2018 உலகக்கோப்பை காற்பந்து
2018 ஃபிஃபா உலகக்கோப்பை காற்பந்து முன்னோட்டம் / From Wikipedia, the free encyclopedia
2018 பீஃபா உலகக்கோப்பை (2018 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 21 வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி உருசியாவில் சூன் 14, 2018 முதல் சூலை 15, 2018 வரை நடைபெற்றது.[2] இந்தப் போட்டியை உருசியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Чемпионат мира по футболу 2018 | |
---|---|
சின்னம் | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | உருசியா |
நாட்கள் | 14 சூன் – 15 சூலை |
அணிகள் | 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 12 (11 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | பிரான்சு (2-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | குரோவாசியா |
மூன்றாம் இடம் | பெல்ஜியம் |
நான்காம் இடம் | இங்கிலாந்து |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 64 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 169 (2.64 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 30,31,768 (47,371/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ஹாரி கேன் (6 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | லூக்கா மோத்ரிச்[1] |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | கிலியான் எம்பாப்பே[1] |
சிறந்த கோல்காப்பாளர் | தீபோ கூர்த்துவா[1] |
← 2014 2022 → | |
2010 திசம்பர் 2 இல் இப்போட்டிகளை உருசியா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாவது காற்பந்து உலகக்கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை இதுவாகும். ஒரு ஆட்டம் தவிர ஏனையவை உருசியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெற்றன.[3][4][5] உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி உதவி நடுவர்கள் பணியாற்றினார்கள்.[6]
இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன. உருசியா போட்டிகளை நடத்தும் நாடாகத் தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றன. உருசியாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெற்றன.[7][8][9]
நடப்பு உலகக்கோப்பை வாகையாளர் செருமனி குழுநிலை ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேறியது. 1938 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக செருமனி அணி இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறவில்லை.[10] கடந்த ஐந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் நடப்பு வாகையாளர்கள் இவ்வாறு குழுநிலை ஆட்டத்திலேயே வெளியேறியது இது நான்காவது முறையாகும். முன்னதாக பிரான்சு 2002 இலும், இத்தாலி 2010 இலும், எசுப்பானியா 2014 இலும் வெளியேறின.[11] பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்ட எசுப்பானியா, போர்த்துகல், அர்கெந்தீனா அணிகள்[12] 16-அணிகளின் சுற்றின் முடிவில் வெளியேற்றப்பட்டன. பலம் குன்றியதாகக் கருதப்பட்ட போட்டி நடத்தும் நாடு காலிறுதிக்கு முன்னேறியது. 1934, 1966, 1982, 2006 இற்குப் பின்னர் முதல் தடவையாக காலிறுதிகளில் ஐரோப்பிய அணிகள் மட்டும் விளையாடின.[13][14]
இறுதிப் போட்டி சூலை 15 இல் மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் பிரான்சு, குரோவாசிய அணிகளுக்கிடையே நடைபெற்றது. பிரான்சு 4–2 என்ற கோல் வேறுபாட்டில் வென்று தமது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. அடுத்தடுத்த நான்கு உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரே கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் (இத்தாலி 2006, எசுப்பானியா 2010, செருமனி 2014) கோப்பையை வென்றுள்ளன.
உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற பிரான்சு அணி 2021 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.