Remove ads
தில்லி சுல்தானகத்தின் துருக்கிய-ஆப்கானிய அரசமரபு (1290-1320) From Wikipedia, the free encyclopedia
கல்சி அல்லது கல்சி அரசமரபு[b] என்பது ஒரு துருக்கிய-ஆப்கானிய அரசமரபாகும். இது தில்லி சுல்தானகத்தை 1290 மற்றும் 1320க்கு இடையில் மூன்று தசாப்தங்களுக்கு ஆண்டது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்த தில்லி சுல்தானகத்தை ஆண்ட இரண்டாவது அரசமரபு இதுவாகும்.[7][8][9] இதை ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சி நிறுவினார்.[10]
கல்சி خلجي | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1290–1320 | |||||||||||||
தலைநகரம் | தில்லி கிலோக்ரி (தில்லியின் புறநகர்ப் பகுதி)[4] | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | இந்தவி (இணைப்பு மொழி)[5] பாரசீகம் (அலுவல் மொழி)[6] | ||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | சுல்தான் | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
• 1290–1296 | ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி | ||||||||||||
• 1296–1316 | அலாவுதீன் கில்சி | ||||||||||||
• 1316 | சிகாபுதீன் ஒமர் | ||||||||||||
• 1316–1320 | குத்புதீன் முபாரக் ஷா | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 13 சூன் 1290 | ||||||||||||
• முடிவு | 1 மே 1320 | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் |
கல்சி அரசமரபானது துருக்கிய-ஆப்கானியப் பூர்வீகத்தைக் கொண்டதாகும்.[13][14][15] இதன் முன்னோர்களான கலஜ் மக்கள் என்பவர்கள் தொடக்கத்தில் ஒரு துருக்கிய மக்களாக இருந்தனர் என்றும், நடு ஆசியாவிலிருந்து ஊணர்கள் மற்றும் ஹெப்தலைட்டுகளுடன் அவர்கள் இடம் பெயர்ந்தனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.[16] இவர்கள் பொ. ஊ. 660லேயே நவீன கால ஆப்கானித்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். காபூல் பகுதியை பௌத்த துர்க் ஷாஹிகளாக இவர்கள் ஆட்சி செய்தனர்.[17] ஆர். எஸ். சௌரசியா என்பவரின் கூற்றுப் படி, கல்சிகள் மெதுவாக ஆப்கானியப் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பித்தனர். தில்லி சுல்தானகத்தின் துருக்கிய உயர்குடியினர் இவர்களை ஆப்கானியர்களாகவே நடத்தினர். கல்சி புரட்சிக்குப் பிறகு தில்லியின் அரியணைக்கு ஜலாலுதீன் உயர்வதை தில்லி சுல்தானகத்தின் துருக்கிய உயர்குடியினர் இதனால் எதிர்க்கக் கூட செய்தனர் என்ற நிலை இருந்தது.[18][19][20]
இசுலாமின் புதிய கேம்பிரிச் வரலாற்றின் படி, பதின்மூன்றாம் நூற்றாண்டில் கல்சிக்கள் துருக்கியர்களிடம் இருந்து ஒரு தனித்துவமான பிரிந்த மக்களாகக் கருதப்பட்டனர். "கல்சி புரட்சி" என்று அழைக்கப்படுவதானது துருக்கிய ஆளும் வர்க்கத்தினரிடமிருந்து துருக்கியர் அல்லாத ஆளும் வர்க்கத்தினரிடம் அதிகாரம் கைமாறியதைக் குறித்தது.[21] ஆந்த்ரே விங் என்ற வரலாற்றாளர் கல்சிக்கள் துருக்கிய மயமாக்கப்பட்ட குழு எனவும், குசானர்கள், ஹெப்தலைட்டுகள், சகர்கள் போன்ற தொடக்க கால இந்தோ-ஐரோப்பிய நாடோடிகளின் எஞ்சியவர்கள் என்றும், இவர்கள் பின்னர் ஆப்கானியர்களுடன் இணைந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும், இவர்கள் அந்நேரத்தில் துருக்கியர்கள் அல்லது மங்கோலிய மக்களாகக் கருதப்படவில்லை. சம கால வரலாற்றாளர்கள் கல்சிக்களைத் துருக்கியர்களிடமிருந்து தெளிவாக வேறுபடுத்திக் குறிப்பிடுகின்றனர்.[22][23] கலஜ் மக்கள் எனப்படுபவர்கள் தோயெர்பெர் என்ற வரலாற்றாளாரின் கூற்றுப் படி, அநேகமாக சோக்தியானா மக்கள் ஆவர். இவர்கள் துருக்கியமயமாக்கப்பட்டனர்.[24] இந்த கலஜ் பின்னர் ஆப்கானியமயமாக்கப்பட்டனர். இவர்களே கில்சாய்/கில்சி பஸ்தூன் மக்களின் முன்னோர்களாக நம்பப்படுகின்றனர்.[25]
சி. ஈ. போஸ்வோர்த் என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, ஆப்கானித்தானிலுள்ள பஸ்தூன்களில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய கில்சாய் மக்கள் பஸ்தூன்களுடன் கலஜ் மக்கள் இணைந்ததன் நவீன கால விளைவு ஆவர்.[26] 10 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சில ஆதாரங்கள் கலஜ் மக்களைத் துருக்கியர்கள் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் பிற ஆதாரங்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை.[27] வரலாற்றாளர் மினோர்சுகி, கலஜ் பழங்குடியினத்தின் தொடக்க கால வரலாறானது தெளிவற்றதாகவும், கலஜ் என்ற பெயரின் அடையாளமானது இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடுகிறார்.[28] மகுமூது அல்-கசுகாரி (11ஆம் நூற்றாண்டு) கலஜ் மக்களை ஒகுஸ் துருக்கியப் பழங்குடியினங்களுக்குள் ஓர் இனமாக உள்ளடக்கவில்லை. ஆனால் இவர்களை ஒகுஸ் துருக்மேன் (துருக்மேன் என்ற சொல்லின் பொருளானது "துருக்கியர்கள் போன்றவர்கள்" என்பதாகும்) பழங்குடியினங்களின் மத்தியில் குறிப்பிடுகிறார். கலஜ் மக்கள் துருக்கியப் பழங்குடியினங்களின் உண்மையான பூர்வீகத்தை உடையவர்கள் இல்லை என கசுகாரி எண்ணினார். ஆனால் அவர்களை துருக்கியர்களுடன் தொடர்புபடுத்தி எழுதியுள்ளார். எனவே, மொழி மற்றும் உடையில் இவர்கள் "துருக்கியர்கள் போலவே" தோன்றினர்.[27][29] முகம்மது இப்னு நஜீப் பக்ரானின் ஜகான்-நாமா வெளிப்படையாக இவர்களைத் துருக்கியர்கள் என்று குறிப்பிடுகிறது.[30] எனினும், அவர்களது தோல் நிறமானது அப்படியே கருமையாக இருந்தது எனவும், இவர்களது மொழியானது ஒரு தனித்துவமான பேச்சு வழக்கு மொழியாக மாற்றுவதற்கு போதுமான மாற்றங்களை அடைந்தது என்றும் குறிப்பிடுகிறார். எனினும், ஜகான் நாமா "துருக்கியர்களின் பழங்குடியினமாக" மொழி நகர்வின் வழியாக இவர்கள் மாறினர் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் கலஜ் மொழியைப் பேசினர். இது வரலாற்றாளர் வி. மினோர்சுகியால் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.[30]
கல்சிக்கள் மம்லூக்கிய அரசமரபுக்குத் திறை செலுத்தியவர்கள் ஆவர். தில்லி சுல்தான் கியாசுதீன் பல்பானிடம் முசுலிம் உயர்குடியினரின் ஒரு சிறிய பகுதியினராக இவர்கள் சேவையாற்றினர். கடைசி முக்கியமான துருக்கிய ஆட்சியாளரான பல்பான் தன்னுடைய துணை துருக்கிய அதிகாரிகள் மீதான அதிகாரத்தைப் பேணும் தன்னுடைய போராட்டத்தில் 40 பேர் குழுவின் அதிகாரத்தை அழித்தார். எனினும், இது மறைமுகமாக உயர்குடியினராக இருந்த துருக்கிய மக்களைச் சேதப்படுத்தியது. துருக்கியரல்லாதோரின் அதிகாரத்தை இவர்கள் எதிர்த்து வந்தனர். இது கல்சி பிரிவினரிடம் இவர்களை பலவீனமானவர்களாக ஆக்கியது. ஒரு தொடர்ச்சியான அரசியல் கொலைகளின் வழியாக கல்சி பிரிவினர் அதிகாரத்தைப் பெற்றனர்.[31] ஒருவர் பின் ஒருவராக மம்லூக்கிய அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். துருக்கிய மம்லூக் அரசமரபின் கடைசி ஆட்சியாளரான 17 வயதே நிரம்பிய முயிசுதீன் கைகபத் கைலு-கேரி அரண்மனையில் கொல்லப்பட்டார். ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சியால் நடத்தப்பட்ட கல்சி புரட்சி என்று அறியப்படும் ஆட்சிக் கவிழ்ப்பின் போது இவர் கொல்லப்பட்டார்.[32]
தான் அதிகாரத்துக்கு வந்த போது சுமார் 70 ஆண்டுகள் நிரம்பியவராக இருந்தார் ஜலாலுதீன் ஃபைருஸ் கல்சி மிதமான குணமுடையவராகவும், அடக்கமானவராகவும், பொது மக்களுக்கு இரக்க குணமுடைய முடியரசராகவும் அறியப்பட்டார்.[33][34]
துருக்கிய உயர்குடினரின் எதிர்ப்பைச் சமாளித்து தில்லி அரியணைக்கு சனவரி 1290இல் ஜலாலுதீன் அமர்ந்தார். ஜலாலுதீன் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவரது ஆறு ஆண்டு கால ஆட்சியின் (1290-96) போது பல்பானின் உடன்பிறப்பின் மகன் ஜலாலுதீன் அதிகாரத்தைப் பெற்றது மற்றும் அதைத் தொடர்ந்து மம்லூக்கியரிடம் சேவையாற்றிய உயர்குடியினர் மற்றும் தளபதிகளை ஒதுக்கியது ஆகிய காரணத்திற்காக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.[35] ஜலாலுதீன் இந்தக் கிளர்ச்சியை ஒடுக்கினார். சில தளபதிகளுக்கு மரண தண்டனை கொடுத்தார். பிறகு ரந்தம்பூருக்கு எதிராகத் தோல்வியடைந்த ஒரு போர்ப் பயணத்தை மேற்கொண்டார். தில்லியின் புறநகர்ப் பகுதியில் ஓர் ஆப்கானியப் பகுதியாக இருந்த கிலோகிரியை தன்னுடைய நடைமுறை ரீதியிலான தலைநகராக ஜலாலுதீன் பயன்படுத்தினார்.[4]
இந்தியா மீதான ஏராளமான மங்கோலியத் தாக்குதல்களையும் கூட இவர் முறியடித்தார். தன்னுடைய உடன்பிறப்பின் மகனான ஜுனா கானின் உதவியுடன் நடு இந்தியாவில் சிந்து ஆற்றின் கரையில் ஒரு மங்கோலியப் படையை அழிப்பதிலும் வெற்றி அடைந்தார்.[36]
இவரது உடன் பிறப்பின் மகனின் ஒரு திட்டத்தின் படி பஞ்சாபின் சமானாவின் முகம்மது சலீமால் ஜலாலுதீன் அரசியல் கொலை செய்யப்பட்டார்.[37][38]
அலாவுதீன் கில்சி ஜலாலுதீனின் அண்ணன் மகனும், மருமகனும் ஆவார். தக்காணத் தீபகற்பம் மற்றும் தியோகிரி ஆகிய பகுதிகள் மீது இவர் ஊடுருவல்களை நடத்தினார். மகாராட்டிராவின் தலைநகராக தியோகிரி இருந்தது. அங்குள்ள பொக்கிஷங்களை இவர் சூறையாடினார்.[32][39] 1296இல் தில்லிக்குத் திரும்பி வந்தார். ஜலாலுதீனைக் கொன்றார். சுல்தானாக அதிகாரத்தைப் பெற்றார்.[40] ஜாபர் கான் (போர்த் துறை அமைச்சர்),[41] நுசுரத் கான் (தில்லியின் வசீர்),[42][43] அய்னல் முல்க் முல்தானி,[44] மாலிக் கபூர், மாலிக் துக்ளக்[45] மற்றும் மாலிக் நாயக் (குதிரைகளின் எசமானர்) போன்ற தன்னுடைய கூட்டாளிகளை இவர் பதவிகளுக்கு நியமித்தார்.[46]
இவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஜரன்-மஞ்சூர் யுத்தத்தில் (1298) ஒரு முக்கியமான மங்கோலியப் படையெடுப்பை இவர் தோற்கடித்தார். அலாவுதீனின் அதிகாரம் மற்றும் மதிப்பை இந்த வெற்றியானது நிலைப்படுத்தியது. தில்லியின் அரியணையில் தனது நிலையை இவ்வாறாக இவர் நிலைப்படுத்திக் கொண்டார்.
குசராத்தின் வணிகத் துறைமுகங்களுக்கான ஒரு பாதையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அய்னல் முல்க் முல்தானி மால்வாவின் பரமார இராச்சியத்தை வெல்வதற்காக அனுப்பப்பட்டார். ஒரு பெரும் இராசபுத்திர இராணுவத்துடன் அந்த இராச்சியத்தின் ராய் தற்காப்பில் ஈடுபட்டார். ஆனால் அவர் முல்தானியால் தோற்கடிக்கப்பட்டார். முல்தானி அம்மாகாணத்தின் ஆளுநரானார்.[47]
பிறகு 1299இல் குசராத்தையே வெல்வதற்காக நுசுரத் கான் அனுப்பப்பட்டார். அங்கு அதன் சோலாங்கி மன்னனை இவர் தோற்கடித்தார்.[48] நுசுரத் கான் குசராத்தின் முதன்மையான நகரங்களையும், கோயில்களையும் சூறையாடினார். இதில் புகழ்பெற்ற சோமநாதர் கோயிலும் அடங்கும். இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டிருந்தது. இங்கு தான் நுசுரத் கான் மாலிக் கபூரைப் பிடித்தார். மாலிக் கபூர் பிற்காலத்தில் ஓர் இராணுவத் தளபதியானார்.[49] அலாவுதீன் தில்லி சுல்தானகத்தை தென்னிந்தியவிற்குள் விரிவாக்கும் செயலைத் தொடர்ந்தார். மாலிக் கபூர் மற்றும் குஸ்ரவ் கான் போன்ற தளபதிகளின் உதவியுடன் இவர் இதைச் செய்தார். பெருமளவிலான போர்க் கொள்ளைப் பொருட்களைத் (அன்வதன்) தோற்கடிக்கப்பட்டவர்களிடம் இருந்து இவர் பெற்றார்.[50] இவரது தளபதிகள் வெல்லப்பட்ட இராச்சியங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற பொருட்களையும் சேகரித்தனர். கனிமா (போரின் போது கிடைக்கப் பெற்ற பொருட்கள்) மீதான கும்சை (ஐந்தில் ஒரு பங்கு) சுல்தானின் கருவூலத்திற்குச் செலுத்தினர். கல்சி ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இது உதவியது.[51]
அலாவுதீன் கல்சி 20 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தார். இராசபுதனத்தை வென்றார். ஜெய்சால்மர் (1299), இரந்தம்போர் (1301), சித்தோர்கர் (1303), மால்வா (1305) ஆகிய அரசுகளைத் தாக்கிக் கைப்பற்றினார். இவர் குசராத்தையும் கூட வென்றார். தெற்கே தன்னுடைய ஊடுருவல்களின் போது செல்வச் செழிப்பு மிக்க அரசான தேவகிரியைச் சூறையாடினார்.[54] இரண்டு மங்கோலிய ஊடுருவல்களையும் கூட தாக்குப் பிடித்தார்.[55] போர்களுக்குப் பிறகு தாக்கப்பட்ட இராச்சியங்களுக்கு எதிரான தன்னுடைய குரூரத் தன்மைக்காகவும் கூட அலாவுதீன் அறியப்படுகிறார். வரலாற்றாளர்கள் இவரை ஒரு கொடுங்கோலன் என்று குறிப்பிடுகின்றனர். இவரது அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக சந்தேகப்பட்ட எவரையும் அலாவுதீன் கல்சி கொன்றார். அவர்களுடைய குடும்பத்திலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கூடக் கொன்றார். 1298 தில்லிக்கு அருகில் 15,000 முதல் 30,000 வரையிலான மக்கள் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காரணம் அவர்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்ற அச்சமே ஆகும். அவர்கள் அப்போது தான் இசுலாமிற்கு மதம் மாறியிருந்தனர்.[56] 1299-1300இல் கிளர்ச்சி செய்வார்கள் என்ற சந்தேகத்திற்குப் பிறகு இவர் தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறப்பின் மகன்களையும் கூட கொன்றார்.[39]
1308இல் அலாவுதீனின் துணைத் தளபதியான மாலிக் கபூர் வாரங்கலைக் கைப்பற்றினார். கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கே இருந்த போசளப் பேரரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார். தமிழ்நாட்டின் மதுரை மீது ஊடுருவல் நடத்தினார்.[54] தென்னிந்தியாவின் தலைநகரங்கள் மற்றும் கோயில்களில் இருந்த பொக்கிஷங்களை இவர் பிறகு கொள்ளையடித்தார். மனித வரலாற்றில் அறியப்பட்ட மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூரும் வாரங்கல் கொள்ளைப் பொருட்களில் உள்ளடங்கியிருந்தது.[51] 1311ஆம் ஆண்டு மாலிக் க பூர் தில்லிக்குத் திரும்பி வந்தார். இவர் தக்காணத் தீபகற்பத்தில் இருந்து பெற்ற போர்க் கொள்ளைப் பொருட்களுடன் வந்தார். அவற்றை அலாவுதீன் கல்சியிடம் சமர்ப்பித்தார். தில்லி சுல்தானகத்தின் இராணுவத் தளபதியாக ஆவதற்கு முன்னர் மாலிக் கபூர் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்து இசுலாம் மதத்திற்கு மாறியிருந்தார். இந்த வெற்றிகள் மாலிக் கபூரை அலாவுதீன் கல்சியின் ஒரு விருப்பத்திற்குரிய தளபதியாக ஆக்கியது.[36]
1311 தில்லி சுல்தானகத்தில் இருந்த மங்கோலியர்களைப் படுகொலை செய்யுமாறு அலாவுதீன் ஆணையிட்டார். 15,000 முதல் 30,000 வரையிலான மங்கோலிய குடியமர்ந்தவர்கள் அப்போது தான் இசுலாமிற்கு மதம் மாறியிருந்தனர். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். தனக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டுகின்றனர் என அவர்கள் மீது கல்சி சந்தேகம் அடைந்ததால் இவர்கள் கொல்லப்பட்டனர்.[56][57]
சனவரி 1316இல் அலாவுதீன் கல்சி இறந்தார். இதற்குப் பிறகு சுல்தானகமானது குழப்பம், ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் தொடர்ச்சியான அரசியல் கொலைகளைக் கண்டது.[32] மாலிக் கபூர் சுல்தானானார். ஆனால் அமீர்களிடமிருந்து ஆதரவை இவர் கொண்டிருக்கவில்லை. சில மாதங்களுக்குள்ளாகவே கொல்லப்பட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாலிக் கபூரின் இறப்பைத் தொடர்ந்து பிற மூன்று சுல்தான்கள் வன்முறை வழியில் அதிகாரத்தைப் பெற்றனர். ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டனர். முதலில் அமீர்கள் 6 வயது சிறுவனான சிகாபுதீன் ஒமரைச் சுல்தானாகவும், அவரது சகோதரன் குத்புதீன் முபாரக் ஷாவை அரசப் பிரதிநிதியாகவும் நியமித்தனர். ஷா தன்னுடைய தம்பியைக் கொன்று விட்டு தானே சுல்தான் ஆனார். அமீர்கள் மற்றும் மாலிக் இனத்தவரின் விசுவாசத்தைப் பெறுவதற்காக ஷா, காசி மாலிக்கிற்கு பஞ்சாபின் இராணுவத் தளபதியாகப் பதவியைக் கொடுக்க முன் வந்தார். பிறருக்கு பல்வேறு பதவிகள் மற்றும் இறப்புக்கு இடையிலான தேர்ந்தெடுப்புக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய சொந்தப் பெயரில் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு ஆட்சி செய்ததற்குப் பிறகு ஷா 1320இல் தன்னுடைய தளபதிகளில் ஒருவரான குஸ்ரவ் கானால் கொல்லப்பட்டார். பஞ்சாபில் இன்னும் இராணுவத் தளபதியாக தொடர்ந்த காசி மாலிக்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குத் தலைமை தாங்க அமீர்கள் இணங்க வைத்தனர். தில்லியை நோக்கிக் காசி மாலிக்கின் படைகள் அணி வகுத்தன. குஸ்ரவ் கானைப் பிடித்தன. சிரச் சேதம் செய்தன. சுல்தானான பிறகு காசி மாலிக் தன்னுடைய பெயரை கியாத் அல்-தின் துக்ளக் என மாற்றிக் கொண்டார். துக்ளக் அரசமரபின் முதல் ஆட்சியாளர் ஆனார்.[39]
தன்னுடைய கருவூலத்தை வலுப்படுத்துவதற்காக அலாவுதீன் கல்சி வரிக் கொள்கைகளை மாற்றினார். தன்னுடைய வளர்ந்து வந்த இராணுவத்திற்குப் பணம் செலுத்துதல் மற்றும் விரிவாக்கத்திற்கான தனது போர்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டல் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக இதைச் செய்தார்.[58] இவர் விவசாய வரியை 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். இதைத் தானியமாகவோ மாற்றும் விவசாய உற்பத்தியாகவோ (அல்லது பணமாகவோ)[59] செலுத்த முடியும். உள்ளூர்த் தலைவர்களால் சேகரிக்கப்பட்ட வரிகளைச் செலுத்துதல் மற்றும் அதன் விற்பனை முகவர் பங்கு ஆகியவற்றை நீக்கினார். தன்னுடைய அதிகாரிகள் மத்தியில் சமூக ரீதியான ஒன்றிணைவைத் தடை செய்தார். தனக்கு எதிராக எந்த ஓர் எதிர்ப்பும் உருவாவதைத் தடுப்பதற்காக உயர்குடியினக் குடும்பங்களுக்கு இடையேயான திருமண உறவைத் தடை செய்தார். தன் இராச்சியத்தில் அதிகாரிகள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் சம்பளத்தை இவர் குறைத்தார்.[58]
இராணுவத்தைப் பொறுத்த வரையில் கல்சி அரசமரபின் காலத்தின் போது சுல்தானகத்தின் நிலையான இராணுவமானது 3,00,000 - 4,00,000 குதிரைப் படையினர் மற்றும் 2,500 - 3,000 வரையிலான போர் யானைகளைக் கொண்டிருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[60][61][62] இதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த துக்ளக் வம்சத்தின் இராணுவத்தை விட இது சிறியதாகும். துக்ளக் வம்சமானது 5,00,000 குதிரைப் படையினரைக் கொண்ட ஒரு நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்ததென பதிவிடப்பட்டுள்ளது.[61]
சுல்தானகத்திலிருந்த முசுலிம் அல்லாதவர் மீது நான்கு வரிகளை அலாவுதீன் கல்சி அமல்படுத்தினார் - ஜிஸ்யா, கரஜ் (நில வரி), கரி (வீட்டு வரி), மற்றும் சரி (மேய்ச்சல் நில வரி).[63][64] தில்லியை அடிப்படையாகக் கொண்ட வருவாய் அதிகாரிகள் உள்ளூர் முசுலிம் ஜாகிர்தார்கள், குத்கள், முக்கதிம்கள், சௌதாரிகள், மற்றும் சமீன்தார்களின் உதவியுடன் எந்த ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் அனைத்து உற்பத்தியிலும் பாதியை அதிகாரத்தைப் பயன்படுத்தி விளைந்து கொண்டிருக்கும் பயிர் மீதான வரியாகத் தன்னுடைய சுல்தானாகத் தானியக் கிடங்குகளை நிரப்புவதற்காகப் பெற வேண்டும் என்றும் கூட ஆணையிட்டார்.[65] கிராமப் புற வரி வசூலிப்புக்குக் காரணமான இடைத் தரகர்களை அடித்ததன் மூலம் இவரது அதிகாரிகள் வரி வசூலை அமல்படுத்தினர். மேலும், குல்கே மற்றும் ரோதெர்மண்டு ஆகியோரின் கூற்றுப் படி, தனது "அரசவையில் இருந்த புத்திசாலி மனிதர்களிடம்" "ஒரு கிளர்ச்சிக்குக் காரணமாக அமையும் செல்வம் மற்றும் எந்தவொரு வடிவத்திலான மிகையான உடைமைகளை எடுத்து அவர்களை வறிய நிலைக்குத் தள்ளுவதன் மூலம் ஒரு சாமானிய மனிதனைப் பலவீனமாக்கும் சட்ட திட்டங்களை உருவாக்கக்" கூறினார் என்று குறிப்பிடுகின்றனர்.[63] அதே நேரத்தில், தன்னுடைய அரசவையில் உள்ளோர் மற்றும் அதிகாரிகளிடம் இருந்த அனைத்து நில உடைமைகளையும் இவர் பறிமுதல் செய்தார்.[63] முசுலிம் ஜாகிர்தார்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வருவாய் வாசூலிப்புகளும் கூட இரத்து செய்யப்பட்டன. வருவாயானது மைய நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டது.[66] குல்கே மற்றும் ரோதெர்மண்டு ஆகியோரின் கூற்றுப் படி, இவ்வாறாக, "ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்வுக்கு உழைக்க நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது, எனவே ஒருவர் கூட கிளர்ச்சி குறித்து நினைக்கக் கூட இல்லை."[63]
அலாவுதீன் கல்சியின் வரி வசூலிக்கும் முறைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிகள் விவசாய உற்பத்தியைக் குறைத்தன. சுல்தானகமானது பெருமளவிலான விலைவாசி உயர்வைக் கண்டது. முசுலிம் அதிகாரிகள் மற்றும் போர் வீரர்களுக்கு குறைத்த சம்பளங்களைச் சரி செய்யும் பொருட்டு அலாவுதீன் அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்கள், பொருட்கள், கால்நடைகள் மற்றும் அடிமைகள் மீது விலைக் கட்டுப்பாடுகளை தனது இராச்சியத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும், எங்கு, எப்படி மற்றும் யாரால் இவை விற்பனை செய்யப்படலாம் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தார். சகானா-இ-மண்டி என்று அழைக்கப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டன.[66][67][68] அதிகாரப்பூர்வ விலைகளில் வாங்கவும், மீண்டும் விற்கவும் இத்தகைய மண்டிகளில் வணிகர்களுக்கு தனிப்பட்ட அனுமதிகளும், ஏக போக உரிமையும் வழங்கப்பட்டது. இந்த வணிகர்களைத் தவிர்த்து வேறு யாரும் விவசாயிகளிடம் இருந்து வாங்கவோ அல்லது நகரங்களில் விற்கவோ முடியாது. அலாவுதீன் முன்கியான்களின் (ஒற்றர்கள், இரகசியக் காவலர்கள்) விரிவான அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர்கள் மண்டியை மேற்பார்வையிடவும், அதிகாரப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட விலைகளில் இருந்து வேறுபட்டு எந்த ஒரு விலையிலும் யாரேனும் வாங்கவோ அல்லது எதையும் விற்கவோ முயற்சி செய்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய அதிகாரம் இவர்களுக்கு இருந்தது.[68][69] இத்தகைய மண்டி விதிகளை மீறியவர்களாகக் கண்டறியப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.[36] பறிமுதல் செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் தானியங்கள் வடிவில் வசூலிக்கப்பட்ட வரிகளானவை சுல்தானகத்தின் தானியக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டன.[70] காலப் போக்கில் விவசாயிகள் வேறு வருமானம் தேடி விவசாயத்தைக் கைவிட்டனர். சொற்ப அளவைக் கொண்டு பிழைக்கும் விவசாயத்திற்கு மாறினர். வட இந்தியாவில் பொதுவான உணவு விநியோகமானது மோசமடைந்தது. பற்றாக்குறை அதிகரித்தது. தில்லி சுல்தானகமானது அதிகரித்து வந்த மோசமான மற்றும் விரிவடைந்த காலங்களை உடைய பஞ்சங்களைக் கண்டது.[36][71] யாரும் தனி நபராக உணவைச் சேமித்து வைக்கக் கூடாது என்று சுல்தான் தடை செய்தார். பற்றாக்குறை அதிகரித்ததால் அலாவுதீன் பொது விநியோக அமைப்பை அறிமுகப்படுத்தினார். எனினும், ஒரு குடும்பத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட பங்கீட்டளவை அடிப்படையாகக் கொண்ட உணவு பொது விநியோக அமைப்பிலிருந்து உயர் குடியினரும், இவரது இராணுவமும் விலக்கப்பட்டனர்.[71] இத்தகைய பஞ்சங்களின் போது கல்சியின் சுல்தானகத் தானியக் கிடங்குகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகளை உடைய ஒட்டு மொத்த மண்டி அமைப்பானது இவரது இராணுவம், அரசு அதிகாரிகள் மற்றும் தில்லியின் நகர்ப்புற மக்கள் ஆகியோருக்குப் போதுமான உணவை உறுதி செய்தன.[58][72] கல்சியால் தொடங்கி வைக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள் விலைவாசியைக் குறைத்தன. ஆனால், குறைவான விலைகளில் இருந்து சாமானிய மக்கள் எந்த ஓர் அனுகூலத்தையும் பெற முடியாது என்ற நிலைக்குச் சம்பளங்களையும் கூட குறைத்தன. அலாவுதீனின் இறப்பிற்குப் பிறகு சீக்கிரமே விலைக் கட்டுப்பாட்டு அமைப்பானது வீழ்ச்சியுற்றது. ஒரு சில ஆண்டுகளிலேயே பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சம்பளமானது இரு மடங்கிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகரித்தது.[73]
கல்சி அரசமரபின் காலத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வரி அமைப்பானது இந்திய வரி அமைப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது ஆட்சிக் காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கு நீடித்து இருந்த ஓர் அமைப்பானது அநேகமாக அலாவுதீன் கல்சியின் வரி வசூலிக்கும் அமைப்பாகும். இது 19 அல்லது 20ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட எஞ்சியிருந்தது. இவரது காலத்தில் இருந்து நில வரி (கரஜ் அல்லது மால்) ஆளும் வர்க்கத்தினரால் பொதுப் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட விவசாயியின் மிகை உற்பத்தியின் முதன்மையான வடிவமாக உருவானது.
— இந்தியாவின் கேம்பிரிச் பொருளாதார வரலாறு: அண்.1200-அண்.1750, [74]
சுல்தானகத்தின் தலைநகரமான தில்லிக்குள் அலாவுதீன் கல்சியின் ஆட்சியின் போது குறைந்தது மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் அடிமைகளாக இருந்தனர். இவர்கள் முசுலிம் உயர்குடியினர், அமீர்கள், அரசவை அதிகாரிகள் மற்றும் தளபதிகளுக்குப் பணியாளர்கள், துணைவியர் மற்றும் காவலாளிகளாகப் பணிபுரிந்தனர்.[75] கல்சி அரசமரபு மற்றும் பிந்தைய இசுலாமிய அரசமரபுகளின் காலத்தின் போது இந்தியாவில் அடிமை முறையானது மக்களின் இரு குழுக்களை உள்ளடக்கியிருந்தது - இராணுவப் படையெடுப்புகளின் போது பிடிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தங்களது வரிகளைச் செலுத்தத் தவறிய மக்கள்.[76][77] கல்சி அரசமரபின் காலத்தின் போது அடிமை முறை மற்றும் கட்டாயப் பணிமுறை அமைப்பானது வியாபித்திருந்தது. பண்டா, கைத், குலாம் அல்லது புர்தா என்று ஆண் அடிமைகள் குறிப்பிடப்பட்டனர், அதே நேரத்தில் பெண் அடிமைகள் பண்டி, கனீஷ் மற்றும் லௌந்தி என்று குறிப்பிடப்பட்டனர்.[சான்று தேவை]
தொடக்க கால இந்தோ-முகமதிய கட்டடக்கலைக்குக் காரணமானவராக அலாவுதீன் கல்சி குறிப்பிடப்படுகிறார். துக்ளக் அரசமரபின் காலத்தின் போது செழித்து வளர்ந்த ஒரு பாணி மற்றும் கட்டட அமைப்பாக இது உள்ளது. கல்சி அரசமரபின் காலத்தின் போது முடிக்கப்பட்ட கட்டடங்களில் அலாய் தர்வாசா, குதுப் மினார் வளாகத்தின் தெற்கு வாயில், ரப்ரியில் உள்ள இத்கா, தில்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.[78] அலாய் தர்வாசாவானது 1311ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக குதுப் மினார் மற்றும் அதன் வளாகத்துடன் சேர்த்து இது குறிப்பிடப்பட்டது.[79]
பாரசீக-அரேபியப் பொறிப்புகள் இத்தகைய நினைவுச் சின்னங்களில் உள்ளன. இவை கல்சி அரசமரபின் சகாப்தத்திற்குக் காலமிடப்படுகின்றன.[6]
கல்சி அரசமரபு குறித்த வரலாற்றுப் பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து வரலாற்றாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1260 - 1349 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த மெய்யான முதன்மை ஆதாரங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கப் பெறவில்லை.[80] இதில் ஒரு விதிவிலக்கு பொ. ஊ. 1302 - 1303 வரையிலான தில்லி சுல்தானகம் குறித்த ஒரு சிறிய பகுதியை வசாப் என்ற வரலாற்றாளர் பாரசீகத்தில் எழுதியுள்ளார். இது ஜமி அல்-தவரிக் நூலில் எடுத்து எழுதப்பட்டுள்ளது. இதில் பல்பானின் ஆட்சி, சலாலுதீன் ஆட்சியின் தொடக்கம் மற்றும் அலாவுதீன் கல்சி ஆட்சிக்கு வந்த சூழ்நிலைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பகுதியளவு புனைவுக் யான கவிதையானது (மத்னவி) யமீன் அல்-தின் அபுல் அசனால் எழுதப்பட்டது. இவர் அமீர் குஸ்ராவ் என்றும் அறியப்படுகிறார். ஆட்சி செய்து கொண்டிருந்த, தனக்குப் பணி வழங்கிய சுல்தானுக்கு மட்டு மீறீய மதிப்புகளை இது முழுவதுமாகக் குறிப்பிடுகிறது. கல்சி அரசமரபின் வரலாற்றுக்கு ஓர் ஆதாரமாக குஸ்ரவின் மட்டு மீறீய மதிப்பு நிரப்பப்பட்ட விளக்கக் கவிதையானது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இது விவாதத்திற்குரிய ஓர் ஆதாரமாக உள்ளது.[80] கல்சி அரசமரபின் முடிவுக்குப் பிறகு 30 - 115 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட மூன்று வரலாற்று ஆதாரங்கள் மிகச் சுதந்திரமானவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் பல ஆண்டுகள் கழித்து இடைவெளி விட்டு எழுதப்பட்டதால் இவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இவை 1349ஆம் ஆண்டைச் சேர்ந்த இசாமியின் நூல், 1357ஆம் ஆண்டை சேர்ந்த தியா-யி பரணியின் நூல் மற்றும் 1434ஆம் ஆண்டைச் சேர்ந்த சிர்கிந்தியின் நூல் ஆகியவை ஆகும். சிர்கிந்தியின் நூலானது கல்சியின் அரசவையில் இருந்த மக்களின் தற்போது தொலைந்து விட்ட நூல் அல்லது நினைவுக் குறிப்புகளைச் சார்ந்து அநேகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை மூன்றிலும் பரணியின் நூலே அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது. அறிஞர்களின் ஆதாரங்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது.[80][81]
பட்டம் | இயற்பெயர் | ஆட்சி[82] | |
---|---|---|---|
சயிஸ்தா கான்
(ஜலாலுதீன்) |
மாலிக் பிரோஸ் ملک فیروز خلجی |
1290–1296 | |
அலாவுதீன் علاءالدین |
அலி குர்ஷஸ்ப் علی گرشاسپ خلجی |
1296–1316 | |
சிகாபுதீன் شھاب الدین |
உமர் கான் عمر خان خلجی |
1316 | |
குத்புதீன் قطب الدین |
முபாரக் கான் مبارک خان خلجی |
1316–1320 | |
1320இல் கல்சி அரசமரபை குஸ்ரோ கான் முடிவுக்குக் கொண்டு வந்தார். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.