணின் இராச்சியமானது பஞ்சங்களால் பாதிக்கப்பட்டு வந்தது. பிணையத் தொகையை அவர்களால் செலுத்த இயலவில்லை. தன் குடும்பம் மற்றும் மக்களுக்கு எதிராக பிணையத் தொகை கோரப்பட்டதை அறிந்த அந்த இளவரசி, தன் மக்களை இராணுவம் எதுவும் செய்யாவிட்டால் தன்னை தியாகம் செய்து கொள்ள முடிவெடுத்தார். சிபா ரசப்பும், சுல்தானும் இதை ஏற்றுக் கொண்டனர். சிபா ரசப்பும், நைலாவும் திருமணம் செய்து கொண்டனர். பிரோசு ஷா துக்ளக் அவர்களது முதல் மகன் ஆவார்.[81]
முகம்மது பின் துக்ளக், மற்றும் பிரோசு ஷா துக்ளக்கின் முதல் ஆறு ஆண்டுகளுக்கு சேவையாற்றிய அரசவை வரலாற்றாளரான சியாவுதீன் பரணி முகம்மதுவிடம் சேவையாற்றிய அனைவரையும் பதவி நீக்கம் செய்து பிரோசு ஷா மரண தண்டனைக்கு உட்படுத்தியதாக குறிப்பிடுகிறார். தில்லிக்கு இசுலாமிய ஆட்சி வந்ததிலிருந்து இறையாண்மையுள்ள மிதவாத ஆட்சியாளர் பிரூசு ஷா தான் என்று தனது இரண்டாவது நூலில் பரணி குறிப்பிடுகிறார். தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கிராமங்களிலிருந்து வசூலித்த வரி மூலம் போர் வீரர்கள் வாழ்வை அனுபவித்தனர். முந்தைய அரசியல் அமைப்புகளில் இருந்ததைப் போல் அடிக்கடி போருக்கு செல்ல வேண்டிய தேவை அவர்களிடம் இல்லை.[5] அபிப் போன்ற பிற அரசவை வரலாற்றாளர்கள் பிரோசு ஷா துக்ளக்குக்கு எதிராக நடத்தப்பட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சதித் திட்டங்கள் மற்றும் அரசியல் கொலை முயற்சிகளை பதிவிட்டுள்ளார். இவரது உறவினர் மற்றும் முகம்மது பின் துக்ளக்கின் மகள் ஆகியோர் இத்தகைய திட்டங்களை இவருக்கு எதிராக நடத்தியவர்களில் சிலர் ஆவர்.[82]
பழைய இராச்சியத்தின் எல்லையை மீண்டும் பெறும் முயற்சியாக வங்காளத்துடன் ஒரு போரை 1359இல் 11 மாதங்களுக்கு பிரோசு ஷா துக்ளக் நடத்தினார். எனினும், வங்காளம் வீழவில்லை. தில்லி சுல்தானகத்தின் அதிகாரத்திற்கு வெளியிலேயே அது தொடர்ந்தது. பிரூசு ஷா துக்ளக் இராணுவ ரீதியில் ஓரளவுக்கு பலவீனமானவராக இருந்தார். இதற்கு முக்கிய காரணம் இராணுவத்துக்கு தலைமை தாங்குவதில் இவருக்கு இருந்த திறமையின்மை ஆகும்.[80]
பிரூசு ஷா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது ஆட்சியானது முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியை விட மிதமான தன்மை உடையதாக இருந்ததென இவரது அரசவை வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[83] பிரூசு ஷா ஆட்சிக்கு வந்த போது சுல்தானகமானது ஒரு வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், கைவிடப்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டணங்கள், மற்றும் தொடர்ச்சியான பஞ்சங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. யமுனை-காகர் மற்றும் யமுனை-சட்லெஜ் ஆறுகளை இணைத்த ஒரு நீர்ப் பாசன கால்வாய், பாலங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு திட்டங்களை இவர் கொண்டு வந்தார்.[5] இந்த நீர்ப்பாசன கால்வாய்கள் 19ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தன.[83] 1388இல் பெரோஸ் இறந்ததற்கு பிறகு துக்ளக் அரசமரபின் சக்தியானது தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. திறமையான தலைவர்கள் யாரும் அரியணைக்கு வரவில்லை. பிரோசு ஷா துக்ளக்கின் இறப்பானது இராச்சியத்தில் அரசின்மை மற்றும் சிதைவை உருவாக்கியது. இவரது இறப்புக்கு முந்தைய ஆண்டுகளிலேயே இவரது வழித்தோன்றல்கள் மத்தியிலான உட்புறச் சண்டையானது ஏற்கனவே வெடித்திருந்தது.[5]
முதுமையடைந்து கொண்டிருந்த பிரோசு ஷா துக்ளக்கின் இறப்பிற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 1384ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரானது வெடித்தது. அதே நேரத்தில் இரண்டாம் உள்நாட்டுப் போரானது பிரோசு ஷாவின் இறப்பிற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 1394ஆம் ஆண்டு தொடங்கியது.[84] இசுலாமிய வரலாற்றாளர்களான சிரிந்தி மற்றும் பிகாமத்கனி ஆகியோர் இக்காலகட்டம் குறித்த விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். இந்த உள்நாட்டுப் போர்கள் முதன்மையாக சன்னி இசுலாமிய உயர்குடியினரின் வேறுபட்ட பிரிவினருக்கு இடையே திம்மிக்களுக்கு வரி விதிக்கவும், குடியான விவசாயிகளிடம் இருந்து வருவாயைப் பெறவும் இறையாண்மை மற்றும் நிலத்துக்கான தேடலாக நடைபெற்றன.[85]
பிரூசு ஷா துக்ளக்கின் விருப்பத்திற்குரிய பேரன் 1376இல் இறந்தான். இதற்குப் பிறகு பிரூசு ஷா ஷரியாவை அதற்கு முன்னர் இருந்திராத அளவில் வேண்டிப் பின்பற்றினார். இதற்கு இவரது வசீர்கள் உதவி புரிந்தனர். 1384ஆம் ஆண்டு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்நேரத்தில் பிரூசு ஷா துக்ளக்கை அதிகாரத்தில் 1351இல் அமர்த்திய முசுலிம் உயர்குடியினர் அனைவரும் இறந்திருந்தனர். அவர்களது வழித்தோன்றல்கள் செல்வத்தைப் பெற்றிருந்தனர். முசுலிம் அல்லாத விவசாயிகளிடம் இருந்து வரிகளைப் பெற உரிமைகளைக் கொண்டிருந்தனர். தில்லியின் ஒரு வசீராக இருந்த இரண்டாம் கான் சகான் பிரூசு ஷா துக்ளக்கின் விருப்பத்துக்குரிய வசீரான முதலாம் கான் சகானின் மகனாவார். 1368இல் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவர் அதிகாரத்திற்கு உயர்ந்திருந்தார்.[86] பிரூசு ஷா துக்ளக்கின் மகனான முகம்மது ஷாவுடன் இந்த இளம் வசீர் வெளிப்படையான பகையில் இருந்தார். மேற்கொண்ட அமீர்களை நியமித்து அவர்களுக்குச் அனுகூலங்கள் வழங்கிய போது வசீரின் சக்தியானது அதிகரித்தது.[87] தன்னுடைய கொள்ளுப் பேரனை தனது வாரிசாக நியமிக்க சுல்தானை இவர் இணங்க வைத்தார். பிறகு, இரண்டாம் கான் சகான் பிரூசு ஷா துக்ளக்கை அவரது ஒரே எஞ்சியிருந்த மகனைப் பதவி நீக்கம் செய்ய இணங்க வைக்க முயற்சித்தார். தன்னுடைய மகனை நீக்குவதற்குப் பதிலாக சுல்தான் வாசீரை நீக்கினார். இதைத் தொடர்ந்து நடந்த பிரச்சினைகளானது முதலாம் உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்தது. வாசீர் கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து தில்லியிலும், அதைச் சுற்றிலும் ஒரு கிளர்ச்சியும், உள்நாட்டுப் போரும் நடந்தது. 1387ஆம் ஆண்டு முகம்மது ஷாவும் கூட வெளியேற்றப்பட்டார். 1388ஆம் ஆண்டு சுல்தான் பிரூசு ஷா துக்ளக்கும் இறந்தார். துக்ளக் கான் அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் சண்டையில் இறந்தார். 1389ஆம் ஆண்டு அபு பக்கர் ஷா அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் ஓர் ஆண்டுக்குள்ளாக இவரும் கூட இறந்து விட்டார். உள்நாட்டுப் போரானது சுல்தான் முகம்மது ஷாவின் கீழ் தொடர்ந்து. 1390ஆம் ஆண்டு வாக்கில் இரண்டாம் கான் சகானுடன் கூட்டணி வைத்திருந்த அல்லது கூட்டணி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட அனைத்து முசுலிம் உயர்குடியினரும் பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு இது இட்டுச் சென்றது.[87]
உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த போது பெரும்பான்மையாக இந்து மக்களைக் கொண்டிருந்த வட இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் இருந்த இந்துக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சுல்தானின் அதிகாரிகளுக்கு ஜிஸ்யா மற்றும் கராஜ் வரிகளைச் செலுத்துவதை நிறுத்தினர். இந்தியாவின் தெற்கு தோவாப் பகுதியில் (தற்போது இட்டாவா) இந்துக்கள் 1390ஆம் ஆண்டு இந்தக் கிளர்ச்சியில் இணைந்தனர். சுல்தான் முகம்மது ஷா தில்லிக்கு அருகில் மற்றும் தெற்கு தோவாப்பில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இந்துக்களை 1392ஆம் ஆண்டு தாக்கினார். விவசாயிகள் படு கொலை செய்யப்பட்டனர். இட்டாவாவானது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.[87][88] எனினும், அந்நேரத்தில் பெரும்பாலான இந்தியாவானது சிறு முசுலிம் சுல்தானகங்கள் மற்றும் இந்து இராச்சியங்களாக மாறியிருந்தது. 1394ஆம் ஆண்டு இலாகூர் பகுதி மற்றும் வடமேற்கு தெற்கு ஆசியாவில் (தற்போது பாக்கித்தான்) இருந்த இந்துக்கள் தங்களது சுயாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தினர். அவர்களைத் தாக்குவதற்காக முகம்மது ஷா பெரும் இராணுவத்தை ஒருங்கிணைத்தார். இதற்குத் தலைமைத் தளபதியாக தன்னுடைய மகன் உமாயூன் கானை நியமித்தார். சனவரி 1394ஆம் ஆண்டு தில்லியில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சுல்தான் முகம்மது ஷா இறந்தார். இவரது மகன் உமாயூன் கான் அதிகாரத்தைப் பெற்றார். ஆனால், இரண்டு மாதங்களுக்குள்ளாகவே கொலை செய்யப்பட்டார். உமாயூன் கானின் சகோதரரான நசீரல்தீன் மகுமூது ஷா அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் முசுலிம் உயர்குடியினர், வசீர்கள் மற்றும் அமீர்களிடமிருந்து சிறிதளவு ஆதரவையே இவர் பெற்றிருந்தார்.[87] ஏற்கனவே சுருங்கிக் கொண்டிருந்த சுல்தானகத்தின் கிட்டத்தட்ட அனைத்து கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் மீதான தலைமைத்துவத்தை சுல்தானகமானது இழந்தது. தில்லிக்குள் அக்டோபர் 1394 வாக்கில் முசுலிம் உயர்குடியினரின் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இது இரண்டாம் உள்நாட்டுப் போரைத் தொடங்கி வைத்தது.[87]
பிரோசாபாத்தில் நசீரல்தீன் நுசுரத் ஷாவை ஓர் இரண்டாம் சுல்தானாக தர்தர் கான் நியமித்தார். பிந்தைய 1394ஆம் ஆண்டு முதல் சுல்தானின் சக்தி மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பிரோசாபாத் அமைந்துள்ளது. தெற்காசியாவில் உரிமைக்குரிய ஆட்சியாளர்களாக இரண்டு சுல்தான்களும் உரிமை கோரினர். இருவரிடமும் ஒரு சிறிய இராணுவம் இருந்தது. முசுலிம் உயர்குடியினரின் ஒரு குழுவினரால் இரு இராணுவங்களும் கட்டுப்படுத்தப்பட்டன.[87] ஒவ்வொரு மாதமும் யுத்தங்கள் நடைபெற்றன. ஏமாற்று வேலைகளும், அமீர்கள் இரு பக்கம் கட்சி தாவுவதும் பொதுவானதாகப் போனது. 1398ஆம் ஆண்டு வரை இரு சுல்தான் பிரிவுகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போரானது தொடர்ந்து. தைமூரின் படையெடுப்பு வரை இது தொடர்ந்தது.[88]
இந்த அரசமரபின் மிகவும் கீழ் நிலையானது 1398ஆம் ஆண்டு வந்தது. துருக்கிய-மங்கோலியத்[89][90] துரந்தரரான தைமூர் தில்லி சுல்தானகத்தின் நான்கு இராணுவங்களைத் தோற்கடித்தார். இந்தப் படையெடுப்பின் போது தில்லிக்குள் தைமூர் நுழைந்த போது சுல்தான் மகுமூது கான் தப்பித்து ஓடினார். எட்டு நாட்களுக்குத் தில்லி சூறையாடப்பட்டது. அதன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,00,000க்கும் மேற்பட்ட கைதிகளும் கூட கொல்லப்பட்டனர்.[91]
தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றியது தைமூரின் பெரும் வெற்றிகளில் ஒன்றாகும். ஏனெனில், அந்நேரத்தில் உலகின் மிகச் செல்வச் செழிப்பான நகரங்களில் ஒன்றாக தில்லி திகழ்ந்தது. தைமூரின் இராணுவத்திடம் தில்லி வீழ்ந்த பிறகு துருக்கிய-மங்கோலியர்களுக்கு எதிரான தில்லி குடிமக்களின் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. இதற்குப் பதிலடியாக நகர மதில்களுக்குள் குருதி தோய்ந்த படுகொலை நடத்தப்பட்டது. தில்லிக்குள் குடிமக்கள் கிளர்ந்தெழுந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அதன் குடிமக்களின் அழுகிக் கொண்டிருந்த உடல்களின் நாற்றமானது நகரம் முழுவதும் வீசியது என்று கூறப்பட்டது. குடிமக்களின் தலைகளை வைத்துக் கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அவர்களது உடல்கள் பறவைகளுக்கு உணவாக தைமூரின் படை வீரர்களால் விடப்பட்டன. தில்லி மீதான தைமூரின் படையெடுப்பு மற்றும் அழிவானது இந்தியாவை இன்றும் ஆட்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தொடர்ந்தது. தில்லியானது அது அடைந்த பெரும் இழப்பிலிருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு மீள முடியாமல் இருந்தது.[92][93]:269–274
தான் திரும்பிச் செல்வதற்கு முன்னால் தைமூர் கிசிர் கானைத் தில்லியில் உள்ள தனது வைசிராயாக நியமித்தார் என்று நம்பப்படுகிறது. கிசிர் கான் துக்ளக் அரசமரபைத் தொடர்ந்து பதவிக்கு வந்த சையிது அரசமரபின் எதிர் கால நிறுவனராகக் கருதப்படுகிறார். தொடக்கத்தில் கிசிர் கான் தன்னுடைய கட்டுப்பாட்டை முல்தான், தீபல்பூர் மற்றும் சிந்துவின் பகுதிகள் மீது மட்டுமே நிறுவ முடிந்தது. சீக்கிரமே இவர் துக்ளக் அரசமரபுக்கு எதிரான தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கினார். 6 சூன் 1414 அன்று தில்லிக்குள் வெற்றியாளராக நுழைந்தார்.[94]
மொராக்கோவைச் சேர்ந்த முசுலிம் பயணியான இப்னு பதூதா தன்னுடைய பயணக் குறிப்புகளில் அரசமரபு குறித்து விரிவான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். ஆப்கானித்தானின் மலைகள் வழியாக 1334ஆம் ஆண்டு இந்தியாவை இப்னு பதூதா வந்தடைந்தார். அந்த ஆண்டில் தான் துக்ளக் அரசமரபின் புவியியல் விரிவானது அதன் உச்சத்தை அடைந்ததிருந்தது.[75] தன்னுடைய வழியில் சுல்தான் முகம்மது துக்ளக் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பினார் என்றும், பதிலாக தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு அதை விடப் பெருமளவிலான மதிப்புடைய பரிசுப் பொருட்களைக் கொடுத்தார் என்பதையும் இப்னு பதூதா அறிந்தார். இப்னு பதூதா முகம்மது பின் துக்ளக்கைச் சந்தித்தார். அம்புகள், ஒட்டகங்கள், 30 குதிரைகள், அடிமைகள் மற்றும் பிற பொருட்களை பரிசுப் பொருட்களாகச் சுல்தானுக்கு அளித்தார். பதிலுக்கு முகம்மது பின் துக்ளக் இப்னு பதூதாவிற்கு வரவேற்கும் பரிசுப் பொருட்களாக 2,000 வெள்ளி தினார்கள், வீட்டு உபயோகப் பொருட்களுடன் கூடிய வீடு, ஆண்டுக்கு 5,000 வெள்ளி தினார்களைச் சம்பளமாக உடைய ஒரு நீதிபதி பதவி ஆகியவற்றை அளித்தார். தில்லிக்கு அருகில் இருந்த இரண்டரை இந்து கிராமங்களில் இருந்து வரி வசூலிக்கும் உரிமையை வைத்துக் கொள்வதற்கும் இப்னு பதூதாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[74]
அரசமரபு குறித்த தன்னுடைய குறிப்புகளில் குவத் அல்-இசுலாம் மசூதி மற்றும் குதுப் மினார் ஆகியவற்றை உள்ளடக்கிய குதுப் மினார் வளாகத்தின் வரலாற்றை இப்னு பதூதா பதிவிட்டுள்ளார்.[95] 1335ஆம் ஆண்டு தொடங்கிய 7 ஆண்டு நீடித்த பஞ்சத்தைப் பற்றியும் இவர் குறிப்பிட்டுள்ளார். தில்லிக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்களை இப்பஞ்சமானது கொன்றது. இந்நேரத்தில் சுல்தான் கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் ஈடுபட்டிருந்தார்.[74] சுல்தான் முசுலிம் அல்லாதோர் மற்றும் முசுலிம்கள் ஆகிய இருவருக்கு எதிராகவும் கடுமையாக நடந்து கொண்டார்.
முசுலிம் அல்லாத இராச்சியங்களின் மீதான ஒவ்வொரு இராணுவப் படையெடுப்பு மற்றும் ஊடுருவலானது போரில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் அடிமைகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை உறுதி செய்தது. மேலும், சுல்தான்கள் அயல்நாட்டு மற்றும் இந்திய அடிமைகள் ஆகிய இருவரையுமே வணிகம் செய்யும் ஒரு சந்தைக்குப் (அல்-நக்காசு[98]) புரவலர்களாகத் திகழ்ந்தனர். துக்ளக் அரசமரபின் அனைத்து சுல்தான்களின் ஆட்சியின் கீழும் இந்தச் சந்தையானது செழித்திருந்தது.[99] குறிப்பாக, கியாசுதீன் துக்ளக், முகம்மது துக்ளக் மற்றும் பிரோசு துக்ளக் ஆகியோரின் ஆட்சியின் கீழ் செழிப்படைந்திருந்தது.[100]
இப்னு பதூதாவின் குறிப்புகளானவை இரு அடிமைப் பெண்களுடன் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையானார் என்று பதிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண் கிரேக்கத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொரு பெண் தில்லி சுல்தானாகத்தில் இவர் தங்கியிருந்த போது விலைக்கு வாங்கப்பட்ட பெண்ணாகவும் இருந்தனர். மேற்கொண்டு இந்தியாவில் ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் புரிந்து இவர் தந்தையான ஒரு மகளும் இருந்தார்.[101] முகம்மது துக்ளக் தன்னுடைய தூதுவர்களுடன் அடிமைச் சிறுவர்கள் மற்றும் அடிமைச் சிறுமிகள் ஆகிய இருவரையுமே பரிசுகளாக சீனா போன்ற பிற நாடுகளுக்கு அனுப்பினார் என்று இப்னு பதூதா பதிவிட்டுள்ளார்.[102]
அரசமரபானது முசுலிம் உயர்குடியினரின் ஏராளமான கிளர்ச்சிகளை எதிர் கொண்டது. குறிப்பாக, முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது இவை நடைபெற்றன. பிந்தைய முடியாட்சியாளர்களான பிரோசு ஷா துக்ளக் போன்றோரின் ஆட்சியின் போதும் கூட இவை நடைபெற்றன.[80][103]
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முசுலிம் உயர்குடியினரை இக்தாக்களின் (விவசாய மாகாணங்கள், اقطاع) நயிப்புகளாக (نائب) ஒப்பந்தத்தின் கீழ் நியமித்ததன் மூலம் தங்களது விரிவடைந்து கொண்டிருந்த பேரரசை நிர்வகிக்கத் துக்ளக்குகள் முயற்சி மேற்கொண்டனர்.[80] முசுலிம் அல்லாத விவசாயிகள் மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரத்தில் இருந்து கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என ஒப்பந்தமானது குறிப்பிட்டது. குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒரு முறை சுல்தானின் கருவூலத்திற்கு ஒரு நிலையான பணத்தைத் திறையாகவும், வரிகளையும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டது.[80][105] விவசாயிகளிடமிருந்து வசூலிக்கும் வரியில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையைத் தங்களது சம்பளமாக வைத்துக் கொள்ள நயிப்புகளுக்கு ஒப்பந்தமானது அனுமதியளித்தது. ஆனால், எந்தவொரு முசுலிம் அல்லாதோரிடம் வசூலிக்கப்பட்ட மிகையான வரி, பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகள் ஆகியவை நயிப் மற்றும் சுல்தானிடையே 20:80 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என ஓப்பந்தம் குறிப்பிட்டது. பிரூசு ஷா இதை 80:20 என்ற விகிதமாக மாற்றினார். வரி பெற போர் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்துக் கொள்ளும் உரிமை நயிப்புகளுக்கு இருந்தது. சுல்தானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்குப் பிறகு முசுலிம் அமீர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் துணை ஒப்பந்தங்களை நயிப்புகள் போட்டுக் கொள்வர். திம்மிக்களிடமிருந்து (முசுலிம் அல்லாதோர்) உற்பத்திப் பொருட்கள் மற்றும் உடைமைகளைக் கட்டாயப்படுத்தி வசூலிக்க அல்லது பறிமுதல் செய்ய குறிப்பிடத்தக்க கிராமங்களில் உரிமைகளைக் கொண்டிருக்க இந்த ஒவ்வொரு துணை ஒப்பந்தமும் வழி செய்தது.[105]
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட வரி மற்றும் அவற்றை முசுலிம் உயர்குடியினரிடையே பகிர்ந்து கொள்ளும் இந்த அமைப்பானது கட்டுப்பாடற்ற ஊழல், கைதுகள், மரண தண்டனைகள் மற்றும் கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது. எடுத்துக்காட்டாக, பிரோசு ஷா துக்ளக்கின் ஆட்சியின் போது சம்சல்தீன் தம்கானி என்ற பெயருடைய ஒரு முசுலிம் உயர்குடியினர் குசராத்தின் இக்தாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். 1377ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் போது ஆண்டு தோறும் பெருமளவிலான பணத்தை திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்தார்.[80] பிறகு, தன்னுடைய முசுலிம் அமீர்களின் குழுவைக் கொண்டு கட்டாயப்படுத்தி இந்தத் தொகையைப் பெறும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அதில் தோல்வியடைந்தார். அவர் தான் வசூலித்த பணத்தைக் கொண்டிருந்த போதும், தில்லிக்கு எதையும் அவர் செலுத்தவில்லை.[105] சம்சல்தீன் தம்கானி மற்றும் குசராத்தின் முசுலிம் உயர்குடியினர் பிறகு கிளர்ச்சியையும், தில்லி சுல்தானகத்தில் இருந்து பிரிந்ததாகவும் அறிவித்தனர். எனினும், குசராத்தின் போர் வீரர்கள் மற்றும் விவசாயிகள் முசுலிம் உயர்குடியினருக்காகச் சண்டையிட மறுத்தனர். சம்சல்தீன் தம்கானி கொல்லப்பட்டார்.[80] முகம்மது ஷா துக்ளக்கின் ஆட்சியின் போது இதே போன்ற கிளர்ச்சிகள் மிகவும் பொதுவானவையாக இருந்தன. இவரது சொந்த உடன்பிறப்பின் மகன் மால்வாவில் 1338ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டார். முகம்மது ஷா துக்ளக் மால்வாவைத் தாக்கினார். தன் உடன் பிறப்பின் மகனைப் பிடித்தார். பொது மக்கள் மத்தியில் அவரைக் கொன்றார்.[42]
தக்காணம், வங்காளம், சிந்து மற்றும் முல்தான் ஆகிய மாகாணங்கள் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது சுதந்திரமடைந்தவையாக உருவாயின. தைமூரின் படையெடுப்பானது பேரரசை மேலும் பலவீனமாக்கியது. ஏராளமான மாகாணத் தலைவர்கள் சுதந்திரமானவர்களாக உருவாக அனுமதியளித்தது. குசராத்து, மால்வா மற்றும் ஜான்பூர் சுல்தானகங்கள் உருவாக்கப்படுவதற்குக் காரணமானது. இராசபுதன அரசுகளும் அஜ்மீரின் ஆளுநரை வெளியேற்றின. இராசபுதனம் மீதான தங்களது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தின. துக்ளக் அரசமரபானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. இறுதியாக, முல்தானின் தங்களது முன்னாள் ஆளுநரான கிசிர் கானால் தூக்கி எறியப்பட்டது. தில்லி சுல்தானகத்தின் புதிய ஆட்சியாளர்களாகச் சையிது அரசமரபினரின் எழுச்சியில் இது முடிவடைந்தது.[106]
துக்ளக் அரசமரபின் சுல்தான்கள் குறிப்பாக பிரோசு ஷா துக்ளக் ஏராளமான கட்டுமானத் திட்டங்களுக்குப் புரவலராகத் திகழ்ந்தார். இந்தோ-இசுலாமியக் கட்டடக் கலையின் முன்னேற்றத்திற்கு இவர் காரணமாகக் கூறப்படுகிறார்.[107]
பட்டம் | பெயர்[சான்று தேவை] | ஆட்சிக் காலம் |
---|---|---|
சுல்தான் கியாதுதீன் துக்ளக் ஷா سلطان غیاث الدین تغلق شاہ |
காசி மாலிக் غازی ملک |
1320–1325 |
சுல்தான் முகமம்து அடில் பின் துக்ளக் ஷா سلطان محمد عادل بن تغلق شاہ உலுக் கான் الغ خان ஜுனா கான் جنا خان |
மாலிக் பக்ருதீன் ஜௌனா ملک فخر الدین |
1325–1351 |
சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக் سلطان فیروز شاہ تغلق |
மாலிக் பெரோஸ் இப்னு மாலிக் ரஜப் ملک فیروز ابن ملک رجب |
1351–1388 |
சுல்தான் கியாதுதீன் துக்ளக் ஷா سلطان غیاث الدین تغلق شاہ |
துக்ளக் கான் இப்னு பதே கான் இப்னு பெரோஸ் ஷா تغلق خان ابن فتح خان ابن فیروز شاہ |
1388–1389 |
சுல்தான் அபு பக்கர் ஷா سلطان ابو بکر شاہ |
அபு பக்கர் கான் இப்னு சாபர் கான் இப்னு பதே கான் இப்னு பெரோஸ் ஷா ابو بکر خان ابن ظفر خان ابن فتح خان ابن فیروز شاہ |
1389–1390 |
சுல்தான் முகமம்து ஷா سلطان محمد شاہ |
முகம்மது ஷா இப்னு பெரோஸ் ஷா محمد شاہ ابن فیروز شاہ |
1390–1394 |
சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா سلطان علاءالدین سکندر شاہ |
உமாயூன் கான் ھمایوں خان |
1394 |
சுல்தான் நசீருதீன் மகுமூது ஷா துக்ளக் سلطان ناصر الدین محمود شاہ تغلق |
மகுமூது ஷா இப்னு முகமம்து ஷா محمود شاہ ابن محمد شاہ |
1394–1412/1413 |
சுல்தான் நசீருதீன் நுசுரத் ஷா துக்ளக் سلطان ناصر الدین نصرت شاہ تغلق |
நுசுரத் கான் இப்னு பதே கான் இப்னு பெரோஸ் ஷா نصرت خان ابن فتح خان ابن فیروز شاہ |
1394–1398 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.